பூனைசாட்சி

பஷீர் மாந்த்ரீகப்பூனை

 

போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

 

நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப் பற்றி எழுதும்போது அது அவர்களை அறியாமலேயே குறியீடாக ஆகிவிடுகிறது. அவர்கள் அந்த உயிரின் ஏதேனும் சில கூறுகளை ஒரு கருத்துநிகழ்வாக உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் விலங்குகளும் என்ற தலைப்பில் விரிவாகவே ஆராய்ச்சி செய்யலாம்.

 

அவர் சொன்னார்,  “இல்லைசார் பூனைகளைப் பற்றி ரொம்ப எழுதறாங்க”. ‘உங்களுக்கு என்ன பிரச்சினை  அதிலே?” என்றேன்.  “தொந்தரவா இருக்குல்ல?” என்றார். “ஏன் ?”என்றேன்.  “தெரியலை” என்றார். “அவங்களுக்கும் அப்டி இருக்கும்போல, அதான் எழுதறாங்க” என்றேன்

அதிகமாக தமிழில் எழுதப்பட்ட உயிர்கள் என்னென்ன? நாய்,காகம்,பூனை. நாய் பற்றி பெரும்பாலும் எதிர்மறையாகவே  எழுதப்பட்டுள்ளது. சுந்தர ராமசாமி மூன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார். நாய் அவரிடம் ஒவ்வாமையையே உருவாக்கியிருக்கிறது.நடுநிசி நாய்கள் என்ற அவருடைய கவிதைத் தலைப்பு புகழ்பெற்றது. காகம் அவரிடம் முற்றிலும் நேர்நிலையான பதிவை உருவாக்கியது. அவர் நடத்திய இலக்கிய அமைப்பின் பெயரே காகங்கள்தான். காகங்கள் என்னும் நல்ல கதையையும் எழுதியிருக்கிறார்

 

பூனையைப்பற்றி அவர் எழுதியது குறைவே.ஆனால் ஒரு கவிதை புகழ்பெற்றது

 

வித்தியாசமான மியாவ்

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
இந்தப் பூனையின் மியாவ் மியாவ்                                  
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்

 

உண்மையில் இந்தக்கவிதையை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இதை ஒரு நூலின் அட்டையின் பின்பக்கம் சாதாரணமாக குறித்து வைத்திருந்தார். இது ஓர் அபாரமான கவிதை என்று அவரிடம் நான் சொன்னேன். பூனைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். உடனே இது பிரசுரமாகவில்லை. ஏன் பிரசுரிக்கவில்லை என்று கேட்டேன். “இது சும்மா வேடிக்கைக்காக எழுதியது, ஒருவரை கேலிசெய்ய ” என்றார்.  “இல்லை இது உங்கள் நல்ல கவிதைகளில் ஒன்று” என்று நான் சொன்னேன். பின்னர் ராஜமார்த்தாண்டனும் சொன்னபிறகே அவருக்கு நம்பிக்கை வந்தது.

சார்த்ரின் பூனை

பொதுவாக இவ்வாறு எழுதப்படும் உயிரினங்களின் இயல்பைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். மனிதர்களுடனான அவற்றின் உறவு, அல்லது மனிதத்தன்மைதான் முக்கியமானது. அவை சில மனிதக்கூறுகளை நடிக்கின்றன. காகங்கள் நாய்கள் பூனைகள் மனிதர்களுடன் மிக அணுக்கமானவை. மனிதர்களாக உருமாறியே அவை புனைவில் நுழைகின்றன

 

அதற்குமேல் சொல்லவேண்டும் என்றால், அவற்றின் விரைவு, உடலின் வளையும்தன்மை, பார்வையின் இயல்புகள் என காட்சிரீதியான சில காரணங்கள். ஆர்.பி.பாஸ்கரன் பூனைகளை ஏராளமாக கோட்டோவியமாக வரைந்திருக்கிறர். அவருடைய பூனைப்படங்கள் பூனைகளின் உடலசைவை வரைந்துவிட முயல்பவை.விந்தையான கோணங்களில் அவற்றின் உடல் நெகிழ்ந்து வளைவதை அவற்றில் காணலாம்

மார்க் ட்வைனும் பூனையும்

மேலைநாட்டில், குறிப்பாக பிரிட்டனில், பூனை ஒரு முதன்மையான செல்லப்பிராணி. ஒரு காலத்தில் பூனை சாத்தானின் வாகனம் என ஐரோப்பாவில் கருதப்பட்டது. காரணம் அதன் இருளில் மின்னும் விழிகள், தனியாக கூட்டம்கூடி வாழும் சமூக இயல்பு, சில ரகசியப் பயணங்கள். ஆகவே பூனை கொன்று ஒழிக்கப்பட்டது. அதன்விளைவாக எலிபெருகி பிளேக் வந்து ஐரோப்பா அழிந்தது. அதன்பின் அரசகட்டளைகளால் பூனைகள் வெளியில் இருந்து, குறிப்பாக தாய்லாந்திலிருந்து, கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டன. பூனைகள் பற்றிய செல்லம் தொடங்கியது

 

ஆகவே அங்கே எழுத்தாளர்கள் பூனைகளை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கிறார்கள். பூனை அங்கே அத்தனை செல்லமாக ஆவதற்கான காரணங்களில் முக்கியமானது அது வீட்டுக்குள் வளர்வது, வீட்டுக்குள்ளேயே இருக்கும் குளிர்நிலத்துத் தனிமைக்கு சரியான துணை அது என்பது. ஆகவே பூனைகளைப் பற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்கள். பூனைகளுடன் இருக்கும் பெரிய எழுத்தாளர்களின் படங்களை நாம் நிறையவே காணலாம்.

ஆல்டஸ் ஹக்ஸ்லியும் பூனையும்

மேலைநாட்டுப் படைப்பாளிகளின் பூனைகளைப் பற்றி ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் . பூனைகளை எழுத்தாளர்கள் வளர்ப்பதற்கு முதன்மையான காரணம் அவை எழுதும்போது தொந்தரவு செய்வதில்லை என்பதுதான் என்று படுகிறது.  “ஆனால் எழுத்தாளர்களை புஸ்ஸிக்கள் ரொம்பத்  தொந்தரவு செய்கின்றனவே ” என நாகர்கோயில் எழுத்தாளர் ஒருவர் வருத்தமாக ஒருமுறை கேட்டார்.

 

இயல்பான பூனைப்பற்று இந்திய எழுத்தாளர்களில் எவரிடம் என எண்ணிப்பார்க்கிறேன். வைக்கம் முகமது பஷீரின் பூனை நினைவுக்கு வருகிறது. அவருடைய சிம்மாசனமான அந்த சாய்வுநாற்காலியில் எந்நேரமும் ஏறி அமரத்துடிக்கும் அவருடைய பூனை கதைகளில் அடிக்கடி வருகிறது. பலவகையான மாந்திரிக சக்திகள் கொண்டது. மனிதர்களை மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டது/ ‘மாந்திரிகப்பூனை’ என்ற அவருடைய நாவல் புகழ்பெற்றது

ஓ.வி.விஜயன் பூனைக்காதலன். அவருடைய மேஜைமேல் அமர்ந்து அவர் எழுதுவதை நோக்கிக்கொண்டிருக்கும் பூனையின் படம் ஒன்று உண்டு. ஆனால் விஜயன் பூனைகளைப் பற்றி அவ்வளவாக எழுதியதில்லை.

 

பூனைகள் நகுலனின் வாழ்க்கையில் முக்கியமானவை. அவருடைய முதல்நாவல்  ‘அந்த மஞ்சள்நிறப் பூனைக்குட்டி’ என்பது. அது பிரசுரமாகவில்லை. அதன் இன்னொருவடிவமே நாய்கள் என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். பூனை எப்படி நாய்களாகியது? ஆனால் நகுலனிடம் எதுவும் சாத்தியமே.  பூனைகள் கதைகளில் கவிதைகளில் ஊடாகச் செல்கின்றன. அவரைத் தேடிச்சென்ற கோணங்கிக்குத்தான் அவை மேலும் பெரிய குறியீடாகத் தோற்றம் அளித்திருக்கின்றன.

 

க.நா.சு பூனைகளைப்பற்றி கவிதை எழுதியிருக்கிறார். ஆனால் பூனை வளர்க்கவில்லை. அவரே பூனை போலத்தான் வாழ்ந்தார். அவ்வப்போது ஓர் ஊர் என்று. பூனைக்குட்டி என்னும் அவருடைய கவிதை நினைவுக்கு வருகிறது. அவருக்கு பூனைக்குட்டி அவருடைய ஆழத்திலிருந்து எழுந்த ஒன்றாக, விளையாட்டுத்தனம் மிக்கதாக, குழந்தையாக தோன்றியிருக்கிறது.

விளையாடும் பூனைக்குட்டி

மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் துணியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடி கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி _
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படித்திருந்து விட்டேன்.
பின்னர்
நான் அதை விளையாட
‘மியாவ் மியாவ் ஓடி வா’
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி.

நகுலன்

சுந்தர ராமசாமி பூனை வளர்க்கவில்லை. கடைசிக்காலத்தில்தான் பேரனுக்காக நாய் வளர்க்க முயன்றார். ஆனால் பூனைகளைப் பற்றி உற்சாகமாகப் பேசுவார்.பூனைகளின் ரகசிய வாழ்க்கை போன்றது தமிழ் சிற்றிதழ் இயக்கம் என்றார். நள்ளிரவில் ஏதேனும் ஒதுக்குபுறமான இடத்தில் பூனைகள் கூடி அமர்ந்து விசித்திரமான ஓசை எழுப்பிக்கொண்டிருக்கும். அதைக்கண்டால் நாம் துணுக்குறுவோம். அவை ஏதோ மாயப்பிறவிகள் போலத் தோன்றும். அவை சாத்தானின் படை என்றும் வேற்றுக்கோள் ஒற்றர்கள் என்றும் நம்புபவர்கள் இருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ் படைப்பாளிகள் எங்காவது கூடி இலக்கியம் பேசக்கண்டால் சமூகத்திற்கும் போலீஸுக்கும் அந்தமாதிரியான துணுக்குறல் ஏற்படுகிறது என்றார் சுந்தர ராமசாமி ஒருமுறை.

பெர்னாட் ஷாவும் பூனையும்

பூனைகள் அறிவியக்கவாதிகளுடன் அணுக்கமான முறையில் இருந்திருக்கின்றன. நாய்களைப் போலன்றி அவை அவர்களின் மேஜைமேல் அமர்ந்து எழுதுவதை பார்த்திருக்கின்றன. படுக்கைக்கு அடியில் ஒளிந்து வேவுபார்த்திருக்கின்றன. அவற்றுக்கு எவ்வளவோ தெரியும்.

 

பூனை வளர்த்தவர்களில் முக்கியமானவர் என நினைவுக்கு வருபவர் எம்.என்.ராய். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். இந்திய இடதுசாரிச் சிந்தனைகளின் தொடக்கப்புள்ளி. ரஷ்யாவுக்கு வெளியே உலகின் முதல் கம்யூனிஸ்டுக்கட்சியை மெக்ஸிகோவில் தொடங்கியவர். லெனினுக்கு அணுக்கமானவர். பின்னாளில் கம்யூனிஸ்டுக் கட்சியில் அவநம்பிக்கை கொண்டார். ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை நிறுவினார்.

எம்.என்.ராய்

ராய் 1938 முதல் தன் பூனையுடனும் ஜெர்மானிய மனைவி எலெனுடனும் டெஹ்ராடூனில் மோஹினிசாலையில் ஓர் இல்லத்தில் தனிமையில் வாழ்ந்தார்.1958ல் அவர் மர்மமான முறையில்  அங்கே இறந்தார்.  அது மாரடைப்பு என விளக்கப்பட்டது. ஆனால் அன்றிரவு அவருடைய இல்லத்தில் எவரோ நுழைந்தமைக்கு ஆதாரம் இருந்தது என்று சொல்லப்பட்டது. அறையில் அவருடைய பூனை  அவர் உடலருகே அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது.

 

அது ராய் அமெரிக்க ஊடகங்களுடனும் அமெரிக்க பல்கலைகளுடனும் நெருக்கமாக ஆரம்பித்த தருணம். அவருடைய அரசியல் கட்டுரைகளின் பெருந்தொகை அமெரிக்காவில் வெளியாவதாக இருந்தது. அவர் அமெரிக்காவில் ஒரு சொற்பொழிவுப் பயணத்திற்கும் திட்டமிட்டிருந்தார். அவருடைய சாவால் அப்பயணம் நிகழாது போயிற்று. தொடர்ந்து அந்த இல்லத்திலேயே தங்கியிருந்த எலென் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

ராயின் மரணம் மர்மமானது என்றும் அதற்குப்பின்னால் சர்வதேச அரசியல்சூழ்ச்சிகள்,குறிப்பாக இந்தியாவில் அன்று வேரூன்றிருந்த ஸ்டாலினின் கைகள், உண்டு என்று ராயின் அணுக்கமான மாணவரும், ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் தென்னக அமைப்பாளருமான எம்.என்.கோவிந்தன் கருதினார். அதைப்பற்றி அவர் எழுதிய கட்டுரை ராயின் பூனையின் பார்வையில் அமைந்திருந்தது.பூனை ஒன்றே சாட்சி

 

உண்மையில் எம்.என்.ராய் போன்ற ஒரு.மாமனிதரின் மரணம் இப்படி ‘மர்மமான’ முறையில் நடந்ததும், ராயின் வரலாற்று இடத்தை நன்கு அறிந்தவரான ஜவகர்லால் நேரு அதை கண்டுகொள்ளாமல் கடந்துசென்றதும் இந்தியவரலாற்றின் துணுக்குறச்செய்யும் பகுதிகளில் ஒன்றுஉண்மையில் முறையான புலனாய்வு நிகழவேயில்லை. ராய்க்குப்பின் எல்லென் கொல்லப்பட்டதுகூட இந்திய அரசியல்அமைப்புக்களை,  அரசநிறுவனங்களை செயலூக்கம் கொள்ளச் செய்யவில்லை. சம்பிரதாயமான சொற்களுடன் அவ்விறப்புகள் கடந்துசேல்லப்பட்டன.

 

அது நாம் ருஷ்யாவுடன் அணுக்கம் கொள்ளத்தொடங்கியிருந்த காலம். நேருவின் அரசின் உயர்மட்டத்திலேயே சோவியத் ஆதரவாளர்கள் ஊடுருவிவிட்டிருந்தனர். அவருக்குப்பின் வந்த லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாம் ஒரு துணைரஷ்யாவாகவே செயல்பட்டோம். இன்னொரு நாட்டில் என்றால் இதழாளர்களும் இலக்கியவாதிகளும் அதை தோண்டித்துருவி எழுதித் தள்ளியிருப்பார்கள்.  ஆனால் நம் அறிவுத்துறை இடதுசாரிச் சாய்வு கொண்டது – அன்றும் இன்றும். அது சிலவற்றை நோக்காமலிருக்கும் கண்கொண்டது

 

சக்கியின் [SAKI] டோபர்மரி என்னும் சிறுகதையில்  ஒருவர் பூனைக்குப் பேசக்கற்றுக்கொடுக்கிறார். அது ஏராளமான அந்தரங்கங்களை வெளிப்படுத்த தொடங்குகிறது. அதை சாகடிக்கிறார்கள். பிரபுக்களில் ஒருவர் சொல்கிறார். “விலங்கைப் பேசவைத்தே ஆகவேண்டும் என்றால் ஏன் யானைகளுக்கு கற்பிக்கக்கூடாது? குறைந்தபட்சம் நம் படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொள்ளாது அல்லவா?”

 

அரசியலிலும் இலக்கியத்திலும் பூனைகள் மட்டுமே அறிந்தவை பல உள்ளன. என்றாவது அவை எழுதினால் வரலாறு வேறுவகையில் வெளிப்படும்.

 

பி.கு

 

சும்மா தேடிக்கொண்டிருந்தபோது இந்த இணையப்பக்கம் கண்ணில் பட்டது. இலக்கியவாதிகளுடன் பூனை இருப்பதைப்பற்றிய பல புகைப்படங்கள் இருக்கின்றன. இவற்றை தொகுத்துப்போட்டு பூனை ஒரு அபாயகரமான ரகசிய விலங்கு, உண்மையில் அது வேற்றுக்கிரக ஒற்றன், அதுதான் பூமியில் இலக்கியவாதிகளின் உள்ளங்களை ஊடுருவி இலக்கியம் என்னும் அமைப்பையே உருவாக்கியிருக்கிறது என ஒரு சதிக்கோட்பாட்டை உருவாக்க்கலாமா என்று தோன்றியது.

 

பூனைகளும் எழுத்தாளர்களும் படங்கள்

 

 

முந்தைய கட்டுரைமானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.
அடுத்த கட்டுரைஅரசன் பாரதம் -குங்குமம் பேட்டி