காலியிடங்களின் காட்சி
கண்டும் கேட்டும் நடந்தும் நெரிந்தும்
கூட்டத்தில் அலைக்கழியாமல் என்ன திருவிழா?
நிலத்தில் ஒரு கால்விரல் மட்டுமே தொடமுடியும்
தொடவேண்டும்
அந்த நிலயில்லா நிற்பில்
அருகே வருகின்றது
வாடிய புல் சாய்ந்த
ஒரு துளி மண்.
வெறுமை, மௌனம்,மறதி
திருவிழாவைவிட எனக்கு பிடித்திருக்கிறது
அந்த காலியிடங்களின் காட்சி
ஒருவருக்கோ
ஒரு விளக்குத்தூணுக்கோ நிற்பதற்குரிய இடம்
ஒரு நினைவின் மின்னியணைதலோ
மறுசிந்தனையோ
நீள்மூச்சோ விரிவதற்குரிய இடம்
இளமைப்பருவமாகவோ
பெரிய மைதானமாகவோ மாறுவேடமிட்டு
அது உள்ளத்துடன் விளையாட வரும்
மண்வெட்டி படாத
மூதாதையரின் அடக்கநிலம்போல
விரைவிலேயே அகன்றும் போகும்
பாதைக்குழியிலுள்ள நீர்
மதப்பாடு கண்டு
மதிலின் உLளே தளைக்கப்பட்ட
கொம்பன் யானைபோல
ஒரே வடிவில்
தேங்கி நின்று மூச்செறியாது.
ஆளொழுக்கில் பட்டு
அதுவும் புதியதாகும்.
வடிவும் வழியும் மாறும்
புதியகவிதைபோல.
சுழிக்கண்ணில் நீர்ச்சில்லு போல
அதுவும் எதிர்த்து நிற்கிறது
நிலைகிட்டாமையை
வரிசையாக நின்ற யானைகளுக்கு சுற்றும்
வளரும் ஆள்காட்டில்
யானைகளுக்குப் பின்னால், கீழே
யானைக்கால்களுக்கு அடியில்
யானைகளுக்கும் மேளக்காரர்களுக்கும் நடுவே
இரண்டு நாதங்களுக்கு ஊடே
அந்தக் காலியிடங்களின் விலாசம்.
கீழே விரிந்த கரியகுடைகளுக்கும்
மேலே பொலிந்த விழாக்குடைகளுக்கும்
வாணவேடிக்கைக் குடைகளுக்கும்
நடுவே அந்த காலியிடங்களின் நடனம்
மேளம் முறுகி செல்வதன் நடுவே
ஒரு கால் தளர்த்தி மெல்ல மடக்கும்
கொம்பன்யானையின் பாதத்தில்
மௌனவாத்தியத்தின் இடதுவட்டத்தில்
அந்த காலியிடங்களின் முழக்கம்
நெற்றிப்பட்டத்தில் அது
குன்றும் சமவெளிகளும் கொண்ட
கேரளத்தின் வரைபடம்
எனக்கு அவை காட்டித்தந்திருக்கின்றன
என்னுள் நிறைந்த காலியிடங்களை
காலியான காலங்களை.
பழையசோறு
நகரங்களுக்குச் சென்று படித்து
செல்வமே அழகு என்று
தன்னுணர்வு அடைந்து
பிள்ளைகள் வளர்ந்தனர்
டில்லியில்
பெர்லினில்
ஃபிலடெல்பியாவில்
உயரத்தில்
உயரத்தில்
அவர்கள் கூடுகட்டினார்:
ஊரில்
பழைய திண்ணையில்
உறிபோல் இறுக்கமான
ஸ்வெட்டர் அணிந்து
வயதான பெற்றோர் இருந்தனர்
பழையசோறு நிறைந்த
கரிக்கலையங்கள்
யாருக்கும் பொருட்டில்லை
பிள்ளைகள் சுவை மறந்தனர்
பேரக்குழந்தைகள் பழகவில்லை.
பாமரேனியனுக்கும் டாஷ்கண்டுக்கும்
மணம் பிடிக்கவில்லை.
முற்றத்தில் காகமும்
நாயும் பூனையும்
காளையும் பசுவும் காத்திருந்தன
பழையதே புதியது
வேரில் ஊன்றி
காற்றில் அலைபாய்வதில்
போக்குவரவுகள் அறிந்து நின்ற
மாமரமும் பலாமரமும்
அவர்களில் தங்களை கண்டன
வேண்டியிருக்கலாம்
நிழல்
இனிப்பு
கொஞ்சம் விறகும்
எவருக்காவது
எப்போதாவது
விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை
கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1
கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்