வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சிதையும் சிதறலும்

 

அம்மா போய்விட்டால் வீடு காடாகிவிடும்

முன்னரே இறந்தவர்களின் படங்களுக்கு பின்னால்

சுவர் விரிசலிடும்

அதில் நெளியும் உயிர் போல ஓரு கெட்டவெளிச்சம் தலைநீட்டும்

கல்லும் கல்லும் விலகும்

அகம் புறமாகும்

குருதி குருதியைப்பற்றி

பொழியும் நீரிடம் குறைசொல்லும்

வீட்டை வீடாக அடுக்கி நிறுத்தியிருந்த

குளிர்ச்சூழலும் குளமும் மந்திரங்களும் அவிழும்

வீடாகியிருந்த நிழலும் வெளிச்சமும்

மரங்களுக்கே திரும்பும்

செம்புகுடத்தில் இருந்த இருள்

காட்டுக்குகைக்கே மீண்டு செல்லும்

தரைவிரிப்பில் இருந்த பூக்களும் கொடிகளும்

கொடுங்கனவில் வேரும் கிளைகளுமாக எழுந்து வரும்

கூரை பிளந்து

வான்முட்டி வளரும்

அவற்றிலிருந்து விண்மீன்கள்

சிதைநோக்கி நிறைவிழிகளாக பொழியும்

 

ஞானி சொன்னான்

எல்லா வீட்டுக்கும் காடாக மாறும் ஆசை உண்டு

வயதுமுதிர்ந்தால் வீடு ஒரு மூத்த பூனையாக

முனகி முனகி காட்டுக்கே திரும்பிவிட ஏங்கும்

சதுப்பு பெருகி வீட்டின் மாமிசம்

மண்ணாகிவிட துடிக்கும்

புறாவும் காகமும் ஆந்தையும் வௌவாலும்

எறும்பும் சிதலும் கரப்பானும் பல்லியும் என

வீடு பலவாகச் சிதற முயலும்

போகாதே போகாதே என்று சொல்லிக்கொண்டிருந்த மௌனம்

சொல்லுக்கும் பார்வைக்கும் பின்னால் எழுந்து

போ போ என்று முனகத் தொடங்கும்

 

ஒருவீட்டின் ஒருமைக்கு

ஓர் அம்மாவின் ஆயுள் மட்டுமே

ஒரு கிளிக்கூட்டின் வாழ்நாளுக்கு மேல்

எந்த வீட்டுக்கும் காலம் கிடையாது

சிறகு முளைத்தவை தீனி தேடிச் சென்றுவிடும்

கூட்டு தேடும் கூடு கட்டும்

குஞ்சு விரிந்தால் தீனி கொடுக்கும்

சிறகு முளைத்து அவையும் தீனி தேடிச் செல்லும்

செல்லாவிட்டால் கொத்தி விரட்டும்

இவ்வளவுதான் வீட்டின் கதை

வெறும் புனைகதை

குடிசையோ அரண்மனையோ இல்லமோ ஃப்ளாட்டோ

பேக்கரும் சங்கரும் கட்டிய குளிர்க்கூடோ

எந்த வீடாயினும் அது

சற்றே பெய்த ஒரு குளிர்கனவென்று தோன்றவில்லையா?

 

அதுதான் வீட்டின் உயிர்

அம்மா இறந்த வீட்டில் தெளியும்

ஓர் அழைப்பு, கண்டிப்பு, கண்ணீர்

செல்லாதே பிரியாதே என்னும் ஒரு விம்மல்

ரயில் நகர்வதற்கு முன் விரலில் தொட்டு…  

 

விரலுடன் அல்லவா

விரல்சொன்னோம்

பிரிவின்

துயரனைத்தையும்

 

விரலின் மெல்லிய

கோடுகளில்

தண்டவாளத்தின்

உயிர்விரைவுகள்

உயிரை எரித்துச் சென்றடையும்

அந்தரங்கத் தொலைவுகள்

 

விரலின் மெல்லிய

ஆறுகள் தேடுகின்றன

இகபரங்களை

விழுங்கும் பெருங்கடல்களை

 

விரலினால் அல்லவா

மனமெழுதினோம்

ப்ழைய மணற்பரப்புகளில்

 

விரலினால்தான்

மனமெழுதவேண்டும்

காதலின் வாத்தியத்தில்.

சாவின் கரையிலும்கூட.

கோரன்

 

 

மழைவந்த நாளில்

எர்ணாகுளம் தெற்கு ரயில்நிலையத்தில்

டில்லி வண்டியின் ஏஸி போகியில் இருந்தேன்

மங்கியும் தெளிந்தும் என்னை

கரிய ஜன்னல் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு.

அப்பால் பதறி அலையும் உலகைக் கண்டு

இரண்டு ரயில்களுக்கு நடுவே

யாரோ வீசிய மதியமழையை கண்டு

அப்பாஸ் கிரோஸ்தாமிக்கும் மக்மல்பஃபுக்கும்

வாரிசு யார் என்று மடிக்கணினியில்

நடுவே ஒரு முறை நோக்கி

காட்சியின் காரியகாரணங்கள் அறிந்து

அங்கே இருந்தேன்

 

இங்கே முடியும் தொலைவையோ

இங்கே தொடங்கும் தொலைவையோ

எண்ணாமல்

தண்டவாளங்களின் நடுவே நிறைந்த

சேறு மலம் மூத்திரம் டீசல் கலவைமீது

அமர்ந்திருக்கிறேன் என்றும் கருதாமல்

 

சன்னல்கண்னாடியில் மழை வழிந்து எழுதுவது

என்ன அறிவிப்பு?

நீரெழுத்துக்களின் தீப்பொருள் குளிர்ப்பொருள் என்ன?

மழையெழுதி மழையே அழிக்கும் காதல்குறிப்பா?

காமத்தைப் பற்றி, பிளந்து சரிந்து அருகே வரும் சாவைப்பற்றி

விளைச்சலைப்பற்றி விக்டர் ஜார்ஜைப்பற்றி

புதிய ஏதாவது செய்தியா?

 

ரயில்களுக்கு நடுவே ஒரு சோற்றுப் பொட்டலம்

வீசப்பட்டதும்

காகம்போல் ஒருவன் பாய்ந்து வந்தான்

களங்களில் இருந்தெல்லாம்

வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டு துரத்தப்பட்டவன்

முகம் அறிமுகம் உள்ளவன்

பலவற்றையும் நினைவூட்டியவன்

யாரையோ எதிர்த்துகிளம்பி

வழியில் அணைந்து கரியான ஒரு கறுப்புக்கொடி

 

வால் கால்நடுவே செருகியதுபோல பணிந்து

தாரும் கற்துண்டுகளும் மலமும்சிறுநீரும்

கலந்து நுரைக்கும்

அழியாத கலையாத சேற்றுக் கைக்கலத்தில்

எச்சில் கஞ்சியே எச்சம் என்னும்

யதார்த்தவாதத்தை மட்டும் கண்டறிந்த

ஒருவன்

 

[ “பின்னேயும் கோரனு கஞ்சி கும்பிளில் தன்னே” என்பது மலையாளப் பழமொழி. கோரன் என்பது தலித்துக்களுக்குரியபெயர். உலகம் எப்படி மாறினாலும் கோரனுக்கு கஞ்சி வெறும்கையில்தான் கிடைக்கிறது என்று பொருள்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்
அடுத்த கட்டுரைதேசபக்தர்- ஜானவி பரூவா.