சரணதாளம்
இளமையில்
வீட்டுத்திண்ணையின்
புகை சூழ் விளக்கின்
ஒளியில் கண்டேன்
நான் என் பாடநூலில்
பாதிமூடிய
புத்தனின் கண்கள்
அந்த விழிகள் கூறின
விழைவே
துயரம் என்று
நெடுநாட்களுக்குப்பின்
அந்த விழிகளைக் கண்டேன்
சவறா கடலில்
தாழும் சூரியனில்
அறிவதெப்படி
புத்தனின் விழிகளை??
அறிந்தேன்
எரிகிறது என்னில் இப்போதும்
விழைவு
என்று தெளிந்ததே
தெளிந்த நான் என்று.
அது அணையும்போதே
அணைகிறேன் நான் என்று.
சிறு காற்றிலும் நீர்நிழல் போல்
காதல்தழல்
அலைவுறாமையாதென்று.
என் அலைகளுக்கு இப்போதும்
திரும்புவதற்கு மனமில்லை
புதுமணலை தழுவ வேண்டும்
முத்தமிட்டு இணையவேண்டும்
கரை இது என்று
விலக்குவது ஏன் என்று
கடலையே இழுப்பது ஏன் என்று
மணலிடம்
கேட்டு அறியவேண்டும்.
***
திருக்கழுக்குன்றம்
வாழ்வின் நடுமதியம்
பாறைமேல் வெந்து காத்திருப்பு
வருமா கழுகு?
வரும்,, உரிய பொழுதில்
நூற்றாண்டுகளாக வருகின்றன
பூசாரிக்கு ஐயமே இல்லை
கழுகின் ஆயுள் என்ன?
பல கழுகுகள் போலும்
தூக்கிலிடுபவர்களைப்போல
குலத்தொழிலாக இருக்கும்
‘தப்பு சொல்லாதே சாமி
இது கழுகல்ல கடவுள்!’
காசியிலிருந்து ராமேஸ்வரம்போய்
கடலாடி வரும்
சாப்பாடு இங்கே
நாளும்
சுற்றிச்சுற்றிப் பறந்து
கழுகு இறங்கும்போது
மிக்கா மிடாஷா அது
என்று உள்ளம் பதறியிருக்கிறீர்களா
எப்போதாவது?
இல்லை
இங்கே வருவதற்கு முன்னரே
முடிந்தது என் ஆயுத வனவாசம்
கண்ணில் கழுகுடன்
பத்தாண்டு ஜாப்னாவில்
இன்று
தாழ்ந்துவரும் இச்சிறகுகள்
எனக்கு நிழல்
‘இந்த சைவ படையல்
போதுமா கழுகுகளுக்கு?’
படையல் நாமே
சமர்ப்பிப்பது நம்மை
இதுவும் ஒரு ‘கமிட்மெண்ட்’ மட்டுமே
அவற்றுக்குத்தெரியுமா
இன்று படையலாகும் என்னை?
அறுபதுகளின் நாத்திகன்
எழுபதுகளின் மாவோவாதி
எண்பதுகளின் கலகவாதி
தொண்ணூறுகளின் நீதிவாதி
பெண்ணிய ஆண்,
தலித்திய உயர்குடி,
வீரர் தரப்பு கோழை
கடந்தகாலஏக்கவாதி
உடல் மெருகேற
உள்ளம் எரியும்
நம்பிக்கைவாதி
செத்து அழுகியவை அல்லவா
கழுகுக்கு உணவு?
என்னை இப்படி தின்ன
நான் செத்து அழுகிவிட்டேனா என்ன?
சொற்கத்தின் தீயை
திருடியவன் நானே தானா?
***
பலாக்கொட்டைத்தத்துவம்
விசிறிகளின்
இந்த ரீங்காரச் சுற்றிப்பறத்தல்
தாளமுடியவில்லை
இந்த மணமோ வீட்டுநினைவுபோல
இந்த இனிப்பு கற்பனாவாதம்
இந்த நிழல் மரபார்ந்தது
பலா இலைகளை கோத்து
இந்த நிழலில்
இன்று குழந்தைகள் விளையாடுவதில்லை.
பலா இலைகளை கோட்டி
இன்று எவரும் கஞ்சி குடிப்பதில்லை
பாத்துமாவின் ஆடும்
இந்தப்பகுதியில் நடமாடுவதில்லை
பச்சையானாலும்
பழுத்தது என்றாலும்
பலா
முள்சுவர் சூழ்ந்த
சிறை
வெளியேறவேண்டும் நான்
இந்த கோட்டையிலிருந்து
பருத்து உருண்டு
எப்போதும் குனிந்திருக்கும்
இந்த மண்டைக்குள்ளிருந்து
முளைத்தெழ வேண்டும்
என்னுடைய புதிய பலா.
அரசன் ஒளிந்திருக்க
உள்ளில் பொந்தில்லாதது
கிளைகளில்
தேவதாருபோல தியானம் நிறைந்தது.
இலைகள்
அரசமரம் போல
உள்ளத்தை சுட்டுபவை.
பூக்கள்
கொன்றைபோல
உதயம் நிறைந்தவை
நிழல்
தனிமரத்தின்
காற்று ஊடுருவும் குடையல்ல
கதைநீரோடைகள் படர்ந்த
காட்டின் கடல்நிழல்.
புகழ்
பாப்லார்போல
உள்ளூரும் உலகமும் ஆனது
[ 2 ]
பழுத்த மனோநிலைகள்
உதிர்ந்தன
பச்சைப்புதுமை முளைத்தது
மழை வந்தது
பலாக்கொட்டைக்கு
வேர் எழுந்தது
இலை வந்தது
நிழல் வந்தது
தாளம் அமைந்தது
வெயில் பனி மழைகள்
நடனமிட்டு
நடனமிட்டு
பலாவாக
வளர்ந்தபோது
பலாக்கொட்டை
கனவுகளை மறந்தது
அது எண்ணியது
பொழுதாகிறது
காய்விடவேண்டியதுதான்
ஒரு நல்ல தேன்வருக்கைப் பலாக்காய்
எங்கும் பரவவேண்டும்
அதன் புதுமணம்
நாவூற விசிறிகள்
ரீங்காரமிட்டு வந்து சூழவேண்டும்
வெளிநாட்டினர்கூட
சந்தை நன்றாக இருந்தால்போதும்
நாடு எதுவானால் என்ன?
சந்தையல்லவா இன்று
நாட்டுத்தன்மை?
***