நம்பிக்கையிலிருந்து தொடங்குவது

ஆற்றூர் ரவிவர்மா

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…

அன்புள்ள ஜெ,

எதிர் விமர்சனங்களைத் தவிர்த்தல் என்னும் கட்டுரை கொஞ்சம் அந்தரங்கமானது. அதை ஏன் பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றியது. பதிவுசெய்தாலும் ஏன் அதில் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும்? அதற்கு ஒரு கிசுகிசுத்தன்மை உருவாகிறதே?

நான் ஒருவிஷயத்தைக் கவனித்தேன். இந்த விஷ்ணுபுரம் விழா டிசம்பரில் உருவாவதை ஒட்டியே நீங்கள் விலகிச்செல்பவர்கள் குறித்து ஒரு நஸ்டால்ஜியாவை அடைகிறீர்கள். பழைய கடிதங்கள், குறிப்புகளை எடுத்துப் படிப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் என்ன பயன்? நஸ்டால்ஜியா என்பது ஒரு பயனற்ற உணர்வு என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.

ராஜன்

***

அன்புள்ள ராஜன்,

உண்மை, பழைய நினைவுகள் உருவாக்கும் ஓர் உணர்வெழுச்சி இதற்குப்பின் உள்ளது.அதை தவிர்க்க முடியாது. விலகிச்செல்பவர்கள் பலவகையான துயரார்ந்த நினைவுகளை விட்டுச்செல்கிறார்கள்

விலகிச்செல்பவர்கள் பலவகை. இயல்பான வம்பு மனநிலையுடன் வந்து அதைக்கொண்டே விளையாடி சிக்கல்களை உருவாக்கி விலக்கப்படுபவர்கள். அவர்கள் வேறொன்றும் அறியாதவர்கள். எங்கோ அதைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் பற்றி கவலையே இல்லை. அவர்கள் விலக்கப்பட்டதில் ஆசுவாசமே

இன்னொன்று, தன் சாதி,மத,அரசியல் நம்பிக்கையை முதன்மையாகக் கருதுபவர்கள். தங்கள் மதமோ சாதியோ அரசியலோ சற்றே விமர்சிக்கப்பட்டால்கூட கொதித்து எழுந்து அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்து வசைபாடி எதிரியாகிறவர்கள். அவர்களையும் ஒன்றும் செய்யமுடியாது. இலக்கியமென்பதே ஒரு தனி மதம், தனி அரசியல் என்பது என் எண்ணம். இலக்கியம் என்னும் அந்த அமைப்பின்மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்குரியதே என் நட்பு வட்டம்.

ஆனால் எளிய ஆணவச் சிக்கல்களால் விலகியவர்கள், உண்மையிலேயே எதிர்பார்ப்புக்குரியவர்கள் எப்போதும் சங்கடமாகவே நீடிக்கிறார்கள். அது வெறும் தனிப்பட்ட வருத்தம் அல்ல. அது நாம் நம்பும், நிலைநிறுத்த விரும்பும் அறிவியக்கம் மீதான நம்பிக்கையால் உருவாகும் வருத்தம். அது அப்படியேதான் இருக்கும்.

இந்த ஆணவச்சிக்கல்களைத்தான் பொதுவில் வைக்க விரும்பினேன். ஓராண்டுக்குமுன் நான் ஒருவர் எழுதிய கதையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதனால் அவர் விலக்கம் கொண்டார். மிகச்சின்ன விஷயம். ஆனால் நினைவுக்கு வந்தது 1989 ல் ஆற்றூர் ரவிவர்மாவிடம் என் கதையைப்பற்றிய கருத்தை அவர் சொல்வார் என நாலைந்துநாள் எதிர்பார்த்தபின் நேரடியாகவே கேட்டது.

ஆற்றூர் கோபித்துக்கொண்டார். எப்படி எப்போது சொல்வது என்று எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை என்மேல் இருந்தாலொழிய என்னிடம் நீ பழகவேண்டியதில்லை என்றார். நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. எட்டு மாதம் கழித்து என் இன்னொரு கதை பிரசுரமானபின் அவர் முந்தைய கதையை விரிவாக விமர்சித்தார்.

நான் அவர் ஏன் முதலில் தவிர்த்தார் என்று கேட்டேன். “அதன்மீதான உன் பற்று குறைந்தபின் சொன்னால் மட்டுமே அதனால் பயனுண்டு” என்றார். அது உண்மை என்றும் உடனே தெரிந்தது. தன் ஆசிரியர்நிலை அனுபவம் வழியாக அவர் கண்டடைந்தது அது

1995 வாக்கில் என நினைவு. மதுரையில் ஒர் உணவு விடுதியில் லக்ஷ்மி மணிவண்ணன் என் கதைகளைப்பற்றிய மிகக்கடுமையான விமர்சனத்தை நேரடியாகவே சொன்னார். கொஞ்சம் எரிச்சலுடன். அது சற்றே மிகைப்படுத்தப்பட்ட, இலக்கியத்தின் எதிர்மறைத்தன்மையை வலியுறுத்தும் கருத்து. சங்கர ராமசுப்ரமணியன் உடனிருந்தார்.

நான் அதில் சுந்தர ராமசாமியின் குரல் உள்ளதா என்று எண்ணினேன். ஆனால் அதை எனக்குள் வைத்துக் கொள்ளவில்லை. உடனடியாக அதை நேரில் சென்று அவரிடமே கேட்டேன். எவ்வகையிலேனும் அக்கருத்தில் அவருடைய பங்களிப்பு உண்டா என்று.

ஆனால் ராமசாமி கோபம் அடைந்தார். “அப்படி ஒரு சந்தேகமே வந்திருக்கக் கூடாது. அப்படி ஒரு சந்தேகத்துக்குரிய இடத்தில் நான் உங்கள் மனதில் இருந்தால் அது எனக்கு அவமானம்” என்றார். அது எனக்கு பெரிய பாடமாக இருந்தது. ஐயமில்லாத அணுகுமுறை இருந்தாலொழிய நாம் எவரிடமும் உரையாடலை நிகழ்த்த முடியாது, கற்றுக்கொள்ளவும் முடியாது

இன்றைய சூழலில் முதலில் அடிபடுவது அந்த நம்பிக்கை. அதை எளிதாக பெருக்கும் வம்பர்களை இணையச்சூழல் பெருக்குகிறது.

ஜெ

பிகு : ஏன் பெயர்களைச் சொல்வதில்லை? கிசுகிசுக்களுக்காக அல்ல. அவை உண்மையான சிக்கல்கள் என்பதனால் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் பெயர்களைச் சொல்லப் போனால் அவர்களின் பெயர்களுடன் அச்சிக்கல்கள் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுவிடும். அது அந்த எழுத்தாளர்களுக்கு நல்லதல்ல

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் உரைகள் 2018
அடுத்த கட்டுரைவழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை