உலகெலாம் -கடிதம்

உலகெலாம்…

அன்புள்ள ஜெ வணக்கம்.

உலகெலாம் கட்டுரை கற்கண்டு துகள் போல சிறிய கட்டுரையாக இருந்து இனிக்கிறது. வைரகல்போல பெரிதாக வண்ணம் தெளித்து ஒளிகின்றது.

மீண்டும் ஏன் இதுமாதிரியான கட்டுரைகளை மறுபிரசுரம்செய்யவேண்டி உள்ளது?

இலக்கியத்தை தூக்கிபிடிப்பதற்காகவா? ஆம்.

அறியாமையையே ஒரு பொருளாக வைத்து வியபாரம் நடத்தும் மனிதர்களை மட்டம் தட்டுவதற்காகவா? இல்லை. அவர்களின் வியாபாரத்திற்கு உங்கள் நல்லதை, உயர்ந்ததை, போற்றுதற்கு உரியதை அகங்களை நசுக்கி மிதித்துக்கொள்கின்றீர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்காக.

தமிழர்களில் அதிகபடியாக அறியாமையின் வடிவமாக இருக்கிறார்கள் என்பதை சுட்டுவதற்காகவா? இல்லை, அறியாமையின் தொடர் தொடுதலால் அறியாமையை அறிவாக கொண்டாடுகிறார்கள் என்பதை விளக்குவதற்காக.

அறியாமை ஒரு துருவம், ஞானம் ஒரு துருவம், இந்த இருதுருவத்திற்கு இடையே செறிந்து இருக்கும் மானிட கூட்டம் என்னவாக போகின்றது என்பதை சுட்டுவதற்கான கட்டுரை. கருமேகமும், அதை கிழிக்கும் மின்னலும்போன்ற கட்டுரை.

அறியாமைக்கும் அறிவுக்கும் இடையே எந்த துருவம் நோக்கி செல்லவது என்று அறியாத மனிதர்கள் முன்னே எது மீண்டும் மீண்டும் முன்னால் வந்து தொடுதல்கொள்கிறதோ அதே சரி என்று அதுவாகவே மனிதர்கள் மாறி விடுகின்றார்கள். அந்த மானிட அறிவு மயக்கம்தான், அறியாமையை விதைக்கும், அறியாமை உடையவர்களின் வெற்றி.

அந்த மயக்கத்தில் மனிதர்களை வைக்க அவர்களை பயன்படுத்தும் தலைவர்களும், ஊடகங்களும் அறியாமை உடையவர்களையே அறிவாளிபோல காட்டி வளர்க்கின்றார்கள். அவர்களின் நோக்கம் அவர்களை வளர்ப்பது இல்லை அவர்களின் மூலம் அறியாமையை மக்களிடம் வளர்க்கவேண்டும் என்பதுதான் உண்மை. அந்த அறியாமைகள் வெகு இயல்பாக மானிடர்களை தங்கள் சொல்லால் செயலால் எழுத்தால் தொட்டுத்தொட்டு அறியாமைகளில் வைக்கிறார்கள். மனிதர்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். இந்த அறியாமைகள் எளிதாக கிடைக்கிறது. உழைக்காமல் கிடைக்கிறது. உடலையோ உள்ளத்தையோ சிதைக்காமல் கிடைக்கிறது. அது ஒரு தீரா உயிர்கொல்லி நோயாக இருக்கிறது என்பதை அறியவிடமல் செய்தபடி கிடைக்கிறது. புண்ணை நக்குவதுபோல அது சுவையாகவும் இருக்கிறது.

ஞானம் தூரத்தில் இருக்கிறது. உழைத்து பெறவேண்டிய இடத்தில் இருக்கிறது. உடலையும் உள்ளத்தையும் ரணப்படுத்தியே கிடைக்கிறது. காலத்தை தொலைக்கவேண்டிய நிர்பந்தத்தில் வைக்கிறது. தன்னந்தனியாக தேடிஅலையவேண்டிய வனத்தில் கண்ணமூச்சி காட்டுகிறது. ஐம்புலன்களை இழுத்துபிடித்து நிறுத்தி ஓட்டவேண்டிய போர்பயணத்தில் இருக்கிறது.

ஞானம் தன்னை காட்டிக்கொள்ள ஞானத்தோடுதான் மோதுகின்றது. அதனால் அது குத்துபடுகின்றது அல்லது குத்துகின்றது. குத்தும்போதும் வலிக்கிறது. குத்துப்படும்போதும் வலிக்கின்றது. வலியில்லாமல் ஞானம் இல்லை.

அறியாமை தன்னை காட்டிக்கொள்ள அறியாமையோடு மோதுவதில்லை, நீர் நீரோடு கலப்பதுபோல அறியாமையோடு அறியாமை இரண்டில்லா ஒன்றாகிவிடுகின்றது. ஞானத்தின் ஒளியில் தன்னை அறிந்து தன் இருப்பதை நிறுத்திக்கொள்ள ஞானத்தின் தூரத்தில் நின்று திரைபோட முயல்கிறது.

அறியாமை, நீ என்று நீ மட்டும் என்று ஒருமையை சுட்டிக்காட்டி அந்த ஒருமையில் சுயநலத்தில் சுகம்காணும் வாழ்க்கையை முன்வைக்கிறது. பெரிய புராணம் என்ன தந்தது என்பதை அது ஏற்றுக்கொள்வதி்ல்லை. தன் புராணத்தை பெரிய புரணம் என்று பச்சாதாபம் கொள்ளவைத்து நப்பாசைப்படவைக்கிறது.

அறிவு நீ என்று சுட்டிக்காட்டும்போதே, நீ என்பது நீமட்டுமல்ல, நீ்ங்களாகிய எல்லோரும் என்கிறது. ஆங்கிலத்தின் you ஒருமையாகவும் பண்மையாகவும் இருப்பதுபோல் என்கிறது.

படைப்பாளிகள் தன் படைப்பகளை தன்னிலைக்காக படைகிறார்களா? முன்னிலைக்கா படைக்கிறார்களா? முன்னிலைக்காக படைக்கிறார்கள். தன்னையும் முன்னிலையாக வைத்துக்கொண்டு படைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எதையும் உலகுக்கு படைக்கிறார்கள். உலகுக்கு படைப்பதாலேயே தனக்கும் படைத்துக்கொள்கிறார்கள். உலகில் நானும் நீயும் ஒன்றுதான். உலகுக்கு படைக்கமுடியாதபோது அவர்களால் அவர்களுக்கும் படைத்துக் கொள்ள முடிவதில்லை என்பதை உணர்ந்ததாலேயே உலகுக்கு படைப்பதை பூரணபடைப்பு என்று பறைசாற்றுகின்றார்கள்.

திருக்குறளில் வள்ளுவன் உலகுக்கு முதல் எது என்று ஆய்ந்து சொல்கிறான். அதனால்தான் அது அவனுக்கும் முதலாகிறது.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரன் உலகம் மகிழ வலம் வருவது எது என்று தேடி கண்டடைந்து சொல்கிறான். அதுதான் அவனை மகிழ்விக்கிறது.

கம்பராமாயணத்தில் கம்பன் உலகத்தை யார் ஆக்கி காத்து அழித்து விளையாடுகிறார்கள் என்று கண்டுகளிக்கிறான். உலகம் கண்டு களிக்கிறது.

சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவர் தோன்றி மறைவதையே வழக்காக கொண்ட உலகம் முடிவும் தோற்றமும் இல்லாமல் இருக்கிறதே என்று ஆச்சரிய படுகின்றார்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் திங்களை போற்றுவதும், மழையை போற்றுவதும் உலகுக்கு அளித்தலால்தான்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் ஓதியும் உணர்ந்தும் அறியமுடியாதவனை உகலம் எப்படி அறிந்தது, எப்படி வழுத்தியது என்று கண்டுகளிக்கிறார்.

இந்த மாபெரும் கொடையாளிகளின் ஞானமும் அறிவும் உணர்வும் கலந்த படைப்புகள், உலகத்தில் நான் ஒருவன், நான் ஒருவனே உலகம் இல்லை என்பதை உணர்ந்து படைக்கப்பட்டதாக உள்ளது.

பெரும் படைப்புகள், மனிதர்களாக பிறந்தவர்களே நீங்கள் இருக்கிற இடம் எது? நீங்கள் செல்லவேண்டிய இடம் எது? அதன் பாதை என்ன? அதை அடைய தூரம் என்ன? அதை அடைந்தால் நீங்கள் எத்தனை பெரிய செல்வத்தை பெறுவீர்கள் என்பதை காட்ட கைபிடித்து அழைத்துச்செல்கிறது.

இதை அறியாத அறியாமை கொண்ட மனிதர்கள் தங்களின் முழு அறியாமையை கொண்டு அறியாமை மனிதர்களை உருவாக்குவதற்கு பெரும் ஞானியரை தொட்டு இழுத்து கீழே போடுகின்றார்கள். அது ஒரு ஆணவம். நான் அவரையே கீழே இழுத்துப்போட்டுவிட்டேன் என்று சுயஇன்பம் கொள்ளும் ஆணவம். அவர்கள் அந்த ஆணவத்தால் தங்கள் முகம் காட்டிக்கொள்கிறார்கள். தங்கள் இருப்பை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் மூலம் தன்னை வளர்த்து வளர்த்து வாழ்ந்துவிட்டுப்போய்விடலாம் என்று எண்ணுகின்றார்கள். அறியாமை மனிதர்களை உருவாக்கும் அறியாமை மனிதர்களால் ஞானியரின் நிழலைக்கூட தொடமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும், ஆனால் அவர்களின் கீழ் உட்காரும் மனிதர்களுக்கு அது தெரியாத மயக்கமாகத்தான் உள்ளது. அந்த மயக்கத்தை தெளிவிக்கவேண்டிய இடத்தில் இந்த கட்டுரை உள்ளது. அவர்களை நோக்கி திரும்பும் மனிதனின் நிலை என்ன? என்பதை சுட்டுக்காட்டும் இந்த கட்டுரை மிகவும் நுணுக்கமான இடத்தில் மானிட உள்ளத்தை தொட்டு மேலே எடுத்துச்செல்கிறது. அந்த தொட்டு எடுக்கும் வேலைகளை உங்களைப்போன்ற படைப்பாளிகள் செய்யும்போதே மயக்கம் தெளிகிறது. மேல் எழும்ப முடிகிறது.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். சொல்வார் “அலை கடலை சார்ந்தது. கடல் அலையை சார்ந்தது இல்லை”

ஆத்மானந்தர் சொல்கிறார் “‘அலையும் கடலும் நீரன்றி வேறு அல்ல” என்கிறார்.

சௌதி அரேபியாவின் ஒரு உணவுவிடுதியில் இந்த ஓவியத்தைப் பார்த்தேன். முதல் ஓவியத்தில் அலை கடலி்ல் தோன்றுகிறது. இரண்டாவது படத்தில் கரையை அடைகிறது. மூன்றாவது படத்தில் மீண்டும் கடலுக்கே சென்று அடைகிறது.

காலத்தால் இடத்தால் மொழியால் வேறுபட்டு நின்று சொல்லப்பட்ட ஒரே உண்மை. ஆனால் உலகெலாம் என்று சொல்லப்பட்ட உண்மை.

ஞானத்தை விடையாக்கி உலாவரும் இறைவன், உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன் என்பது எத்தனை பெரிய உண்மை.

உலகெலாம் என்ற அந்த ஒரு சொல்லுக்காக சேக்கிழார் எத்தனை ஆழ்கடலுக்குள் இறங்கி முத்தெடுத்திருப்பார் என்பதை அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். எடுத்த முத்தை எப்படி உலகுக்கு அணிசெய்து பொக்கிஷமாக்குகின்றார் என்பதை அறிவும் உணர்வும் எழுச்சிபெற விளக்குகின்றீர். நன்றி.

ஏன் இலக்கியம் படிக்கணும்? மனித அகத்தில் மானிட குப்பைகள் குவிந்துவிடாமல் இருக்க. கொட்டிக்கொண்ட, கொட்டப்பட்ட குப்பைகளை கொளுத்தி அலகில் ஜோதிகாண.

அன்பும் நன்றியும்.

ராமராஜன் மாணிக்கவேல்.

***

உலகெலாம் எனும் கனவு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73
அடுத்த கட்டுரைபேய்ச்சி உரை -கடிதம்