எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…

அன்புள்ள ஜெ,

நலம்தானே? சமீபத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பேச்சு வந்தது. நீங்கள் முன்புபோல கடுமையான இலக்கியக் கருத்துக்களை முன்வைப்பதில்லை. இன்று உங்கள் அரசியல் கருத்துக்களே விவாதமாகின்றன. இலக்கியம் சார்ந்து எதிர்மறையாக நீங்கள் பேசியே நீண்டநாட்களாகின்றன என்று சொன்னார். சொன்னவர் முப்பதாண்டுகளாக உங்களை வாசிக்கும் எழுத்தாளர். உண்மையிலேயெ இந்த மாற்றம் உங்களிடம் நடைபெற்றுள்ளதா?

எஸ்.செல்வக்குமார்.

***

அன்புள்ள செல்வக்குமார்,

உண்மைதான். இப்போது நான் கூடுமானவரை எதிர்மறை விமர்சனங்களை வைப்பதில்லை. வைக்க நேரிட்டாலும் மிகமிக மென்மையாகவே சொல்கிறேன்.பொதுவாக எனக்கு பிடித்தவற்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். அந்த தெரிவில் மட்டுமே விமர்சன அம்சத்தை கொண்டிருக்கிறேன்.

நான் ஒர் இளம்படைப்பாளியாக, விமர்சகனாக நுழைந்தபோது சீற்றமும் அதன் விசையும் கொண்டவனாக இருந்தேன். தமிழில் ஆழ நிலைநின்ற மூன்றுகூறுகளை கடக்க நினைத்தேன்.

.. அன்றைய எழுத்தின் அன்றாடத்தன்மை. தத்துவம் ஆன்மிகம் இல்லாத உலகியல்பார்வை. அன்றிருந்தவர்கள் இரண்டு தளங்களில் அவற்றையே எழுதிக்கொண்டிருந்தனர். ஒன்று காமம் காதல் சார்ந்து. அல்லது முற்போக்கு அரசியல் சார்ந்து

. அன்றைய எழுத்தின் நவீனத்துவத்தன்மை. வரண்டமொழி, புறவய பார்வை, இறுக்கமான வடிவம் ஆகியவற்றை தவிர்த்து உணர்வுபூர்வமான அகக்கொந்தளிப்புள்ள கட்டற்ற புனைவை முன்வைக்க முயன்றேன். அதுவே ஆழுள்ளத்தின் வெளிப்பாடு, பண்பாட்டு ஆழத்தின் வெளிப்பாடு என நினைத்தேன்.

. அன்றைய எழுத்தின் ஐரோப்பியச் சார்பு. நான் இந்திய மரபுசார்ந்த, இந்தியப்பண்பாடு சார்ந்த ஒரு நவீன இலக்கியத் தொடர்ச்சிக்காக வாதிட்டேன்

ஆகவே என் முன்னோடிகள் அனைவரையுமே விமர்சனரீதியாக அணுகினேன். ஏற்கனவே இருந்த மதிப்பீடுகளை நிராகரித்து பிறிதொன்றை முன்வைத்தேன். என் சமகால எழுத்தாளர்களுடன் அதைப்பற்றி உரையாடினேன். இளைஞன் ஆதலால் அதை மிகுந்த விசையுடன் சொன்னேன். விவாதங்களை உருவாக்கினேன். அதன் விளைவாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியவிவாதங்களின் மையமாக இருந்தேன்.

ஆனால் இன்று என் தரப்பை ஏறத்தாழ முழுமையாகவே சொல்லிவிட்டேன். நான் எண்ணுவதை எழுதியும் காட்டிவிட்டேன். வெறும் கருத்துக்களாக இருந்த என் தரப்பு விஷ்ணுபுரம் வெளிவந்து பெருமளவில் ஏற்கப்பட்டதுமே நிறுவப்பட்டுவிட்டது. இன்று ‘மூத்த’ எழுத்தாளர் ஆகிவிட்டேன். இன்று அதே விசையுடன் சொல்லவேண்டியதில்லை. சொல்லும் உளநிலையும் இல்லை.

இன்று நான் சொல்லக்கூடுவது இலக்கியவடிவம், மொழி சார்ந்த சில அவதானிப்புகளை. இவற்றை மூத்தபடைப்பாளிகள் அடுத்த தலைமுறையினருக்குச் சொல்வது இன்றியமையாதது. அதுவே ஒரு தொடர்ச்சியை உருவாக்குகிறது. ஆனால் இன்றைய முகநூல்சூழலில் அதற்கான உளநிலை எவரிடமும் இல்லை.

என்னுடைய சமீபகால அனுபவங்கள் கொஞ்சம் கசப்பானவை. உதாரணமாக ஒர் இளம் எழுத்தாளர் ஒரு படைப்பை எழுதினார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதை நான் முன்னிறுத்தினேன். அதேசமயம் எந்த ஒரு படைப்பில் இருந்தும் அந்த ஆசிரியர் மேலெழுந்து செல்லும் இடங்கள் உண்டு. அந்த ஆசிரியரிடம் நாம் எதிர்பார்ப்பது அது. உண்மையில் அவருடைய உச்சகட்ட படைப்பில்கூட அவர்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலும் எதிர்பார்ப்பார்கள். நான் அதையும் சொல்வேன்.

பொதுவாக தனிப்பேச்சில் எந்த தற்கட்டுப்பாடும் வைத்துக்கொள்வதில்லை. எங்கும் இயல்பாகப் பேசுவதே வழக்கம். அதற்கேற்ப நண்பர்களின் சிறுகுழு உண்டு. அதில் அக்கதையின் எல்லைகளைப் பற்றி சொன்னேன். என் நோக்கில் அதில் மேலும் எங்கு செல்லமுடியும் என்றேன். சூழ இருந்தவர்களில் புனைவு எழுதுபவர்களும் உண்டு.

சூழ இருந்த நண்பர்களில் சிலர் வம்பர்கள். அதைப்புரிந்துகொள்ள பிந்திவிட்டது. அவர்கள் அந்த எழுத்தாளரை அழைத்து ‘வெளியே ஒன்று பேசுகிறார் உள்ளே ஒன்று பேசுகிறார்’ என்று போட்டுக்கொடுத்தனர்.  ‘உங்கள் திறன்மேல் பொறாமைகொண்டு அழிக்கப்பார்க்கிறார்’ என்று மூட்டிவிட்டனர். அந்த எழுத்தாளர் மனம்திரிந்து என் எதிரியாக அறிவித்துக்கொண்டார். வசைபாட தொடங்கினார்.

அவருடைய உளத்திரிபின் காரணமே எனக்குத்தெரியாது. தெரியவர ஓராண்டு ஆகியது. உண்மையில் இலக்கியவாசகர்களிடம் பேசவேண்டியவை சில உண்டு, எழுத்தாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியவை வேறு சில உண்டு. புனைவை எப்படி வாசிப்பது என்றே வாசகர்களிடம் பேசவேண்டும். எப்படி எழுதுவது என எழுத்தாளர்களிடம். அவை முற்றிலும் வேறுவேறு. அந்த வேறுபாட்டை அவர் புரிந்துகொள்ளவில்லை.

அந்த இளம்படைப்பாளி அதன்பின் தீவிரமாக வெளிவரவே இல்லை. வம்பர்களால் எழுத்தாளர்களை மிகச்சாதாரண உளநிலைகளில் கட்டிப்போடவே முடியும், ஊக்கத்துடன் எழச்செய்ய முடியாது. என் சூழலில், இலக்கியவிவாதம் ஓயாது நிகழும் வட்டத்தில் இருந்திருந்தால் இப்போது வீரியத்துடன் வெளிப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். அவர்மேல் இன்றும் நம்பிக்க்கையுடனேயே இருக்கிறேன். அவ்வம்புச்சூழலில் இருந்து அகன்றால் அவர் மேலெழக்கூடும்.

இன்னொரு நிகழ்வு. ஓர் இளம் எழுத்தாளர் அவருடைய படைப்பைப்பற்றிய என் கருத்தை விரும்பிக்கேட்டுக்கொண்டார். அதன் நுட்பங்களில் உள்ள சில போதாமைகளை, விடப்பட்ட சில சாத்தியங்களை நான் சுட்டிக்காட்டினேன். அவர் மறுமொழி சொல்லவில்லை. ஆனால் ஒருமாதம் கழித்து வேறு விஷயங்களுக்காக மிகமிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றினார். அவருடையநண்பர்கள்அதற்கு ஆதரவளித்து கொண்டாடினர்.

அந்த படைப்பாளி நான் அனுப்பிய கடிதத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் அவரைவிடு மாப்பிள்ளை, அந்தாளுக்கு உன்மேலே பொறாமைஎன்று சொல்லி தேற்றி கிளப்பிவிட்டிருக்கிறர்கள். என பின்னர் அறிந்தேன். அவர் இன்றுவரை வசைபாடிக்கொண்டிருக்கிறார்.வசை இருக்கட்டும், அவர் இழந்தது அவருடைய இயல்புக்கு மிக ஒத்துவரக்கூடிய ஒரு எழுத்தாளர்,நண்பர் சூழலை. ஒரு சிறந்த வாசகர்வட்டத்தை.

சென்ற தலைமுறையின் சூழல் அப்படியல்ல. என் தலைமுறையைச் சேர்ந்த ஒரு படைப்பாளி எழுதிய கதையை இன்னொரு எழுத்தாளர் நிராகரித்து கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை தன் நண்பரிடம் படிக்கக்கொடுத்தேன் என அந்த எழுத்தாளர் சொன்னபோது சுந்தர ராமசாமி சீற்றம் அடைந்தார்.

எப்டி நீங்க அதைக்கொடுக்கலாம்? நீங்க ரெண்டுபேருமே எழுத்தாளர்கள். நீங்க ஒரு தனிப்பட்ட உரையாடல்ல இருக்கீங்க. மூணாவது ஒருத்தர் எப்டி உள்ளே வரலாம். வரணும்னா அந்த எழுத்தாளர் அதை ஒப்புக்கணும். இவரோட கருத்துக்களுக்கு இந்த உரையாடலிலே என்ன இடம்? நீங்க ரெண்டுபேருமே வரலாற்றிலே இருக்கீங்க. அந்தப்பொறுப்பு உங்களுக்கு இல்லைன்னா நீங்க என்ன எழுத்தாளர்?” என்று கண்டித்தார்.

அன்றைய முன்னோடிகள் கறாரான விமர்சனங்களையே முன்வைப்பவர்கள். உதாரணமாக, யுவன் சந்திரசேகரின் ஆசிரியரான தேவதச்சன் அவர் கதைகளை மிகப்பெரும்பாலும் நிராகரிப்பவராகவே இருந்தார். யுவன் அந்நிராகரிப்புடன் உரையாடியே தன் சிதறுண்ட வடிவ அழகியலை உருவாக்கிக்கொண்டான். என் இளமையில் நான் பாவண்ணனை, கோணங்கியை, எஸ்.ராமகிருஷ்ணனை, சுரேஷ்குமார இந்திரஜித்தை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். பாவண்ணன் எழுதிய ஒரு கதையை நிராகரித்து வரிசையாக நான்கு கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். ஆனால் அவர் என் நண்பர், இன்றும். அனைவருமே குடும்ப நண்பர்களாகவும் இருந்தோம்.

இன்று அச்சூழல் இல்லை. இன்று எந்த இளம் எழுத்தாளருடனும் தனிப்பட்ட விவாதங்களில் ஈடுபட முடியாது. அவர் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வார். உடனே அவ்வுணர்வை முகநூலில் வெளிப்படுத்துவார். அவருடைய நட்புச்சுற்றம் அதை வளர்க்கும். வம்புகள் உடனடியாக பதிவாகி எதிரிவினையாற்றப்பட்டு பகை பேருரு அடைந்துவிடுகிறது.

எந்த ஒரு சிறு எழுத்தாளரிடமும்விடுங்க பாஸ், கி.ராஜநாராயணனுக்கு உங்கமேலே பொறாமைஎன்றோநீங்கள்லாம் பேசிப்பேசி அசோகமித்திரனை பெரியாளாக்காதீங்கஎன்றோ நம்பிச் சொல்லலாம். அவருடைய ஆணவம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும்.

இன்று தாழ்வுணர்ச்சியையும், விமர்சனங்களை அஞ்சும் மனநிலையையும் மறைப்பதற்கான சிறந்த வழிமுறை என்பது தன்னை ஒருகட்டற்ற பொறுக்கிஎன்று கட்டமைத்துக்கொள்வது. அதை இன்று இணையவெளியில் பெரும்பாலான படைப்பாளிகள் கடைப்பிடிக்கிறார்கள்.

இன்று இலக்கியவாதிகள் ஒருவரோடொருவர் கூட விமர்சனம் செய்துகொள்வதில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய அரங்கில் கே.என்.செந்தில் ஓர் இலக்கியவாதியிடம் எதிர்வினா எழுப்பி சற்றுக்கடுமையாக விமர்சித்தார். அவர் உடனே மேடையிலேயே தன்னை தானே ரத்து செய்துகொண்டார். ஆனால் வன்மம் கொண்டு விஷ்ணுபுரம் அரங்கே சரியில்லை என எழுதத்தொடங்கினார்.

எழுத்தாளனின் ஆணவம் இயல்பானது. அவன் விமர்சனங்களால் சினம்கொள்வதும் இயல்பானதே. ஆனால் அதை கடக்க அவனே முயலவேண்டும். அதை பெரிதாக வளர்க்கக்கூடாது. அதில் சம்பந்தமில்லாதவர்கள் தலையிட விடக்கூடாது. சிறு உரசல்களுடன் நிகழும் இலக்கியவிவாதங்கள் இல்லாவிட்டால் உண்மையில் நம் தரப்பை நாம் திரட்டிக் கூர்மைப்படுத்திக் கொள்ளவே முடியாது.

மறுப்பும் எதிர்ப்பும் முக்கியமல்ல, ஏன் அந்த மறுப்பும் எதிர்ப்பும் எழுகிறது என்னும் காரணம் சொல்லப்படுமென்றால் அக்காரணம் மட்டுமே முக்கியமானது. வெற்றுக் கருத்துக்கள் சொல்லப்படுமென்றால், நம்மால் பொருட்படுத்த முடியாத காரணங்கள் சொல்லப்படுமென்றால் அவற்றை முற்றாக உதாசீனம் செய்வதே முறை.

இந்த இளையவர்கள் இப்படி தங்களைக் காத்துக் கொள்ளும்போது உண்மையில் தங்கள் படைப்புக்களைப் பற்றி தாங்களே வலுவான தர்க்கங்கள் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பைத்தான் இழக்கிறார்கள். ஒரு மூத்த படைப்பாளியிடம் வெறும் ஆணவத்தால் முட்டிக் கொண்டால் இழக்கப்படுவது ஒரு தொடர்ச்சியை மட்டுமல்ல அர்த்தபூர்வமான மீறலுக்கான வாய்ப்பையும் கூடத்தான்

எனக்கு சுந்தர ராமசாமியிடம், அசோகமித்திரனிடம், கோவை ஞானியிடம், ஆற்றூர் ரவிவர்மாவிடம், எம்.கங்காதரனிடம் எத்தனை ஆண்டுக்கால நட்பு இருந்தது என எண்ணிப்பார்க்கிறேன். சிலருடனான உறவுகள் மிகச்சங்கடமான தருணங்கள் கொண்டவை. உதாரணமாக பிரமிள். ஆனால் அத்தொடர்புகளினூடாக நான் வரலாற்றில் வாழ்ந்தேன். வரலாற்றுடன் விவாதித்தேன். என் சில்லறை ஆணவத்தைக் காத்துக் கொள்ள அவ்வாய்ப்பை இழக்கவில்லை.

நேற்று முன்தினம் ஒர் இளம்படைப்பாளிக்கு ஒரு கடிதம் எழுதினேன், அவருடைய கதை பற்றி. அக்கதையின் உளஎழுச்சி எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் வடிவப்போதாமைகள் இருந்தன. நான் எழுதியது மிகத் தணிவான கடிதம். சுந்தர ராமசாமியோ தேவதச்சனோ அப்படி பேசமாட்டார்கள். பழைய ஜெயமோகன் அந்த அளவுக்கு நயமாக எழுதமாட்டான். அக்கதையின் சில அழகியல் குறைகளைச் சுட்டி அதை எப்படி கடக்கமுடியும் என்று சொல்லியிருந்தேன். அதை எழுத அருண்மொழி காரணம். அவள்தான் எழுது, உன் கருத்தை எதிர்பார்க்கிறார் என்று சொல்லி கட்டாயப்படுத்தினாள்.

ஆனால் எழுதியபின் ஓர் இரவு முழுக்க சஞ்சலம் கொண்டிருந்தேன். அருண்மொழியிடம் புலம்பிக் கொண்டே இருந்தேன். என் அனுபவங்களைக் கொண்டு பார்த்தால் இன்றைய சூழலில் ஒரு நல்ல நட்பை இழப்பதுதான் அது. ஒரு பகையை, பல ஆண்டுகள் நீளும் வசைகளை தேடிக் கொள்வது. ஆனால் நல்லவேளையாக ஆனால் அப்படி நிகழவில்லை. ஆறுதலுடன் பெருமூச்சுவிட்டுக் கொண்டேன். அதன்பின் எண்ணிக் கொண்டேன், எதற்கு எனக்கு இந்த வம்பு? ஏன் இத்தனை அலைக்கழிதல்கள்? நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருக்கவேண்டியதுதானே?.

ஆகவே அடுத்த தலைமுறை பற்றி எதிர்விமர்சனக் கருத்தே சொல்லப்போவதில்லை என்பதே என் நிலைபாடு. வேண்டுமென்றால் எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி, யுவன் சந்திரசேகர் பற்றி கேளுங்கள், சொல்கிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019