தருமன்

அன்பின் ஜெமோ,

கோபத்தால் பலவற்றை இழந்த எனக்குள் அவ்வப்போது எழும் கேள்வி இது. என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மபுத்திரன்? பலபேர் முன்னிலையில் தன் மனைவி மானபங்கப் படும்போது கூட கோபம் வராத கணவனாக இருக்கிறான். ஐவரில் இவன் மட்டும் சபதம் செய்யாதவனாக இருக்கிறான். ‘அறம்’ சிறுகதையைப் படித்து சில நாட்கள் அதை அசை போட்டபின் இந்தக் கேள்வி மறுபடியும் எனக்குள் வந்தது. ஆமாம், உங்கள் பார்வையில் என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மன்?

 

— பாஸ்கி

அன்புள்ள பாஸ்கி,

மகாபாரதம் கதைமாந்தர்களை வெவ்வேறு வடிவில் அமைத்திருக்கிறது. அவர்களுக்கான முழுமையுடன், சிக்கல்களுடன்.

மகாபாரத அழகியலை வைத்துப்பார்த்தால் தருமனின் இயல்பை சுத்தமான சத்வ குணம் எனலாம். பீமனின் இயல்பை சுத்தமான தமோ குணம் எனலாம். அர்ஜுனன் இரண்டும் கலந்த ரஜோ குணம் கொண்டவன்.

தர்மன் எப்போதும் மனிதர்களை விலக்கி அறத்தை ஒரு காலாதீத கருத்துநிலையாகவே அணுகுகிறான். அவன் நோக்கில் ஒன்று அறமல்ல என்றால் அது அனைவருக்கும் அறமல்ல தான். தனக்கும் பிறருக்கும்.

ஆனால் பீமன் அனைத்தையும் தன் நலன் நோக்கியே அணுகுகிறான். அறம் என்பது அவனுக்கு தனக்கு இழைக்கப்படும் நீதி – அநீதி சார்ந்தது மட்டுமே

அர்ஜுனன் இவ்விரு எல்லைகள் நடுவே எப்போதும் ஊசலாடுகிறான்.

பாஞ்சாலையை வைத்திழந்ததை நாம் விரிவான பின்னணியில் புரிந்துகொள்ளவேண்டும். பழங்குடிக்காலகட்டத்தில் நேரடியான அதிகாரப்போர்கள் நிகழ்ந்து பேரழிவுகள் உருவாயின. இதன்பின் மெல்லமெல்ல mock wars என்று சொல்லப்படும் பதிலிப் போர்கள் உருவாயின.

எல்லா சமூகங்களிலும் இவை உண்டு. ஆப்ரிக்க சமூகங்களில் இன்றும் நிகழ்ந்து வருகின்றன. கேரளத்தில் 18 ஆம் நூற்றாண்டு வரை இவை நிகழ்ந்தன. நீங்கள் மலையாள சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். அங்கப்போர் என்றால் இதுதான். [ உ-ம்: ஒரு வடக்கன் வீரகதா]

சேகவர் என்ற போராளி [ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவர்] முறையாக ஆயுதபயிற்சி பெற்றவர். அவர் அங்கத்தில் போராடத் தகுதிபெற்றவராக மன்னர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். இரு மன்னர்கள் நடுவே பூசல் என்றால் இருவரும் ஆளுக்கொரு சேகவருக்கு [சிலசமயம் குருவும் சீடனுமாகக்கூட இருப்பார்கள்] பணம் கொடுத்து சத்தியம் வாங்கி தங்களுக்காக அமர்த்திக்கொள்வார்கள்.

இந்த இருவரும் இரு மன்னர் முன்னிலையில்,பொது அரங்கு ஒன்றில், இருவரும் ஒத்துக்கொண்ட ஆயுதங்களைக்கொண்டு, ஆயுதமுறைகளின்படி மக்கள் மற்றும் நடுவர் முன்னிலையில், போர்புரிவார்கள். இருவரில் ஒருவர் சாவது வரை போர் நிகழும். இதற்கு அங்கக்களரி என்று பெயர். இது ஒரு பதிலிப்போர். இதன் மூலம் உண்மையான போர் தவிர்க்கப்படுகிறது.

அதேபோல 12 வருடங்களுக்கு ஒருமுறை பெரியாற்று மணலில் நடந்துவந்த மாமாங்கம் இன்னொரு பதிலிப்போர். இதில் இருதரப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐமபது அல்லது நூறுபேர் போரிடுவார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.

தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்த ஆநிரை கவர்தல் [ஆகோள் பூசல்] இதேபோன்ற ஒரு பதிலிப்போராக இருந்திருக்கலாம்

சதுரங்கமும் ஒரு பதிலிப்போர். முகலாயர் காலத்தில் உண்மையான யானைகுதிரைகளையே பெரும் மைதானத்தில் நிறுத்தி அதை விளையாடியிருக்கிறார்கள். சதுரங்கத்தை எந்த மன்னனும் தவிர்க்க முடியாது, கூடாது. அது போரைத் தேர்ந்தெடுப்பதாகும்.

ஆகவே சதுரங்கத்தில் தேர்ச்சி கொள்ளுதல் அக்கால மன்னர்களின் இயல்பாக இருந்திருக்கிறது. அதை வியாச மகாபாரதம் மூலத்தை வாசித்தால் உணரலாம். தருமன் விளையாடப்புகுந்தது அதனாலேயே. மற்றபடி மகாபாரதம் முழுக்க தர்மன் சூதாட்ட மோகம் கொண்டு அலையவில்லை.

சூதில் அனைத்தையும் பணயம் வைப்பதும் அவ்வகையில் அரச தர்மமாகவே அன்று கருதப்பட்டது. தம்பியரையும் மனைவியையும் தன்னையும். அதை ஒரு லௌகீகனின் நோக்கிலோ இன்றைய ஒழுக்கவியலைக்கொண்டோ பார்க்கக் கூடாது.,

ஒருபெண்ணை அரசன் தூக்கி வந்து மணம்புரியலாம் என்ற நெறி இருந்த காலம் அது. பெண் மட்டுமல்ல சகோதரர்கள்கூட அரசனின் சொத்தே என்றுதான அன்று நம்பப்பட்டது. மொத்த குடிமக்களையும் தர்மன் பணயம் வைக்கிறான். காரணம் அது ஒரு போர் என்பதனால்தான்.

பின்னாளில் , பதினேழாம் நூற்றாண்டில்கூட தோற்ற மன்னனின் மக்களையும் மனைவியையும் வென்றவன் எடுத்துக்கொள்ளும் மரபிருந்ததைக் காணலாம். ஷாஜகான் பெருங்காதல் கொண்டிருந்த மனைவி மும்தாஜ் அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டவளே

ஆகவே தர்மன் சூதாடித் தோற்கவில்லை. ஒரு மறைமுகப்போரில் தோற்றான். அதிலும் சகுனியின் பொய் ஆட்டத்தில்.

ஆக, தருமனின் தரப்பு இதுதான். ஒரு ராஜதர்மத்தின்படி அவன் போரில் ஈடுபட்டு தோற்று அனைத்தையும் இழந்திருக்கிறான். அவனும் மனைவியும் அடிமைகள். அடிமைகளை அடிமைகளாக நடத்த வென்றவர்களுக்கு உரிமை உண்டு. அது அன்றைய அரசதர்மத்தின்படி நீதிதான்.

ஆனால் பீமன் பார்த்த நீதி இன்னொன்று. அது தனிப்பட்ட நீதி. ஆகவே அவன் குமுறுகிறான். அறைகூவல் விடுகிறான்.

தர்மனை பல இடங்களில் நாம் புரிந்துகொள்ள முடியும். முக்கியமான உதாரணம் யட்சபிரஸ்னம். காட்டுவாழ்க்கையில் கடும் தாகத்தால் சாகும் தருவாயை அடைகிறார்கள் பாண்டவர்கள். மரத்தில் ஏறி பார்க்கும் நகுலன் ஒரு சிறு தடாகத்தை கண்டுகொண்டு அங்கே நீர் கொண்டு வரச் செல்கிறான்.

அந்த தடாகத்தின் உரிமையாளன் ஓரு யட்சன். அவன் ‘உடலிலி’யாக குரல் கொடுக்கிறான். ‘இது என் பொய்கை. நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னபிறகுதான் நீ நீர் குடிக்கவேண்டும். இல்லையேல் நீ செத்துவிடுவாய்’

கடும் தாகத்தால் தளர்ந்த நகுலன் ‘செத்தாலும் சரி நீர் குடித்துச் சாகிறேன்’ என்று அந்த நீரை மொண்டு குடித்து சாகிறான். அடுத்து சகாதேவன் வருகிறான். நகுலனின் சடலத்தைக் கண்டும் தாகம் தாங்காமல் அவனும் உடலிலியின் குரலை புறக்கணித்து நீரைக்குடித்து சாகிறான்

அவர்களின் சடலங்களைக் கண்டும் பீமனும் பின் அர்ஜுனனும் அவ்வண்ணமே உடலிலியை புறக்கணித்து நீரை குடித்துச் சாகிறார்கள்.

கடைசியாக வருபவன் தர்மன். அவன் உடலிலி சொன்னதைக்கேட்டு நின்று விடுகிறான். நூறு கேள்விகளுக்கும் பதில் சொல்கிறான். அவை ஒரு தனி உபநிடதமாக அமைந்துள்ளன

மனம் மகிழ்ந்த யட்சன் ‘உன் அற உணர்ச்சியையும் அறிவையும் எண்ணி மகிழ்கிறேன் உனக்கு ஒரு வரம் தருகிறேன். உன் தம்பியரில் ஒருவனை எழுப்பிக்கொள்’ என்கிறான்

தருமன் ‘நகுலனை கொடு’ என்று கேட்கிறான்

யட்சன் அதிர்ந்து போகிறான். ‘நீ யோசித்துத்தான் சொல்கிறாயா? அர்ஜுனன் இல்லையேல் நீ ஒருபோதும் மன்னனாக முடியாது. பீமன் இல்லாமல் இந்த காட்டையே தாண்ட முடியாது.நீ ஏன் நகுலனை கேட்கிறாய்?’ என்கிறான்

’என் நலனை வைத்து நான் அறத்தை மதிப்பிடுவதில்லை’ என்கிறான் தருமன். ’என் தந்தைக்கு இருமனைவியர். நானும் அர்ஜுனனும் பீமனும் குந்திக்கு பிறந்தவர்கள். மாத்ரிக்கு பிறந்தவர்கள் நகுலனும் சகாதேவனும். குந்தி புத்திரர்களில் நான் இருக்கிறேன். மாத்ரி மைந்தர்களில் ஒருவன் இருக்கட்டும். அதுவே நியாயம்’

அந்த அற உணர்வை மெச்சி யட்சன் தன் தோற்றம் காட்டுகிறான். எந்நிலையிலும் அறம் வழுவாத ஒருவனைக் கண்டால் தன் சாபம் நீங்கும் என அத்தனை நாள் காத்தருந்ததாகச் சொல்லி நால்வரையுமே எழுப்பிக்கொடுக்கிறான்

தர்மனை இந்த உச்சங்களில் வைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதன்பின் அவன் முந்தைய தருணங்களில் நடந்துகொண்டதை மதிப்பிடவேண்டும்.

அறம் மனிதனை கோழையாக்கலாம். அந்த கோழைத்தனமும் மகத்தானதே

ஜெ

முந்தைய கட்டுரைஆலயப்பாதுகாப்புப் பயிலரங்கு
அடுத்த கட்டுரைகோட்டி கடிதங்கள்