‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 29

பகுதி நான்கு : அன்னையெழுகை – 1

யுயுத்ஸு அரண்மனையின் உப்பரிகைகள் வழியாக சுரேசரின் அறை நோக்கி சென்றான். செல்லும் வழியில் அவ்வப்போது நின்று கீழே பெருகி அலைகொண்டிருந்த திரளை நோக்கினான். இரவும் பகலுமென அவர்கள் முழங்கிக்கொண்டிருந்தார்கள். அஸ்தினபுரி ஆட்சிசெய்ய முடியாத பெருந்திரளாக மாறிவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதன்மேல் பெருமுரசுகள் ஆணைகளை முழங்கியபடியே இருந்தன. அது எந்த ஆணையையும் செவிகொள்ளவில்லை.

“காட்டுயானைக்கு ஆணையிடுவதுபோல் உணர்கிறேன்” என்று சுரேசர் ஒரு மாதம் முன்பு அதை நோக்கி நின்றிருக்கையில் சொன்னார். “அதன் செவியாட்டலும் தலைகுலுக்கலும் அடிவைப்பதும் நம் ஆணையின்படியே என எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். மெய்யாகவே அந்த உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று தெரிவதில்லை. அது நம்மை கொல்லாத வரை நமக்குப் பணிந்திருக்கிறது என்று நம்புவதைத் தவிர வேறுவழியில்லை.” யுயுத்ஸு “தண்டிக்கப்படாதவரை ஆட்சி நடைபெறவில்லை என்றே பொருள். இந்நகரில் நாம் எவரையும் தண்டிக்க முடியவில்லை. இந்நகரில் நம் ஆணையைச் செயலாக்க எவருமில்லை” என்றான்.

சுரேசர் “அதைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெருந்திரளிலிருந்து ஒரு சிறுதிரளை… அதை உருவாக்க சிறந்த வழி அதற்குள் இன்னொரு சிறுதிரளை உருவாக்கிக் கொள்வதே” என்றார். “அடையாளங்களே திரளை உருவாக்குகின்றன. தனித்த அடையாளம் கொண்ட ஒரு சிறுதிரள் நமக்குத் தேவை. அதை நாம் அவர்களுக்கு உருவாக்கி அளிக்கவேண்டும். அது அவர்களுக்குள் வளரவேண்டும். அந்த தனித்த அடையாளத்தை அவர்கள் விரும்பிச் சூடிக்கொள்ளவேண்டும் என்றால் அவர்களுக்கு கோன்மை அளிக்கப்படவேண்டும்.”

“கோன்மை என்பது பிறரிடமிருந்து வேறுபடுதலால் அறியப்படுகிறது. எந்த நெறிகள் பிறரை ஆள்கின்றனவோ அவற்றைக் கடந்துசெல்லும் உரிமைகொண்ட சிலரை உருவாக்கவேண்டும். அவர்கள் நம் பொருட்டு இத்திரளை ஆட்சிசெய்வார்கள்.” சுரேசரின் நூலறிவல்ல அது என அவனுக்குத் தோன்றியது. ஆட்சிநூல்களின் சொற்கள் அவற்றை கற்பவர்களுக்குரியவை அல்ல, அவற்றை வைத்து விளையாடுபவர்களுக்குரியவை. சுரேசர் அந்த நெருக்கடிகளில் மேலும் மகிழ்ச்சிகொண்டவராக மேலும் மேலும் ஆற்றல்பெருகுபவராகத் தோற்றமளித்தார். “எந்த நாட்டிலும் பொதுமக்களிடமிருந்து மேலெழுந்து நின்றிருக்கும் தனிக் குழு ஒன்றால் மட்டுமே ஆட்சி நடத்த முடியும்” என்று சுரேசர் சொன்னார்.

“நேற்று வரை அது இந்நகர்களில் பிறப்பால் முடிவுசெய்யப்பட்டது. அதை குலமென்றும் குடியென்றும் கூறினோம். தொன்மையால் அவர்கள் சிறப்புகொண்டனர். நூல்களால் நிலைநிறுத்தப்பட்டனர். முறைமைகளாலும் மரபுகளாலும் ஒவ்வொருநாளும் அவ்வாறு வெளிக்காட்டப்பட்டனர். இன்று அவையனைத்தும் அழிந்துவிட்டிருக்கின்றன. இங்கே தொல்குடி என ஏதும் இல்லை. அனைவருமே வந்தவர்கள். அவர்கள் தங்கள் ஊரில் எவர் என நாம் அறியோம். அவர்களின் தகுதி மட்டுமே இங்கே அடையாளம் காணப்படுகிறது. புதிய வேதம் இயல்பாலும் செயலாலும் மட்டுமே பிரிவினை செய்யப்படவேண்டும் என்கிறது.”

“ஆனால் தகுதி என்பதைக்கொண்டு நிலையான அரசுகளை அமைப்பது எளிதல்ல. ஏனென்றால் தகுதி ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொருவரும் தகுதி நோக்கி எழமுடியும். அனைத்துக்கும் அப்பால் தான் தகுதியற்றவன் என எவரும் ஆழத்தில் நம்புவதில்லை. ஆகவே தகுதியுடையோரை அவர்கள் ஏற்கமாட்டார்கள். தன் தகுதியால் மேலெழுந்தவர்கள் மீது மட்டுமே பொறாமைகள் உருவாகின்றன என்பதை நோக்குக! குலத்தால் குடியால் மேலே நிறுவப்பட்டவர்களை இயல்பாக முழுதேற்பவர்கள் தங்களில் ஒருவரை தலைவர் என, மேல் என கொள்ள முடிவதில்லை.”

“அஸ்தினபுரி இன்று காணும் பெரும் அறைகூவலே இதுதான். நாம் இங்கே திறனாளர்களைக்கொண்டு ஒரு குழுவை அமைக்க வேண்டியிருக்கிறது. அது தகுதியாலானது என அஸ்தினபுரியின் பெருந்திரளை நம்பவைக்க வேண்டியிருக்கிறது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் தகுதியால் மேலெழமுடியும் என நம்பவேண்டும். ஆனால் மேலெழுந்தவர்கள் தங்களைவிட உண்மையிலேயே மேலானவர்கள் என்று நம்பி தலைக்கொள்ளவும் வேண்டும். அதற்குத் தேவையானது தகுதியை முடிவெடுக்கும் வெளிப்படையான அமைப்பு. அதில் ஒவ்வொருநாளும் தகுதிநோக்கு நடந்துகொண்டே இருக்கவேண்டும். அது ஓயாது இயங்கும் ஒரு கைவிடுபொறி என நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டும். அதற்குரிய களங்களை உருவாக்குவதே இன்று நாம் செய்யவேண்டியது.”

“படைக்கலப்பயிற்சிக்குரிய போட்டிக் களங்களை உருவாக்குவது எளிது. அதைவிடக் கடினமானது சொல்திறனுக்குரிய களங்களை உருவாக்குவது. ஆட்சித்திறனுக்குரிய களங்களை உருவாக்குதல் அரிதினும் அரிது. ஆட்சித்திறன் என்பது தருணங்கள் அமைகையில் மட்டுமே வெளிப்படுவது. அது அறிவுத்திறன் அல்ல, சொற்திறனோ ஆளுமைப்பண்போ கூட அல்ல. அது ஆழத்திலிருந்து எழும் ஒரு தனித்தன்மை. கலங்களுக்கேற்ப உருமாறவும் எவ்வுருவிலும் இயல்புமாறாமலிருக்கவுமான திறன் அது. திறன்மிகுந்து ஆணவத்தை சேர்த்துக்கொண்டு எழுகையிலும் முற்றாக அடிபணிதலையும் கொள்ளவேண்டிய முரண்செயல். அதை வாய்ப்புகளினூடாகவே கண்டடைய முடியும். அதற்கான தெரிவுக்களம் இந்நகரமேதான். இங்கே ஒவ்வொரு களத்திலும் அது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.”

அவன் ஒவ்வொருநாளும் திரளில் இருந்து படைப்பயிற்சி கொண்டவர்களும் மொழியறிந்தவர்களுமான வீரர்களை தெரிவுசெய்தான். சொல்தேர்ந்த அந்தணர்களை சுரேசர் தேர்வுசெய்தார். “அந்தணர்களை தெரிவுசெய்வது எளிது. அந்தண்மை என்பது பாரதவர்ஷம் முழுக்க ஒன்றே. அந்தண்மை என்பது நங்கூரம். இப்படகின் பாய் என கணந்தோறும் நிகழவேண்டியவர்கள். ஆகவே மறம் என்பது இடத்துக்கு இடம் மாறுபடுவது. மறத்தோர் மண்ணுடன் கட்டுப்பட்டவர்கள். குலநெறிகளை தலைக்கொள்பவர்கள். தங்கள் நிலத்தையும் குலத்தையும் நம் பொருட்டு கடக்கக்கூடியவர்களே நாம் தேடுபவர்கள்” என்றார் சுரேசர். “படைவீரர்களும் ஆட்சியாளர்களுமே.”

“ஆனால் நிலத்தையும் குலத்தையும் கடப்பவர்கள் நெறிகளையும் கடந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் குற்றம்செய்பவர்கள், மீறுபவர்கள். அவர்களைக் கொண்டு அரசை அமைக்க முடியாது. நிலப்பற்றையும் குலப்பிடிப்பையும் கடப்பவர் அதைவிட மேலான ஒன்றைத் தேடி இங்கு வந்தவராக இருக்கவேண்டும். இளைய யாதவரை எண்ணி, அப்புதிய வேதத்தை நம்பி வந்த வீரர்களை மட்டுமே தெரிவுசெய்க!” என்றார் சுரேசர். “ஆம், அவ்வண்ணமே தெரிவுசெய்கிறேன். ஆனால் அந்தணர் அவ்வேதத்தை ஏற்றுக்கொண்டவர்களா என்ன?” என்று அவன் கேட்டான். “அவர்களுக்கு அவர்களின் வேதத்தின் கூர்முனையே புதிய வேதம் என்ற நம்பிக்கை இருந்தால் போதும்” என்று சுரேசர் சொன்னார்.

அவர்கள் அப்பணியை தொடங்கியபோது அவன் ஆழ்ந்த நம்பிக்கை எதையும் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருநாளும் புலரிமுதல் பின்னிரவு வரை பணி இருந்துகொண்டிருந்தது. அவர்கள் எண்ணியதைவிட எளிதாக இருந்தது அப்பணி. முதலில் ஓர் அணியை உருவாக்குவதே கடினமாக இருந்தது. பின்னர் அந்த அணி அடுத்த அணிகளை உருவாக்கியது. நகர் தன்னைத்தானே கட்டி எழுப்பிக்கொண்டது. அதற்குரிய நெறிகளை முதலில் சுரேசர் வகுத்தார். ஆனால் அந்நெறிகளை அந்நகரின் இயக்கம் கடந்துசென்றது. தனது நெறிகளை தானே வகுத்துக்கொண்டது.

நகரமெங்கும் பலநூறு இடங்களில் படைக்கலப்பயிற்சிகள் நிகழ்ந்தன. ஒவ்வொருநாளும் காலைமுதல் இரவுவரை அங்கே அறைகூவலுடன் வீரர்கள் நின்றனர். அவர்களை வெல்பவர்கள் அப்படைக்களத்தில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் மறுநாள் அறைகூவலுடன் நின்றனர். ஆகவே ஒவ்வொருநாளும் அறைகூவல் வலுத்தபடியே சென்றது. உள்ளே நுழைந்தவர்கள் தங்கள் தனித்தன்மையை காத்துக்கொள்ள புதிதாக உள்நுழைபவர்களை விலக்க முற்பட அதுவே அக்களத்தின் இயக்கநெறியாக மாறியது. மிகச் சில நாட்களிலேயே முற்றிலும் தகுதிகொண்ட படைவீரர்களின் அணி ஒன்று அஸ்தினபுரியில் உருவானது.

அது முன்பு அந்நகரில் இருந்த படைத்திரளைவிட பலமடங்கு ஆற்றல்கொண்டது என்று யுயுத்ஸு எண்ணினான். “இன்று பாரதவர்ஷத்தில் எங்கும் இத்தகைய படைத்திரள் ஒன்று இல்லை. இது பாரதவர்ஷத்தின் படைவீரர்கள் தங்களைத் தாங்களே கூர்ப்படுத்திக்கொண்டு உருவான முனை” என்றான். “ஆம், அந்தப் பெயர் உருவாகும்தோறும் மேலும் திறன்கொண்டோர் இங்கு வருவார்கள். இதுவே பாரதவர்ஷத்தின் முதன்மையான படை என்பதை நிறுவவேண்டிய பொறுப்பு பாரதவர்ஷத்திற்குரியதாக ஆகிவிடும்” என்று சுரேசர் நகைத்தார்.

கோட்டைக்காவலுக்கும் அரண்மனைக்காவலுக்கும் நகர்க்காவலுக்கும் நகர்ப்புறக்காவலுக்கும் ஆலயக்காவலுக்கும் அங்காடிக்காவலுக்கும் சாலைக்காவலுக்கும் இடருதவிக்கும் எல்லைக்காவலுக்கும் என்று ஒன்பது படைகள் அமைந்தன. ஒவ்வொன்றுக்கும் உரிய நெறிகளும் மேலிருந்து கீழ்நோக்கி பரவும் கோன்மையடுக்கும் உருவாகி வந்தது. அந்நெறிகளை வகுக்கையில் ஒவ்வொருவரும் ஒரு புதிய வழியை சுட்டிக்காட்டினார்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சிறந்த நெறிகள் வந்தமைந்தன.

ஒரு மாதத்திற்குள் அஸ்தினபுரி அனைத்து நிலைகளிலும் காவலும் ஏவலும் நிறைந்த நாடென்று ஆகியது. காவல்மாடங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் ஆயிரத்தெட்டு காவல்மாடங்கள் உருவாகி வந்தன. அவற்றை ஒட்டி காவலர்களுக்கான குடியிருப்புகள் அமைந்தன. அஸ்தினபுரியின் ஆயிரக்கணக்கான பட்டுக்கொடிகள் நாடெங்கும் பறக்கலாயின. கொடிகளை தைத்து அனுப்புவதற்கென்றே கைவினைமகளிருக்கான கொட்டகைகளை அமைக்க வேண்டியிருந்தது. ”தொன்மை பெருமிதமளிப்பது என்று கண்டிருக்கிறேன். புதுமை ஊக்கமளிப்பது என்று இன்று அறிகிறேன். உருவாகி வரும் புதிய அமைப்பொன்றில் சேர்ந்திருக்கிறோம் என்னும் தன்னுணர்வால் இவர்கள் இயக்கப்படுகிறார்கள். இதைப்போல தற்செருக்கும் பொறுப்புணர்வும் அளிப்பது பிறிதொன்றில்லை.”

கோட்டைமேல் நின்று கீழே அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்த அஸ்தினபுரியின் படை ஒன்றை நோக்கிக்கொண்டிருக்கையில் அவன் சம்வகையிடம் சொன்னான் “இந்நிமிர்வை நான் முன்னரும் கண்டிருக்கிறேன். அது ஓர் படைக்கலநிலையாக பயிலப்பட்டது. ஓர் அணிகலன் என சூடப்பட்டது. ஓர் உடல்மொழி மட்டுமே. இது நடிப்பல்ல. இதை இவர்கள் இக்கணம் இயல்பாக இயற்றுகிறார்கள்.” சம்வகை நகைத்து “ஆம், ஒவ்வொருவரும் தங்கள் படைக்கலத்தை பற்றியிருப்பதில் இருக்கும் இயல்பான நிலையே அதற்குச் சான்று” என்றாள்.

“ஒருவகையில் குருக்ஷேத்ரப் பெரும்போர் நன்று என உணரத் தொடங்கிவிட்டேன். இந்த புத்தம்புதிய பேரமைப்பு அத்தனை அழிவு இல்லையேல் எழுந்திருக்காது. இதை உருவாக்கும் பொருட்டே அது நிகழ்ந்தது என்றுகூட எண்ணிக்கொள்கிறேன்” என்று அவன் உள்ளக்கிளர்ச்சியுடன் சொல்ல சம்வகை மெல்ல அசைந்தாள். அவள் அப்பேச்சை விரும்பவில்லை. ”இதை அவர் பார்க்கவேண்டும். அவர் சொல்லவேண்டும், அவர் விழைந்தது இதைத்தானா என்று. இது ஒரு தொடக்கம். இங்கே இது நின்றுவிடாது. ஆரியவர்த்தமெங்கும் பரவும். பாரதவர்ஷமெங்கும் நிலைகொள்ளும். புதிய வேதம் புதிய மக்களையும் நிலத்தையும் உருவாக்கும். அதை இங்கிருந்தால் காணமுடிகிறது” என்று யுயுத்ஸு சொன்னான். அவள் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை.

 

சுரேசரின் அறையை அவன் அடைந்தபோது அவர் அங்கே இல்லை. அவருடைய உதவியாளனாகிய கலிங்கநாட்டு அந்தணர் காமிகன் அங்கே இருந்தார். அவர் சுரேசரைப் போலவே கைகளும் கண்களும் பெருகி பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் என எழுந்துகொண்டே இருக்கிறார்கள் என அவன் எண்ணிக்கொண்டான். காமிகன் ஓலைகளை தனித்தனியாக குழலில் இட்டு மெழுகு முத்திரை இட்டு வெவ்வேறு தூதர்களிடம் கொடுத்து அனுப்பினார். ஓர் ஓலையில் இருந்த செய்திகளை தனித்தனியாக பல ஓலைகளில் ஆணைகளாக மாற்றினார். பல ஓலைகளில் இருந்த செய்திகளை ஒற்றைச்செய்தியாக ஒரே ஓலையில் பொறித்து சுரேசரின் பார்வைக்காக வைத்தார்.

அந்த அறையில் அவரைத் தவிர சுரேசரின் எட்டு உதவியாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். சுரதனையும் கஜனையும் சம்விரதனையும் சுனயனையும் சுனீதனையும் வேணிகனையும் ரத்னகனையும் ரஜதனையும் அவன் காணத்தொடங்கி மூன்று வாரங்களே ஆகியிருந்தன. ஆனால் அவர்களை நெடுங்காலம் அறிந்திருப்பதுபோல தோன்றியது. அவர்கள் மெழுகு உருகி செல்லுமிடத்தில் படிந்து அவ்வுரு அடைவதுபோல அஸ்தினபுரியில் அமைந்துவிட்டிருந்தனர். அவ்வரண்மனையில் அந்த அறையில் அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தவர்களாகத் தோன்றினர். அங்கேயே பிறந்து அவ்வறையை நிறைத்து உருவாகி வந்தவர்கள்போல. அதை எண்ணி அவன் எப்போதுமே வியப்பதுண்டு. நத்தையின் கூட்டுவடிவுக்கேற்ப அதன் தசை உருவாகியிருப்பதைப்போல அந்தணர்கள் அவர்கள் பணியாற்றும் இடத்தின் வடிவிலேயே தாங்களும் உருவமைந்து கொள்கிறார்கள்.

ஏவலரிடம் ஆணைகளை இட்டபடியே சுரேசர் அறைக்குள் வந்தார். அவனுடைய வணக்கங்களை ஏற்றபடி பீடத்தில் அமர்ந்து ஓலைகளை எடுத்து விரைந்து படித்து அப்பால் தள்ளிவைத்துவிட்டு “உங்களைச் சந்திக்க அரசர் விழைந்தார். அவருடைய ஆணை பலமுறை வந்தது. வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தீர்கள். அவை முடியட்டும் என நான் ஒத்திப்போட்டேன்” என்றார். யுயுத்ஸு “எதன்பொருட்டாக இருக்கும்?” என்றான். “பெரும்பாலும் ஏதாவது பயணம்” என்றார் சுரேசர்.

“அவர் என்னிடம் இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லவேண்டும் என்று சொன்னார்” என்று யுயுத்ஸு சொன்னான். “நானும் அதையே எண்ணினேன். ஆனால் நீங்கள் இங்கே முடிக்கவேண்டிய பணிகள் பல உள்ளன. உடனே கிளம்பமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இன்னமும் பிந்தமுடியாது என இன்று தோன்றியது. ஆகவேதான் உங்களை அழைத்துவரச் சொன்னேன். அவரை சந்தித்துவிடுங்கள். ஆணைகளைப் பெற்ற பின் என்ன செய்வது என்று கருதுவோம்” என்றார் சுரேசர். யுயுத்ஸு “அவரிடமிருந்து ஆணைபெற்ற பின் அதை மீறமுடியாது” என்றான். “மீறவேண்டாம், ஒத்திப்போடுவோம். அவர் மீண்டும் கேட்கப்போவதில்லை” என்றார் சுரேசர்.

“அரசரை நான் சந்தித்து நெடுநாட்களாகின்றது. எவ்வண்ணம் இருக்கிறார்?” என்றான் யுயுத்ஸு. “நெடுநாட்களாகவில்லை, மூன்று நாட்களுக்கு முன் நாம் சந்தித்தோம்” என்றார் சுரேசர். “இங்கே ஒருநாளில் வாழ்க்கை மிகமிக முன்னகர்ந்துவிடுகிறது. இந்நகரம் பறந்துகொண்டிருக்கிறது” என்றான் யுயுத்ஸு. சுரேசர் “ஆம்” என்றார். “நான் அன்றாடம் அரசரை சந்திக்கிறேன். நாளில் மும்முறைகூட. ஆனால் அவரை சந்திப்பதே இல்லை என உணர்கிறேன்.” யுயுத்ஸு புன்னகைத்தான். சுரேசர் “இங்கே உண்மையில் ஓய்வாக இருப்பவர் அவர் மட்டுமே. முழுமையான தனிமையில். முற்றிலும் அகன்று. அவரிடம் செல்லும்போது கருவறை இருளுக்குள் அமர்ந்திருக்கும் சிலையை பார்ப்பதுபோல் இருக்கிறது. வெளியே திருவிழா கொந்தளிக்கிறது. தெய்வம் அதை அறியாது. அது வாழும் காலம் முற்றிலும் வேறொன்று” என்றார்.

அவனும் அதை உணர்ந்திருந்தான். அவன் நகரைப்பற்றி யுதிஷ்டிரனிடம் பேச விழைந்தான். அவ்வப்போது அதைப்பற்றி அவரிடம் எடுத்துரைத்தான். ஆனால் யுதிஷ்டிரன் அப்பால் இருந்தார். நகரம் எப்போதும்போல தன் ஆட்சியிலேயே இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையையே சுரேசர் அவரிடம் உருவாக்கினார். அவரிடம் ஆணைகளை பெற்றுக்கொண்டார், அவ்வாணைகளின் நிறைவேற்றத்தை அறிவித்தார்.

ஒவ்வொருநாளும் உரிய ஆணைகளை இட்டுவிட்டு யுதிஷ்டிரன் தன் நாற்களத்தில் அமர்ந்தார். அவருடன் நாற்களமாட திறன்கொண்டவர்கள் வந்திருந்தார்கள். நாற்களமாடலின் புதிய நெறிகளை அவர்கள் கொண்டுவந்து சேர்த்திருந்தனர். எப்போதேனும் அவர் அரசியலில் ஏதேனும் ஒரு சிக்கலை சந்திக்கையில் முற்றாக நிலையழிந்தார். அப்போது உடனே யுயுத்ஸுவை கூப்பிட்டனுப்பினார். ஆனால் அவற்றை எப்படி கையாள்வதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தன் நூலறிவனைத்தையும் இழந்தவர் போலிருந்தார்.

“அவரிடம் நான் கண்ட நூலறிவும் நுண்புலமும் இல்லாமலாகிவிட்டதுபோல் உணர்கிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர் சலிப்பூட்டுகிறார். என் அறிதல்களை எப்போதும் அவரிடம் பேசியே கூர்தீட்டிக்கொண்டிருக்கிறேன். அவருடைய உள்ளம் இன்று என் சொற்களில் படிவதில்லை. நான் சொல்வன அவர் செவிகளுக்குள் புகுவதேயில்லை என்று படுகிறது.” சுரேசர் “அவர் குருக்ஷேத்ரத்தை நேரில் கண்டுவிட்டார். எழுதப்பட்ட சொற்களின் எல்லையை அவருடைய அகம் இன்று நன்கு அறிந்திருக்கும். அவரால் முன்புபோல நம்பி இனி அச்சொற்களுக்குள் புக முடியாது. அவர் நூல்களை இன்று நாற்களம் போலவே அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றார்.

“இனி அவரால் முன்புபோல சலிக்காமல் அரசியலாட முடியாது. சிறிய களமாடல்களை செய்வார், ஆனால் அதன் வெற்றியில் மகிழ முடியாது. அவர் அரியணையில் அமர்ந்த கணமே அதன்மேல் ஆர்வமிழப்பார். இனி அவருக்கு மணிமுடியைச் சூடித்தருக்க முடியாது. அதைச் சென்றடையாமல் அவருடைய பயணம் முடியாது, சென்றடைந்த பின் அவர் மெய்யாகவே விழைவதென்ன என்று கண்டுகொள்வார்” என்று சுரேசர் சொன்னார். யுயுத்ஸு அச்சொற்களை முழுதுற உணராமல் தலையசைத்தான்.

சுரேசர் “நீங்கள் அவரிடம் சென்று ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம். அவர் பெரிதாக எதையும் செவிகொள்ளப்போவதில்லை என்பதனால் நீங்கள் பேசவேண்டிய தேவையிருக்காது” என்றார். யுயுத்ஸு “ஆம், அவருக்கு செவிகளே இல்லை என்று ஆகிவிட்டிருக்கிறது” என்றான். “அது ஒருவகையில் நன்று. அவர் பேசாமலும் ஆகிவிட்டாரென்றால் இவ்வரசை நாம் திறம்பட நடத்த முடியும். கருவறைத்தெய்வங்கள் கற்சிலைகளாகவே இருக்கவேண்டும்” என்றார்.

யுயுத்ஸு அப்பேச்சை விலக்க விழைந்தான். “அஸ்வமேதப் புரவிகள் திரும்புகின்றன என அறிந்தேன்” என்றான். “ஆம், முதலில் சகதேவனின் படைகள் திரும்பிவரக்கூடும். மிஞ்சிப்போனால் இன்னமும் ஏழு நாட்களில். அதற்குள் இங்கே அனைத்தும் முடிவுறவேண்டும். நினைத்ததைவிட விரைவாக அனைத்தும் ஒருங்கமைகின்றன. அது நிறைவளிக்கிறது. ஆனால் ஆற்றவேண்டியவை குவிந்து கிடக்கின்றன. எண்ணினால் உள்ளம் மலைக்கிறது” என்றார். “ஆகவேதான் நீங்கள் இந்திரப்பிரஸ்தம் செல்வதாக இருந்தால் கூடுமானவரை இச்சில நாட்களிலேயே அது நிகழட்டும் என எண்ணினேன்.”

யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “துவாரகையிலிருந்தும் நற்செய்தியே வந்துள்ளது. மைந்தன் வளர்ந்துகொண்டிருக்கிறான். ஆய்வுமுறைப்படி உருவானவன் என்பதனால் பீதர்கள் அவனை பரீக்ஷித் என்கிறார்கள். அப்பெயரையே அனைவரும் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள். நன்று. அவ்வாறு ஒரு விந்தைப் பெயர் நம் அரசருக்கு அமையுமென்றால் அதுவும் சிறப்பே. ஒருவகையில் அவர் ஆட்சிசெய்யவிருக்கும் நகருக்கும் அப்பெயர் பொருந்துவதே” என்றார். “ஏன்?” என்று யுயுத்ஸு எண்ணம் ஒன்றாமல் கேட்டான். “இந்நகரும் இங்குள்ள குடிமையமைப்பும் நெறிகளும் முழுக்கவே ஆய்வுமுறைப்படி அமைவன தானே?” என்று சுரேசர் சிரித்தார்.

ஏவலன் வந்து அரசர் ஒருங்கியிருப்பதை அறிவித்தான். யுயுத்ஸு எழுந்துகொண்டான். சுரேசர் உடன் எழுந்துகொண்டு அவனுடன் வந்தபடி “சம்வகையை கோட்டைக்காவலில் இருந்து மேலெடுத்தாக வேண்டும்” என்றார். “அவள் உள்ளம் அதைவிடப் பெரிதாகிவிட்டது. இனி அப்பொறுப்பிலிருந்தால் அவள் உளத்திறனில் ஒரு பகுதியால் அதை செய்துமுடிப்பாள். மெல்ல சலிப்படைவாள். அப்பொறுப்பை ஆழ்ந்து இயற்ற இயலாதவளாவாள்” என்றார். யுயுத்ஸு “ஆம்” என்றான். அதை ஏன் அப்போது சொல்கிறார் என அவனுக்குப் புரியவில்லை.

“ஆனால் அவளை இதற்கு மேலே எப்பொறுப்புக்கு கொண்டுசெல்வது?” என்று யுயுத்ஸு கேட்டான். சுரேசர் “ஒன்பதுவகைப் படைகளுக்கும் நடுவே ஒருங்கிணைப்பு தேவை. நமக்கு முன்பிருந்தவர்கள் நால்வகைப் படைகளுக்கும் தலைவர்கள். ஒன்பது படைகளுக்கும் தலைமை என ஒரு நிலையை உருவாக்குவோம். அரசர் அவளை அதில் அமர்த்தட்டும்” என்றார். யுயுத்ஸு திகைத்தவன்போல நின்றான். “ஏன்?” என்றார் சுரேசர். “பெண்ணா?” என்று யுயுத்ஸு கேட்டான். “பெண் கோட்டைத்தலைவர் ஆகக்கூடும் என்றால் ஏன் படைத்தலைமை கொள்ளக்கூடாது?” என்று சுரேசர் கேட்டார். யுயுத்ஸு “ஆம், இங்கே அவளை அவ்வண்ணம் நிலைநிறுத்தினால் தடைசொல்ல எவருமில்லை…” என்றான்.

“அரசர் இதே திகைப்பை அடையக்கூடும். உங்கள் உணர்வுகளின் நீட்சியையே அவர் அடைகிறார்” என்று சுரேசர் சொன்னார். “ஆகவேதான் முதலில் உங்களிடம் சொல்லிப்பார்த்தேன்” என்று புன்னகைத்து “உரிய முறையில் அரசரிடம் இதை முன்வைத்து ஒப்புதல் பெற்றாகவேண்டும். அதை நான் செய்கிறேன்” என்றார். யுயுத்ஸு “அவரால் அதை செய்ய முடியாது. அவருள் இருக்கும் முன்னோர் அதை செறுப்பார்கள்” என்றான். சுரேசர் “அவர் புதிய வேதம் விளையும் நிலத்தின் அரசர். அதை அவருக்கு நினைவுறுத்துவோம்” என்றார்.

யுயுத்ஸு நடக்க சுரேசர் உடன் வந்தார். ஏவலன் அவர்களை அழைத்துச்சென்றான். அவன் சலிப்புற்றிருந்தான். அரண்மனையின் எல்லாச் சாளரங்கள் வழியாகவும் பெருந்திரளே தெரிந்தது. காலையில் எழுந்து நோக்கும்போது அத்திரள் நெறியிலாக் கொப்பளிப்பு என்று தோன்றியது. சுரேசரிடம் பேசிவிட்டுச் செல்கையில் அது முழுக்க கட்டுப்படுத்தப்பட்ட பேரசைவே என்று தோன்றியது. சுரேசர் அதை அவ்வப்போது நோக்கி தலையசைத்தார். தனக்குள் ஓரிரு சொற்களை முனகிக்கொண்டார்.

அவன் நின்று நின்று அத்திரளைப் பார்த்தபடி சென்றான். யானைகளும் புரவிகளும் அத்திரிகளும் மாடுகளும்கூட அக்களிவெறியில் கலந்துவிட்டிருந்தன. வண்டிகளும் தேர்களும் கூட. உயிரற்றவை என்றாலும் வண்டிகளின் அசைவுகளில் மானுட உள்ளம் வெளிப்படுகிறது. அவை தயங்குகின்றன, வழிதேடுகின்றன, அலைக்கழிகின்றன, துணிகின்றன, மீறுகின்றன, தருக்குகின்றன, களியாடுகின்றன. சுரேசர் “நகரம் இத்திரளின் களியாட்டை தானும் பெற்றுக்கொண்டிருக்கிறது. அத்தனை கட்டடங்களுக்கும் அது தெரியுமெனத் தோன்றுகிறது” என்றார்.

நீண்ட சவுக்கு ஒன்று சுழன்றமைவதுபோல அஸ்தினபுரியின் காவல்படை அந்தத் திரள் நடுவே நெளிந்து ஊடுருவியது. யுயுத்ஸு அதைப் பார்த்தபடி நின்றான். அந்தத் திரள் இரண்டாக பிளக்கப்பட்டது. பிளந்த ஒரு பகுதி வலப்பக்கமாக செலுத்தப்பட்டது. ஒரு நீண்ட பாதை உருவாக அதன் வழியாக பிறிதொரு படை ஊடுருவி அப்பால் சென்றது. “பாற்கலத்தில் வெண்ணை திரள்கிறது. நன்று” என்று சுரேசர் சொன்னார். “யானை தன்னை எங்கே பிடித்து ஏறவேண்டும் என்று சொல்கிறது… இன்னும் ஓரிரு மாதங்கள். இந்நகர் நாம் சொல்வதை செவிகொள்ளும்…”

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
அடுத்த கட்டுரைவிழா -வாழ்த்துக்கள்