இலக்கியவிவாத நெறிகள்.

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…

அன்புள்ள ஜெ,

விமர்சனங்களை தவிர்த்தல் கட்டுரையை வாசித்தேன். இன்றைய சூழலையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு ஒவ்வொருவரும் மேடையில் நின்றிருக்கிறார்கள். பலர் பார்வைமுன் நிற்கிறார்கள். முன்பு வணிக எழுத்தாளர்கள் இப்படி இருந்தார்கள். ஆகவே அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துகொள்வதில்லை. இன்றைக்கு எல்லாருமே அந்நிலையில்தான் இருக்கிறார்கள்.

சொல்லப்போனால் எழுத்தாளர்கள் அல்லாத சாமானியர்களின் நிலையும் இதேதான். அவர்களின் உறவுகளும் இதே சிக்கலில்தான் உள்ளன. எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கிலேயே பேசி பெரிதாக்கிக்கொள்கிறார்கள். நிர்வாகத்துறையில் நாங்கள் இச்சிக்கலை சந்திக்கிறோம். இணையம் ஒரு  பொதுவெளி. அங்கே பேச்சுக்கள் நடந்தால் ஆணவம் பெரிதாகி பல சிக்கல்கள்.

ஆகவே ஊழியர்களை ஃபேஸ்புக்கில் கணக்கு வைக்காதே என்று சொல்கிறோம். சொன்னால் ஃபேக் ஐடியில் வைத்துக்கொள்வார்கள். எல்லாருக்கும் அந்த ஃபேக் ஐடியும் தெரிந்திருக்கும். கருத்துப்பரிமாற்றம் எல்லாமே வன்முறையாக ஆகிவிடுகிறது.

கடந்தகாலத்தில் நீங்களெல்லாம் இலக்கியம் என்னும் சின்ன வட்டத்திற்குள் இருந்தீர்கள். ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே இருந்தீர்கள். இன்றைக்கு அந்நிலை இல்லை. நீங்கள் சொல்வது இந்தச் சிக்கலைத்தான் என நினைக்கிறேன்

என்.சத்யமூர்த்தி

***

அன்புள்ள சத்யமூர்த்தி,

நீங்கள் சொல்வது உண்மை, அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் இச்சூழலிலும் இலக்கிய அழகியல் சார்ந்த விவாதங்கள் நிகழ்ந்தே ஆகவேண்டும்.ஏனென்றால் அவை நுண்ணிய அந்தரங்கமான விவாதங்கள் வழியாக மட்டுமே நீடிக்கக்கூடியவை, வளரக்கூடியவை.

சென்ற காலங்களில் சுந்தர ராமசாமி இத்தகைய விவாதங்களுக்குச் சில நெறிகளைச் சொன்னார்.

அ. விவாதங்களில் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து நிகழ்வுகளை உதாரணமாக காட்டக்கூடாது. அதைச்சார்ந்து பேசக்கூடாது

ஆ. அரசியல்கோட்பாடு, அரசியல் நிலைபாடு சார்ந்து பேசுபவர்களை எக்காரணம்கொண்டும் இலக்கிய அழகியல் விவாதத்தின் வட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது

இ. ஒருவர் ஒரு படைப்பை சுட்டிக்காட்டி விவாதத்தை தொடங்கினால் விவாதம் அப்படைப்பை பற்றி மட்டுமே. அதற்கு பதிலாகச் சொல்பவரின் படைப்பைச் சுட்டிக்காட்டுவது பிழை

ஈ.  ஒர் இலக்கியக் கருத்தைச் சொல்பவர் உண்மையாக நேர்மையான நோக்கத்துடன் சொல்கிறார் என்றே கொள்ளவேண்டும். இல்லை என தோன்றினால் விவாதிக்கவே கூடாது.

உ. ஒருவரின் கருத்துலக நேர்மையை ஐயப்படுவது என்பது விவாதமே அல்ல. அரசியல்மேடைகளில் ஒருவரின் ஆளுமையே மறுக்கப்படும்.  ‘அன்றைக்கு அப்படிச் சொன்னாய், இன்றைக்கு இப்படிச் சொல்கிறாய்’, ‘நீ சொல்வதற்கு உண்மையான அர்த்தம் வேறு. அது இதுதான்’ ‘அவனுக்கு ஒன்றைச் சொல்லி எனக்கு வேறு ஒன்றைச் சொல்கிறாய்’ ‘படிக்காமல் பேசுகிறாய்’ போன்றவை ஆளுமை மறுப்புகள். அப்படி ஒருவன் பேச ஆரம்பித்தாலே அவனை தவிர்த்துவிடவேண்டும்.

ஊ. ஒரு விமர்ர்சன கருத்து என்பது மதிப்பீடு அல்ல. அதாவது இது மோசமான படைப்பு என்பது மதிப்பீடு. அதற்கு இலக்கியவிவாதத்தில் இடமில்லை. இன்னின்ன காரணங்களால் இது மோசமான படைப்பு என்பதுதான் இலக்கியக்கருத்து. அது மட்டுமே விவாதத்திற்குரியது.

எ.இலக்கியக்கருத்து வேறு  ‘கமெண்ட்’ வேறு. கமெண்ட் என்பது அரட்டையின் பகுதி. ’இந்தக்கதை பேரரசு சினிமா மாதிரி இருக்கிறது’ என்று ஒருவர் சொன்னால் அது இலக்கியக்கருத்து அல்ல. கமெண்ட். அவரை இலக்கியவிவாதத்தில் பொருட்படுத்தவேண்டியதில்லை.

இந்த கொள்கைகள் சொல்லிச்சொல்லி ஓரளவு நிலைநிறுத்தப்பட்டன. முழுக்க கடைப்பிடிக்கப்பட்டனவா என்றால் கஷ்டம்தான். ஆனால் இவை ஒரு  இலட்சியமாக எண்ணப்பட்டன. நட்பிலும் பகைமையிலும் எல்லைமீறல்கள் இருந்தன என்றாலும் பொதுநெறி இதையொட்டியதே.

இன்று ஒன்றை கூடவே சேர்த்துக்கொள்ளலாம். இலக்கியவாசிப்பு – இலக்கியவிமர்சனச் சூழலுடன் சம்பந்தமில்லாதவர்கள் புழங்கும் தளத்தில் இலக்கியம் விவாதிக்கப்படுவது முழுமையாகவே தவிர்க்கப்படவேண்டும்

ஜெ

***

முந்தைய கட்டுரைபுத்தன்,கழுகு,பலா – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரைரமேஷ் பிரேதன் உடல்நிலை