அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

 

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்

அன்புள்ள ஜெயமோகன்,

 

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்” படித்தேன். என் தரப்பாக நான் கூற விரும்புவது “இரண்டும் தான்”. ஆனால் பெருமளவில் எதிர்ப்பே.

 

ஏற்பு:

 

உலகியலுக்கான நமது கடமைகளை சரியாக செய்வதுவரை நம் படிப்பு ஏற்கப்படுகிறது  என்றே எண்ணுகிறேன்.

 

ஒரு மாணவனாக தேவையான நல்ல மதிப்பெண் – கல்லூரி முடித்ததும்  ஒரு நல்ல வேலை  – திருமணம் – குழந்தைகள் என சராசரி பெற்றோர்  அந்தந்த பருவத்தில் எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்றிவிட்டு படித்தும் வந்தவன் என்ற என் சொந்த அனுபவத்திலும் இவைகளை சரியாக செய்யாமல் படித்துக்கொண்டு மட்டுமிருந்த நண்பனது வாழ்வை அருகிருந்து கண்ட அனுபவத்திலும் இதைச் சொல்கிறேன். இதில் எது சரி எது தவறு என்று கூற இயலவில்லை. ஒத்துநோக்கினால் நாங்கள் இருவருமே ஒரே தீவிரத்தோடு தான் படித்தோம். ஆனால், நான் இன்றும் படித்துக்கொண்டிருக்கிறேன். அவனோ குடும்பம் கோரும் பொருளாதாரச் சுமையால் வேறுதிசையில் சுழல்கிறான்.

 

நல்ல அலுவல் காரணமாக வெளியே வந்தபின், “ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்தப்போறேன் பாரு ” என்று வஞ்சினம் உரைத்த என் அப்பாதான் இப்போது பணம்போட்டு ஒரு பீரோ வாங்கி என் புத்தகங்களைப் பராமரிக்கிறார்.

 

 

எதிர்ப்பு :

 

நீங்கள் கூறுவது போல படிப்பது குறித்து பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே எனக்கு கிடைத்தது , கிடைத்துக்கொண்டிருக்கிறது. இதை படிக்கும் நேரத்தில் பாடத்தை படிக்கலாம் – ஓடி விளையாடலாம் – ஆம்பிளைப்பிள்ளை  வெளிய நாலு இடத்துக்கு போய் நாலு பேரோட பழகுனாத்தான் பொழைக்க முடியும் –  மலைமேல உக்காந்துகிட்டு தனியா சிரிச்சுக்கிட்டு இருந்தா பைத்தியம்னு சொல்வாங்க – இன்னும் பல. காரணமெல்லாம் தெரியாது – கதை படிப்பது வீண் வேலை, அவ்வளவுதான். பாட புத்தகத்தைத்தவிர எல்லாமே கதை தான்.

 

இருபது ஆண்டுகளுக்குப்பின் இன்றும், “வீட்டில் டிவி இல்லேன்னா குழந்தைங்க என்ன செய்வாங்க” என்று பதட்டமாகும் நண்பர்கள் – “புத்தகம் படிப்பாங்க” என்ற பதிலுக்கு மேலும் பதட்டமாகவே  செய்கிறார்கள்.

 

இவ்வாறு அறிவுரைப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு நெருங்கியவர்களே. நம்மீதான அக்கறை என்றேதான் காரணமும் கூறுவார்கள். அதுவும் ஒருவிதத்தில் உண்மைதான். அன்பாலும் – சில வேளைகளில் – அகங்காரத்தாலுமே இவர்களை கடந்துவந்திருக்கிறேன்.

 

 

இதில் சுவாரசியமான முரண் – நாம் படிப்பது பிடிக்காவிட்டாலும் அதன் பயன்பாடு அவர்களுக்குத்  தேவையாக இருக்கிறது. நீ படி – எனக்கு வேண்டியதை மட்டும் நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்.  இதில் “வேண்டியது” என்பது மீண்டும் உலகியல் குறித்து மட்டுமே – எந்த பொறியியல் பிரிவில் பிள்ளையை சேர்க்கலாம், எந்த நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என்பது போன்றவையே.

 

 

தமிழகத்தைப் பொறுத்தவரை கலை இலக்கியம் என்பதெல்லாம் பெருமளவில் சினிமாவில் தொடங்கி அங்கேயே முடிந்தும் விடுகிறது. சினிமாவில் சிறந்த கலைஞர்களின்  பலவீனங்களே அவர்தம் கலையை மீறி கவனிக்கப்படுகிறது. விதிவிலக்காக வெளியே தெரியவரும் எழுத்தாளர்கள்,  இசைக்கலைஞர்கள்  அவர்களின் பொருளாதாரத்  தோல்வியாலும் ஒழுக்க அளவுகோல்களாலும்  ஒரு விலக்கத்தோடே பார்க்கப்படுகிறார்கள். எங்கே நம் மகனோ மகளோ இப்படி ஆகிவிடுவார்களோ என்றே படிப்பு ஒரு விலக்கப்பட்ட கனியாகவே ஒரு அச்சத்தோடு அணுகப்படுகிறது. இது கனி என்பது தெரிந்தே விலக்கி வந்த நாம் காலப்போக்கில் அதன் பயன்பாடே மறந்து ஒரு பழக்கமாகவே விலக்கத்தொடங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

 

 

ஒப்பீட்டளவில், இன்றும் கூட,  முன்னறிமுகம் இல்லாத ஒருவர் படிப்பதைப் பார்க்கும் நம்மவர்கள் பெரும்பாலும் அதுகுறித்து எதிர்மறை எண்ணமே கொண்டிருப்பதாகவே எண்ணுகிறேன்.

 

என்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்

 

 

அன்புள்ள ஜெ…

 

படிப்பை முடித்து வேலை தேட ஆரம்பித்த காலகட்டத்தில் ஒரு நாள் பழைய கடையில் மலிவாக கிடைக்கிறதே என ஒரு கத்தி வாங்கினேன். பழைய புத்தகங்கள் ,அடங்கிய பை ஒன்றுடன் சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு போலிஸ்காரர் என்னிடம் வந்தார். யாருப்பா நீ..  என்றார். நான் பதில் சொல்வதற்குள் ஸ்டேஷனில் வந்து சொல்லு என பைக்கில் அழைத்துச் சென்றார்

 

கையில கத்தியோட சுத்திக்கிட்டு இருந்தார் சார். அதான் அழைத்து வந்தேன் என இன்ஸ்பெக்டரின் ஒப்படைத்து விட்டு சென்றார்

 

எனக்கு பயமாக இருந்தது.  யாருப்பா நீ..  என்ன செய்ற என விசாரித்தார் அவர்

என்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்வது என ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது

 

நாளிதழ் இணைப்பு புத்தகம் ஒன்றில் விளையாட்டாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது என் படத்துடன் பிரசுரமாகி இருந்தது.  பையில் இருந்த அதை எடுத்துக் காட்டினேன்.இதுதான் சார் நான் என்றேன்

 

சூழல் சற்று இலகு ஆனதை உணர முடிந்தது.  எல்லா பத்திரிக்கையிலும் எழுதுவேன் சார். இந்த அனுபவத்தையும் எழுதுவேன்.  முடிஞ்சா பேட்டி தர முடியுமா என்றேன். அவர் சிரித்து விட்டார்.  சார் கிட்ட அப்படி எல்லாம் பேசக்கூடாது என சிலர் எச்சரித்தனர்.  குடியரசு தினம்ங்கறதால கவனமாகண்காணிக்கிறோம். கத்தியோட சுத்துனா விசாரிக்கணும்ல. சரி கிளம்புங்க என அனுப்பி விட்டனர்

 

என் அனுபவத்தில் வாசிப்புக்கு மரியாதைதான் கிடைத்து வருகிறது

 

உங்கள் உரையைக்கேட்க காலை பத்து மணி நிகழ்ச்சிக்கெல்லாம் வந்திருக்கிறேன்.  அலுவலகத்தில் சொல்லிவிட்டுதான் வருகிறேன். நான் வேலை செய்யும் , செய்த எந்த நிறுவனத்திலும் வாசிப்பு எனக்கு மரியாதையையே தந்துள்ளது;

 

உங்களது ஏழாம் உலகம் நாவலில் பிச்சைக்காரர்கள் உலகம் சித்திரக்கப்பட்டு இருக்கும்.அகமது என்ற கேரக்டர் ஆங்கில பேப்பர் சேகரித்து படிப்பதில் ஆர்வம் கொண்டவன். ஒரு கட்டத்தில் தன் நண்பனுக்கு உதவும்பொருட்டு அதை விற்க முடிவு செய்வான். சக நண்பர்கள் , உன் கெத்து அதுதான் . அதை விற்காதே என மன்றாடுவார்கள்

 

இலக்கிய வாசிப்பு , பொழுதுபோக்கு , தொழில் நுட்பம் என்ற வித்தியாசம் சராசரி தமிழனுக்கு தெரியாதுதான். ஆனால் வாசிப்பவனை அவன் மதிக்கவே செய்கிறான்

 

நான் வாசிப்பதை பார்த்து தன் கண்டக்டர் சீட்டை எனக்கு தந்து வசதி செய்து கொடுத்த நடத்துனர்களை பேருந்தில் பார்த்து சற்றே கூச்சத்துடன் அதை ஏற்ற அனுபவம் எனக்கு உண்டு

 

 

புத்தக விற்பனை குறைவு , எழுத்தை முழு நேர தொழிலாக கொள்ளும் சூழல் இல்லை ,  எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பவை வேறு விஷயம். ஆனால் வாசிப்பை ஒரு சாமான்யன் மதிப்பதில்லை என்பது சரியான பார்வை அல்ல

 

வாசிப்பை ஒரு முகமூடியாக , ஒரு சலுகையாக , ஒரு தப்பித்தலாக சிலர் பயன்படுத்தும்போதுதான் பிரச்சனை

 

உதாரணமாக ஒருவருக்கு தன் வேலை பிடிக்கவில்லை. அதிலிருந்து தப்பும் பொருட்டு போரும் அமைதியும் படித்தால் அலுவலகத்தில் திட்டத்தான் செயவார்கள். அவர்கள் கோபம் போரும் அமைதியும் மேலோ டாலஸ்டாய் மேலோ அல்ல. அந்த குறிப்பிட்ட நபர் மீதான கோபம் அது. ஆனால் அதை அவர் வெளியில் தன் அறிவுப்பசியை உலகம் மதிக்கவில்லை என பில்ட்அப் செய்வார்..  வேலைக்கே போக விரும்பாதவர்களும் இந்த யுக்தியை பயன்படுத்துவார்கள்

 

இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் கூட்டம்தான் அதிகம்.  பெரும்பாலானோர் குடும்பத்தினரும் அலுவலகத்தினரும் இதை வரவேற்கவே செய்கின்றனர்;

 

உண்மையான இலக்கிய வாசகர்களுக்கு அவர்கள் வாசிப்பு அவர்களது தொழில் வாழ்க்கையை கொண்டாட்டமாக்கி இருக்கிறது என்பதே நிஜம்.  வாசிப்பு தங்களுக்கு அவமரியாதையை பெற்றுத்தருகிறது என்ற கூற்றை −உங்களைப்போன்ற நல்லாசியர்களை படித்து அதன் பலனை அனுபவிப்பவன் என்ற முறையிலும் வாசிக்காவிட்டாலும் வாசிப்பவனை மதிப்பவர்கள் வாழும் மண்ணில் வாழ்பவன் என்ற முறையிலும் −கடுமையாக மறுக்கிறேன்.

 

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

முந்தைய கட்டுரைவிழா -வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைஒரு கனவு