வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை

அவேதியர்

 

அருவருப்புக்கு

வெறுப்பின்மேல்

காதல் வந்தது

சித்திரையிலோ

மார்கழியிலோ

தம்பதிகளானார்கள்

 

நகரநாற்றத்தில்

ஒரு வாடகை வீட்டில்

இடுங்கலான அறையில்

ஒருவருவருக்கு மற்றவர்

நிழலாகவும்

சிலசமயம்

தீயாகவும்

வசித்தார்கள்.

 

சுயநலமுனிவர்

குரோதமுனிவர்

லாபமுனிவர்

கிறுக்குமுனிவர்

காமமுனிவர்

பிறந்து பிறந்து

மைந்தர்

புதிய பன்னிரு குலங்களானார்கள்

 

ரட்சகரும்

ராட்சதரும்

இல்லாத

அன்னமும்

அக்னியும்

விளையாத

கவிதையில்

அவர்கள்

சந்தஸும்

தேவதையும்

இல்லாத

அவேதங்களைப் படைத்தனர்

 

மேல்நோக்கியோ

கீழே நோக்கியோ

உருட்டவில்லை

பாறையை

 

அந்த அபத்தப்பாரத்தை

உடைத்து

வீடும் மதிலும் கட்டினர்

 

சத்தியத்திற்கு சர்வேக்கல்

சிவத்திற்கு விக்ரஹம்

அழகுக்கு தாமரை

சக்திக்கு மந்திர்

தியாகத்திற்கு பலிபீடம்

உறவுக்கு சிறை

வேகத்திற்கு வெட்கிரைண்டர்

மறதிக்கு எதிராக

நினைவின் டூரிசமாக

புத்தன் காந்தி சிலைகள்

பொதுமக்களின் அலைபாய்தலுக்கு எதிராக

அசையா படிக்கல்

 

போன்றவற்றை பரப்பி

இன்பத்தின் பலபொருட்கள்

வந்தணைய தண்டவாளம் அமைத்தனர்

 

எஞ்சியதைப் பொடித்து

அரிசியிலும்

சீனியிலும்

வார்த்தையிலும்

கலந்து

விருந்தினரைக் காத்திருந்தனர்

 

[அ. கேரளத்தின் தொன்மம். பறையி பெற்ற பந்திருகுலம். பறையகுலத்து அன்னைக்கு பன்னிரு ரிஷிகள் பிறந்தார்கள். அவர்கள் வேதம் உரைத்தனர்.அவர்களில் இருந்து 12 குலங்கள் பிறந்தன. அவர்களே கேரளத்தின் தொல்குடிகள்.

ஆ.பன்னிருவரில் நாறாணத்து பிராந்தன் என்னும் ரிஷி  சிசிஃபஸ் போல பெரும்பாறையை மலைக்குமேல் உருட்டிக்கொண்டு சென்று கீழேபோடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.]

 

 

செத்தவரை வாசிப்பது

 

 

செத்துப்போனவர்களை வாசிக்கையில்

அறிகிறோம்

செத்தவர்

சாகாமல்

வாழ்கிறார்கள் மொழியில்.

நினைவுருக்களாக

துயரார்ந்தவர்களாக

நீதி கிடைக்காமல்

பொருள்கொள்ளப்படாமல்

சாந்தி அடையாத மௌனங்களாக

கல்லறைகளைப் பிளந்து எழும்

எதிர்ப்பிரக்ஞைகளாக

இறுகி நெகிழும் சட்டங்களாக

என்

தோணியை முன்னோக்கிச் செலுத்தும்

காற்றும் நீரோட்டமுமாக

எங்குள்ளது உலகு எனக்காட்டும்

கரைச்சுடர்களாக

ஊர்முழக்கமாக

சென்றவை எழுகின்றன

நாம் செத்தவரை வாசிக்கையில்

 

பிறந்தவர்கள் தேடும்

சாகாத கூடுகளல்லவா சொற்கள்?

முள்ளம்பன்றி

 

முட்களின் தீவிரவாதம் அல்லவா

உன்னை மீனவதாரமாக ஆகாமல் தடுத்தது?

முள்ளில்லாமல் இருந்திருந்தால்

அல்லது உள்ளே இருந்திருந்தால்

பதிலுக்கு

பிடரிமயிரோ கோரைப்பல்லோ

இருந்திருந்தால்

நீயும் அவதாரமாக ஆகியிருபபாய்

 

உலகம் ஒரு போரை ஒளித்து வைத்திருக்கிறது என்று

உலகை நம்பப்போவதில்லை என்று

இத்தனை அப்பட்டமாக

நீ காட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தால்

உடலை

இப்படி

ஆயுதக் களஞ்சியமாக ஆக்காமலிருந்திருந்தால்

 

எந்த நிமிடமும் இவ்வுலகம்

ஏழைமேல் பாய்ந்துவிடும் என்று

இப்படி அஞ்சாமலிருந்திருந்தால்

 

ஒழுகுதலில் வளைவுகளுடன் இணைந்து

அலைகளின்

எழுச்சி வீழ்ச்சிகளுடன் இணைந்து

கொஞ்சம் நெகிழ்ந்திருந்தால்

கும்பிட

தழுவ

முத்தமிட

வழிபட

தோன்றும்படி

நடிக்கத்தெரிந்திருந்தால்

பலவேசக்காரனாக இருந்திருந்தால்

நீயும் ஓர் அவதாரமாக ஆகியிருப்பாய்

 

ஒரு சின்ன குறை

ஒரு சின்ன தொடர்புச்சிக்கல்

போது அவதார வாய்ப்பு பறிபோக.

 

பதிலுக்கு நீ

மறைந்து நின்றாய்

முட்புதர் போலானாய்

கானக மௌனத்தின்

தோற்றுப்போன தலையில்

முள்முடியாக அமைந்தாய்

 

உன்னைத்தானே பார்த்தோம்

முள்மயிலாக

விழிப்பின் மிகைவாசிப்பான

கவிதையில்?

எதிர்ப்பின்

அம்புத்தெய்யமாக

டாலியின் ஓவியத்தில்?

பிரெஹ்டின் அரங்கில்?

 

காண அரிதாக இருப்பது

உன்னை காட்சிப்பொருளாக்கி

காட்சிசாலைக்கு கொண்டுசென்று விட்டது

 

அல்லது

மாயமெல்லாம் உதிர்ந்து

தனித்தன்மை அம்பலப்பட்டுபோன

ஒரு

முன்னாள் அவதாரமா நீ?

முந்தைய கட்டுரைகவிதையின் ஊடுபாதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- நிறைவும் கனவும்