‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32

பகுதி நான்கு : அன்னையெழுகை – 4

யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன் நகரில் சந்தித்த மானுடரிலிருந்து அவர்கள் உடலசைவால் வேறுபட்டார்கள். அது என்ன என்ன என்று நோக்கி நோக்கி அவன் கண்டடைந்தான். அஸ்தினபுரியின் அசைவுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டவையாக, ஒற்றைத் திரளின் அலைவுகளாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் நிகழசைவும் முந்தைய அசைவுகள் அனைத்துக்குஅம் தொடர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு அசைவுக்குப் பின்னாலும் அவர்களின் தன்னுணர்வு இருந்தது. அத்தன்னுணர்வு அவற்றுக்கு பொருள் அளித்தது.

அஸ்தினபுரியில் மக்களின் தன்னுணர்வை அந்தப் பீதர்நாட்டு ஆடிவிழிகள் கட்டமைத்தன. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி தாங்கள் கொண்டிருந்த அகவுணர்வை அவை மாற்றி அமைத்தன. மிக விரைவிலேயே ஒவ்வொருவரும் தங்களை நாளில் ஒருமுறையேனும் அந்த ஆடிகளில் பார்க்கத் தொடங்கினர். சாளரங்களின் கண்ணாடிகளுக்கு முன்னால் அவ்வண்ணம் மக்கள் தங்களை பார்த்துக்கொள்வதை யுயுத்ஸு நகருலா செல்லும்போதெல்லாம் கண்டான். அதை அவன் யுதிஷ்டிரனிடம் சொன்னான். “மக்கள் ஆடிகளின் முன் நின்று பொழுதுபோக்குகிறார்கள். ஆடிநோக்கி மெய்மறந்து உணவுநீத்து உயிர்விடும் சிறுகுருவிகளைப்போல் ஆகிவிட்டிருக்கிறார்கள்.”

“அது நன்று” என்று யுதிஷ்டிரன் நகைத்தார். “அவர்கள் உயிர்விடமாட்டார்கள். ஆடிகள் தங்கள் மாற்றுரு மட்டுமே என அறியும் தன்னுணர்வு அவர்களுக்கு உண்டு. அவர்கள் இனி துணையில்லாதவர்கள் அல்ல. அவர்கள் தங்களைத் தாங்கள் அறியாதவர்களும் அல்ல. அஸ்தினபுரியினர் அனைவருமே ஆடிகளை நோக்கட்டும்.” வெள்ளி பூசப்பட்ட பெரிய ஆடிகளை நகரின் ஆலயங்களின் சுற்றுவட்டங்களிலும் அங்காடிகளின் அருகிலும் தெருச்சந்திப்புகளிலும் நிறுவும்படி அவர் ஆணையிட்டார். அவற்றின் முன் மக்கள் கூடி தங்களை பார்த்துக்கொண்டனர். அதன்முன் பார்ப்பதற்கென்றே நல்லாடை அணிந்து அணிபூண்டு கிளம்பி வந்தனர். பின்னர் அவ்வழி செல்லும்போதெல்லாம் இயல்பாகப் பார்த்தனர். பின்னர் பார்ப்பதறியாமலேயே பார்க்கலாயினர்.

ஆண்கள் ஒவ்வொரு முறையும் அதை அணுகுகையில் தங்களைப் பார்த்து மீசையை முறுக்கி தலைப்பாகையை சரி செய்துகொண்டனர். எவரேனும் பார்க்கிறார்களா என்று சூழ நோக்கியபின் மீண்டும் நோக்கி பிரியாவிடை என அதை விட்டு அகன்றனர். பெண்டிர் பிறிதொரு பெண் வந்து அவளை உந்தி அகற்றுவது வரை ஆடி முன் கட்டுண்டிருந்தனர். தங்களைத் தாங்கள் முழுக்கவே பார்க்கவில்லை என்றே அவர்கள் அனைவரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்தனர். எவரும் இலாது சற்று பொழுது அவ்வாடிகள் ஓய்ந்திருக்குமெனில் புறாக்களும் காகங்களும் வந்து தங்களை பார்த்தன. எதிரியென எண்ணி பறந்து பறந்து கொத்தின. காதல் இணையென எண்ணி கொஞ்சி மொழிபேசி கொக்குரசிக்கொண்டன. புரவிகள் அவற்றில் தங்களைப் பார்த்து கனைத்து பிடரி சிலிர்த்தன. ஒருமுறை அரசநாகம் ஒன்று அதன்முன் படமெழுந்து நின்றாடுவதை அவன் கண்டான்.

அஸ்தினபுரியின் அனைத்து உடலசைவுகளையும் ஆடிகள் மாற்றிவிட்டதை யுயுத்ஸு கண்டான். தங்கள் நடை குறித்தும், உடை குறித்தும், உடல் அசைவுகள் குறித்தும் ஒவ்வொருவரும் தன்னுணர்வு கொண்டனர். உள்ளத்தில் அமைந்த பேராடி ஒன்றில் தங்களை ஒவ்வொரு கணமும் பார்த்தபடி புழங்கினர். தன்னிடம் பேசிய ஏவலரின் அசைவுகளில் அதை அவனே கண்டான். எப்போதும் அவர்கள் தங்களுள் தாங்களே உணர்ந்திருக்கும் ஒரு கட்டுப்பாடு உருவாவதை உணர்ந்தான். நாள்பட அது சற்று நடிப்பென ஆகிவிட்டதை அறிந்தான். தேர்ந்த உடலசைவுகள் இனியவை என முதலில் தோன்றின. ஒன்றோடொன்று இசைபவை என்று பின்னர் மாறின. மெல்ல அவை நோக்கிலிருந்தே மறைந்தன. அவ்வசைவொழுக்கின் பிழைகளும் பிசிறுகளும் மட்டுமே கண்ணுக்குப் பட்டன.

அனைத்து அசைவுகளும் மாபெரும் கூட்டு நடிப்பென்றாகி ஒரு திறந்த கூத்து மேடையென நகரம் மாறிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. மீறி எழும் அசைவுகள் இல்லை என்றாகியது. கட்டற்ற துள்ளல்கள் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே தங்களை நடித்துக் காட்டிக்கொண்டார்கள். இளஞ்சிறார்கள் ஆடிகளிலிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டார்கள். யுதிஷ்டிரன் நகைத்து “ஆடிகளென முன்பு அமைந்தவை சூதர்பாடல்கள். இனி சொல் இல்லை, காட்சிகள் மட்டுமே” என்றார். “ஆடிகளுக்குள் புகுந்து மீள்பவை அழிவதில்லை. அவை நோக்குபவரை உள்ளே உறிஞ்சி தாங்கள் வெளிவந்து இங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன.”

அவன் அகம் திடுக்கிட்டது. அந்த விந்தையான சொல்லாட்சி ஒரு கனவல்ல என அவனே நேரில் கண்டான். ஒருமுறை ஆடி ஒன்றின் வழியாக செல்லும்போது மக்கள் அனைவரும் அவ்வாடிகளினூடாக நுழைந்து மறுபக்கம் சென்று அங்கே அமர்ந்து வெளியே புழங்கும் தங்கள் பாவைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் கைகள் பதறத்தொடங்கின. ஆடி ஆழம் மிக்கது, அகலும் தோறும் சிறிதாக்கி ஒவ்வொருவரையும் இழுத்துப் புதைத்துக்கொள்வது. இந்நகரிலிருந்து ஒவ்வொருவரும் அகன்று அகன்று ஆடிக்குள் புதைந்து மிகத் தொலைவிலெங்கோ நுண்துளிகளாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆடிக்குள் வானம் அமைந்திருக்கிறது. அது ஓர் அடியிலா துளை, முடிவிலா பாதை. அவன் ஆடியை நோக்குந்தோறும் அச்சம் கொண்டான். ஆடிகளை ஒழிந்தே நடந்தான். ஆனால் அவனை பல்லாயிரம் ஆடிகள் சூழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தன.

அஸ்தினபுரியின் தெருக்களில் ஆடிப்பாவைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஆடியில் பாவை விழும்போது இருக்கும் ஓசையின்மை ஒரு துணுக்குறலை ஒவ்வொருமுறையும் உருவாக்குகிறது. ஆடிப்பாவையின் அமைதி ஆடி போலவே குளிர்ந்து உறைந்தது. ஆகவே ஆடிநோக்குகையில் அப்பாவையை நோக்கி கூச்சலிடுவதை ஒவ்வொருவரும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் செய்வது அனைத்தையும் திருப்பிச் செய்தது. அவர்களின் ஓசைகளை மட்டும் தான் வாங்கி எங்கோ வைத்துக்கொண்டது.

“ஆடிப்பாவை நாகம்போல் அத்தனை அமைதியானது, அத்தனை சொல்லற்றது” என்று சூதன் ஒருவன் சொன்னான். “ஆடிப்பாவைகளை இங்கிருந்து பீதர்கள் கொண்டு செல்கிறார்கள். அங்கு இவ்வாறு உலகெங்கிலுமிருந்து கொண்டுவரப்பட்ட ஆடிப்பாவைகளை அவர்கள் தங்களுக்கு அடிமைகளாக்கி வைத்திருக்கிறார்கள். அவை அவர்களுக்கு பேய்களென பூதங்களென பணிவிடை செய்கின்றன. அவை ஆற்றும் செயலுக்கு நம் உள்ளத்தையும் உடல்விசைகளையும் எடுத்துக்கொள்கின்றன. ஆகவேதான் நாம் கனவில் களைப்படைகிறோம். எப்போதும் செயலாற்றுபவர்களாக நம்மை உணர்கிறோம்.”

“அந்த ஆடிப்பூதங்கள் பறக்கவும் நெளியவும் உருமாறவும் அறிந்தவை. மானுடருக்கு நிகரானவை, எனில் மானுடரை விட ஆற்றல் கொண்டவை” என்றான் சூதன். “பீதர்நாட்டில் இவ்வாறு உலகம் எங்கணுமிருந்து கொண்டுசென்று சேர்க்கப்பட்ட ஆடிப்பாவைகளினாலான ஒரு பெருநகரம் இருப்பதை ஒரு பீதன் சொன்னான். நீரலைகள்போல் ஒளி நெளியும் நகர் அது. அங்கு ஒரு நெல் மணி கீழே விழுந்தால் ஓசை கேட்கும் பேரமைதி நிறைந்திருக்கும். இரவுகளில் அந்நகரம் முற்றாகவே கரைந்து இல்லாமலாகும். அங்கு இரவில் செல்பவர்கள் வெற்றிடம் ஒன்றை உணர்கிறார்கள். காற்று சுழன்றமையும் வெளி. காலையில் ஒளி எழுகையில் அங்கே பெருமாளிகைகள் உருவாகி வரும். உலகெங்கிலும் பல்வேறு நகரங்களிலிருந்து பாவைகளாக பீதர்கள் கொண்டுவந்தவை அவை.”

“அவற்றில் இருந்து மானுடர் வெளிவருவார்கள். அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள். கரியவர்கள், மஞ்சள் இனத்தவர்கள், வெண்ணிறத்தோர். அவர்கள் அங்கு ஓசையின்றி புழங்குவார்கள். ஒருவரை ஒருவர் இயல்பாக ஊடுருவுவார்கள். அவர்களின் விழிகள் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கும். அவர்கள் வேறெங்கோ ஏதோ ஆடியை நோக்கிக்கொள்வது போலிருக்கும். அங்கே எடை இல்லை. ஆகவே யானையை குழந்தை தூக்கிவிட முடியும். கீழிருந்து மிதந்தெழுந்து மாடங்கள்மேல் உலவ முடியும். அங்கு மட்டுமே விரும்பியவர்களுடன் நாம் முழுதாக கரைந்து மறைய முடியும்.”

அஸ்தினபுரி ஒவ்வொரு நாளும் விந்தைகளை கண்டுகொண்டிருந்தது. விந்தைகளை சிறிதாக்கி விந்தைகள் பெருகிக்கொண்டிருந்தன. பீதர்நாட்டிலிருந்து பளிங்குக் குமிழிகளுடன் ஒருவன் வந்தான். ஆடி சமைக்க உருக்கி பலகையாக்கிய அதே மணற்பொருளை துளியென சொட்ட வைத்து உருவாக்கப்பட்டது அது. கை நிறைக்கும் பெரிய நீர்த்துளி போலிருந்தது. கல்லென எடைகொண்டிருந்தது. முதலில் பார்த்தபோது அங்கே நீர் இருப்பதாகவே தோன்றியது. பின்னர் அதில் சாளரங்கள் வளைந்து தெரிவதை கண்டான். யுதிஷ்டிரன் அதைப் பார்த்த பின் கையில் வாங்கி “வைரமா?” என்றார்.

“இது துளியாடி” என்று பீதர்நாட்டு வணிகன் சொன்னான். “இவற்றை வெவ்வேறு வகையாக வார்க்கிறார்கள். காட்சிகளை சுருக்கி அருகணையச் செய்யும் ஆற்றல் கொண்டவை இவை. விண்மீன்களை தொடும்தொலைவுக்கு கொண்டுவர முடியும். தொடுவானத்தை வளைத்து சூழவைக்க முடியும். அவ்வாறு ஓர் ஆடிக்கோவையை இங்கே முன்பிருந்த அரசருக்கு நான் விற்றேன். அதை இயக்க ஓர் உதவியாளனையும் நானே அளித்தேன்.” யுதிஷ்டிரன் “ஆம், அவ்வாறு ஒரு தொலைநோக்கியைப் பற்றி சொன்னார்கள். அது சூதர்சொல்லின் மாயம் என்றே எண்ணினேன்” என்றார். “அது மாயம்தான்” என்றான் வணிகன்.

யுதிஷ்டிரன் அதை தன் கையில் வைத்து “ஒரு மாபெரும் விழிமணி” என்றார். “மாபெரும் மீன் ஒன்றின் கண்” என்று மீண்டும் சொன்னார். “பிறகு இந்த அவைக்கூடமும் சாளரங்களும் கூரையும் தூண்களும் இதில் சுருண்டு சுழிக்கிறது” என்றார். “ஆம், அரசே. சூழ்ந்திருக்கும் அனைத்துக் காட்சிகளையும் அள்ளி தன்னுள் சுழித்து துளியென்றாக்கும் வல்லமை இதற்குண்டு” என்றான் வணிகன். யுதிஷ்டிரன் அவன் கொண்டுவந்த எட்டு ஆடிகளையும் வாங்கினார். அஸ்தினபுரியின் ஏழு கொற்றவை ஆலயங்களிலும் இறையுருவின் முன் அதை அமைக்கும்படி சொன்னார்.

“அன்னையின் காலடியில் இந்த விழி அமையட்டும். சூழ்ந்திருக்கும் அனைத்தும் அவள் முன் படைக்கப்படட்டும்” என்றார். ஒன்றை அவர் தனக்கென வைத்துக்கொண்டார். தன் அறையில் சிற்றவையில் தன் முன் சிறு பீடத்தில் அதை வைத்தார். மாயத்தால் கட்டுண்டவர் என அதை நோக்கிக்கொண்டே இருந்தார். “இத்தனை எளிதாக இவ்வுலகை சுருக்கி துளியாக்க முடியும் என்று எண்ணியதே இல்லை” என்றார். “நோக்க நோக்க பெருகுகிறது. பிறிதொன்றில் உள்ளம் செல்லாதாக்குகிறது” என்று சொல்லிக்கொண்டார். “இது ஒரு கனவு. கனவு இவ்வண்ணம் காட்சிகளைச் சுழற்றி தன்னகத்தே கொண்ட துளி…” என்றார். சொல்லிச் சொல்லி தீராமல் “தெய்வத்தின் ஓர் எண்ணத்துளி” என்றார்.

தன் அறையில் பெரும்பாலான பொழுதுகளில் அதை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார். “இது என்னை விந்தையான கனவுகளுக்குள் தள்ளுகிறது. இங்கு பறந்து பறந்து என்னை திகைக்க வைக்கும் அனைத்தையும் சுழற்றி கையிலெடுத்துக்கொள்கிறேன். காலத்தையும் வெளியையும்கூட பட்டுநூலை சிறு கழியிலென சுருட்டிக்கொள்ள முடியுமெனத் தோன்றுகிறது” என்றார். “இது ஊழ்கத்தில் அமைந்திருக்கிறது. விந்தைதான், ஒரு பருப்பொருள் ஊழ்கத்தில் அமையக்கூடும் என்பதை நான் உணர்ந்திருக்கவே இல்லை.” அவர் எழுந்து சாளரம் வழியாக நோக்கினார். அவர் கண்களில் பித்து எழுந்துவிட்டிருந்தது.

“அங்கே எங்காவது ஒரு மலையுச்சியில் இதைக் கொண்டு பொருத்திவிடவேண்டும். அப்படியே அகன்றுவிடவேண்டும். இது மட்டும் அங்கே இருக்கவேண்டும். எவரும் அறியாமல். எவரும் எப்போதும் கண்டடையாமல். இது வானையும் மண்ணையும் தன்னுள் உருக்கி துளியாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். எவரும் அறியவேண்டியதில்லை. அவ்வண்ணம் ஒன்று அங்கிருந்தால் போதும். இவ்வுலகம் அதை மையம் கொண்டுவிடும். இவ்வுலகின் சிக்கலே இதன் நிகழ்வுகளுக்கென ஒரு மையம் இல்லை என்பதுதான். ஒரு மையம் அமைந்தால் இது இப்போதுபோல வடிவமில்லா சிதறல்களாக இருக்காது. இது ஒருங்கிணைவு கொள்ளும். நிறைவுற்ற வட்டமென்றாகும். வட்டமே முழுமையுள்ள ஒரே வடிவம். ஏனென்றால் மாறாத மையம் கொண்டது அது மட்டுமே.”

 

யுயுத்ஸு கங்கையில் படகிலேறிக்கொண்டு அறைக்குள் சென்று கண்களை மூடிக்கொண்டான். படகு சென்றுகொண்டிருக்கையில் அவன் எண்ணங்கள் மீண்டும் ஒழுகிச்செல்லத் தொடங்கின. அவன் திரௌபதியைப் பற்றி எண்ணிக்கொண்டான். அவளை அவன் முதல்முறையாகக் கண்டது காம்பில்யத்தில் நிகழ்ந்த மணத்தன்னேற்பு நிகழ்வில். துரியோதனனும் கர்ணனும் முதலில் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார்கள். அஸ்தினபுரியிலிருந்து கௌரவ இளவரசர்கள் நூற்றுவரும் செல்வதாக அதன் பின்னரே முடிவெடுக்கப்பட்டது. அவனை உடன் வரும்படி துச்சாதனன் ஆணையிட்டான். அவர்களுடன் அவனும் கிளம்பினான்.

செல்லும் வழியெங்கும் அவர்கள் திரௌபதி பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். சூதன் ஒருவன் திரௌபதியின் எழிலையும் நிமிர்வையும் கல்வியையும் ஆட்சித்திறனையும் புகழ்ந்து பாடினான். சூதர்கள் இளவரசியரைப் புகழ்ந்து பாடி அலைவதை அவன் கேட்டிருந்தான். ஆனால் அப்பாடல்களில் இருக்கும் வழக்கமான வரிகளேதும் அப்பாடலில் இல்லை. “இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன? அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன?” அந்த வரிகள் ஒரு மானுடப் பெண்ணைப் பற்றியவை என்று அவனால் எண்ண முடியவில்லை.

கௌரவர் திரௌபதியை கர்ணன் வென்று கொண்டுவருவார் என நம்பினர். அதன் வழியாக அஸ்தினபுரிக்கும் பாஞ்சாலத்திற்குமான அழியா முடிச்சு உருவாகும் என்றனர். “பிறிதொருவர் அவளை அணுகவே முடியாது. ஐயம் வேண்டியதில்லை. அவள் அங்கருக்கு உரியவள். அங்கே எதிர் எழுவதற்கு எவர்? மகதனா? சைந்தவனா? அவர் அவையிலெழுந்தால் அவர்கள் ஒளியிழந்து அகல்வார்கள். அவர்கள் வில்லெடுத்து அவர் முன் நின்றிருக்காது ஒழிந்தால்கூட வியப்பதற்கில்லை.”

அவன் அதை ஏனோ உள்ளூர ஏற்கவில்லை. எங்கோ அர்ஜுனன் உயிருடன் இருக்கிறான் என அவன் நம்பினான். அதற்கான எந்தச் சான்றும் அவனிடமிருக்கவில்லை. அவனை அவ்வாறு எண்ணச்செய்தது விதுரரின் விழிகள். பாண்டவர்கள் வாரணவதத்தில் எரிந்தழிந்திருந்தால் அவ்விழிகள் அவ்வாறு இருக்காது. அர்ஜுனன் உயிருடன் இருக்கிறான் என்றால் அவனே திரௌபதியை மணப்பான் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கும் எந்தச் சான்றும் அவனிடமிருக்கவில்லை. பின்னர் உணர்ந்து அதை கொள்கையென சொல்படுத்திக்கொண்டான். கர்ணனிடம் அனைத்துச் சிறப்புகளுடன் இணைந்து தோல்வி நோக்கிச் செல்லும் சரிவொன்று இருந்தது. அர்ஜுனனிடம் எப்போதுமே வெற்றி நோக்கிய எழுகை இருந்தது.

“ஊழை நேரில் கண்டவனின் விழிகள் பதைப்பு கொண்டுவிடுகின்றன. அதன்பின் அவன் எப்போதுமே தன்னைப்பற்றிய முழு நம்பிக்கையை அடைவதில்லை. அறியாமையே ஆயினும் ஊழை உணராதவன் தன்னம்பிக்கை கொண்டிருக்கிறான். ஆகவே வெற்றி நோக்கி செல்கிறான்” என்று அவன் ஒருமுறை சொன்னான். விகர்ணன் அதைக் கேட்டு “ஆம், நான் அவ்வாறு எண்ணியதில்லை. ஆனால் உன் சொற்களைக் கேட்கையில் அது அவ்வண்ணமே என்று எண்ணத்தோன்றுகிறது” என்றான்.

காம்பில்யத்தில் திரௌபதி மணத்தன்னேற்பு மண்டபத்திற்குள் நுழைந்தபோது அவன் பதற்றம் கொண்டிருந்தான். அவன் அதற்கு முன்னரே அர்ஜுனனை கண்டுவிட்டிருந்தான். அவனுடைய நம்பிக்கையும் விழைவுமே அந்தத் திரளில் அவனை அடையாளம் காட்டியது. ஆனால் தன் நோக்கு மெய்யா என்று அவன் குழம்பினான். அதை கௌரவர்களிடம் சொல்லலாகுமா என்று தயங்கினான். அப்போது எழுந்த வாழ்த்தொலி வெடிப்பைக் கேட்டுத் திரும்பி அங்குமிங்கும் நோக்கி திகைத்த விழி மேடையேறி நின்ற திரௌபதியை கண்டுகொண்டது. அவன் அறியாமல் கைகூப்பிவிட்டான்.

அதன்பின் ஆலயம் அமர்ந்த தேவி என்றே அவன் அவளை எப்போதும் உணர்ந்தான். தனியாக அவளிடம் அவன் பேச வாய்க்கவில்லை. கௌரவர் திரளுடன் நின்றிருக்கையில் அவளைக் கண்டதுமே அவன் கைகள் நெஞ்சோடு சேர்ந்தன. அவன் அவள் அடிகளை மட்டும் நோக்கி அகம்பணிந்து நின்றிருந்தான். அவள் அவைச்சிறுமை செய்யப்பட்டபோது அவன் அவையின் மூலையில் சுஜாதனின் அருகே தூணுக்குப் பின்னால் பாதி உடல் மறைத்து நின்றிருந்தான். துச்சாதனனால் அவள் இழுத்துவரப்பட்டபோது எழுந்த அவையோசையை மட்டுமே கேட்டான். விழிகளை மூடிக்கொண்டு அன்னையே அன்னையே என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவை முடிவுவரை அவன் அவ்வாறு அகத்தே அரற்றிக்கொண்டு நின்றான்.

அன்று பின்னிரவில்தான் அவன் தன் மாளிகைக்குத் திரும்பினான். அவன் அன்னை அவைக்கு வந்திருக்கவில்லை. அந்த அவையில் அரசகுடிப்பெண்டிருக்கு மட்டுமே இடம். ஆனால் அன்னை அனைத்தையும் அறிந்துவிட்டிருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் அவள் சீற்றத்துடன் எழுந்து வந்து “நிகழ்ந்தது என்ன? அவையில் என்ன நிகழ்ந்தது?” என்று கூவினாள். அவன் அவள் சீற்றத்திலிருந்தே அன்னைக்கு எல்லாம் தெரியும் என்று உணர்ந்து ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நீயும் பழிகாரனே. அந்த அவையில் நின்ற ஆண்கள் அனைவரும் பழிகொண்டவர்களே. ஒவ்வொருவரும் அதன்பொருட்டு குருதி சிந்துவார்கள். குலம் அழிவார்கள்… இதை தெய்வங்கள் பொறுக்கப்போவதில்லை. விண்ணெரி விழுந்து இந்நகர் அழியும். அதன்பொருட்டே இவ்வண்ணம் இயற்றின தெய்வங்கள்!” என்றாள்.

“நான் விழிதூக்கவில்லை. தெய்வங்களை இறைஞ்சும் சொல்லன்றி ஒன்றும் எண்ணவில்லை” என்று அவன் சொன்னான். “நீ நூல்கற்றவன் அல்லவா? அவையெழுந்து ஒரு சொல் உரைக்க உன்னால் இயலவில்லை என்றால் நீ கற்ற சொற்களுக்கு என்ன பொருள்?” என்று அன்னை கேட்டாள். “குலமூத்தாரும் நூல்தெளிந்தவரும் அங்கிருந்தனர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் தங்கள் சொற்களால் தங்களை கட்டிக்கொண்டவர்கள். நீ யார்? குலமிலி. குடியிலி. நீ எதை அஞ்சவேண்டும்? உயிருக்காகவா? அதை இழந்தால்தான் என்ன?” என்று அன்னை கேட்டாள்.

யுயுத்ஸு “நான் அறியேன். என்னால் விழிநீர் சிந்துவதன்றி ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நான் கோழை. கோழையின் அறிவும் நல்லியல்பும் பொருளற்றவை என்கின்றன நூல்கள்” என்றான். கால்தளர்ந்து சென்று அமர்ந்தான். அன்னை அவனருகே வந்து நின்று “சொல், நீ ஏன் சொல்லெடுக்கவில்லை? சொல், ஏன் அந்த அவையில் சங்கறுத்துச் செத்துவிழவில்லை?” என்றாள். “அறியேன், அவை முடிந்தபின் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஆயிரம் முறை உள்ளத்துள் இயற்றினேன். அந்த அவையில் செத்த உடலென நின்றுகொண்டிருந்தேன். ஏன் என்று அறியேன்” என்றான்.

“நீ விழைவு கொண்டவன். இந்த நூற்றுவரை ஒட்டிப்பிழைக்கும் நசைகொண்டவன்” என்று அன்னை கூவினாள். அவன் சீற்றத்துடன் நிமிர்ந்து “இல்லை, நான் கோழை. ஏன் கோழை என்றால் நான் குலமில்லாதவன் என்பதனால். அந்த அவையில் சூதனுக்குரிய ஆடையணிந்து இசைக்கலத்துடன் நின்றிருந்தேன் என்றால்கூட துணிந்திருப்பேன். இதோ இந்தப் பொய்யாடை அணிந்திருந்தேன். பொருந்தாத் தோற்றம் கொண்டவன் அவைபுக நாணுவான். அதனால்தான் தயங்கினேன்” என்றான். அன்னை நீர் நிறைந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு நின்றாள்.

அவன் விசும்பியபடி தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். “இதன் பொருட்டு நான் பழிகொள்கிறேன். கீழ்மைகொள்கிறேன். என்னால் மூத்தவரை விட்டு அகல முடியாது. அவருடைய கைகளின் வெம்மையில் வளர்ந்தவன் நான்” என்றான். அன்னை அவனையே நோக்கிக்கொண்டு நின்றாள். பின்னர் மெல்லிய காலடிகளுடன் அகன்று சென்றாள். அவன் அங்கேயே சுருண்டு படுத்துக்கொண்டான். இரண்டு நாட்கள் அந்த மஞ்சத்திலேயே கிடந்தான். நீர் மட்டும் அருந்தியபடி எண்ணங்கள் மயங்கி மயங்கி ஓட. விழிநீர் வழிந்து உலர்ந்து மீண்டும் முகம் நனைய. துரியோதனனுடைய அழைப்புடன் அரண்மனையிலிருந்து சுஜாதன் வந்தபோதுதான் அவன் மீண்டு அரண்மனைக்கு கிளம்பினான்.

அவன் திரௌபதியை அணுக்கமாக சந்தித்தது போர்ச்செய்திகளை சொல்லும்பொருட்டு செல்லும்போது மட்டும்தான். அவன் சென்று கூடத்தில் காத்திருக்கையில் குந்தி முதலில் வருவாள். ஓசையில்லாத நிழலசைவுபோல. சிற்றடிகள் வைத்து வந்து அமர்ந்துகொள்வாள். அவன் எழுந்து கைகூப்பி நிற்பான். சற்றுநேரத்தில் திரௌபதி கூடத்திற்குள் வருவாள். அவ்வறைக்குள் வேறொன்று குடியேறிவிடும். முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. ஆற்றல் மிக்கது. மானுடரை மீறியது. அவன் அவள் உருவை நிமிர்ந்து நோக்குவதே இல்லை. அவள் கால்களையே நோக்குவான். நிழலாகவே அவள் அசைவுகளை உணர்வான். அவள் கைகாட்டியதும் அமர்ந்து நிகழ்வுகளை சொல்வான். விடைபெறும்போது மட்டும் எழுந்து அவளை நோக்கி வணங்கி மீள்வான். குந்தி உணர்வுகளால் நடுங்கிக்கொண்டிருப்பாள். திரௌபதியின் விழிகளில் அவன் அதுவரை சொன்னவற்றின் எந்த உணர்ச்சிகளும் இருக்காது. அனைத்துக்கும் அப்பால் என அவள் அமர்ந்திருப்பாள்.

மைந்தரை இழந்தபின் அவளை முக்தவனத்தில் அவன் ஓரிருமுறை அகலே நின்று நோக்கினான். அவள் சித்தமழிந்துவிட்டவள் போலிருந்தாள். மரங்களிடமும் செடிகளுடனும் ஏதோ உரையாடிக்கொள்பவள்போல. அகலே நின்று நோக்கியபோது அந்தப் பச்சையொளியில் அவள் துயரற்றவள் என்றே தோன்றினாள். இப்புவியிலுள்ள எதுவும் சென்று தொட முடியாதவள்போல. அவன் அவள் அடிகளை அருகிலென பார்த்துக்கொண்டிருந்தான். படகின் ஊசலாட்டத்தில் சித்தம் மயங்கி இருப்புக்கும் இன்மைக்கும் நடுவே எங்கோ அலைபாய்ந்துகொண்டிருந்தது. அவள் அவன் அருகே அங்கே இருப்பதாக உணர்ந்தான்.

முந்தைய கட்டுரைகாலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – தகவல்கள், கூறுமுறை