யானைடாக்டர் -கடிதம்

அன்புள்ள ஜெ. சார்,

 

மானுட மனம் தன்னை இழந்து இயற்கையின் பிரமாண்ட பெருவெளியின் முன் ஆழ்ந்து நிற்கும் இடங்களில் ஒன்று கடல். மற்றொன்று மலைக்காடு. காட்டின் அரசன் சிங்கமெனில் பேரரசன் யானை. பார்த்து முடிக்க இயலா உணர்வையும் நெஞ்சை விம்மச் செய்யும் சிலிர்ப்பையும் தருவது காடெனில் அதன் குறியீடாக யானையே முன் நிற்கும்.

 

சிறு வயதில் தெரு வழியே சென்ற யானை சாணமிட்டுச் செல்ல அதை மிதித்தால் யானை பலம் கிடைக்கும் என்று யாரோ கூற நாங்கள் அதை போட்டி போட்டு மிதித்தபடி யானை மீண்டும் எப்போது சாணமிடும் என அதன் அசைந்தாடும் சதைக் கோளத்தைப் பார்த்தபடி பின்னால் செல்வோம். நெருங்கிச் சென்றபோது தொலைவில் பார்த்த யானை மறைந்து தசையாலான பேருருவம் ஒன்று முன் நிற்பதாகவே தோன்றும். ஆனால் அந்த யானையை அந்த தார்ச்சாலையில் மணியோசையுடன் எங்கே நடத்தி அழைத்துச் சென்றார்கள்? அந்தக் கால்கள் தார் சாலையின் கொதிப்பை எப்படி தாங்கி இருக்கும்? ஏதேனும் கோயிலுக்கா அல்லது திருவிழாவில் பிச்சை எடுக்கவா? இலக்கை அடைந்த பின்னும் அதன் பாதங்கள் கெஞ்சியிருக்குமோ? அப்போது தெரியவில்லை. மாமத யானையின் பாதம் ஒப்பீட்டில் ஒரு குழந்தையின் கால்களா என்ற வியப்பும் இயற்கையின் பிரமாண்டம் எப்படி தன் குழந்தைமையைக் காத்துக் கொள்கிறது என்பதையும் யானை டாக்டர் கே. யின் வழி உணர்ந்து கொண்டேன்.

 

அதிகாரமின்றி மனிதனால் வாழ முடிவதில்லை. அவரவர் உயரத்திற்கேற்ற அதிகாரத்திலே தான் மனித வாழ்க்கை இயங்குகிறது. ஆனால் பேரியற்கை படைப்பின் முன் மானுட அதிகாரம் ஒன்றுமில்லாதது. டாக்டர் கே. அதைத்தான் உணர்த்தியுள்ளார்.

 

முதுமலை, மசினகுடி, மாயாறு, வால்பாறை குரங்குமுடி, சோலையாறு பகுதிகளில் உலாச் சென்றபோது காட்டில் யானைச் சாணத்தைப் பார்த்து மனதில் திகில் ஏற்பட்டது. ஆனால்  அருகிலேயே உடைந்த மதுப்புட்டிகள் கிடந்தன. எந்த யானையின் காலில் நுழைந்தனவோ தெரியவில்லை.

 

நினைவுகளின் பெருந்தொகை கொண்ட பேருருவ யானை, டாக்டர் கே. அவர்களைத் தேடி வருவதும் அவரை உணர்ந்து கொள்வதும் சிகிச்சை பெற்ற பின் பிளிறலால் அவை காட்டும் நன்றியுணர்வும் அன்பும், சிறிய விதைக்குள் ஆழ்ந்திருக்கும் மாபெரும் காட்டினைப் போல் டாக்டர் கே. அவர்களிடம் குடிகொண்டுள்ள ஒட்டுமொத்த மானுடத்தையே காட்டுகிறது.

 

யானை டாக்டர் படித்து முடித்தவுடன் உணர்ந்தது, யானை என்பது தசையாலான பேருருவம் மட்டுமல்ல. காடு எனும் பேரியற்கையின் ஆன்மாவே அதுதான்.

 

க.ரகுநாதன்.

 

அன்புள்ள ரகுநாதன்

ஒரு படைப்பின் இலக்கு என்பது காட்சியாலான உண்மையில் இருந்து கருத்தாலான ஓர் உண்மை நோக்கி நிகழ்வுகளைக் கொண்டுசெல்வது. அது நிகழ்ந்திருக்கிறது என உங்கள் கடைசிவரியை வாசித்தபோது உணர்ந்தேன். நன்றி

 

ஜெ

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-7
அடுத்த கட்டுரைதர்மபுரி இலக்கியச் சந்திப்பு