அருளப்படுவன…

அவ்வப்போது விழாக்களில் சிலர் குழந்தைகளை அழைத்து வருவதுண்டு. குழந்தைகளை கையில் எடுக்கையில் அருகே அமரச்செய்கையில் ஒரு தனி உவகை உருவாகிறது. அதுவரைக்கும் இருந்த உளநிலையே மாறிவிடுகிறது. கருத்துக்களை சொல்கூட்டிக் கொண்டிருந்தேன் என்றாலும், நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தேன் என்றாலும், வேறொருவனாக மாறிவிடுகிறேன். குழந்தைகளைக் கையில் எடுக்கையில் வெறும் மனிதன்

உண்மையில் எனக்கு குழந்தைகளை கொஞ்சுவது என்பதே மறந்துவிட்டது. குழந்தைகளைக் கண்டால் ஒரு மாதிரி பேதலித்து பெரும்பாலும் வெறுமே சிரித்துக் கொண்டே இருக்கிறேன். என் அண்ணா  சின்னக் குழந்தைகளை மெய்மறந்து கொஞ்சுவார். பெரிய குழந்தைகளுடன் மிகமிகத் தீவிரமாக உலக விஷயங்களைப் பற்றி உரையாடுவார். அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். அவர்களும் அவரை தங்களுக்குச் சமானமாக ஏற்றுக்கொள்வதைக் காணமுடியும்

எண்ணிக் கொள்கிறேன்,  என் அம்மாவை கையில் குழந்தை இல்லாமல் பார்த்ததே இல்லை. வீடு முழுக்க குழந்தைகள் தவழ்ந்தும் தள்ளாடியும் நிறைந்திருக்கும். ஊரில் எல்லா பெண்களுக்கும் ஒழியாமல் வேலைகள். இரவுபகல் இல்லாமல் பாடுபட்டால்தான் வாழ்க்கை ஓடும். எங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் உண்டு. சாப்பாடு, பால், அன்றைய ஒரே தின்பண்டமான கருப்பட்டி எதற்கும் பஞ்சமில்லை. ஆகவே இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார்கள்.

அம்மா அதை தன் உரிமை என்பதுபோல நினைப்பாள். நாலைந்து நாள் ஒரு குழந்தை வரவில்லை என்றால் ஆள்விட்டு தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுவாள். குழந்தைகளுக்கும் இந்த வீடுதான் இன்னமும் பழக்கம். அகன்றது. ஒருநாளில் பதினைந்து இடங்களில் சிறுநீர் கழிக்க முடியும். அதற்குமேல் நாய்கள் கோழிகள் ,பூனைகள், பசுக்கள்.

எங்கள் நாய்க்கு எப்போதுமே டைகர் என்று பெயர். அது ஆண்களுக்கே உரிய  “சனியன் புடிச்ச புள்ளைங்க, சும்மா நைநைன்னு” என்ற பாவனையில் நாக்கை வளைத்து கொட்டாவி விட்டு அப்பால் எழுந்து செல்லும். ஆனால் ஓரக்கண்ணை அவற்றின்மேல் வைத்து வேறுபக்கம் திரும்பி படுத்திருக்கும்.  கடுமையான கண்காணிப்பு அயலார் குழந்தைகளை தொடுவது ஆபத்து, உறுதியாக தொடைச்சதை கடிபடும். அது ஊரில் அனைவருக்கும் தெரியும். ஏதாவது குழந்தை எல்லை கடந்துவிட்டால் குரைக்கும்.

அம்மா அத்தனை குழந்தைகளுக்கும் விதவிதமாக தீனி கொடுப்பாள். வேகவைத்த பயறில் கருப்பட்டி கலந்து கொட்டாங்கச்சியில் போட்டு கொடுப்பாள். பொதுவாக இட்லி, தோசை. வெறும் சோறில் பால்விட்டு கொடுப்பதும் உண்டு. எப்போதும் கருப்பட்டி. எங்கள் வீடு முழுக்க எங்கு வேண்டுமென்றாலும் பாதிசப்பிய கருப்பட்டி மிதிபடும். எல்லா அறைகளிலும் முற்றாச் சிறுநீர் மணம், பால்புளித்த பீமணம்.

ஒவ்வொரு குழந்தையும் தன்னால் முடிந்த எல்லையில் சென்றுதான் எதையாவது செய்யும். ஒருவயது ஆகியிருக்காது, சன்னல் கம்பியின் நாலாவது அடுக்குவரை தொற்றி ஏறி நின்று இரட்டைப்பல் காட்டி சிரிக்கும். அண்டாவுக்குள் நுழைந்து ஓசையுடன் உருளும். குடத்திற்குள் கைவிட்டு எடுக்க முடியாமல் அலறும். எந்த கைவேலையாக இருந்தாலும் அம்மா எல்லாவற்றையும் அறிந்திருப்பாள். ஒவ்வொன்றும் எங்கே எந்த நிலையில் இருக்கிறது என்று கணிப்பு இருக்கும்.

எந்நேரமும் கையில் ஏதாவது ஒரு பையை எடுத்துக்கொண்டுஊருக்குக் கிளம்பும்நெல்சன் என்ற ஒரு ஐட்டம் இருந்தது. அதற்கு மட்டும் தனியாக காவல் போட்டிருப்பாள். தங்கம்மா அதை தரதரவென இழுத்துக்கொண்டு வருவாள். தன்னை எவரேனும் வன்முறையாகக் கையாண்டால்லேசுவே லேசுவேஎன்று மனிதகுமாரனை வேண்டும் வழக்கம் அதற்கு இருந்தது.

நாற்பதாண்டுகளுக்குப்பின் இன்று அந்த குழந்தைகளெல்லாம் முதிர்ந்து எங்கெங்கோ எவரெவரோ ஆகியிருக்கிறார்கள். பலர் தங்கள் இல்லங்களில் என் அம்மாவின் படத்தை வைத்திருக்கிறார்கள். “பார், உன் வீட்டில் உன் அம்மா படம் இல்லை, என் வீட்டில் இருக்கிறதுஎன்று ஒருவன் காட்டியபோது நான் அம்மாவின்  கண்களைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டேன்.

அப்பா எந்தக் குழந்தையையும் தொடமாட்டார். பீயை மிதித்தால்எடீஎன்று கூவுவார். வெற்றிலை போட்டபடி குழந்தைகளை வெறுமே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்குக் குழந்தைகளை அவ்வளவாகப் பிடிக்காது என்று நினைத்திருந்தேன். அவருடைய பிரியம்தான் அம்மாவாக வெளிப்பட்டது என இன்று உணர்கிறேன். குழந்தைகளை கொஞ்சி தன் குலகௌரவத்தையும் ஆண்மை நிமிர்வையும் அரசூழியர் என்ற மதிப்பையும் அவர் இழக்க விரும்பவில்லை, அவ்வளவுதான்.

குழந்தைகளுக்கு அவரை நன்றாகத் தெரியும். வாய்க்குள் கைவிட்டு எஞ்சிய கருப்பட்டியை வெளியே எடுத்து  கொண்டுசென்று அவருக்கு நீட்டும் நாணுக்குட்டனுக்கு அவர் உள்ளுக்குள் எவர் என்ற தெளிவு உண்டு. ரோஸ்லி என்ற உருப்படி எந்நேரமும் அவருடைய நாற்காலிக்கு நேர் அடியில்தான் ஏகப்பட்ட பிள்ளைக்குட்டிகளுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும்.

பழைய நிலப்பிரபுத்துவகால வாழ்க்கை. அன்று குழந்தைகள் ஊரின் சொத்து. அப்பா நல்ல கனிந்த சாதியவாதி. சமையலறைக்குள்  ‘அவர்ணர்’ நுழைய விரும்பமாட்டார். ஆனால் புலையக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி அம்மா சமைப்பதில் எந்த வேறுபாடும் அவருக்கு உண்மையாகவே தெரியாது. அந்த உளநிலைகளைப் புரிந்துகொள்ள நவீனத்துவத்தால் முடியாது.

அன்றைய ஊர் என்பது ஒரு மாபெரும் குடும்பம். அதில் எந்நேரமும் எக்காலமும் குழந்தைகள் உண்டு. அவர்களே ஊரை ஆட்டிவைப்பவர்கள். இன்று நாம் அணுக்குடும்பங்களில் வாழ்கிறோம். நம் சொந்தக் குழந்தைகள் வளர்ந்து குழந்தைகள் அல்லாமலாகிவிட்டால் அதன்பின் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பது வரை நம் இல்லத்தில் குழந்தைகள் இல்லை. நாம் குழந்தைகளை உரிமையுடன் தொட்டுத் தூக்குவதும் மிக அரிது.

நாஞ்சில்நாடனெல்லாம் பேரக்குழந்தை பிறந்ததும் ஒருமாதிரி பங்கியடித்தது போல மாறிவிட்டார். ஏன் என்று தெரிகிறது. நானறிந்தவரை வயக்கவீட்டு பாகுலேயன்பிள்ளைக்கு மிக அணுக்கமான ஆளுமை என்றால் அது நாஞ்சில்நாடன் தான்

முந்தைய கட்டுரைஅறிவெதிர்ப்பும் ஆணவமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55