சராசரி நடையும் புனைவுநடையும்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

நான் தமிழில் எழுதத்தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படைப்புக்களை இங்கே சில மூத்த வாசகரகளிடம் அளித்தேன். அவர்கள் வாசித்துவிட்டு நான் என் தமிழறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். சொற்றொடர்களை வாசித்து அவற்றிலுள்ள இலக்கணப்பிழைகளையும் பொருள்மயக்கங்களையும் சுட்டிக்காட்டினார்கள்.

அவர்கள் சொல்வதுபோல ஒருவரியை தனியாக எடுத்துப்பார்த்தால் அவற்றில் அர்த்தம் மாறுபடுவது எனக்கும் தெரிந்தது. ஆனால் நான் எழுத நினைக்கும் எழுத்து மனத்தின் ஓட்டத்தைச் சொல்வது. இவர்கள் சொல்வதுபோல எண்ணி கூட்டி எழுதினால் அது செயற்கையாக அமைகிறது. நீங்கள் நடை பற்றிச் சொல்லியிருந்ததைப் படித்தபோதுதான் இதை எழுதத் தோன்றியது. உங்கள் பதிலை நாடுகிறேன்

சரவணப்பெருமாள் குமார்

***

அன்புள்ள சரவணப்பெருமாள்,

தமிழில் பாரதி உரைநடை எழுத ஆரம்பித்தபோது அன்றிருந்த பண்டிதர்கள் இலக்கணவாதிகள் அவரை காய்ச்சி எடுத்தனர். அவருடைய சொற்றொடர்களில் எழுவாய் பயனிலை இல்லை என்று பயங்கர குற்றச்சாட்டு. புதுமைப்பித்தன் தன் ‘தவளைப்பாய்ச்சல்’ நடையை முன்வைத்தபோதும் அதே கூச்சல்.

இருவரின் உரைநடையிலும் கால்பங்கு சொற்றொடர்கள் பொருள்மயக்கம் அளிப்பவை, முழுமையடையாத அமைப்பு கொண்டவை, ஆகவே மரபான இலக்கணம் இல்லாதவை என்பதை இன்றும் காணலாம். இருவருமே தங்கள் நடையைவிளக்கி இலக்கண வாத்திகளை நிராகரித்திருக்கிறார்கள்.

ஒப்புநோக்க அசோகமித்திரன் எளிய நேரடி நடையில் எழுதியவர். ஆனால் எழுபதுகளில் அசோகமித்திரன் தண்ணீர் நாவலை கணையாழியில் எழுதியபோது அதில் சொற்றொடர்கள் தெளிவாக இல்லை என்று குற்றம்சாட்டி ஒரு நீண்ட கடிதம் வந்தது. அதை அவர் தன் நாவலின் முன்னுரையாகவே பிரசுரித்தார் – சற்றுக் கேலியுடன்.

இது எப்போதும் நிகழ்கிறது. இலக்கியநடை என்பது செய்தி, நிர்வாகம் ஆகியவற்றில் புழங்கும் சராசரிநடை அல்ல. அந்தப்பொது நடைக்கு எதிரான ஒரு தனிநடை அது. சராசரி நடை என்பது சராசரி வாசகனுக்குரியது. ஆகவே அதில் பொருள்மயக்கம் இருக்கக்கூடாது.

அப்படி பொருள்மயக்கம் இல்லாமலிருக்கவேண்டுமென்றால் என்னென்ன தேவை? ஒன்று வாசகன் ஒரு சராசரி சூழலில் சராசரி மனநிலையில் அதை வாசிக்கவேண்டும். சொற்களின் அர்த்தமும் இலக்கணமும் புறவயமாக வரையறை செய்யப்பட்டிருக்கவேண்டும். சொல்லவந்த கருத்து தெளிவுறச் சொல்லப்படவேண்டும்.

ந்த சராசரி நடைக்கு அப்பாலும் பல மொழிநடைகள் உள்ளன. சராசரிக்கு ‘மேலே’ உள்ள நடைகள் சில உண்டு. உதாரணம் சட்டத்தின் நடை. அங்கே சராசரி நடை உதவாது. அங்கே இன்னமும் திட்டவட்டத்தன்மை தேவை. ஆகவே பலவகையான நிரந்தரச் சொல்லாட்சிகள் அங்கே தேவை. துறைசார் நடைகளும் இத்தகையவை. அவை தனிக் கலைச்சொற்கள் வழியாகவே சரியாகத் தொடர்புறுத்த முடியும். அக்கலைச்சொற்கள் இல்லாமல் ‘எளிமையாக’ சராசரி நடையில் அவற்றைச் சொன்னால் அந்தத்துறை உத்தேசிக்கும் நுண்ணிய அர்த்தங்கள் இல்லாமலாகிவிடும்.

பேச்சுமொழி நடை என்பது சராசரிநடைக்கு ‘கீழே’ இருப்பது. அதில் இலக்கண ஒருமை இல்லை. பொருள்மயக்கம் இயல்பானது. ’இத இவன்கிட்ட சொல்லிட்டே இருக்கேன், இது பண்ணவே மாட்டேங்கிறான்’ என இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மொழிநடைகளில் மேலே உள்ளவை உறையவைக்கப்பட்ட மொழிநடைகள். சராசரி மொழிநடை தேவைக்கேற்ப மாறுவது, ஆனால் பெரிய மாறுதல்கள் இயலாதது. பேச்சுமொழிக்கு நிலைத்தன்மையே கிடையாது. காலத்திற்குக்காலம், இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள், தருணத்திற்கு தருணம் அது மாறிக்கொண்டே இருக்கும்.

புனைவின் மொழி என்பது சராசரிமொழியே அல்ல. சொல்லப்போனால் சராசரி மொழிக்கு எதிரான செயல்பாடு அது. சராசரி மொழிக்கு மேலே இருப்பது. ஏனென்றால் அது செறிவானது, உள்ளடுக்குகள் கொண்டது, மேலும் மேலும் சொற்கள் தேவையாவது, ஒவ்வொருவருக்கும் உரிய தனித்தன்மை கொண்டது. ஆனால் சராசரி மொழிக்கு கீழே உள்ள பேச்சுமொழிக்கு அணுக்கமாக இருப்பது, அதை நுணுக்கமாகப் பின்தொடர்வது. இந்த முரணியக்கத்தை புரிந்துகொள்ளாமல் நடைபற்றிப் பேசமுடியாது.

மிகச்சிறந்த புனைவுமொழி என்ன? உங்கள் உள்ளே ஓயாமல் ஒரு மொழி ஓடுகிறதே அதற்கு எந்த அளவுக்கு அணுக்கமாக உங்கள் மொழி ஆகிறதோ அந்த அளவுக்கு நல்ல புனைவுமொழியை நீங்கள் அடைந்துள்ளீர்கள். அந்த அகமொழி கட்டற்றது, கனவுச்சாயல்கொண்டது, உங்களுக்கே உரிய அர்த்தங்களும் அர்த்தமீறல்களும் கொண்டது. பொருளேற்றமும் பொருள்மயக்கமும் உடையது. அந்த மொழியை நீங்கள் அடையும்போதுதான் உங்கள் புனைவுமொழி உங்கள் கைரேகைபோல தனித்துவம் கொண்டதாக ஆகிறது.

அதை அடையப் பெரிய சவால் என்பது சராசரி மொழிநடையே. ஆகவேதான் புனைவெழுத்தாளன் சராசரி மொழிநடையை அதிகமாக வாசிக்கக்கூடாது என்பது. நாளிதழ்களை, செய்திக்கட்டுரைகளை, முகநூல் பதிவுகளை அவன் வாசிக்கவாசிக்க அவனுடைய சொந்த அகமொழி பலவீனம் அடையும், சராசரி மொழிநடை உருவாகும். அவன் வாசிக்கவேண்டியது அவன் அகமொழியை அறைகூவிச் சீண்டி வளர்க்கும் ஆற்றல்கொண்ட புனைவுமொழிகளை மட்டுமே.

சராசரி நடை ‘சொல்லவந்ததைச் சொல்லும்’ நோக்கம் கொண்டது. புனைவுநடை சிலசமயம் சொல்லமுடியாமையை உணர்த்தலாம். சொல்லவேண்டியதை மறைக்கலாம். சொல்லியும் சொல்லாமலும் உணர்த்தலாம். அதில் நிகழ்வன எல்லாமே அதற்கு முக்கியம்தான், அவை எதை வாசகனுக்கு அளிக்கின்றன என்பதே கருத்தில்கொள்ளப்படவேண்டும்.

இலக்கணவாதம் பேசுபவர்கள் எவர் என பாருங்கள். அவர்கள் பேசும் இலக்கணம் சராசரி மொழிக்குரிய இலக்கணம். அந்த இலக்கணத்தில் புனைவுமொழி பொருந்த முடியாது. காலந்தோறும் இவர்கள் கிளம்பிவந்து இலக்கியத்திற்கு எதிராக கூச்சலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு இலக்கியநுட்பங்கள் புரியாது, ஆகவே இவர்களிடம் பேசவே நம்மால் முடியாது.

வணிக எழுத்தாளர்கள் பொதுவாக சராசரி மொழியில்தான் எழுதுவார்கள். ஏனென்றால் அவர்களின் வாசகர்களும் சராசரிகளே. அவர்களின் எழுத்தை சராசரி அளவுகோல்களைக்கொண்டு துணையாசிரியர்கள் மேம்படுத்தி தரப்படுத்துவதும் உண்டு. ஆகவே கல்கி-குமுதம்-விகடன் எழுத்தாளர்கள், அந்தப்பாணியை தலைக்கொண்டவர்களே சராசரி இலக்கணத்தை இலக்கியமொழியில் வலியுறுத்துவார்கள்.

அவர்களால் அதற்குமேல் மொழியை கூர்ந்தறிய, அதன் இயல்கைகளை உணர முடியாது. சீரான மொழிநடையையே தங்கள் தகுதியாக நினைப்பார்கள். ஆகவே அவர்களின் மொழிநடைக்கு தனித்தன்மையே இருக்காது. சூழலில் புழங்கும் பொதுநடையே அவர்களுடையதும். இலக்கியத்தில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. மிகமிக யதார்த்தமான புனைவெழுத்து கூட சராசரிநடையை விட்டு விலகியதாகவே இருக்கும். தனித்தன்மையே இலக்கியநடையின் சிறப்பு.

ஆகவே அந்தக்குரல்களை புறந்தள்ளுங்கள். சென்று கல்கிகுமுதம் வாசிக்கச் சொல்லுங்கள். உங்கள் அகநடையை நோக்கிச் செல்லுங்கள். அதன் பிழைகளும் மீறல்களும்கூட முக்கியம்தான். அவை உங்கள் அகம் செயல்படுவதன் வழிகளைக் காட்டுகின்றன.

ஜெ

***

நடை,பொருள்

மொழியும் நடையும்

நடைமீறுதல்

சராசரிகளின் சாரம்

க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்

இலக்கணம்- வெள்ளையானை- மொழி

வெள்ளையானை- இலக்கணம்

மொழி, இலக்கணம்

இலக்கணம், கடிதங்கள்

முந்தைய கட்டுரைசுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 23