விஷ்ணுபுரம் விருதுவிழா, மற்றும் அரங்குகள் தொடங்கும்போது ஒவ்வொரு முறையும் அதன் முறைமைகள் நெறிகள் குறித்து எழுதவேண்டியிருக்கிறது. இம்முறையும்
முறைமையும் நெறிகளும் இல்லாத அரங்கு என ஒன்று இல்லை, அப்படியொன்று உலகில் எங்கும் நிகழ்வதுமில்லை. ஆனால் தமிழகத்தில் முதிரா இலக்கியவாதிகள் நடுவே இலக்கியம் முறைமையும் நெறிகளும் இன்றியே நிகழமுடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது நம் மதுக்கடை உளறல்களில் இருந்து உருவானது. கூடுதல்குடித்தவர் கூடுதலாக உளறுவது என்பதே அங்குள்ள நெறி.
தமிழகத்தில் அவ்வாறு முறைமையும் நெறிகளும் இல்லாமல் எங்கும் ஓர் ஆக்கபூர்வமான உரையாடல் சென்ற நாற்பதாண்டுக்காலத்தில் நிகழ்ந்து நான் கேள்விப்பட்டதில்லை. அவ்வாறு சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் கூட்டங்களில் நெறிகள் மீறப்பட்டால் சீறுவதையே கண்டிருக்கிறேன்.
நெறிகளும் முறைகளும் ஒரே நோக்கம் கொண்டவை. அங்கே வந்திருக்கும் வாசகர், கேட்பவரின் புரிதலுக்காக. அவர்களின் பொழுதை வீணடிக்காமலிருப்பதற்காக. உதாரணமாக, யுவன் சந்திரசேகரும் சுரேஷ்குமார இந்திரஜித்தும் பெருந்தேவியும் பேசுவதைக் கேட்க செலவுசெய்து வந்து அமர்ந்திருக்கிறார் வாசகர். அரங்கில் வாசிப்புப்பழக்கமோ நுண்ணுணர்வோ இல்லாத எவரோ ஒருவர் மைக்கைப் பற்றிப் பேசித்தள்ளினால், அது சுதந்திர விவாதம் என்றபேரில் அனுமதிக்கப்பட்டால், அதைப்போல கேலிக்கூத்து வேறில்லை. பெரும்பாலான தமிழ் இலக்கிய அரங்குகள் பொழுதை வீணடிப்பதாக அமைவது அவ்வாறுதான்.
விஷ்ணுபுரம் இலக்கிய அரங்கு ஒர் இலக்கியவாதிகளின் நிரையை முன்வைக்கிறது.அவர்கள் குறித்த முழுமையான அறிமுகம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு அளிக்கப்படும் ஒருமணிநேர அரங்கின் நோக்கமே அவர்களை கூடுமானவரை அணுகி அறிவது. எல்லா கோணங்களிலும் புரிந்துகொள்ள முயல்வது. பலவகையான வாசகர்கேள்விகள் அதன்பொருட்டே. வினாக்களின் நோக்கம் அதுதானே ஒழிய வினா தொடுப்பவரின் கருத்தையோ, மதிப்பீட்டையோ முன்வைப்பது அல்ல.
அதாவது இது விவாத அரங்கு அல்ல. விவாத அரங்குகள் என்பவை இணையான வாசிப்பும், இணையான இலக்கிய ஆர்வமும் கொண்டவர்கள் நடத்துவது. எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் கொண்டது. அத்தகைய விவாதங்களை வேறு அரங்குகளில் நிகழ்த்துகிறோம். இவ்வரங்குகள் அனைவருக்கும் திறந்தவை. அரங்கு எங்களால் தெரிவுசெய்யப்பட்து அல்ல.
இவ்வரங்குகளின் நோக்கம் எழுத்தாளர்களை வாசகர் சந்திக்கவைப்பது. ஆங்கிலத்தில் meet the author எனப்படும் அரங்கு இது
ஆகவே இந்த அரங்கில் வினாக்கள் எழுவதற்குச் சில முறைமைகள் நெறிகள் உண்டு
அ. வினாக்கள் மேடையில் அமரும் அந்த எழுத்தாளரின் படைப்புகளைச் சார்ந்தவையாக இருக்கவேண்டும். அவர்களை அறிவதற்கான முயற்சியாக அவ்வினாக்கள் இருக்கவேண்டும். அவரை விரிவாகப் பேசவைக்கும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும்.
ஆ. அவை கூடுமானவரை சுருக்கமாக முன்வைக்கப்படவேண்டும். பொதுவாக அரங்கில் கேட்கப்படும் ஒரு வினா ஒற்றை அலகு கொண்டதாக இருக்கவேண்டும். பலபடிகளாக விளக்கப்படும் வினாக்களுக்கு நடைமுறையில் அரங்கில் எந்தப் பயனும் இருப்பதில்லை. பெரும்பாலும் பதில்சொல்பவர் அவ்வினாவின் ஒட்டுமொத்தத்தை, மையத்தை தவறவிட்டுவிடுவார். கடைசியாக சொல்லப்பட்டதை ஒட்டியே அவருடைய பதில் அமையும். சுருக்கமான கூரிய வினாக்களே நல்ல பதிலைப் பெறுகின்றன.
இ. பொதுவாக அரங்கினர் மேடையிலிருக்கும் படைப்பாளி பேசிக்கேட்கவே விழைகின்றனர். எத்தனை முக்கியமானவர் என்றாலும் அரங்கிலிருப்பவர் நெடுநேரம் பேசுவதை அப்போது விரும்புவதில்லை. அவர்கள் மேடையை நோக்கியே அமர்ந்திருப்பதனால் கேட்பவரின் முகமும் தெரிவதில்லை. ஆகவே விரிவாக எதையாவது கேட்பது உண்மையில் நேரவிரயம்.
உ. மாற்றுக்கருத்துக்கள் வலுவாகச் சொல்லப்படலாம். மறுப்புகள் நடத்தப்படலாம். சென்றகாலங்களில் இவ்வரங்கில் கே.என்.செந்தில் போன்றவர்கள் கடுமையான மறுப்புக்களை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை இலக்கியத்தின் அழகியல்- கருத்தியல் வட்டத்திற்குள் அமைவதாக, நட்பார்ந்த மொழியில் மட்டுமே இருக்கவேண்டும். தனிப்பட்ட பூசல்களுக்கு இடமில்லை.
ஊ பொதுவாக விஷ்ணுபுரம் அரங்குகளில் அரங்குக்குள் வேறுபேச்சுக்கள், தொல்லைகள் அனுமதிக்கப்படுவதில்லை
எ. விஷ்ணுபுரம் அரங்குகள் சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடியும்
இவ்வரங்கு என்பது எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திப்பதற்குரியது. மேடைக்கு வரும் எழுத்தாளர்களை தவிர ஏராளமான எழுத்தாளர்கள் அரங்கிலும் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடனான உரையாடலை இளம் எழுத்தாளர்கள் மேற்கொள்ளவேண்டும். அங்கே எந்த நெறிகளும் இல்லை – கட்டிப்புரண்டு சண்டை நிகழ்ந்தால் மட்டுமே எங்கள் தலையீடு இருக்கும். காவல்துறை வழக்கு ஆகாமல் தடுக்கும்பொருட்டு.
இளைஞர்கள் பொதுவாகத் தயங்கிக் கொண்டிருப்பதுண்டு. அதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அத்தயக்கத்தை உடைக்காமல் இலக்கியவாதிகளை அணுகவே முடியாது. பல இலக்கியவாதிகள் இளையோர் மிக எளிதில் அணுகக்கூடியவர்கள். நானறிந்தவரை நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் போன்றவர்கள் மிகமிக நட்பார்ந்த உரையாடல்காரர்கள். இத்தகைய அரங்குகளே அவர்களுடன் அணுகுவதற்குரியவை.
அனைவரும் வருக.
ஜெ
***