சுழல்வட்டம்
பூமாலையோ
பொன்மாலையோ
காசுமாலையோ
சிலுவைமாலையோ
தாலியோ
வெள்ளைக்காலரோ
ஸ்டெதெஸ்கோப்போ
ருத்ராக்ஷமோ
சங்கிலியோ
கயிறோ
பாம்போ
நஞ்சுநீலமோ
சுற்றித்தழுவும்
உன் கைகளோ
கழுத்திலிருப்பதே
என் சுழல்வட்டம்
விலாசம்
பெயர்
பாதி தன்னுணர்வில்…
கிழங்கையெல்லாம் தின்று
என் விளைநிலத்தை
வரளச்செய்தது யார்?
விதையறையை துளைத்து
என் அடுத்தபோகத்தை
அழித்தது யார்?
முழவுத்தோலில் ஓட்டையிட்டு
என்னை
முழங்காமலாக்கியது யார்?
அடித்தளம் கூரையென
என் உறுதிகளையெல்லாம்
உள்ளூரக்குடைந்து மட்கவைத்தது
எந்த மரணச்சரம்?
நெற்குவியலை
உமிக்குவியலாக்கியது
எந்த எலி?
எப்படி கண்டுபிடிப்பது?
ஒரே முகம் ஒரே வடிவம்
ஒரே பாணி
ஒரே மாயை
ஒன்றா
பலதா
இதெல்லாம்?
எலிகளிலும்
பிளேகிலும்
புதிர் பரப்புவது
ஒரே பகடிக்காரனா?
மரணத்திற்கு எவராவது
ஒரு மணிகட்டினாலென்ன என்று
வாதிட்டது முன்பு ஓர் எலி
வேடனின் வலையறுத்து
புறாக்களை விடுவித்தது
பின்னாளில் ஒன்று
கதையோ
வரலாறோ
இதெல்லாம்?
[ 2 ]
சேற்றுவளைகளில் இருந்தெல்லாம் மிக உயரத்தில்
எலிஏறா மாமலையில்
ஃப்ளாட்டில்
வாசல்மூடி
அமர்ந்திருக்கிறேன்
பரீக்ஷித்தைப்போல
ஒரு பாதி தன்னுணர்வில்
செயற்கைக்கோள் நிலவிலிருந்து
வந்தது
கார்ட்டூன் தொலைக்காட்சி
மிக்கி எலி
ஜெர்ரி எலி
மூஷிக பராக்ரம
கதா சரித சாகரம்
பார்த்து பார்த்து
நண்பா
சிரித்துச் சிரித்து செத்தேன்.
[குறிப்பு எலி –என்.வி. கிருஷ்ண வாரியர் எழுதிய கவிதை. பிளேக். அல்பேர் காம்யூ எழுதிய கதை]
பேசக்கூப்பிடாதீர்கள், தயவுசெய்து…
திறப்புவிழாவுக்கு
நீங்கதான் வந்தாகவேண்டும் சார்
ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு நகர்க்கூடத்தில்
மூன்றரைக்கு நாங்கள் காருடன் வருவோம்
நல்லது, ஆனால் திடீரென்று அந்தக்கார்
பல்லக்காக மாறும்
வாழ்த்தொலியும் சங்கொலியும்
காரின் முழக்கத்தில் தெளியும்
நான் சரிகை நரம்புள்ள நாட்டாமையாவேன்
சொல்லில் உண்மையெழும் தியானமாக ஆகவேண்டும் பயணம்
மௌனமே துணையாகவேண்டும்
துணியவேண்டும் உள்ளம்
நீரும் நேரும் நேரமும் மொழியும்
மௌனத்தில் விளையவேண்டும்
முடியுமா அந்த ஆர்ப்பாட்டத்தில் இன்று?
நரகத்திலிருந்து ஓர் அலறல் வந்து
கூடத்திற்கு வெளியே காத்து நிற்பதை
செவிகொள்ள முடியுமா என்னால்?
கல்மதிலாக சூழ்ந்திருக்காதா சொற்கூட்டம்?
இன்று மௌனத்தை எதிர்பார்ப்பது அறிவின்மை
அமைதியை எதிர்பார்ப்பது அதைவிட.
வெயில்பாதைகளில் உலையும் வேப்பமரங்களை
வெறுமே பார்த்திருப்பதிலாவது சற்று அமைதியுண்டு
கொண்டாட்டங்களில் பழைமை எழுகிறது
பழைமை மொழியை மடைப்பள்ளியாக ஆக்குகிறது
அதில் குடுமியும் தொந்தியுமுள்ள கோமாளிகளாக
சொற்கள் அரங்காடுகின்றன
பழைய சுவைகள் ஆர்ப்பரிக்கின்றன
காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது
என் மறதியின் ஆலங்கட்டி.
விசுவாசத்தின் மரணத்துடிப்பு
அதிகாரத்தின் ஆட்சித்துடிப்பு
ஆணவத்தின் வீம்பு
பொய்,அறைகூவல், வசை.
அழைக்காதீரகள் என்னை
வந்தால் நானே கூவிக்கூத்தாடிவிடுவேன்
நானல்லாத பிறிதொருவனாக.
இல்லாத நானாக.
அழைத்து கூச்சலிட்டுவிடுவேன்
வரவே வராத உலகை.
தனிமையில் அதை எண்ணி
நானே கூசிவிடுவேன்.
வேண்டாம், அழைக்காதீர் என்னை.