கவிதையின் பாதைகள் -கடிதங்கள்

Waiting, 1860 by Thomas-Francis Dicksee

 

கரவுப்பாதைகள்

 

அன்புள்ள ஜெ

 

கரவுப்பாதைகள் கட்டுரை, அல்லது கவிதைத்தொகுப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அக்கவிதைகளை வாசிக்கச் செய்தது. உண்மையில் இந்த நாளையே பரவசமானதாக ஆக்கிவிட்டது.

 

என்ன வேறுபாடு என்று நினைத்துப்பார்த்தேன். நீங்களே சொல்வதுபோல இன்றைய சூழலில் கவிதைகளை எவராவது அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது இல்லாவிட்டால் நாம் கவிதைகளைக் கவனிக்கமாட்டோம்

 

அதைவிட கவிதையின் premise நமக்கு உடனடியாக பிடிகிடைப்பதில்லை. தொடர்ச்சியாக கவிதை வாசிப்பில் இருந்துகொண்டிருந்தாலும்கூட ஒரு வரியிலிருந்து அதற்கு ஒரு பின்னணிச்சூழலை கற்பனைசெய்துகொள்ள முடிவதில்லை. அதற்கு யாராவது அடியெடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய நவீன வாழ்க்கையில் பொதுவாக நம் கற்பனைகள் உடனடியாக விரிந்துவிடுவதில்லை

 

பெரும்பாலான கவிதைகளை நான் எப்படி வாசிக்கிறேன் என்று நினைத்துப்பார்த்தேன். அந்தக்கவிதை என் சொந்தவாழ்க்கையில் நானே ஏற்கனவே உணர்ந்த ஒரு விஷயத்தைப் பேசுவதுபோலிருந்தால் அதனுடன் நான் உடனே சம்பந்தப்படுத்திக்கொண்டு அந்த premise ஐ உருவாக்கிக்கொண்டு அதில் ஈடுபட்டு வாசிக்க ஆரம்பிக்கிறேன். என் அன்றாட வாழ்க்கையுடன் என் சொந்தவாழ்க்கையுடன் சம்பந்தமில்லாத அல்லது உடனடியாக ஞாபகம் வராத ஒரு விஷயத்தை கவிதை பேசியது என்றால் premise ஐ உருவாக்கிக்கொள்ளமுடியவில்லை. அக்கவிதையை நான் கூர்ந்து வாசிக்க முடிவதில்லை.

 

அதாவது அதன் வரிகளிலிருந்து கற்பனை விரிவதில்லை. அந்த வரியில் இருக்கும் அர்த்தம் மட்டுமே கைக்கு வருகிறது. அதை வாசித்துவிட்டுக் கடந்துசெல்கிறேன். ஏதாவது எளிமையான நுட்பத்தையோ அழகையோ கண்டுகொள்கிறேன். முழுமையாக உணர்வதற்கு ஒரு பொழுது தேவைப்படுகிறது.

 

இங்கே அமெரிக்காவில் மியூசியம் போகும்போது சொல்வார்கள். ஒவ்வொரு ஓவியத்திற்கும் கலைப்பொருட்களுக்கும் முன்னால் கொஞ்சநேரம் நிற்கவேண்டும். கொஞ்சநேரம் கூர்ந்து பார்க்கவேண்டும். அதாவது குறைந்தபட்சம் அரைமணிநேரப்பார்வையை கோருவதற்கு ஓர் ஓவியத்திற்கு உரிமை உண்டு. அதை அளிக்காமல் அதைப்பற்றிச் சொல்லப்படும் எல்லா கருத்துக்களும் அதை அவமதிப்பதோ புறக்கணிப்பதோதான். அதுவே கவிதைக்கும் பொருந்தும்.

 

கவிதையை ரசிக்க ஒரு ஒரு மனநிலை தேவை. கொஞ்சநேர அவகாசம் தேவை. ஸ்க்ரோல் பண்ணி வாசிப்பதென்பது கவிதைக்குச் செய்யும் பெரிய அநீதி. ஆனால் இந்த முகநூல் யுகத்தில் அதுதான் நடக்கிறது.நீங்கள் எழுதிய அந்தக்குறிப்புகள் ஒரு premise ஐ நாமே உருவாக்கிக்கொள்ளும் mode ஐ உருவாக்கித்தந்துவிடுகின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அளவில் அர்த்தம் பெறுகிறது.

 

இளங்கோ கிருஷ்ணனின் கவிதையில் அந்த கையிலிருந்து தப்பி ஓடி மறைந்துவிடும் மாத்திரையை கண்ணால் பார்க்க முடிந்தது. அது விதியின் அடையாளம். மரணத்தின் அழைப்பு. அப்படி என்னால் விரித்து விரித்துப் போகமுடிந்தது. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதையில் தனக்கு இவ்வுலகு சொந்தம் என்று உணரும் ஒரு களிப்பை என்னால் உணரமுடிந்தது.

 

என் மகன் ஒருமுறை நயாகராவைப் பார்த்ததும் “எல்லாமே நமக்காப்பா?” என்று கேட்டான். அவனுக்கு அன்று “ஆமாம்” என்று நான் சொல்லியிருக்கவேண்டும். அந்த நினைவு இக்கவிதையுடன் இணைந்துகொண்டு கவிதையை விரிவாக ஆக்கியது. ஏற்கனவே அவர் எழுதிய விஜிவரையும் கோலங்கள் என்ற கவிதையை இதேபோல எழுந்தியிருந்தீர்கள். அந்தக்கவிதையும் நீங்கள் அளித்த வாசிப்பினால்தான் என்னில் விரிவடைந்தது. நன்றி

 

எஸ்.சாந்தகுமார்.

 

அன்புள்ள ஜெ

 

 

முகநூலில் வந்த நல்ல கவிதைகளைச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். நான்குமே அருமையான கவிதைகள். ஆனால் இந்தக்கவிதைகள் முகநூலில் வெளிவந்தால் என்ன ஆகிறதென்றால் உடனடியாக அவற்றுடன் வெற்று அரட்டையும் சழக்குகளும் சேர்ந்துகொள்கின்றன.

 

அதைவிட கவிதைகளுக்கு கீழேயும் அதேபோன்ற அசட்டுத்தனமான கொஞ்சம்கூட கவனம் இல்லாத பின்னூட்டங்கள் வந்துவிடுகின்றன. அந்தக்கவிதையை வாசிக்காமல் ஆக்கிவிடுகின்றன. குறைந்தது கவிதைக்காவது கவிஞர்கள் பின்னூட்டங்களை ஆஃப் செய்துவைக்கலாம் என்று தோன்றுகிறது,

 

எஸ்.மாதவன்

முந்தைய கட்டுரைகுகை கடிதங்கள் -2
அடுத்த கட்டுரைதிருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்