கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

மற்றவன்

 

அரிவாளிலிருந்து

ஓங்காரம் பிறந்தது

அல்லது

ஓங்காரத்திலிருந்து

அரிவாள் வந்தது

என்று குஞ்சம்பு வாதிட்டான்

அதாவது

கருத்திலிருந்து ஆயுதமும்

ஆயுதத்தில் இருந்து கருத்தும்

 

செவுளில் ஓர் அறைவிழ

குஞ்சம்பு கீழே விழுந்தான்

 

ஓங்காரத்திலிருந்தோ

அரிவாளிலிருந்தோ

அடியுண்டாகலாம் என்று ஒருவன் சொன்னான்

ஓங்காரத்தில் இருந்து உண்டாகாது

என்று ஒருவன்

அரிவாளில் இருந்து உண்டாகாது

என்று இன்னொருவன்

 

அடி என்பது

படைப்பிலிருந்து

பிசாரை விரட்டுதல்

என்று ஒருவன் சொன்னான்

இல்லை படைப்புத்தெய்வத்தை

துரத்திவிடுவது என்று இன்னொருவன் சொன்னான்

பொறுக்கித்தனம் என்று ஒருவன்

ஃபாஸிசம் என்று மற்றொருவன்

 

‘இதற்கெல்லாம் பழிவாங்கி அடங்குவீர்களா

வருந்தலைமுறையினரே நீங்கள்?’ என்று ஒரு கவிஞன் சொன்னான்.

ஏன், இந்த தலைமுறைக்கு வேறுஎன்ன வேலை

என்று இன்னொருவன் கேட்டான்.

அடிவிழுந்தது என்மேல்  அல்லவா

என்று கவிஞன் உருகியது ஒரு மனப்பிரமைதான் என்று மற்றொருவன்

 

இது குடிப்பகை

ஒவ்வொரு அலையும்

முன்பு வீசப்பட்ட ஒரு மழுவை

ஒரு ஜின்னை

திரும்பக்கொண்டுவருகிறது என்று ஒருவன்

 

குஞ்ஞம்புவின்மேல் மழு எழுந்து விழுந்தது

வகுப்பில்

தெருவில்

பேருந்தில்

படுக்கையறையில்

சடலங்கள் விழுந்தன

 

உள்ளே இட்ட தாழ்களாயின

சொற்கள்

 

நான் சாட்சி அல்ல

செய்தியும் அல்ல

காமிரா அல்ல

கண்முன்னால்

என்ன நடந்தது என்று

எனக்கு நினைவில்லை

நான் என்ன சரித்திரமா என்ன

என்று பலர்.

 

மொழி

தப்பும் வழிகள் புதைந்திருக்கும்

தன்வெறுப்பு புகையும்

ஒரு சதுப்பு நிலம்

 

குஞ்ஞ்சம்புவின் வாயிலிருந்த வெற்றிலைச்சாறு

மண்ணில் சிதறியிருந்தது

நொறுங்கிய பாக்கும் வெற்றிலைச் சதைவும்

கேரளப் பண்பாட்டு அடையாளங்கள் அல்லவா?

பாதிகூட மெல்லப்படாமல்

முழுச்சிவப்போ

முழுக்காவியோ

ஆகாமல்

 

[அ. இரு கவிதைக்குறிப்புகள். ‘இதற்கெல்லாம் பழிவாங்கி அடங்குவீர்களா  ‘வருந்தலைமுறையினரே நீங்கள்” என்பது சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளையின் வரி. ‘அடிவிழுந்தது என் மேல் அல்லவா?” என்பது என்.வி.கிருஷ்ணவாரியரின் கவிதை வரி

ஆ. பரசுராமனின் மழு கடலில் வீசப்பட்டு நிலம் விலகி கேரளம் உருவாகியது என்னும் தொன்மம் ]

டால்ஸ்டாய் மார்க்

 

இந்த வழியின் இருளில் உள்ளது

இறந்தவர்களின் ஒளி

தாரில் பதிந்த

நாணயம்போல

விரும்பிய வெயிலை கண்டுமட்டும்

புன்னகைத்து,

அன்னாவின் விழைவுபோல.

விரும்பிய வெயிலை கண்டும்

சிரிக்கமுடியாமல்,

நடாஷாவின் நினைவுபோல.

முடிவடையாமல்,

போரைப்போல.

தொடங்காமல்,

அமைதியைப்போல.

பூநிழல் மறையாமல்,

காதலைப்போல.

தனிமையை வாசித்து முடிக்காமல்,

லெவினைப் போல.

சாகாமல்,

சிந்தனைக்குத் திரியாக,

இவான் இல்யிச்சைப்போல.

 

டில்லியில்

இந்த வழி சிறியது

வழிப்போக்கர் மிகக்குறைவு.

 

கேசாயனம்

 

அந்தியில்

சங்குமுகம் கடற்கரையில்

சின்னப்பிணக்கின்

மௌனத்தொலைவில் இருந்து

மணல்

அளைந்து

அளைந்து

நீ தேடுகிறாய்

சீதையின் முடியிழைகளை.

தேடுகிறாய்

அந்திச்செவ்வெயிலில்

அந்த மானின்

பொன்நிழல்.

அக்கரைப்பொன் சுடரும்

திரைச்சீலை.

 

தட்டுப்படுகின்றது

உன்விரலில்

இருள்கீற்றுபோல் ஒன்று.

ஒரு முடியிழை.

சீதை எங்கே?

இருக்காது,

அது

சப்னா ஆஸ்மி

வாட்டர் படத்திற்காக

களைந்த முடியில்

ஓர் இழையாக இருக்கலாம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்
அடுத்த கட்டுரைபீடமா?