கோட்டயம் ஓவியங்கள்.

மலையாளத்தில் வணிக – கேளிக்கை – மென்கிளுகிளு இலக்கியத்திற்கு இரண்டு கலைச்சொற்கள் உண்டு. ஒன்று ‘பைங்கிளி சாஹித்யம்’ முட்டத்து வர்க்கி என்னும் எழுத்தாளர் மலையாள வணிக எழுத்தின் தந்தை. அவருடைய புகழ்பெற்ற நாவல் பாடாத்த பைங்கிளி 1967ல் வெளிவந்தது. அதிலிருந்து வந்தது அந்தப் பெயர். பைங்கிளி என்பது மலையாளத்தின் கொஞ்சுவதற்கான ஒரு சொல்

இன்னொரு கலைச்சொல் ‘ம’ பிரசுரங்கள். மலையாளத்தில் புகழ்பெற்ற வணிக இதழ் மலையாள மனோரமா வாரஇதழ். அதன் அதே சூத்திரத்தில் உருவாக்கப்பட்டு அதைக் கடந்துசென்ற வார இதழ் மங்களம். ஒரு கட்டத்தில் மனோராஜ்யம், மலையாளநாடு என இருபது வார இதழ்கள் மலையாளத்தில் வெளிவந்தன. பெரும்பாலானவை ‘ம’ வில் தொடங்குவதனால் ‘ம’ பிரசுரங்கள் என்று பெயர் வந்தது

கேரளத்தில் பெண்களில் பெரும்பகுதியினர் வேலைக்குச் செல்பவர்கள் அல்ல. பெரும்பாலானவர்களின் கணவர்கள் வளைகுடாவிலோ ராணுவத்திலோ. ஆகவே வாசிப்பே வாழ்க்கை. வாரம் இருபது வார இதழ்கள் வாசித்தபின் நாவல்களையும் வாசிப்பார்கள். ஒருகட்டத்தில் கூலிவேலைக்குச் செல்பவர்களும் மளிகை பட்டியலுடன் ‘ம’ பத்திரிகையை எழுதி அனுப்ப ஆரம்பித்தார்கள்.

இந்த வார இதழ்களுக்கு ஒரு பக்கவடிவமைப்பு முறை, உள்ளடக்க ஒழுங்கு உண்டு. ஒரே இதழில் பன்னிரண்டு தொடர்கதைகள். ஒரே ஒரு சிறுகதை. நகைச்சுவைத் துணுக்குகள் ஒரு பக்கம். உணவு, ஃபேஷன் என ஒவ்வொரு பக்கங்கள். தமிழ் வணிக இதழ்கள் போல சினிமா வம்புகள், நடிகர்களின் பேச்சுக்கள் இல்லை. அரசியல் சுத்தமாக கிடையாது. அதாவது 90 சதவீதம் பக்கங்களில் தொடர்கதைகள்.

 

தொடர்கதைகளுக்கு பலசுவைகள். ஒரு புராணத்தொடர்கதை ., “அம்மே காந்தாரி!” என்பதுபோல. ஒருசில கிறித்தவப் பின்னணித் தொடர்கதை [ஆலீஸின்டே கும்பசாரம்]. ஒருசில முஸ்லீம் பின்னணித் தொடர்கதை [மொஞ்சுள்ள மணவாட்டி] இந்துப்பின்னணி தொடர்கதைகளில் நாயர் ஈழவர் பின்னணிகள் தனித்தனியாக. [அயலத்தே சுந்தரி, வலியேட்டத்தி என்றவகை]. இது ஒரு நெடுக்குவாட்டுப் பகுப்பு. குறுக்காக உள்ளடக்கம் சார்ந்தவை. குடும்பத் தொடர்கதைகள் [துளசிக்கதிர்] காதல்கதைகள் [ஸ்ரீயேட்டன்] துப்பறியும் கதைகள் [டேஞ்சர் புல்லட்] பேய்க்கதைகள் [யக்ஷிப்பாற] இப்படி.

இவர்களை எழுதித்தள்ளும் எழுத்தாளர்களும் பலவகை. ஜோய்ஸி, ஜோஸி வாகமற்றம் போல கிறித்தவப் பின்னணி கொண்டவர்கள். மொய்து படியத்து போல இஸ்லாமிய எழுத்தாளர்கள். ஆரம்பத்தில் இந்த வகை எழுத்தில் பெண் எழுத்தாளர்கள் இல்லை. பின்னர் அவர்கள் புயலென கிளம்பி வந்தனர். கமலா கோவிந்த் போன்று ஒரு இருபதுபேர் போட்டுத் தாக்கினார்கள்.  குற்றப்புலனாய்வு எழுத்தில் கோட்டயம் புஷ்பநாத் ஒரு பதினாறு கை எழுத்தாளர். அவருடைய துப்பறியும் நிபுணர் அவரேதான், புஷ்பராஜ் என்று பெயர். இன்னொரு துப்பறியும் எழுத்தாளர் பாட்டன் போஸ். இப்பெயரில் எழுதியவர் எவர் என எவருக்குமே தெரியாது.

தொலைக்காட்சி தொடர்கள் வந்தபின்பும் கூட இந்த வகை எழுத்து நீடிக்கிறது. இவர்கள் தொலைக் காட்சித் தொடர்களுக்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாளப் பெண்களின் உணர்ச்சிகரத்தை வடிவமைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. பொதுவாக மலையாள குடும்பங்களில் எவரும் எவரையும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆகவே உரசல்களும் குறைவு. எல்லா நாடகங்களையும் இப்படி வாசித்து தீர்த்துக் கொள்கிறார்கள்.

நான் ஆச்சரியத்துடன் கவனிப்பது இக்கதைகளுடன் வரும் படங்களை. தமிழில் தொடர்கதைப் படங்களுக்கு ஒரு மரபு உண்டு. பழைய கோபுலு, மணியம் தலைமுறை கோட்டோவியங்களை வரைந்தது. ஜெயராஜ் மெய்நிகர் படங்களை வரைந்தாலும் அவை கோட்டோவிய அடிப்படை கொண்டவை. மலையாளப் பைங்கிளி ஓவியங்கள் சினிமாக்காட்சிகளை அப்படியே வரைந்தவை போல இருக்கும். இப்போது வண்ணத்தில் வந்துகொண்டிருக்கின்றன. ஓரளவுக்கு மாருதி வரையும் ஓவியங்களை இவற்றுடன் ஒப்பிடலாம்.

இந்தவகையான ஓவியங்களை அங்கே கோட்டயம் ஓவியங்கள் என்கிறார்கள். சங்கரன்குட்டி, கே.எஸ்.ராஜன் போன்றவர்களை இதன் முன்னோடிகள் எனலாம். இவர்களுக்கு கதைச் சந்தர்ப்பம் சொல்லப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் நடிகைகளின் அல்லது  வாசகிகள் அனுப்பும் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு காட்சிகளை வரைகிறார்கள்.

இவை கோட்டயம் ஓவியங்கள் என ஏன் சொல்லப்படுகின்றன என்றால் மலையாளத்தின் பிரசுரங்களின் தலைநகர் கோட்டயம் என்பதனால்தான். முன்பு காகிதக்கட்டுகள் படகுகளில் சென்றன. கோட்டயம் கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளை படகுகளால் இணைத்தது. ஆகவே அது அச்சுத்தொழிலின் மையமாகியது. மலையாள மனோரமா அங்குதான் தொடங்கப்பட்டது.

இன்று இருபதுக்கும் மேற்பட்ட ஓவியர்கள் இவற்றை வரைகிறார்கள். பெரும்பாலும் இவை நீர்வண்ணச் சித்திரங்கள். பெண்களின் தோல் வண்ணத்தை தீட்ட மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆடைகளின் டிசைன்களையும் மிகுந்த நேரம் எடுத்து வரைகிறார்கள். ஓர் ஓவியத்திற்கு மூவாயிரம் ரூபாய் வரை கட்டணம். ஒருநாளில் இரண்டு ஓவியம் கூட வரைகிறார்கள்

இந்தப் படங்கள் ஒருவார காலம் நின்று மறைந்து விடுகின்றன. ஆனால் என்றாவது ஒருநாள் இவை சமூகவியல் ஆய்வுக்கான பொருள் ஆக மாறும் என நினைக்கிறேன். உதாரணமாக பல படங்களில் கதைநாயகியர் குண்டாக, சிவப்பாக இருப்பார்கள். நான் ஓர் ஓவியரிடம் கேட்டேன், ஏன் ஒல்லியாக வரைவதில்லை என்று. சராசரி மலையாளிப் பெண் குண்டுதானே என்றார். சரி, ஆனால் அவளுக்கு ஒல்லியான கதைநாயகியாக இருக்கப் பிடிக்குமே என்றேன். இல்லை, அவள் அந்தக்கதாபாத்திரத்துடன் தன்னை அடையாளம் காணமாட்டாள். வெறுக்கவும் கூடும் என்றார். ஆச்சரியமாக இருந்தது

இந்த ஓவியங்களை உண்மையில் டிஜிட்டல் முறையில் இன்னும் எளிதாக வரைந்துவிடமுடியும். ஆடை டிசைன்களை கணினி எளிதாக உருவாக்கும். ஆனால் இப்போதும் முழுக்கமுழுக்க தூரிகையாலேயே இவை வரையப்படுகின்றன.

இவற்றிலுள்ள சிறப்பு என்ன என்று மாருதியின் ஓவியங்களுடன் ஒப்பிட்டு பார்த்தேன். தமிழ் வணிக கதை ஓவியங்களில் அவையே இவற்றுக்கு அணுக்கமானவை. இவற்றில் கண்கள், உதடுகள் போன்றவை புகைப்படத்தன்மையுடன் உள்ளன. அத்துடன் முகங்கள் பொம்மைத் தன்மை இல்லாமல் வெவ்வேறு ஆளுமைகளைக் காட்டுவனவாக உள்ளன.

 

கதைகளில் எந்த பகுதிக்காக இவை வரையப்பட்டிருக்கின்றன என்று பார்த்தேன். பெரும்பாலும்  மிகச்சாதாரணமான தருணங்கள். அவ்வப்போது படங்களுடன் அளிக்கப்படும் வரிகளில் அது தெரியும். “நீ காப்பி கொண்டுவா”  “என்னை மறந்திட்டீங்களா?” என்பதுபோன்ற எளிமையான வசனங்கள்தான் உடனிருக்கும். அதாவது இந்தக்கதைகளுக்கு ஒரு இருமுனைத்தன்மை உண்டு. அவற்றின் பொதுவான தளம் வாசகிகள் அறிந்த அன்றாடவாழ்க்கை, அதிலிருந்து எழுந்து கற்பனையே செய்யமுடியாத ஒரு உச்சகட்ட மிகைநாடக உணர்ச்சிகரம்

ஓவியங்களின் உடலமைப்பை வரைவதிலும் பல நுண்மைகள் உண்டு என்பதை சொன்னார்கள். வழக்கமாக வரையப்படும் ‘கட்டான’ உடலை இவர்கள் வரைவதில்லை. நடுவயதுப்பெண்களின் சற்றே தொய்ந்த பருத்த மார்பகங்கள், பெருத்த இடை, மடிப்பு விழுந்த கழுத்துக்கள் என மேலும் யதார்த்தமாக வரைகிறார்கள். ஆனால் அதிலும் உடல்கூறுகள் நம்பகமாக இருக்கும். உள்ளாடைகளின் இறுக்கம் அல்லது இறுக்கமின்மை, உடற்தசைகளின் பிதுக்கம் எல்லாம் கூர்ந்து பதிவுசெய்யப்படும்.

இளம்பெண்கள் மட்டுமல்ல நடுத்தர வயதுப்பெண்களின் உடலமைப்பைக் காட்டும் படங்கள் நிறைய வரையப்படுகின்றன. அவை கொஞ்சம் கவர்ச்சியானவையாகக் கூட உள்ளன. ஐம்பது அறுபது வயதான பெண்களின் உடல்கள்கூட நிறைய வரையப்படுகின்றன. கொஞ்சம் வயதான வாசகர்களுக்கு அவை பிடித்திருக்கின்றன என்கிறார்கள். அதை அவ்வாறு வரையப்படும் கதாபாத்திரத்திற்கு உருவாகும் ஏற்பில் இருந்து புரிந்துகொள்கிறார்கள்

இந்த  ஓவியங்களின் இயல்பு எவ்வகையிலும் கலைக்குரிய குறியீட்டுத்தன்மையோ பிரதிநிதித்துவத்தன்மையோ அல்ல. நேரடியான பாலியல்பார்வை- Voyeur- அம்சம்தான் இதன் ஆதாரமான உணர்வுநிலை. [Voyeur என்பதைச் சொல்ல மலையாளத்தில் ஒரு நல்ல சொல் உள்ளது, வாய்நோக்கி. இந்த வாய்நோக்கி அம்சம்தான் மெய்யான பாலியல்கவர்ச்சி. இதை அவர்கள் வரையப்பட்டிருக்கும் கோணங்களில் காணலாம்.

பெண்கள்போஸ்கொடுக்கும் பாவனையில் பெரும்பாலும் வரையப்படுவதில்லை. அவர்களின் அழகு வெளிப்படும் மிகையான கோணங்களும் இருப்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகப் பெண்களைப் பார்க்கும் கோணங்களிலேயே அவர்கள் வரையப்படுகிறார்கள். பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டும் சிரித்துவிளையாடிக்கொண்டும் அழுதுகொண்டும். அதில்சாதாரணகோணமே முக்கியம், அசாதாரணக் கோணங்கள் அல்ல. பெண்களின் பின்பக்க கோணம் கூட அடிக்கடி வரையப்படுகிறது

இந்தப்படங்களில் இன்னொரு முக்கியமான அம்சம்யக்ஷி’. பெண்களில் சிலருக்கு யக்ஷியின் இயல்பை அளிக்கிறார்கள் ஓவியர்கள். நீண்ட முடி, வெண்ணிறம், மதர்ப்பான தோற்றம், நீலக்கண்கள், ஏராளமான நகைகள். யக்ஷி அம்சம் எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல நேர்நிலை கதாபாத்திரங்களுக்கும் அளிக்கப்படுகிறது.

நிறைய படங்களில் மலையாள முகங்களான காவ்யா மாதவன், அனு சிதாரா போன்றவர்களின் சாயல் உண்டு. பலசமயம் சாதாரண குடும்பப் பெண்களின் முகங்களே வரையப்படுகின்றனஉடல் வேறு நடிகையுடையதாக இருக்கும். அதற்கு வாசகிகளான பெண்கள் விரும்பி தங்கள் படங்களை அனுப்புகிறார்கள் என்கிறார்கள். அதுஒரு கௌரவமாக கருதப்படுகிறது. பலசமயம் கணவர்களின் அனுமதியுடனேயே படங்கள் அனுப்பப்படுகின்றன.

இன்று பல ஓவியர்கள் பெயரறியாமல் இதை ஒரு தொழிலாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோகன் மணிமல போன்றவர்கள் இதன் நட்சத்திரங்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர்களும் உண்டு. ஆனால் கேரளத்தில் இலக்கியச் சூழலில் இக்கதைகளை எழுதுபவர்கள் எப்படி எழுத்தாளர்கள் என கருதப்படுவதில்லையோ அதைப்போல இப்படங்களை வரைபவர்களை ஓவியக்கலைஞர்கள் என்றும் மதிப்பதில்லை.

ஒரு சமூகம் இப்படி கூட்டாக தன்னைத் தானே ஏன் வரைந்து கொள்கிறது என்பது சுவாரசியமான ஆய்வுப்பொருள் என்று படுகிறது.

மோகன் மணிமல – ஓவியங்கள் 1

மோகன் மணிமல ஓவியங்கள் 2

மோகன் மணிமல ஓவியங்கள் 3

முந்தைய கட்டுரைவிழா கடிதம் – ரவிச்சந்திரன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45