அன்புள்ள ஜெ..
உங்களின் ‘அச்சுப்பிழை ‘ எனக்கு பல்வேறு சிந்தனைகளை பின்னோக்கி அழைத்துச்சென்றன.
ஐந்தாம் வகுப்பு வரை சிந்துகுமாரான நான் செண்டுகுமாராகத்தானிருந்தேன். காரணம் எனது அப்பா வாயில் போட்டிருந்த வெத்திலை. இப்போது போல அப்ளிகேசன் எழுதி ஸ்கூலில் கொடுக்கிற பழக்கம் ஒன்றும் இல்லைதானே. ஐந்து வயசாச்சுன்னா ஸ்கூலில் கொண்டுபோய் தலைமைஆசிரியர் அறையில் கொண்டு போய் விடுவார்கள். வலது கையால் தலையைச்சுற்றி இடது காதை பிடிக்கச்சொல்வார்கள். காதைத்தொட்டால் வயசு அஞ்சாயிடுமாம். என்னே பெரிய கண்டுபிடிப்பு.. பையனுக்க பேரென்ன?
‘ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்துகுமார்’ அப்பா சொன்னார். திருவட்டார் அரசு ஆரம்பப்பள்ளி தலைமைஆசிரியர் நடேசன் காதில் எனது பெயர் செண்டு குமார் என விழுந்துள்ளது. அப்ளிகேசனிலும், ரிஜிஸ்டரிலும் செண்டுகுமார் எனஎழுதிய அவர் பிறந்தநாள் எது என கேட்டுள்ளார். பள்ளிக்கூடத்தில் சேர்க்கைக்கு கொண்டு போன நாளிலிருந்து ஐந்து வருடங்கள் பின்னோக்கி கணக்கிட்டு 20.05.1967) என எனக்கு புதிதாக ஒரு பிறந்தநாளை உருவாக்கி எழுதிக்கொண்டார்.(எனது உண்மையான பிறந்தநாள் 6.2.1968). அதன் பின் ஐந்தாம் வகுப்பு வரை நான் செண்டுகுமார்தான் பள்ளிக்கூடத்தில். நண்பர்களுக்கு நான் செண்டு.. இதென்ன சம்பந்தமில்லாத பெயரென்று நினைத்தார்களோ என்னவோ. ஐந்தாம் வகுப்பில் டி.சி வாங்கும்போது அண்ணன் பள்ளிக்கூடம் வந்து என்னுடையை பெயர் சிந்துகுமார் என திருத்தம் செய்து டி.சி. வாங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை என்னுடன் படித்த பால்ய கால நண்பர்களைப்பார்க்கும்போது அவர்கள்,”செண்டு சுகமா இருக்கியாடே..!” என்றுதான் என்னை விசாரிப்பார்கள்.
டிகிரி முடித்தபின்பு சும்மா ஊர்சுற்றிக்கொண்டிருந்தகாலத்தில் நண்பன் சஜீவ் “டேய்.. அருமனை மகேந்திரா ஓவியப்பள்ளியில ஐநூறு ரூபாகொடுத்தா ஸ்கிரீன் பிரிண்டிங்க் சொல்லிக்கொடுப்பான்! இப்ப சும்மாதானே இருக்கே. ஸ்கிரீன் பிரிண்டிங் வேலையில நல்ல காசுகிடைக்கும்!” என ஆசைகாட்டினான்.
சும்மா இருக்கிறது எப்படின்னு அப்படியே ஸ்கிரீன் பிரிண்டிங்க் படிச்சேன். சின்ன டெக்னிக் சரியா செஞ்சுகொடுத்தா ஒண்ணுக்கு மூணா லாபம் கிடைக்கும். அப்ப திருநெல்வேலியிலேர்ந்து ‘கதிரவன்’ என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றத்துவங்கியிருந்தேன். அதனால் செருப்பாலூரைச்சேர்ந்த பேப்பர் ஏஜென்ட் ராஜு அவரது கல்யாண அழைப்பிதழை ஸ்கிரீன் பிரிண்டிங்கில் அச்சிடச்சொன்னார். சந்தோஷமா அச்சிட்டுதருகிறேன் என்று கூறிக்கொண்டு ஆர்டர் வாங்கிக்கொண்டு மெட்டீரியல் வாங்கிக்கொண்டு கார்டு தயார் செய்தேன். புரூப்பார்த்தேன். சரியாக இருந்தது. ஆயிரம் கார்டையும் கவரை அச்சிட்டு முடித்தேன். ஆரோக்கிய ராஜிடம் கார்டை பண்டலாக்ககொடுத்துவிட்டு
வீடு திரும்பினேன். மாலையில் ஊர்சுற்றிவிட்டு வந்தால் அங்கே ஆரோக்கியராஜூ எனக்காக காத்திருந்தார்.”தலைவரே என்னத்த கார்டு அடிச்சிருக்கிறிய… எனக்க பேரையே தப்பா போட்டுட்டேளே..!” என்றார். கார்டை வாங்கிப்பார்த்டேன். எனக்கு தப்பு ஒன்றும் தெரியவில்லை. “பேரைப்பாருங்க தலைவரே”
ஆராக்கியராஜூ என்றிருந்தது. ஆரோக்கியராஜூ .. ஆராக்கிய ராஜூஆகியிருகிறது. அதை அவரது நண்பர்கள் பிரித்து ஆர் ஆக்கிய ராஜூ என்று கிண்டலடிப்பதாக சொன்னார். பிறகென்ன ஒரு கொம்பு சேர்த்து வேறு கார்டு அடித்து கொடுத்தேன்.
சமீபத்தில் திருவனந்தபுரம் செல்லும்போது நெய்யாற்றின் கரையைகடந்தால் ஒரு ஐயப்பன் படத்துடன் ஒரு அறிவிப்பு. படித்துப்பார்த்தால் மயக்கம் வராத குறைதான். அந்த அறிவிப்புதான் நான் இதுநாள்வரை பார்த்த அறிவிப்பிலேயே உச்ச பட்ச அச்சுப்பிழையாக கருதுகிறேன். தமிழைப்படுத்தியிருக்கும்பாடைப்பாருங்கள். (படம் இணைத்துள்ளேன்).
சபரி மலைக்கு சமீபத்தில் சென்று வந்தேன். அங்கு தமிழ் விளையாடும் விளையாட்டைப்பார்த்தால் தமிழறிஞர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். கஞசி, வெஸட் என தமிழ்போர்டுகளைபார்த்து நிறைய சிரிக்கலாம்.
ஒரு விஷயம் தெரியுமா? தி டைம்ஸ் ஆப் இந்தியா தான் இந்தியாவிலேயே அதிகமான அச்சுப்பிழையுடன் வருகிறதாம்.
இலங்கை அதிபர் குண்டு வெடித்து தப்பினார். என்ற செய்தி பிரபல நாளிதழில் பத்து ஆண்டுகளுக்கு முன்புஎப்படி அச்சானது தெரியுமா?
இலங்கை அதிபர் குண்டி வெடித்து தப்பினார்.
அச்சுப்பிழை என்பது அறிஞர்களுக்கும் ஏற்படக்கூடியது. சொல்லப்போனால் புரூப் ரீடிங்க் என்பது ஒரு கலை. ஆனால் இன்று புரூப் ரீடிங்க் என்பது மானிட்டரை பார்த்துச்செய்கின்றனர். இதனால்
தான் அச்சுப்பிழை அதிகமாகிறது. நமது மாவட்டத்து வட்டார வழக்குச்சொல்கள் பொருள் மாறி சில கதைகளில் இடம் பெறுவது காலம் காலமாக நடந்துவருகிறது.
ஆனாலும் அச்சுப்பிழையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை இப்போது வாசகர்களிடையே வந்துவிட்டது.
அன்புடன்,
அச்சுப்பிழை என்பது ஆடவல்லான் தமிழுடன் விளையாடும் ஒரு வழி அல்லவா? இங்கே அய்யப்பன் விளையாடியிருக்கிறார். தமிழை மலையாளிகள் எழுதுவதன் விபரீதம் இது என்றால் மலையாளத்தை தமிழர்கள் எழுதுவதன் விபரீதத்தை சமீபத்தில் பெரியகுளத்தில் பார்த்தேன் ‘ராஜு நாயட துணிக்கடை’ என்று ஒரு போர்டு. ராஜுநாயிடு துணிக்கடை ராஜூநாயின் துணிக்கடை ஆக ஆகிவிட்டது
ஜெ