பயிற்றுமொழி பற்றி காந்தி

 

காந்தியின் உணவு பரிந்துரை

 

ஆசிரியருக்கு ,

காந்தியின் இந்த ஆங்கில கல்வி குறித்த கட்டுரை மாற்று இணைப்பு மொழி என்கிற அம்மச்சத்தை தவிர கிட்டத்தட்ட அனைத்து முனைகளையும் பரிசீலிக்கிறது, அசல் சிந்தனை குறித்து உறுதிபட பேசுகிறது, இரண்டாவது மொழி கற்றலின் சுமை பற்றியும் பேசுகிறது. உங்களது கல்வி சிந்தனைக்கு மிகவும் நெருக்கமானது. அதன் மொழியாக்கத்தை கிழே தருகிறேன்.

போதனா மொழி – காந்தி ( http://www.gandhi-manibhavan.org/gandhiphilosophy/philosophy_education_aspergandhi.htm)

நமது இந்தியத்தன்மை அகற்றப்பட்ட இந்த தவறான கல்வி லட்சகணக்ககாகாணோருக்கு கேடு விளைவித்துள்ளது அது தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது அதன் சான்றுகளை தினந்தோறும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆங்கிலம் தெரியாமல் நாம் சுபாஷை போல விளங்க முடியாது என எண்ணத் துவங்கிவிட்டது போல தெரிகிறது. இதை விட முழு முற்றான மூட நம்பிக்கை இருக்க இயலாது. எந்த ஜப்பானியரும் நம்மை போல கைவிடப்பட்டவராக உணர்வதில்லை …..

போதனா மொழியை எந்த விலை கொடுத்தேனும் உடனடியாக அப்பகுதியில் வழங்கப்படும் பிராந்திய மொழிக்கு மாற்ற வேண்டும். நாள்பட சேர்மானமாகி வரும் இந்த கேடுகெட்ட குப்பைகளை விட இதனால் உயர் கல்வியில் ஏற்பட போகும் ஒரு தற்காலிக குழப்பம் மேல். ஒரு அயல் போதனா மொழி பெரிய அளவில் மூளை உளைச்சலை தருகிறது, நமது மாணவர்கள் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு அவர்கள் பெரிய அளவில் வேறெந்த செயலையும் ஏற்கும் திறனற்றவர்களாகவும், பலகீனமான உடலும், செயலார்வமற்ற மனமும் கொண்ட பயனற்ற திரளாகவும் மேற்கை நகல் செய்பவர்களாகவும் உருவாகிறார்கள். அவர்களுக்கு அசல் ஆய்விலோ ஆழமான சிந்தனையிலோ ஆர்வமில்லை, துணிவு தற்காப்பு போன்ற பண்புகள் இல்லை. அஞ்சாமையும் வீரமுமற்று இருக்கிறார்கள். இதனால் தான் நம்மால் நமக்கு தேவையான புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இயல்வதில்லை. உண்மையில் நாம் தான் அவர்களை தோல்வியடைய செய்கிறோம். நம்பிக்கையளிக்கும் சிலர் கூட இளமையிலேயே காலமாகிறார்கள்….

ஆங்கில கல்வி பெற்ற நம்மால் கூட இதனால் விளைந்த பெரும் இழப்புகளை அறிய மாட்டோம். நமது வெகுமக்கள் மீது நம்மால் எவ்வளவு குறைவாக தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்பதை கணித்தறிவதன் மூலம் இதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். பள்ளி வீட்டின் நீட்சியாக இருக்க வேண்டும், நாம் சிறந்த இலக்குகளை எய்த வேண்டும் என்றால் ஒரு குழந்தை வீட்டில் அடையும் மனப் பதிவிற்கும் பள்ளியில் அடைவதற்கும் இடையே ஒத்திசைவு இருக்க வேண்டும். ஒரு அறியா மொழியினால் போதிக்கபடும் கல்வி நம்முடைய இன்றியமையாத பரஸ்பர உள் தொடர்பை முறிக்கிறது. இந்த தொடர்பை முறிப்பவர்கள் நல்ல நோக்கில் அதை செய்தாலும் அவர்கள் மக்கள் விரோதிகள் தான்.

விருப்பபட்டு இந்த கல்வியமைப்பில் சேர்ந்து நட்டமடைவது நமது தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து தவறுவதற்கு ஒப்பாகும். இந்த அந்நியவகை கல்வியின் கெடுதி இத்துடன் நிற்பதில்லை; அது மேலும் செல்கிறது. இது கற்றோருக்கும் மற்றோருக்கும் இடையே ஓர் அகழியை உருவாக்கி விட்டது. நம்மை மக்கள் அந்நியமாக உணர்கிறார்கள். என் நோக்கில் இந்த முறையில் வழங்கப்படும் ஆங்கில கல்வி இதை கற்றோரை கையாலாகாதவர்களாக்கி விட்டது, இந்திய மாணவர்களின் நரம்புகளை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நம்மை அவர்களின் நகல்களாக்கி விட்டது.

இந்த தாய் மொழி அகற்றும் நடவடிக்கை பிரிட்டிஷ் தொடர்பின் துக்ககர அத்தியாயமாகும். ஆங்கிலத்தில் சிந்தித்து ஆங்கிலத்தில் கருத்துகளை வெளியிட வேண்டிய தடை இல்லையென்றால் ராம் மோகன் ராய் இன்னமும் சிறந்த சீர்திருத்தவாதியாகவும், லோகமான்ய திலகர் இன்னமும் சிறந்த கல்விமானாகவும் விளங்கியிருப்பர்கள். அவர்களின் மக்கள் மீது அவர்கள் அற்புதமான செல்வாக்கை செலுத்தியுள்ளனர், ஆனால் இன்னமும் இயல்பான கல்வியமைப்பால் மேலும் அதிக செல்வாக்கை செலுத்தியிருக்கலாம். ஆங்கில இலக்கிய அறிவுப் பொக்கிஷத்தில் இருந்து இருவரும் நிறைய பெற்று கொண்டனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது அவர்களின் மொழிகள் வாயிலாக பெறப்படிருக்க வேண்டும். எந்த நாடும் நகலெடுக்கும் இனத்தை உருவாக்கிக்கொண்டு ஒரு தேசமாக உருவாக முடியாது.

வருவாய் நோக்கிலும் அரசியல் மதிப்பிற்காகவும் இன்று ஆங்கிலம் கற்கிறார்கள். தற்போதைய சூழலில் ஆங்கிலமின்றி அரசு பணி கிட்டாது என நமது இளைஞர்கள் சரியாகவே எண்ணுகிறார்கள். இளம்பெண்கள் திருமணத்திற்கான கடவுச்சீட்டாக ஆங்கிலத்தை கற்கிறார்கள். பெண்கள் ஆங்கிலத்தை அறிய முயல்வதையும் அதனால் ஆங்கிலத்தில் பேச முடிவதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளேன்.

நான் தமது தாய் மொழியாக ஆங்கிலத்தை பாவித்துகொண்ட குடும்பங்களை அறிவேன். ஆங்கில அறிவில்லாமல் இந்திய விடுதலை நடைமுறையில் சாத்தியமில்லை என நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நம்புகிறார்கள். பல இடங்களில் அறிவு என்பது ஆங்கில அறிவு தான் என கருதும் அளவுக்கு நமது சமூகம் செல்லரித்துத் விட்டது. இதெல்லாம் கீழ்மையின் அடிமைத்தனத்தின் அடையாளங்களாகும். நமது தாய்மொழிகள் இவ்வகையில் நசுக்கப்பட்டு அழிக்கப்படுவதை என்னால் பொறுக்க இயல்வதில்லை. பெற்றோர் குழந்தைகளுக்கும் கணவர்கள் மனைவிகளுக்கும் தமது மொழியில் அல்லாது ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் போக்கை என்னால் சகிக்க முடிவதில்லை.

இந்த அயல் மொழி மூளை அயற்சியை உருவாக்கிவிட்டது, நமது குழந்தைகளின் நரம்பு மண்டலம் மீது மட்டுமீறிய அழுத்தத்தை ஏற்றிவிட்டது, அவர்களை நகல் செய்பவர்களாகவும் மனப்பாட யந்திரங்களாகவும் ஆக்கிவிட்டது, அசல் சிந்தனையுடன் அசல் படைப்புகளை படைக்கும் தகுதியற்றவர்கள்களாகவும், தமது குடும்பத்திற்கோ சமூகத்திற்கோ கல்வியை கடத்தும் திறனற்றவர்களாகாவும் ஆக்கிவிட்டது.

இந்த அயல் மொழி நமது குழந்தைகளை உண்மையில் சொந்த நாட்டில் அயலார் ஆக்கிவிட்டது. இது தற்போதைய முறையின் மிக பெரிய பேரழிவு. இந்த அயல் மொழி நமது பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை தடுத்து விட்டது. எனக்கு மட்டும் சர்வாதிகாரிக்கான அதிகாரம் இருந்தால், இன்றே நமது மாணவ மாணவிகளின் அயல் மொழி தனி வகுப்புகளை (tuition) தடுத்து அதனால் வேலையிழக்கும் ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் வரப்போகும் மாற்றத்தை முன்னிட்டு இந்த பாதிப்பை ஏற்க பணிப்பேன்.

பாட புத்தகங்கள் உருவாவதற்கு காத்திருக்க மாட்டேன். அவைகள் பின்னர் வரட்டும். இது உடனடியாக களைய வேண்டிய கேடாகும். இந்த அந்நிய ஆட்சி கொண்டுவந்த பல தீமைகளில் நமது இணைஞர்கள் மீது அந்நிய மொழியை பிரயோகித்த இந்த பெருங் கேட்டையே வரலாறு மிகப்பெரிய தீமையாக கணக்கிடும். இது நமது தேசத்தை பலவீனப்படுத்தி விட்டது, பொதுமக்களிடம் இருந்து கல்வியை விலக்கிவிட்டது, இது கல்வியை தேவையின்றி செலவேறியதாக ஆக்கிவிட்டது. இதை நீடிக்க அனுமதித்தால் இந்த தேசந்தின் ஆன்மாவை பறித்துவிடும். கல்வியறிவு பெற்ற இந்தியா இந்த மயக்கத்தில் இருந்து எவ்வளவு விரைவில் மீள்கிறதோ அதற்கும் அதன் மக்களுக்கும் அவ்வளவு நன்று.

கிருஷ்ணன், ஈரோடு

This article is taken from the book “The Selected Works Of Gandhi”
Vol. 6 The Voice of Truth

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 31