பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை
கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1
அன்புள்ள ஜெ,
கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் அபாரமான புத்துணர்ச்சியை அளிக்கின்றன. ஒரு சூழலில் எழும் கவிதைகளுக்கு மொழியிலும் அமைப்பிலும் பார்வையிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. புறநாநூற்றுக்காலம் முதல் அப்படித்தான்.ஆகவே ஒரு அயல்மொழியிலிருந்து வரும் கவிதை புத்தம்புதியதாக இருக்கிறது.
கே.ஜி.சங்கரப்பிள்ளை எல்லா வகைக் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு கவிதைகள் எனக்கு மிக முக்கியமானவையாக தெரிந்தன. குற்றாலம் ஓர் அழகிய கவிதை. மலையிறங்கும் காட்டுப்பெண் அருவிதான். வானவில்லாக எழவும் துளிகளாகச் சிதறவும் அவளுக்கு வாய்ப்புண்டு. கல்லணைகளில் சிறையாகவும் கடல்சேரவும் வாய்ப்புண்டு.
பல போஸ் போட்டோக்கள். அவர் அதை எழுதியது முன்பு என நினைக்கிறேன். 1992ல் வெளிவந்த உங்கள் தற்கால மலையாளக் கவிதைகள் தொகுதியில் அதை வாசித்த நினைவு. இன்றைய செல்பி யுகத்தில் அந்தக்கவிதை மிகமிக பெரிதாக ஆகிவிட்டது.
இன்றைக்கு ஒவ்வொருவரும் தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஸ்நாப்பில் கூட விழாதவர்கள் இன்று இருப்பார்களா என்ன? இருந்தால் அவர்கள் இப்பூமியில் இல்லை. பல போஸ் போட்டோக்கள் இன்றைக்கு தலைவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான்.
அந்த ‘பதிவுசெய்வதிலுள்ள’ அபத்தம் இக்கவிதையில் உள்ளது.நாம் நடித்துப் பதிவு செய்கிறோம். மோகன்லால் போல அஜித்போல. அது நாம் அல்ல. அப்படி நம்மைப் பதிவுசெய்து நாம் அடைவது என்ன? இந்த போட்டோக்களுக்குப் பின்னால் நாம் பதுங்கிக்கொள்கிறோம் இல்லையா?
மனிதர்கள் பார்த்துப்பார்த்துத்தான் கடல்கள் இத்தனை பெரிதாயின என்ற அபாரமான வரி. எத்தனை பார்த்தாலும் இன்றைக்கு கடல்கள் பனித்துளிகளாகவே எஞ்சுகின்றன.
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
பல்லிவால் ஓர் அழகான கவிதை. அவர் அதை நக்ஸலைட் இயக்கம் சார்ந்து எழுதியிருக்காலாம்.முதலில் எனக்கும் அப்பாவுக்குமான உறவு என்று பட்டது. பிறகு எனக்கும் இந்தச் சமூகத்திற்குமான உறவு என்று பட்டது. ஒரு ஆபத்துவந்தால் இரக்கமே இல்லாமல் வெட்டி வீசிவிடமுடியும் என்றால் அந்த உடலுறுப்புக்கு உண்மையில் என்னதான் மதிப்பு. அந்தத்துடிப்பை நினைத்துப்பார்க்கையில் ஒரு பதற்றம் ஏற்பட்டது
செந்தில்குமார்