விமர்சனத்தின் வழிமுறைகள்

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் கடிதம் படித்தேன். மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும். இங்கே நீங்கள் விமர்சனங்களை முன்வைப்பதில் மாறாத கொள்கை அல்லது அளவுகோல்கள் எதையாவது கொண்டிருக்கிறீர்களா? மேடைகளில் பேசும்போது சற்று புகழ்ந்துவிடுகிறீர்களா? உங்கள் அளவுகோல்கள் சீராக இல்லை என்று நண்பர் சொன்னார். என் கேள்வி அத்துமீறல் அல்ல என நினைக்கிறேன்

 

எஸ்.செல்வக்குமார்.

 

அன்புள்ள செல்வக்குமார்,

 

விமர்சனக்கருத்துக்கள் அவற்றை ஏற்றும் மறுத்தும் கூடவே சிந்திப்பவர்களுக்காகச் சொல்லப்படுவன. அவ்வாறு சிந்திக்கும் திறனற்றவர்களின் வழக்கம் கூற்றுக்களை வெட்டிவெட்டி ஒப்பிட்டுக்கொண்டிருப்பது. உண்மையில் இலக்கியவிமர்சனத்தை எளிய திண்ணை வம்பாக மாற்றுவது இது. அச்சிறுமைக்குள் செல்வது ஓர் உளச்சீரழிவு. அதை தவிர்க்குமாறு உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்.

 

விமர்சனக்கருத்துக்களில் மாறாத நிலையான புறவய அளவுகோல் எவருக்கும் இயல்வதல்ல. உலகில் எந்த விமர்சகனிடமும் அதைக் காணமுடியாது. விமர்சனக்கருத்துக்கள் ஒரு நீண்ட உரையாடலின் பகுதியாக வெளிவருபவை. அந்த உரையாடலைத் தொடர்பவர்களால் மட்டுமே அவற்றை உணரமுடியும்.ஒவ்வொரு இலக்கியவிமர்சனக் கருத்துக்கும் முன்னும்பின்னும் உண்டு. அது வெளிப்படுத்தப்பட்ட சூழல் உண்டு.

 

அதேசமயம் இலக்கியவிமர்சனக் கருத்துக்களில் நிலையான அம்சங்கள் சில உண்டு. அவ்விமர்சகனின் பொதுவான இலக்கியக்கொள்கை, இலக்கிய நோக்கு என அதைச்சொல்லலாம். என் இலக்கியக் கொள்கை என்பது என்ன என்று முந்தைய கடிதத்திலேயே சொல்லிவிட்டேன். அக்கொள்கையை என் சூழலுடன் விவாதித்து கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி, சற்றே உருமாற்றிக்கொண்டே இருப்பேன். சற்று மாறுதல்கள் நிகழும். சில கைவிடுதல்களும் இயல்பே. ஏனென்றால் நிகழ்வது விவாதம் ‘தீர்ப்புசொல்லுதல்’ அல்ல.

 

இலக்கியத்தின் மொழி,வடிவம் சார்ந்து உறுதியான கருத்துக்கள் இலக்கியவாசகனுக்கு இருக்கலாகாதென்பதே என் எண்ணம். அவன் பலவகையான இலக்கிய அழகியல்களை இழந்துவிடுவான். கட்டின்றி எழும் ப.சிங்காரத்தின் உரைநடையும் எண்ணிஎண்ணி எழுதப்படும் சுந்தர ராமசாமியின் உரைநடையும் இலக்கியத்தின் வெவ்வேறு முகங்கள் என்னும் உணர்வு அவனிடமிருக்கவேண்டும்.

 

இதைத்தவிர எங்கே, எப்படி அக்கருத்துக்களை முன்வைக்கிறோம் என்பது முக்கியமானது. இப்படி தொகுத்துச் சொல்கிறேன்

 

அ. உள்ளீடற்ற ஒரு எழுத்து கொண்டாடப்படும் என்றால், மிகையாக ஒன்று முன்னிறுத்தப்பட்டு பிறவற்றை மறுக்கும் அளவுக்குச் செல்லும் என்றால் விசைகொண்ட மறுப்பு தேவையாகிறது.

 

ஆ. ஓர் எழுத்தாளரை ஒட்டுமொத்தமாக பார்த்து மதிப்பிடவேண்டும் என்றால் அனைத்து நிலையிலும் அதைப்பார்த்து குறைகளுடனும் வெற்றிகளுடனும் சொல்லவேண்டியிருக்கிறது.

 

இ. வளரும் எழுத்தாளர் என்றால் அவருடைய குறைகளை அவரிடம் சுட்டிக்காட்டலாமே ஒழிய அதைவைத்து அவரை ‘கிழிக்க’ த்தேவையில்லை. அவருடைய எழுத்தில் கவனிக்கவேண்டிய தனித்தன்மை என்ன, அவர் எந்தவகையான அழகியலை கொண்டவர் என்று வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டினாலே போதுமானது.

 

ஈ. ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையில் எல்லா கோணங்களையும் சொல்லலாம். ஒரு மதிப்புரை அதற்கான எல்லை உடையது.

 

உ. மேடையுரைகளில் எதிர்மறை விமர்சனங்களை தவிர்ப்பதே நன்று, அதனால் பயனேதும் இல்லை.மேடையில் கூறவேண்டியது கவனிக்கப்படவேண்டிய கூறுகளை மட்டுமே. எதிர்விமர்சனம் சற்றே குறிப்பிடப்படலாம், அவ்வளவுதான். ஏனென்றால் மேடை உணர்ச்சிகரமானது. உணர்ச்சிகள் நம் அளவுக்குள் நிற்பதில்லை.

 

ஊ. விமர்சிக்கப்படுபவர் சமகாலத்தில் கவனிக்கப்படும் படைப்பாளி என்றால் ஒரு ஒட்டுமொத்த விமர்சனத்தின் ஒருபகுதியாக சிறிய அளவில் எதிர்விமர்சனம் சுட்டிக்காட்டப்படலாம்.

 

எ. ஒரு படைப்பாளியைக் கௌரவிக்கப்படும் பொருட்டு நிகழும் அரங்கில் அவரில் எந்தெந்தகூறுகள் முக்கியமானவை என்று மட்டுமே சொல்லப்படவேண்டும். அங்கே எதிர்விமர்சனம் முன்வைப்பது அவரை கௌரவிக்கத்தேவையில்லை என்று சொல்வதுபோலவே ஆகும்.

 

இவையெல்லாம் இன்று நான் கொண்டுள்ள புரிதல்கள் அல்ல. மிகக்கூர்மையான விமர்சனங்களை கடுமையான மொழியில் முன்வைத்த காலத்திலேயே இதுதான் வழக்கம். ஏனென்றால் இது சுந்தர ராமசாமியின் அணுகுமுறை

 

ஜெ