பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

கே.ஜி.சங்கரப்பிள்ளை எனக்கு 1986 முதல் அறிமுகம். சுந்தர ராமசாமி ஆசான் விருது பெற்றதை ஒட்டி ஒரு பாராட்டுக்கூட்டம் திரிச்சூரில் ஏற்பாடாகியது. அதை நடத்தியவர்களில் ஒருவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை.. அன்று அவர் முதன்மையான சமூகக் களப்பணியாளர். மாவோயிச சிந்தனைகளில் ஈடுபாடுள்ளவர். அவர்களின் இதழ்களில் முதன்மையாக எழுதியவர். ஆனால் ஆற்றூர் ரவிவர்மா போன்ற கவிஞர்களுடன் ஆக்கபூர்வமான உறவில் இருந்தவர்.

 

மேடையில் சுந்தர ராமசாமியின் தனுவச்சபுரம் என்ற கவிதையை கே.ஜி.சங்கரப்பிள்ளை. மிகவும் உணர்ச்சிகரமாக பாராட்டிப்பேசினார். “சரி இந்த ஊரென்ன, இப்போது எல்லா ஊருமே தனு வைத்த புரங்கள்தான்” என்ற அக்கவிதையின் இறுதிவரி அவருக்கு ஆழமான துயரார்ந்த நினைவுகளை எழுப்பியது என பின்னர் அறிந்துகொண்டேன். அவர் அறுபதுகளின் நக்ஸலைட் எழுச்சியுடன் தொடர்புடையவர். பின்னர் அவருடைய பல கவிதைகளில் அந்த எழுச்சியின் வீழ்ச்சியின் சித்திரம் வெளிப்பட்டிருக்கிறது

 

திரிச்சூர் செல்லும்போதெல்லாம் கே.ஜி.சங்கரப்பிள்ளை. அவர்களின் இல்லத்திற்கு நானும் ஆற்றூர் ரவிவர்மாவும் செல்வதுண்டு. இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருப்போம். நான் என்னுடைய அந்நாளைய கவிதைக்கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவேன். கே.ஜி.சங்கரப்பிள்ளை. எழுதிய அரசியல்கவிதைகள் பலவற்றை நிராகரித்து ஆவேசமாக வாதிட்டிருக்கிறேன். மூத்தவர்களுக்குரிய இனிய புன்னகையுடன் என்னுடைய மீறல்களை அனுமதிப்பார்.

 

கே.ஜி.சங்கரப்பிள்ளை. எழுபதுகளில் கேரளம் முழுக்க ஓர் அரசியல் ஆளுமையாகவே அறியப்பட்டார். நக்ஸலைட் இயக்க அரசியலின் பகுதியாக அவர் எழுதிய பங்காள், வரும் வரும் எந்ந பிரதீக்ஷ போன்ற கவிதைகளை இளைஞர்கள் ஆவேசமாக மேடைகளில் கூறுவார்கள். அன்று கேரளக்கவிதை என்பதே யாப்புதான். வசனகவிதை உருவாகி பத்துப்பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. ஆனால் அவற்றுக்கு மக்களிடம் செல்வாக்கு உருவாகவில்லை. கே.ஜி.சங்கரப்பிள்ளை., கே.சச்சிதானந்தன் போன்றவர்களின் அரசியல் கவிதைகள் வழியாகவே வசனகவிதைகள் மக்களிடம் சென்று சேர்ந்தன

 

கே.ஜி.சங்கரப்பிள்ளை. அவருடைய தீவிர அரசியலுக்கு அப்பால் அனைவருடனும் இனிய பழக்கங்கள் கொண்டவர். குறிப்பாக இளைஞர்களுடன். அவர் மலையாள ஆசிரியர். எல்லா நிலையிலும் ஆசிரியர். அவருடைய இல்லத்தில் மாணவர்கள் ஒழிந்த பொழுதே கிடையாது. நள்ளிரவில்கூட வந்து கதவைத்தட்டுவார்கள். அவர் அவர்களின் எல்லாப்பிரச்சினைகளுக்கும் உடன் நிற்பவர். காவல்நிலையம் வரைச் செல்பவர். அன்று மாணவர்கள் அனைவருமே புரட்சியாளர்கள், எல்லாருக்குமே பிரச்சினைகள் மிகுந்திருந்தன

 

இன்று திரும்பிப்பார்க்கையில் கே.ஜி.சங்கரப்பிள்ளை. கவிதைகள் பல தளங்களாக விரிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. அரசியல் அவர் கவிதைகளின் பிரிக்கமுடியாத கூறு. ஆனால் தத்துவார்த்தமான ஆன்மிகமான தேடல்களும் கண்டடைதல்களும் கொண்ட ஓர் உலகம் அவர் கவிதைகளில் உள்ளது. என் நோக்கில் அவையே சிறந்த கவிதைகள். ஆனால் அதிகம் புகழ்பெறாதவை அவை.

 

கே.ஜி.சங்கரப்பிள்ளை. 2019 ஆண்டு கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும்பொருட்டு கோவையில் நிகழ்ந்த விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக நான் மொழியாக்கம் செய்த கவிதைகள் இவை. ஏற்கனவே அவருடைய பல கவிதைகளை மொழியாக்கம் செய்து ‘இன்றைய மலையாளக் கவிதைகள்’ [1992] என்னும் தொகுதியில் சேர்த்திருந்தேன். அவையும் இந்நூலில் உள்ளன

 

ஜெயமோகன்

பலாக்கொட்டைத் தத்துவம் கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் நூலுக்கான முன்னுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28
அடுத்த கட்டுரையாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை