‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34

பகுதி நான்கு : அன்னையெழுகை – 6

இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு மேல் செங்கற்களாலான பிறிதொரு கோட்டை எழுந்து அதற்குமேல் மாபெரும் மரக்கலங்கள்போல மரத்தாலான காவல்மாடங்களை ஏந்தியிருந்தது. அவற்றை மரக்கலங்கள் என்று எண்ணும் கணம் கற்சுவர் அலைகொள்வதுபோல் உளமயக்கு உருவாகும்.

அக்காவல்மாடங்களும் ஏழு அடுக்குகள் கொண்டவை. மூன்று கீழடுக்குகளில் கீழ்நோக்கி சரிந்து திறக்கும் சாளரங்களில் வில்லேந்திய வீரர்கள் அமர்வதற்கான சிற்றறைகள். உள்ளிருந்து நோக்கினால் அவை தேனீக்கூடுபோல செறிந்திருந்தன. வெளியே நின்று நோக்குகையில் அவை பகலில் மாபெரும் சல்லடை எனத் தோன்றின. இரவில் உள்ளே விளக்குகள் சுடர்விடத் தொடங்குகையில் உடலெங்கும் விழிகள் எழுந்த இந்திரன்போல் மாறின. அவற்றுக்கு உள்ளே இருப்பவர்களை வெளியே நின்று நோக்க முடியாது. அச்சாளரங்களுக்கு அப்பால் படைவீரர்களின் தங்குமிடங்களும் படைக்கல அறைகளும் இருந்தன.

நான்காம் அடுக்கில் இருபுறமும் திறக்கும் அகன்ற சாளரங்களுக்குள் முரசுக்காரர்களும் கொம்பூதிகளும் அமர்வதற்கான மேடைகள். அவர்களிடமிருந்து எழுந்து ஆறாவது அடுக்கில் வாய் திறந்தன மாபெரும் கொம்புகள். இந்திரப்பிரஸ்தத்தின் காவல்மாடங்களின் மாபெரும் கொம்புகள் பாடல் பெற்றவை. கலிங்கச் சிற்பிகள் சமைத்த அக்கொம்புகள் ஒவ்வொன்றும் உள்ளே வீரர்கள் இறங்கிச் சென்று தூய்மை படுத்தும் அளவுக்கு பெரியவை. அவற்றின் முகப்புகள் மாபெரும் மலர்கள்போல் வெளியே திறந்திருந்தன. செம்பாலும் வெண்கலத்தாலுமான அவை செந்நிற மஞ்சள் நிற இதழ்கள் விரித்து அக்கோபுரம் சூடிய காதுமலர்கள் எனத் தெரிந்தன.

யுயுத்ஸு சென்று அவற்றை நோக்கியிருக்கிறான். சுருண்டு குவிந்து சென்ற அவற்றின் முனையில் தோலாலான பெருந்துருத்திகள் பொருத்தப்பட்டு கீழிருக்கும் அறைகளில் அவற்றை இயக்கும் நெம்புகோல்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை நான்கு வீரர்கள் ஏறி நின்று மிதித்து இயக்க அக்கொம்புகள் நெடுந்தொலைவு கேட்கும்படி பிளிறின. நூறு யானைகளின் பிளிறலுக்கு நிகரான ஓசை கொண்டது அது என்றனர் சூதர். இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி நிகழ்ந்தபோது அந்தக் கொம்புகள் எழுப்பிய பேரொலி தெற்குவாயிலுக்கு வெளியே பல காதங்களுக்கு அப்பால் சிற்றூர்களிலெல்லாம் முழக்கமிட்டது. திசையானைகளின் துதிக்கைகள் அவை என்று சூதர்கள் பாடினார்கள்.

ஏழாவது அடுக்கில் பன்னிரு பெருமுரசுகள் அமைந்திருந்தன. அவை வெவ்வேறு திசைகளை நோக்கி சரிக்கப்பட்டவை. ஒவ்வொன்றின் வாயும் செந்நிற நீர் நிறைந்த சிறுகுளம்போல தோல்பரப்பால் மூடப்பட்டிருந்தது. கீழே நின்று நோக்குகையில் வானிலெழுந்த நிலவுத்தொகைகள். ஒவ்வொன்றும் பன்னிரு யானைகளின் தோல்களை உரித்து சேர்த்துத் தைத்து உருவாக்கப்பட்டது. அவற்றில் விழும் முழைக்கழிகள் கைவிடுபடைகளைப்போல் வில்லுடன் இணைக்கப்பட்டவை. அவற்றை இயக்கும் நெம்புகோல்கள் ஐந்தாம் அடுக்கில் இருந்தன. அவற்றை பயின்று தேர்ந்த ஏவலர்கள் வெவ்வேறு வகையில் இழுத்து முழங்க வைத்தனர். அவை விண்ணில் இடி முழங்குவது போலவே ஒலித்தன. அவை முழங்கி அமைந்த பின்னர் எழும் கார்வை நெடுநேரம் வயிற்றில் தங்கியிருந்தது.

காவல்மாடக் கோபுரத்திற்கு மேல் நடுவில் இந்திரப்பிரஸ்தத்தின் இறைவனாகிய இந்திரனின் சிலை நின்றது. தெற்குக்கு உரிய எமன் ஒருபுறமும் யமி மறுபுறமும் நோக்கி நிற்க நடுவே தலைசொடுக்கி நிமிர்ந்து விழியுருள பல்காட்டிக் கனைக்கும் உச்சைசிரவஸின் மேல் இந்திரன் அமர்ந்திருந்தான். ஒருகால் புரவியின் மேல் மடித்து வைத்து மறுகால் சேணவளையத்தில் ஊன்றி ஒரு கையில் மின்படையும் மறுகையில் தாமரையுமாக, மூன்றடுக்கு ஒளிமுடி சூடி புன்னகையுடன் கீழ் நோக்கி அருள்புரிந்தான். இந்திரனின் சிலைக்குக் கீழே முனிவர்கள் தவத்தில் ஆழ்ந்திருந்தனர். தேவர்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் கின்னரர்களும் களியாடினர்.

கிழக்குக் கோட்டைமுகப்பில் வெண்களிற்றின்மீது அமர்ந்த தோற்றம். இந்திராணியும் ஜயந்தனும் இருபுறங்களிலும் நின்றனர். மேற்கே வருணனும் வாருணியும் இருபக்கமும் நிற்க வியோமயானத்தின் மேல் அமர்ந்த இந்திரன். வடக்கே குபேரனும் பத்ரையும் இருபுறத்திலும் அமர்ந்திருக்க வெண்களிற்றின்மேல் இந்திரன் அமர்ந்திருந்தான். அருகே காமதேனு நின்றிருந்தது. இந்திரனின் பேராலயம் நகரின் நடுவே குன்றின் மகுடமென அமைந்திருந்தது. கோட்டையின் நான்கு வாயில்களில் இருந்தும் மைய ஆலயத்திற்குச் செல்லும் புரிவழிச் சாலைகள் அமைந்திருந்தன.

இந்திரனின் சிலைகள் மிகப் பெரியவை. கீழிருந்து பார்க்கும்போது வானிலிருந்து குனிந்து கீழே நோக்கும் வடிவில் இருந்தன அவை. மேலே சென்று பார்க்கையில் அவை முற்றிலும் விந்தையான வடிவம் கொண்டிருந்தன. காலைவிட தலை இருமடங்கு பெரியது. முதலில் பார்த்தபோது அவன் அந்த ஒருமையின்மையை நோக்கி வியந்தான். அவனுடன் வந்த காவலன் “கீழிருந்து நோக்கும் கண்ணுக்குப் பொருந்தும்படி இவ்வுடல் அமைக்கப்பட்டுள்ளது, இளவரசே” என்றான். “எனில் நாம் கீழிருந்து நோக்கும் தெய்வங்கள் நாமறியும் வடிவில் இல்லையா?” என்று அவன் கேட்க காவலன் சிரித்தான். “கீழிருக்கையில் அறியும் ஒருமைகள் மேலெழுகையில் மறைகின்றன. தெய்வங்கள் அறியும் நாம் ஒருமையழிந்தவர்களா? அன்றி நாம் காணும் ஒருமையின்மைகள் அவர்கள் காணும் ஒருமையின் மரூஉவா?” என்று அவன் சொல்ல காவலன் புன்னகைத்தான்.

கலிங்கச் சிற்பிகளால் செதுக்கப்பட்ட அந்த மரச்சிற்பங்கள் நூற்றெட்டுத் துண்டுகளாக மேலே கொண்டுவரப்பட்டு செம்புக்கம்பிகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. இந்திரனின் முகத்திலும் தோள்களிலும் நெஞ்சிலும் பொற்தகடுகளால் கவசங்கள் அமைக்கப்பட்டன. தங்கத்தை தட்டித்தட்டிப் பட்டுதுணியென, நீர்ப்படலம் என மென்மையாக்கி, உருகு நிலையிலேயே விசையுடன் காற்றால் ஊதி மரத்தின் மேல் படியவைத்து உருவாக்கப்பட்டது அப்பொற்பூச்சு. இந்திரனின் விழிகளென பீதர் நாட்டுப் பளிங்குக் குமிழிகள் அமைந்திருந்தன. இந்திரனின் நெஞ்சு வழியாக தலைக்குள் செல்வதற்கு வழியிருந்தது. குறுகலான இரும்புப்படிகளில் இருளில் ஏறிச்செல்கையில் அது சிலையல்ல மரத்தாலான ஒரு சிறிய இல்லம்  என்று அவனுக்குத் தோன்றியது. அங்கே வெளிக்காற்று சீறிச் சுழன்றுகொண்டிருந்தது.

சிலையின் உள்ளே அந்தியில் பன்னிரு இடங்களில் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. அவ்விளக்குகளுக்குப் பின்னால் அமைந்த குழியாடிகளினூடாக ஒளி பெருக்கப்பட்டு வெளியே விசிறி வீசப்பட்டது. கீழிருந்து நோக்குகையில் இந்திரனின் உடலில் அமைந்த சிறு துளைகளினூடாக ஒளி வெளிவந்து அவன் கண்கள் சுடர்ந்தன. முகம் செவ்வொளி கொண்டது. உடலெங்கும் பலநூறு அருமணிகள் மின்னின. அவை இரவிலெழும் அருமணிகள். பகலில் அவை விண்ணொளியில் மறைந்துவிடுகின்றன என்றனர் குடிகள். அவ்வப்போது வீசும் காற்றில் உள்ளே சுடர்கள் அசைகையில் விண்மீன் நலுங்குவதுபோல இந்திரனின் விழிகளும் அணிகளும் மின்னி அணைந்தன.

யுயுத்ஸு அந்தக் கோபுரத்தை நோக்கியபடி அணுவணுவாக முன்னேறிச் சென்றான். கோபுரம் கண்ணுக்குப் பட்டதும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்த திரள் மெல்ல மெல்ல அமைதியாகியது. அனைவரும் அண்ணாந்து நோக்கியபடி பின்னிருந்து வந்தவர்களின் உந்தலால் விசைகொண்டு அதன் வாயில் நோக்கி செலுத்தப்பட்டனர். யுயுத்ஸு கோபுரத்தின் மரச்சிற்பங்கள் விண்ணில் படைக்கலங்களைத் தூக்கி, உறைந்த விழிகளும் திறந்த வாய்களுமாக சொல்லற்று நின்றிருப்பதை கண்டான். அதன் வாயிற்கதவுகள் முழுமையாகத் திறந்து சுவருடன் ஒட்டியிருந்தன. கதவைத் திறந்துமூடும் பொறிகள் கைவிடப்பட்டு துருவேறிக் கிடந்தன. அவற்றை இயக்கும் வடங்களும் சங்கிலிகளும் மண்ணில் புதைந்திருந்தன.

கோட்டைக்குள் நுழைந்து அப்பால் சென்றதையே அவன் அறியவில்லை. வாயில் அத்தனை பெரிதாக, அணுகுகையில் இல்லையென அகன்று செல்வதாக இருந்தது. கோட்டைக்குப் பின்னால் இருந்த முற்றமும் மக்களால் நிறைந்து நான்கு பக்கமும் முட்டிக்கொண்டிருந்தது. கோட்டைக்குப் பின்னால் இருந்த மூன்றடுக்குக் கல்மேடைகளில் நிறுவப்பட்டிருந்த கைவிடுபடைகள் அனைத்தும் முறுக்கப்பட்ட விற்களிலும், சகடங்களிலும் அம்புகள் தெறித்து நின்றிருக்க இக்கணம் இதோ என வான் நோக்கி கூர்கொண்டு நின்றிருந்தன. அவன் புரவியை அவற்றை நோக்கி செலுத்தி அவற்றின் இடைவெளியினூடாகச் சென்று அப்பால் நின்றான். அது திரளின் அலையில் இருந்து அவனைக் காத்தது.

மதகினூடாக ஏரி நீர் வெளியேறுவதுபோல் எத்தடையும் இன்றி மக்கள் உள்ளே புகுந்தனர். உள்ளே வந்து எம்முடிவையும் அவர்கள் எடுக்க இயலவில்லை. அனைத்துத் தெருக்களிலும் நிறைந்திருந்த மக்கள் திசையின்மையை உணரச்செய்தனர். வந்துகொண்டிருந்த திரளால் அவர்கள் உந்தப்பட்டு தாங்கள் எண்ணியிராத இடங்களை நோக்கி கொண்டுசெல்லப்பட்டனர். வெவ்வேறு சாலைகளினூடாக பிதுங்கிச் சென்றனர். கூச்சல்களும் ஓலங்களும் எழுந்தன. எங்கும் வீரர்கள் என எவரும் கண்ணுக்குப்படவில்லை. மேலே முரசுத்தோல்மேல் புறாக்கள் வந்தமராதபடி கட்டப்பட்டிருந்த மெல்லிய வலை காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

யுயுத்ஸு அந்நகரை நன்கு அறிந்திருந்தமையால் எட்டாவது கைவிடுபடை மேடையின் அருகே சென்று அதன் ஓரமாக திரும்பி அப்பால் செல்லும் சிறிய படிக்கட்டை அடைந்தான். அப்படிக்கட்டினூடாக புரவியைச் செலுத்தி மேலேறிச் சென்றான். அது அங்கிருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தது. சருகுகள் உதிர்ந்து மழைநீரில் கருமைகொண்ட படிகள் தூசுபடிந்து கிடந்தன. படிகளில் புரவி இயல்பாக ஏறிச்சென்றது. குன்றின்மேல் வளைவாக ஏறிச்சென்ற படிகளில் செல்லச் செல்ல நகர் கீழிறங்கியது. கைவிடுபடைகள் எத்தனை பெரியவை என்பதை அப்படிகளில் ஏறிய பிறகுதான் காண முடிந்தது. மூன்றடுக்கு மேடையே எட்டு ஆள் உயரமிருந்தது. அதன் மேல் அமைந்திருந்த பதினெட்டு பெருவிற்கள் ஒவ்வொன்றும் பத்து ஆள் உயரமானவை. ஒவ்வொன்றிலும் நூறு நீளம்புகள் இறுக்கிப் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை முறுக்கும் ஆழிகள் பின்னணியில் அமைய அவற்றைச் சுழற்றும் யானைகள் நடப்பதற்கான வட்ட வடிவப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தின் மேலும் நெடுங்காலமாக பெய்த சருகுகளும் புழுதியும் படிந்திருந்தன.

அவன் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளை எண்ணிக்கொண்டான். நகரைச் சீரமைக்கையில் அவற்றை என்ன செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. மீண்டும் கைவிடுபடைகளை அமைக்கலாமா என்று அவன் கேட்டான். “வேண்டியதில்லை, அவை இனி இந்நகரத்தின் அடையாளங்கள் அல்ல” என்று சுரேசர் சொன்னார். எனில் அந்தப் பீடங்களை இடித்துவிடலாம் என்று யுயுத்ஸு சொன்னபோது “அந்த வெற்றிடம் அக்கைவிடுபடைகளை நினைவில் நிறுத்தும். இருப்புக்கு நிகரே இன்மையும். இன்மை வளர்வதும்கூட” என்றார் சுரேசர். “அங்கே ஆலயங்களை அமைக்கலாம். நூற்றெட்டு கைவிடுபடைமேடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிற்றாலயமாகட்டும். நகரில் நுழைபவர்கள் அவற்றை முதலில் காணட்டும். இந்நகரின் முகஅடையாளங்களும் அவையே.”

அங்கே நகரின் காவல்தெய்வங்கள் அமைக்கப்படலாம் என்றார் சுரேசர். “அங்கே படைக்கலங்கள் இருந்தன. அவை நம்மை காப்பவை என்னும் நம்பிக்கையை அளித்தன. அந்நம்பிக்கையை நாம் கைவிடமுடியாது. அங்கே அமையும் தெய்வங்கள் அந்நம்பிக்கையை அளிக்கும். தேவியின் நூற்றெட்டு உருவத்தோற்றங்கள் அங்கே தெய்வமென அமையட்டும்.” ஆனால் யுதிஷ்டிரன் அதை மறுத்துவிட்டார். “இனி இந்நகரில் அறிவே காவல்தெய்வமென அமையட்டும். புதிய வேதம் எழுந்த நிலத்தில் சொல்தெய்வங்களே நிறுவப்படட்டும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நகரில் நுழைபவர்கள் இந்நகர் தங்களைக் காக்குமென இனி உணரவேண்டியதில்லை. இந்நகரை தாங்கள் காக்கவேண்டும் என உணரட்டும். ஒரு படைக்கலநிலைக்குள் நுழைவதாக அவர்கள் உணரலாகாது, ஒரு கல்விநிலைக்குள் நுழையும் உளநிறைவை அவர்கள் அடையவேண்டும்.”

அங்கே அமையவேண்டிய தேவதைகள் என்ன என்று யுதிஷ்டிரன் அந்தணரிடம் கேட்டார். வேதச்சொல்லின் காவலர்களான நூற்றெட்டு அன்னையரை அவர்கள் வகுத்தளித்தனர். அச்செய்திகளை கலிங்கச் சிற்பியருக்கு அளித்து கருங்கல்லில் சிலைவடிக்க யுதிஷ்டிரன் ஆணையிட்டார். நகரின் கிழக்குவாயிலின் நேர்முன்னால் அதிதி. வலப்பக்கம் திதி, இடப்பக்கம் தனு, உஷை, பிருத்வி, வாக்தேவி, ஜ்வாலை, சுவாகை, சாயை என அன்னையர் நிரை நகரின் கோட்டையை ஒட்டிய முற்றத்தை நோக்கி திறந்த வாயில்களுடன் அமைந்த சிறு ஆலயங்களில் கோயில்கொள்ளவிருந்தது. அவன் கிளம்பி வருகையில் அவ்வாலயங்களின் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

யுயுத்ஸு மேலேறிச்செல்லுந்தோறும் அந்நகரின் அடுக்குகள் ஒவ்வொன்றாக விண்ணிலிருந்து கழன்று உதிர்வதுபோல கீழே சென்றன. அவனுடைய புரவி படிகளின் ஒழுங்கை தன் கால்களால் புரிந்துகொண்ட பிறகு இயல்பாக சிறு தாவல்களாக மேலே சென்றது. இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்பாலான வெண்குவைமாடங்கள் குடியிருப்போர் எவருமின்றி கைவிடப்பட்டிருந்தன. அங்கு வாழ்ந்த படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடிகள் நிலம்பெயர்ந்தன. பெரும்பாலான கட்டடங்களைச் சுற்றி சருகுகளும் புழுதியும் குவிந்திருந்தன. கிழிந்த கொடிகள் காற்றில் பறந்து துடித்தன. அந்நகர் புத்தம் புதிதாக எழுந்து மெருகழியாமலேயே கைவிடப்பட்டிருந்தது.

அவன் புழுதியை பார்த்தபடியே சென்றான். புழுதி மண்ணின் மெல்லிய கை. கொடியின் தளிர்ச்சுருள்போல. இளங்குழவியின் விரல்நுனிபோல. வந்து தொடும். தழுவும். இழுத்து மண்ணுக்குள் செலுத்தும். விழுங்கிப் புதைத்து மேலே எழும். பின்னர் வேர்கள் மட்டுமே அறிந்த மந்தணம் என புதைவன உள்ளே உறைந்திருக்கும். ஒரு வலுவான புயல்காற்று சுழன்றடித்தால் தன் தூசுச்சருகுப்படலத்தை அவை இழுத்து அகற்றி முகிலிலிருந்து நிலவென பிறந்தெழுந்துவிடுமெனத் தோன்றியது.

அவன் வணிகர்களின் துணைநகரையும் படைத்தலைவரின் உள்நகரையும் கடந்து அரசகுடியினருக்குரிய மையநகரை சென்றடைந்தான். அங்குள்ள உள்கோட்டையும் முழுமையாகவே திறந்து கிடந்தது. அதன் காவல்மேடையில் மட்டும் ஓரிரு காவலர்கள் இருப்பதை காண முடிந்தது. அவன் புரவி அணுகுவதை அவர்கள் எவரும் பார்க்கவில்லை. கோட்டையின் பெருவாயிலை நோக்கி வந்த பாதையில் பெரிய தடிகளை குறுக்காக அடுக்கி வேலி அமைத்திருந்தார்கள். அந்த வேலி வரைக்கும் பெருகி வந்து முட்டிச் சுழித்து வளைந்து அப்பால் சென்று சிறு பாதைகளினூடாக ஒழுகி மறைந்துகொண்டிருந்த மக்கள் திரள் நோக்கியே அவர்களின் பார்வை இருந்தது.

உள்கோட்டைச் சுவர் அஸ்தினபுரியின் வெளிக்கோட்டை அளவுக்கே பெரியது. வெட்டி அடுக்கப்பட்ட மரக்கற்களுக்கு மேல் மூன்றடுக்கு மரக்கோட்டை மிதந்தது. அதன்மேல் முரசுகளும் கொம்புகளும் அமைந்திருந்தன. இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கலம் பொறிக்கப்பட்ட அதன் முகப்பில் நெடுங்காலத்துக்கு முன் சூட்டப்பட்ட மலர்மாலை நார்ச்சுருளாக தொங்கிக்கொண்டிருந்தது. கோட்டைமுகப்பிலிருந்து எழுந்து வானில் பறந்துகொண்டிருந்த மின்படைக் கொடி கிழிந்து அனற்கொழுந்துகளென துடித்துத் துடித்துப் பறந்தது. அப்பாலெழுந்த அரண்மனைகளின் வெண்ணிறக் குவைமாடங்கள் நடுவே அரசியின் பொன்னிறக் குவைமாடம் ஒரு செவிக்குழையணி என இளவெயிலில் மின்னியபடி தெரிந்தது.

யுயுத்ஸு தன் புரவியை கோட்டையின் முகப்பு நோக்கி செலுத்தினான். அவன் மிக அருகணைந்த பின்னரே மேலிருந்து அவனை பார்த்தார்கள். அவன் படிகளினூடாக சென்று மரத்தடுப்புக்கு அப்பாலிருந்த முற்றத்தை அடைந்தான். கோட்டைக்குள்ளிருந்து ஒரு படைவீரன் கவசங்களுடன் இறங்கி வருவதை அவன் கண்டான். சற்று கழித்தே நடையிலிருந்து அது பெண்ணென்று உணர்ந்தான். புரவியை சீரான நடையில் செலுத்தி அவளை நோக்கி சென்றான். அவள் அங்கிருந்தே அவனை அடையாளம் கண்டு கையிலிருந்த வேலைத் தாழ்த்தி “இளவரசருக்கு நல்வரவு” என்றாள். “நான் உள்கோட்டைக் காவலர்தலைவி.”

யுயுத்ஸு “நான் அரசியை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றான். “அஸ்தினபுரியிலிருந்து அரசிக்கு அரசச்செய்தி கொண்டுவந்திருக்கிறேன்.” அவள் தலைவணங்கி “அரசிக்கு செய்தி அனுப்புகிறேன். முதலில் தங்களுக்கு தங்கும் ஒருக்கங்களை செய்கிறேன். வருக!” என்று அவன் குதிரையைப் பற்றி அழைத்துச் சென்றாள். அவன் புரவியிலிருந்து இறங்கி நடந்தபடி “இங்கு ஆட்சியென எதுவும் நடக்கிறதா?” என்று கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய ஒவ்வாமையை உணர்ந்து பேச்சை மாற்றும்படி “அரசி எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று அவன் கேட்டான். அதுவும் ஒவ்வா வினா என உடனே உணர்ந்தான்.

ஆணின் கவச உடையுடன் ஒரு பெண்ணை பார்ப்பதனால் தன் உள்ளம் அவளை அணுகமுடியாமலாகிறதா? அல்லது இவளை சம்வகையிடம் இணைத்துக்கொள்கிறேனா? ஆனால் அவள் அந்தத் தருணத்தின் ஒவ்வாமையை கடக்கும்பொருட்டு பேசினாள். “அவர் பெரும்பாலும் தன் அறையைவிட்டு வெளிவருவதில்லை. ஒவ்வொரு நாளும் இங்கு நிகழ்வனவற்றை சுருக்கமாக சென்று சொல்கிறோம். அவற்றை செவி கொள்வதும் இல்லை.” அவன் அவள் பேசியதை எதிர்பார்க்கவில்லை. “அவர் துயரில் இருக்கிறார்” என்று பொதுவாகச் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.

“அரசி எவருடன் ஒவ்வொரு நாளும் சொல்லாடுகிறார்?” என்றான். “அவ்வண்ணம் எவரும் இங்கில்லை. அரசியின் அணுக்கர்கள் என்று இப்போது இங்கு எவரும் இல்லை. அரசியின் குரலை எவரேனும் கேட்டே நெடுநாட்களாகிறது” என்று அவள் சொன்னாள். அவன் திரௌபதியை அப்போதுகூட அவ்வண்ணம் எண்ணிக்கொள்ளவில்லை. அவன் விழிகளுக்குள் போர்ச்செய்திகளைக் கேட்டபடி அமர்ந்திருந்த கரிய தெய்வச்சிலையே நின்றிருந்தது. “அஸ்தினபுரியின் செய்திகளை அரசி விரும்புவார் என்று சொல்லமுடியாது. நான் நீங்கள் வந்துள்ள செய்தியை அவருக்கு அறிவிக்கிறேன். அவர் முடிவெடுக்கட்டும்” என்றாள்.

கோட்டைக்கு உள்ளே இரு பிரிவு விரிந்த அரண்மனைகளின் முகப்புகள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடந்தன. “இங்கு எவருமே இல்லையா?” என்று அவன் கேட்டான். “இங்கு அரசியர் இருந்தபோது ஓரளவுக்கு பராமரிப்பிருந்தது. பின்னர் அவர்களும் இங்கிருந்து கிளம்பிச்சென்றார்கள். படைகளும் இங்கிருந்து தொடர்ந்து வெளியே சென்றுகொண்டிருந்தன. இப்பெருநகரை புரக்க இங்கு எவரும் இல்லை” என்றாள். “இங்கு வந்து குழுமுபவர்கள் காட்டில் குடியமைப்பவர்களைப்போல தாங்களே இடங்கண்டு கொள்கிறார்கள். அவர்களுக்கு பெரிய மாளிகைகள் அச்சமூட்டுகின்றன. அங்கு அதன் முற்றத்திலேயே சிறு குடில் அமைத்துக்கொள்கிறார்கள்.”

“இங்கு வரும் திரளைக்கொண்டே இந்நகரை சீரமைத்துவிடமுடியும்” என்று அவன் சொன்னான். “அஸ்தினபுரியில் அதைத்தான் செய்கிறோம். அந்நகர் புதிதெனப் பிறந்து எழுந்துவிட்டது.” அவள் “ஆம், ஆனால் அதற்கு அஸ்தினபுரியிலிருந்து அமைச்சர்களும் பிறரும் இங்கு வரவேண்டும். இங்கொரு ஆட்சி முறைமை மீண்டும் உருவாகவேண்டும்” என்றாள். அவன் “உன் பெயர் என்ன?” என்றான். “பிரக்யை” என்றாள். “உன் குடி?” என்றான். “நான்காம் குடி. எந்தை குதிரைக்கொட்டிலில் இருந்தார்.” அவள் உரைத்தாள் “நான் இந்நகரில் பிறந்து வளர்ந்தவள். நகரம் ஆண்கள் ஒழிந்து எங்கள் கைகளுக்கு வந்தது. இங்கிருப்பவர்களைக்கொண்டு ஒரு காவல் அமைப்பை உருவாக்கி நிலை நிறுத்தினோம்.”

அவன் “நீ அஸ்தினபுரியின் காவலர்தலைவியைப் பற்றி கேள்விப்பட்டாயா?” என்றான். அவள் முகம் மலர்ந்து “சம்வகை தேவியைப் பற்றி அல்லவா? இங்கே அவரைப் பற்றி நாங்கள் பெண்டிர் பேசிக்கொள்ளாத நாளே இல்லை” என்றாள். “அவர் அங்கே அனைத்துப் படைகளையும் தலைக்கொள்ளக்கூடும். படைநடத்தி நாடுகளை வெல்லக்கூடும். இங்கே அவரை முன்பு பேரரசி திரௌபதியை எண்ணிக்கொண்டதுபோல எண்ணிக்கொள்கிறார்கள். அவர் பேரரசி சத்யவதியின் குருதி என்றுகூட சொல்லப்படுகிறது.”

அவனுக்கு அவளுடைய பேச்சு உவகையை அளித்தது. அதை மறைக்க முகத்தை இறுக்கிக்கொண்டான். “அவரை நீங்கள் அறிவீர்களா?” என்றாள் பிரக்யை. “அறிவேன்” என்று அவன் சொன்னான். “அவருக்கு நீங்கள் அணுக்கம் என்று தோன்றியது” என்றாள். “ஏன்?” என்று அவன் சீற்றத்துடன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்றாள். “சொல்” என அவன் உரக்க கேட்டான். “இல்லை, உங்கள் விழிகளில் அப்படி தெரிந்தது” என்றாள். “எப்படி?” என்று அவன் கடுமையாகக் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தன் உள்ளம் இனிமைகொள்வதை உணர்ந்தான். குறடுகள் ஒலிக்க நடந்தான்.

“இங்கே உட்கோட்டையை மட்டுமே முறைப்படி காக்கிறோம். அரண்மைக்காவலுக்கு காவலர் உள்ளனர். அவர்களும் பெரும்பாலும் ஏவலர்” என்று அவள் சொன்னாள். அவன் “நீயே உருவாக்கிய படையா?” என்றான். அவள் “அப்படி சொல்லமாட்டேன், ஆனால் ஏறத்தாழ அவ்வாறே” என்றாள். அவன் “மிகப் பெரிய நகர். மிகக் கூரிய ஆணையால் மட்டுமே இதை ஆள முடியும்” என்றான். அவள் புன்னகைத்தாள். “அந்தக் கோட்டை மேலிருக்கும் கொம்புகள்போல” என்று யுயுத்ஸு சொன்னான். “அவ்வாறு இந்நகரைச் சூழ்ந்து உன் குரல் எழுக!”

முந்தைய கட்டுரைபத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
அடுத்த கட்டுரைவிழா- கடிதங்கள்