பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

 

இரு வீட்டு மதிற்சுவர்களையும்  பிரிக்கும் அந்த அடர்ந்த மாமரங்களின் ஊடே ஒரு மின்மினிப் பூச்சிதான் இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருக்கிறது என்றே மதுமிதா முதலில் எண்ணினாள். பிறகுதான் அது என்னவென்று அவளுக்கு விளங்கியது. பக்கத்து வீட்டின் மின்விளக்குகளில் ஒன்று அணைந்து அணைந்து எரிவதுதான் திரையிடப்படாத அதன்  ஜன்னல்களின் வழியாக அப்படித் தோன்றியிருக்கிறது. அவ்வாறு அது அணைந்து அணைந்து ஒளிர்வது மாமரத்தின் அடர்த்தியான கிளைகளின் வழியே தெளிவாகவே தெரிகிறது. மதுமிதா தன்னுடைய அறையின் அந்த  திறந்த ஜன்னலுக்கு அருகே இருக்கும் தன் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கிறாள். அந்தப் புழுக்கமான அறையில் அங்குதான் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு ஓரளவிற்காவது இருக்கிறது. அவள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சினை விட்டாள்.  மே மாதமே இப்பொழுதுதான் துவங்கியிருக்கிறது. கூடவே வெய்யில் காலமும் துவங்கி விட்டது. அதுவும் மூச்சு முட்டுமளவிற்கு நல்ல வெக்கையாக இருக்கிறது.

 

அவள் கழுத்திலிருந்து மார்புக்கு  வழிந்தோடிய வியர்வைத்துளி அவளின் மெல்லிய இரவு உடையை அவளது சிறு மார்புகளுடன் ஒட்டவைத்தது. இந்த வெக்கையில் அவளது இரவு உடை ஏற்கனவே பல இடங்களில் ஊறவைத்ததைப் போல நனைந்து விட்டிருக்கிறது. தொடைகளின் ஈரம் அவளுக்கு மிகவும் அசெளகரியமாக இருந்தால்,  அவள் அந்த உடையை தன் தொடைகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட உள்ளாடையின் பட்டை வரை சுருட்டி விட்டுக்கொண்டாள். அதே நேரத்தில் அந்த ஜன்னல் வழி வெளிச்சம் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். உடனே பாய்ந்தெழுந்த மதுமிதா அறைச் சுவற்றில் தனக்குப் பின்னால் இருக்கும் அந்த அறை விளக்கின் சுவிட்சை வேகமாக அமிழ்த்தினாள்.

 

இருளில் இருப்பது சற்று குளிர்ச்சியாக இருப்பது போலவும் தோன்றியது. அவளது ஜன்னல் வழியே காற்றும் வீசியது. அந்தக் காற்று அவளது உடலைத் தழுவும்போது அவளது முலைக்காம்புகள் கூசின. மதுமிதாவிற்குச் சிலிர்த்தது

 

அந்த காற்றைத் தொடர்ந்து அமைதியான உறக்கமும் வந்தது. அந்த உறக்கத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும்போது பக்கத்து வீட்டிற்கு புதிதாக வந்திருப்பது யாராக இருக்கும் என்று யோசித்தாள். அங்கு ஒரு இளம் பெண் இருக்கலாம்; அவள் தனக்கு நல்ல தோழியாகவும் விளங்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்

 

மறுநாள் காலையில் மெல்லிய சோம்பலுடன் கண் விழித்தாள். அந்த காலை நேரத்திற்குச் சற்றும் பொருந்தாத ஒலிகளைக் கேட்டபடி எரிச்சலுடன் படுக்கையில் படுத்தபடியே இருந்தாள். ஒன்று, அவள் அம்மா அவளுக்கான மதிய உணவைத் தயார் செய்யும்போது எழும் பாத்திரங்களின் ஓசை; மற்றது அந்த கடும் நாற்றம் பிடிக்கும் சுருட்டைப் பிடித்தபடி செய்தித்தாள் வாசிக்கும் தன் தந்தை அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த சாய்வு நாற்காலி தரையில் உரசும் ஓசை

 

அந்த ஓசைகளினால் அவ்விரு முதியவர்களின் மீதும் மதுமிதா கடுங் கோபத்துடன் இருந்தாள். அவளும் அவளது பெற்றோர்களும் வாழும் அந்தச் சிறு வாழ்க்கை அவளை விடாமல் துரத்தியபடியே இருக்கிறது. அவளைச் சுற்றியிருக்கும் அனைத்துமே, அவற்றுக்குள் இருந்த பசுமையை யாரோ உறிந்து எடுத்து விட்டதைப் போல காய்ந்து உலர்ந்து போய் கிடக்கின்றன. ஆதிகாலத்து அஸ்திவாரத்தின் மீது தள்ளாடியபடி நிற்கும் அந்த வீடு, வளைந்தும் உடைந்தும் கிடக்கும் நாற்காலிகள், அந்தப் பாழடைந்த வீட்டைச் சுற்றிலும் களைத்துப் போய்க் கிடப்பது  போல கவிழ்ந்து கிடக்கும் தோட்டம், அனைத்திற்கும் மேலாக தளர்ந்தும் வாடியும் போயிருக்கும் அவளது பெற்றோர்கள் என அவளுக்கு  வாய்த்த அனைத்துமே அப்படித்தான் இருக்கின்றன. அத்தனை வயதிற்குப் பிறகும் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வில்லை என யார் அழுதார்கள்? அவர்கள் அவளைப் பெற்றெடுத்தது வெறும் பாதகச் செயல் மட்டும்தான். தான் சுவாசிக்கும் காற்றுமே கூட தூசியும் அவநம்பிக்கையும் கொண்டு கனமாகியிருக்கிற இந்தத் தனித்த பாழான வாழ்க்கைக்குள் அவர்கள்தான் அவளைத் தள்ளி விட்டனர்

முன்பு ஒரு முறை அவள் தன் பள்ளித் தோழியின் வீட்டில் ஓரிரவு தங்கினாள். ஒரே ஒர் இரவு மட்டும் தான் – அவளது வயதான பெற்றொர்கள் அவள் தன் கண்பார்வைக்கு அப்பால் இருப்பதை விரும்பியது இல்லை. அப்பொழுது அவளுக்குப் பத்து வயது இருக்கலாம். எனவே அது பத்து வருடங்கள் முன்பு நிகழ்ந்த ஒன்று. ஆனால் அந்த நினைவுகள் மதுமிதாவின் மனதில் இன்னும் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கின்றன. அவளுக்கு தன் தோழியின் வீடு மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. அங்கு தொலைக்காட்சிப் பெட்டி இடைவிடாது அலறிக்கொண்டிருந்தது. அவளது தோழியின் தந்தை ஒரு பாடலை முணுமுணுத்தபடியே, தன் மகனுடன் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார். அவளது தாயார் இவ்விரு சிறுமிகளுடனும்  தாயம்  ஆடினாள். மதுமிதா அவ்விளையாட்டில் பலமுறை வெட்டுப்பட்டு சிறைக்குச் சென்றாள். ஆனால் அது  அவளுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது

 

ஆனால் அவள் இப்பொழுது அடைக்கப் பட்டிருக்கும் சிறைக்கூடம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று

 

’மிதா!!’ அவளது அம்மாவின் நடுங்கும் குரல் சமையலறையிலிருந்து வெளிப்பட்டது. ‘ எழுந்திரு கண்ணு.. ஸ்கூலுக்கு நேரமாச்சு..”

 

கடிகாரம் ஏழு மணி என்றது. ஆம்.. ஸ்கூலுக்கான நேரம்தான்

 

துருப்பிடித்த வாளியில் இருந்த தண்ணீரில் உலோகத்தின் சுவை இருந்தது. மிகவும் குளிர்ந்தும் இருந்தது. அந்த நீரை உடலில் ஊற்றிக் கொண்டதும் அவளுக்கு சற்று நடுக்கமும் எடுத்தது. ஆனாலும் தன்னை ஆற்றுப்படுத்தும் அந்தக் குளிர்ச்சிக்கு இணங்கி அது அளித்த  மகிழ்வில் ஆசுவாசமாக நின்றாள். இதுவே ஒரு ஷவருக்கு அடியில் நின்றால் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் எனத் தோன்றியது. அவ்வாறு செய்தாலும் அவளை யாரால் தடுக்க முடியும். மேலிருந்து விழும் அந்த குளிர் நீர் தன் மீது வேகமாகவும் இதமாகவும் பாய்ந்து தன்னுடைய இந்த இனிய உடலைக் குளிப்பாட்டுவது எவ்வளவு நன்றாக இருக்கும்

 

ஆனாலும், அங்கு ஒரு ஷவரை வாங்கிப் பதிப்பது என்பது அவர்களுக்கு இயலாத காரியம்தான்.  தனியாக  ஷவரின் விலை மட்டுமே ஆயிரத்திற்கும் குறைவுதான் என்று பள்ளியிலேகூட யாரோ சொன்னார்கள் ஆனால் அதற்கென தனிக் குழாய்கள் வாங்கவேண்டும் அதற்கான வேறு சில உபகரணங்களும் தேவைப்படும். அதைப் பதிப்பவருக்கு வேலைக்கான கூலி தரவேண்டும். எல்லாம் சேர்த்து  ஆகும் தொகை கைவசம் இருந்தால் அவள் அதில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியே வாங்கி விடுவாள்

 

அந்த முதியவர்கள் கடந்த சில மாதங்களாகவே தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது குறித்து மதுமிதாவுடன் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர்களின் உறுதி சற்றுக் குலைந்திருப்பதை அவள் உணர்ந்தாள். ஒரு விவாதத்தை நீண்டகாலம் இழுத்துச் செல்வதற்கான ஆர்வத்தை கைவிட்டுவிட்டு இப்பொழுது அடங்கிப் போவதற்கு சித்தமாக இருக்கிறார்கள். வெகு விரைவில் அவர்களுடைய வாதங்களையேல்லாம் அடித்து நொறுக்கி அவள் வென்று எழப்போகும் காலம் வரத்தான் போகிறது என்று மதுமிதா அறிந்திருந்தாள். அப்பொழுது அவள் தனக்கான தொலைகாட்சிப் பெட்டியை வைத்திருப்பாள்.

 

இத்தனை ஆண்டுகளாக தன் பெற்றோர்களை சமாளிப்பது பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அனுபவமும், அறிவும் அதற்கான தைரியமும் பெற்றிருக்கிறாள். அந்தச் சாதுர்யத்தில் இப்பொழுது நன்கு தேர்ச்சியும் பெற்று வருகிறாள்.  ஆனால், இதெல்லாம் ஒரு சாதனையா என்ன ? இதற்கும் மேல் அவர்களால்  தன்னை ஆட்டிவைக்க முடியாது. ஆனால் நடந்து முடிந்தது எல்லாம் முடிந்தது தானே.  நண்பர்கள் யாரும் இல்லாமல், பயந்த சுபாவமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவளாக தான் இப்பொழுது இருக்கும் இந்நிலையை அவள் எப்பொழுதோ அடைந்து விட்டாள். இனி அவர்களை வென்று என்னவாகி விடப் போகிறது? பள்ளிக்கல்வி முடித்தவுடன் அவளை வேலைக்குப் போகச்சொல்லி வற்புறுத்தி, அந்த முதியவர் ஒருவழியாக அதை சாதித்தும் விட்டார். அதனால், அவள் கல்லூரிக்கும் செல்லவில்லை. வெளியே சொல்லிக் கொள்ள ஒரு கல்வித்தகுதியும் இல்லை. ஆகவே பெரிய அளவில்  எதிர்காலம் மீது நம்பிக்கையும் இல்லை. அவளது திருமணம் குறித்து பேச்சு வரும்போதெல்லாம் பெரியவர்கள் புன்னகையுடன் அதுக்கென்ன அவசரம் என்று கேட்டு நகர்ந்து விடுகிறார்கள்.  அவள்தான் சம்பாதித்து வந்து அவர்களின் அந்தச் சிறிய வறண்ட வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறாள். ஆகவே அவசரம் ஏதும் இல்லை.

 

ஏனோதானோவென்று ஓடிக்கொண்டிருந்த அந்தப் பழங்காலத்து மின்விசிறிக்கு அடியில் நின்று அவள் தன் உடலைத் துடைத்துக் கொண்டாள். காற்று வீசியதில் அங்கிருந்த அரைகுறையான திரைச்சீலைகள் மெல்ல அசைந்தன. அதன் ஊடாக பக்கத்து வீட்டை மதுமிதா உற்று நோக்கினாள். ஜன்னலில் தெரிந்த விளக்கு வெளிச்சம் அவளுக்கு ஞாபகம் இருந்தது. காலை ஒளியில் அங்கு ஒன்றும் தெரியவில்லை. யாரும் வாழ்வதற்கான தடயமும் அங்கில்லை.

 

மதுமிதா அணிந்திருக்கும் ’முகா மேகலா’ இத்தனை ஆண்டுகளில் மிகவும் மென்மையாகிவிட்டிருக்கிறது. இது அவள் அம்மா உடுத்தியது. அனைத்து முகா மேகலா போலவே இதுவும் ஒரு காலத்தில் நடக்கும் போது சரக் சரக் என்ற ஒலியை எழுப்பியிருக்கக் கூடும். ஆனால் இப்போது, தன் மெலிந்த தொடைகளையே இறுக்கமாக பற்றியிருக்கிற இந்த மிருதுவான நைந்த உடையை மதுமிதா மிகவும் கவனத்துடன் தான் அணியவேண்டும். இதைவிட்டால்  சென்ற பிஹுவிற்கு அவள் அப்பா வாங்கித்தந்த வெள்ளைத் தலைப்புடைய அந்த மற்றொன்று மட்டும் தான் இருக்கிறது. அதை அவள் ஏதாவது ஒரு முக்கியமான நாளன்று அணிவதற்காக தனியே வைத்திருக்கிறாள்

 

காலை உனவு மேஜையின் மீது தயாராக இருந்தது. ஒரு வட்ட வடிவ தட்டில் சிறு குன்று போல ஆவி பறக்க சோறும்  அதைச் சுற்றிலும் சிறிய கிண்ணங்களில் மசூர் பருப்பு, ஐந்து பச்சை மிளகாய், கடுகு தாளித்து வேக வைத்த  உருளைக் கிழங்கும் நறுக்கப்பட்ட வெங்காயமும் இருந்தன. அது தவிர ரோகு ( கெண்டை ) மீனின் ஒரு பெரிய துண்டும் இருந்தது. மதுமிதா அதன் வாலுக்கு மேலே உள்ள பாகத்தைத்தான் விரும்பி உண்பாள் என்பதால் அவளுக்கு அதை தினமும் காலையில் அம்மா தயார் செய்து அளித்து விடுவாள்

 

மதுமிதா மெல்லும்போது இடைவெளி விடாமல்  மென்மையாக கடித்து உண்டாள். அவள் தன் அம்மாவுடன் பேசவும் விரும்பவில்லை. நிற்கமுடியாத அந்த வயதான பெண்மனி ஒரு மூங்கில் கைவிசிறியைக் கையில் எடுத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து கொண்டாள்

வெளியே போகும் வழியில் அந்த முதியவர் மதுமிதாவைப் பிடித்து நிறுத்தினார்.’வா இந்த வயசானவனுக்கு ஒரு முத்தம் தாயேன்’ என்றார். மதுமிதா முகச்சுளிப்போடு குனிந்து கொண்டாள். அவள் தந்தையிடமிருந்து வந்த கடும் நாற்றம் அவளுக்குத்  தலை சுற்றலை அளித்தது

வராண்டாவிலிருந்து உயரமில்லாத நான்கு படிகளில் இறங்கிய பின், வாசலுக்கு இட்டுச்செல்லும் விரிசல் விழிந்த அந்த கான்கிரீட் பாதையில்  மதுமிதா மிகவும் கவனமாக அடிவைத்துச் சென்றாள். அவளுடைய மெல்லிய செருப்புகள் நன்கு தேய்ந்து போய் விட்டன. படிகளும் மிகவும் வழவழப்பாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். எந்த நேரமும் சறுக்கி விடலாம். கடைசிப் படிக்கு வந்து நின்றவள் ஒருமுறை அண்ணாந்து  வானத்தை பார்த்தாள். சுட்டெரிக்கும் சூரியன் நீல வானத்தில் மிதந்தபடி இருக்கிறது. ஒன்பது மணிக்கே இப்படி சுட்டெரிக்கிறது.  அவள் ஒரு நீண்ட பெருமூச்சினை விட்டாள். அவளால், தனக்குப் பின்னால் நிற்கும் அந்தப் பழைய வீட்டை உணரமுடிந்தது. எப்பொழுதும் எதுவும் நேரலாம் என்று நிற்கும் வீடு.  வளைந்து வளைந்து இருக்கும் அந்தத் துருப்பிடித்தத் தகரக் கூரை, புற்களை வைத்து பூசப்பட்டு இருக்கும் லேசான சுவற்றின் மீது நிற்கிறது. அந்தச் சுவற்றை குறுக்கும் நெடுக்குமாக ஆங்காங்கு சிதிலமடைந்து இருக்கும் அந்தப் பழங்கால மர உத்திரங்கள்தான் தாங்கிப் பிடித்திருக்கின்றன. இவ்வாறு ஒன்றையொன்று அடைகாத்தபடி தாங்கி நிற்கும் வீட்டைத் கட்டித் தழுவுவது போல சுற்றி வளைத்தபடி மாமரங்கள் அடர்ந்து நிற்கின்றன. கொல்லைப் புறத்தில் கொத்து கொத்தாக அரேகா பனை மரங்களும் வளர்ந்து நிமிர்ந்து நின்றன. அதன் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டது போல,  அவற்றின் வலிமையான மிருதுவான நடுமரத்தின் மீது  வெற்றிலைக் கொடிகள் ஊர்ந்து ஏறிப் படர்ந்திருக்கின்றன.  அந்தக் காலை வெளிச்சத்தில் அதன் பச்சை இலைகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் சென்று அந்த பனை மரங்களுக்கிடையே இருக்கலாமே என்ற ஒரு திடீர் ஏக்கம் அவளுக்குள் தோன்றியது.  அவள் ஒருமுறை சிலிர்த்துக் கொண்டாள். அவ்விடமே மிகவும் குளுமையாகவும் நிழலாகவும் இருக்கும். அங்கு வீசும் காற்றுமே ஒரு பிரத்யேக இனிமையுடன் இருக்கும். அது சொட்டுச் சொட்டாய் தன் தொண்டைக்குள்ளும் நாசிக்குள்ளும் ஒழுகிச் செல்லும். அந்த எண்ணமே அவளுக்கு கிறக்கமூட்டியது

ஒரு ரிக்‌ஷா சப்தமிட்டு ஊர்ந்தபடி அவ்விடத்தைக் கடந்து சென்றது.  தன் முதுகுக்குப் பின்னால் பார்வைகள் மொய்ப்பதை உணர்ந்த மதுமிதா நாசியைச் சுளித்தபடி தன் குடையை விரித்துக் கொண்டாள். அவள் மனதில் ஒரு கோபம் எழுந்து, எழுந்த வேகத்திலேயே அடங்கியும் போனது. தினமும் காலையில், அவளது பெற்றோர்கள் அந்த இருண்ட ஜன்னலுக்குப் பின்னால் நின்றபடி அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். வாசற்கதவு தாண்டி, அதற்கு நேராக இருக்கும் அந்தக் குறுகிய தெருவின் முனைவரை சென்று அவர்களின் கண் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை அவர்களின் அந்தப் பார்வை அவளைத் துரத்தியபடியே இருக்கும்.

 

அவளது பெரிய குடை சூரியனை நோக்கி விரிந்திருந்தது. மதுமிதா சாலையில் இறங்கி நடக்கத் துவங்கினாள். தார் சாலை மண்ணோடு இணையும் அந்த விளிம்பிலேயே நடந்தாள். ஒரு அடிக்குப் பின் மற்றது என மண்ணில் படாமல் பாதங்களை கவனமாக வைத்துச் சென்றாள். அவளுக்குத் தன் சிறிய வெளிர் பாதங்களை எண்ணி பெருமிதமாக இருந்தது. அவற்றை ஆசையாக பார்த்தபடி நடந்தாள்

 

தெரு முனைக்குச் சென்றதும் மதுமிதா வலதுபுறம் திரும்பினாள். அது இருபுறமும் வரிசையாக வீடுகளைக் கொண்ட அகன்ற சாலை. அவள் சுவாசம் வேகமாக சென்றுவர இதயம் படபடத்துக் கொண்டது. அது அடித்துக் கொண்ட வேகத்தைப் பார்த்தால் விலா எலும்பு வழியாகப் பாயத் தயாராக இருக்கும் ஒரு ஆர்வம் மிக்க தவளை போல போல அவளுக்குத் தோன்றியது. இந்த நீண்ட சாலை எப்பொழுதுமே  அவளை நிலைகுலைய வைக்கும். இங்கு அவளைத் தெரிந்த யாரையோ அவள் பார்த்துவிடக் கூடும். அது ஒரு பள்ளித் தோழமையாக இருக்கலாம் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களாக அல்லது அவளது தந்தையின் அலுவலகத் தோழராகவும் இருக்கலாம். அனைவரும் இவ்வழியாகத்தான் செல்வார்கள். அவள் உள்ளங்கை வியர்க்கத் துவங்கியது. பற்றியிருக்கும் குடை மிகவும் வலுவானதாக இருக்கிறது. வியர்வை வழிந்து முழங்கை வரை வந்தது. அடிவயிற்றுக் குழிவில் ஒரு படபடப்பு எழுந்தது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடினமாக முயற்சி செய்து தன் கண்களை, தனக்கு எதிர்படும் நபரிடமிருந்து விலக்கிக் கொண்டாள். எந்தத் திசையிலும் செல்லமுடியாமல் மாட்டிக்கொண்ட  மிருகம் போல இங்கும் அங்குமாக பார்த்தபடியே அவள் சென்றாள்.

 

அன்று காலையில் சாலை ஓரளவு வெறித்தே கிடந்தது. அந்தச் சாலையின் இறுதியில் இருக்கும் ஆலமரங்கள் நிறைந்திருக்கும் நிழற்சாலை இருக்கும் சந்திப்பு வரைக்கும் மதுமிதா தொடர்ந்து நடந்தபடி வந்தாள். அந்த குளுமையான நிழலில் ஒரு கணம் நின்றவள் பின் துரிதமாக அதைக் கடந்து எதிர்முனைக்குச் சென்றாள். இந்தப் புறத்தில் அந்த நடைபாதைக்கு இணையாகவே பற்றிக் கொண்டு நடக்க ஏதுவாக இரும்பு கம்பியும் பதித்திருக்கிறார்கள். மதுமிதா அந்த கம்பியை இறுக்கப் பற்றிக் கொண்டு அதன் மறு பக்கத்துக்கு போய் வந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தாள். மறுபுறத்தில் அடர் பச்சை நிறத்தில் பெருமளவிற்குத் தண்ணீர் இருந்தது.  அது ஒரு பெரிய ஏரி. அந்த ஏரி, சாலைக்குக் கீழே இருந்தது.  சாலையிலிருந்து அந்த ஏரிக்கு நிலம் சரிவாக இறங்கும். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் சிமெண்ட் படிக்கற்கள் சாலையிலிருந்து ஏரிக்கு செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டு இருந்தன. அந்த பாதையில் மிகவும் அகலமான பெரிய மரங்கள் இருந்தன. மாலைப் பொழுதுகளில் அங்கே கைகளைப் பிணைத்துக் கொண்டு இருக்கும் ஜோடிகளை அந்த மரங்கள்தான் மறைத்துக் கொள்ளும்.

 

அந்தத் தண்ணீருக்குள் ஏதோ இருப்பது போல, அது அவளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டேயிருக்கும். ஒரு காந்தம் போல அது அவளை மீண்டும் மீண்டும் இழுக்கும். அவள் காலையில் பள்ளிக்குச் செல்லும் பொழுதெல்லாம் அதை நின்று பார்க்காமல் செல்வதில்லை. அவள் தனக்குத் தெரிந்த யாரையும் காணவில்லை என்னும் பட்சத்தில் தன் வேலை நேரத்திற்கு பிறகும் கூட அங்குதான் வந்து நிற்பாள். அந்த ஏரிக்கு மறுபுறம் மகளீர் கல்லூரி ஒன்றும் இருக்கிறது. மதிய நேரங்களில், பெண்கள் கூட்டமாக அதன் இரும்புக் கதவின் வழியே பரபரப்பாக வெளியே வருவார்கள். அங்கே சூடான பொரியும் கொண்டைகடலையும் விற்றுக் கொண்டிருப்பவர்களை பலவண்ண உடைகளில் ஓடியாடி வரும் அந்தப் பெண்கள் குழுவாக சென்று சூழ்ந்து கொள்வார்கள். தொலைவிலிருந்து பார்க்கையில் ஒளிரும் வண்ணத்துப்பூச்சிகள் போல அவர்கள் மின்னுவார்கள்.

 

ஒருமுறை, மதுமிதாவும் அவ்வாறு  சென்று அந்த பொரிகடலை விற்பவர்களைச் சூழ்ந்திருக்கும் பெண்களில் ஒருத்தியாக நின்றிருக்கிறாள். அவர்களோடு சேர்த்து அவளும் ஒரு பொட்டலம் பொரிகடலை வாங்கிக் கொண்டு, பேசித் திரிந்து கொண்டிருந்த அந்தப் பெண்களுக்கிடையில் அமைதியாக அதைத் தின்றபடி சென்றாள். அவர்கள் மத்தியிலேயே எதுவும் பேசாமல் சென்றுகொண்டு அவர்களின் மலர்ச்சியான அந்த பேச்சுக்களில் தன்னைக் குளிப்பாட்டிக் கொள்பவள் போல அவர்களுடன் சென்றாள். ஜட்ஜ் ஃபீல்டு பேருந்து நிறுத்தம் வரை அவர்களுடன் சென்றவள், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற பின்னும் கூட அவர்களையே உற்று பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தாள்

 

ஆனால் இப்பொழுதெல்லாம் மதுமிதாவிற்கு அவ்வாறு பாசாங்கு செய்து கொள்வதற்கான தேவை ஏதும் இல்லை. அவளுக்கு இப்பொழுது ஒரு தோழி கிடைத்து விட்டாள். ஒரு பெண்மனி மூன்று மாதங்களுக்கு முன்பாக அவளது மாண்டெஸரி பள்ளியில் சேர்ந்திருந்தாள். அவள் பெயர் ஜோதி. பெயருக்கு ஏற்றவள் போலவே அவளும்,  தான் செல்லும் இடங்களையெல்லாம் ஒளிகொள்ளச் செய்தாள்.

 

ஜோதி பள்ளி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைத்த கணம் தொட்டே அவள் அனைவருக்கும் பிடித்தவளாகி விட்டிருந்தாள். மற்ற ஆசிரியர்கள், குழந்தைகள், ஆயாக்கள் மற்றும் துப்புரவாளர்கள் என அனைவருமே தேன் மலரைக் கண்ட தேனிக்கள் போல அவளைச் சூழ்ந்து கொள்வார்கள். அவள் மிகவும் இயல்பாகவும், புத்துணர்ச்சியுடனும் அனைவருடனும் தயக்கம் ஏதும் இல்லாமல் பழகினாள். ஆனால், மதுமிதா அவளைத் தொலைவிலிருந்துதான் பார்த்து வந்தாள். அவள் அருகில் செல்ல கூச்சப்பட்டபடியே இருந்தாள்.  அதேநேரத்தில் அவளால் கவனிக்கப்படவும் அந்த ஜோதி வளையத்திற்குள் இழுக்கப் படவும் ஏங்கிக் கொண்டிருந்தாள்.

 

எவ்வாறோ தெரியாத்தனமாக அடித்த ஒரு குருட்டு அதிர்ஷ்ட்டம் ஜோதியை மதுமிதாவின் இணையாக  ஆக்கிவிட்டது. அதன் பலனாக வேலை நேரத்தின் பெரும்பகுதி அவர்கள் இணைந்து பணியாற்றும்படி நேர்ந்தது. அதன் விளைவாக அவர்களுக்குள் ஒரு நட்பும் உருவானது. மற்ற ஆசிரியைகள்  அவ்வப்போது பள்ளி முடிந்ததும்  கூடி சினிமாவிற்குச் செல்வார்கள். அல்லது ஏரியில் படகு சவாரிக்குச் செல்வார்கள். சமயங்களில் கடைகளுக்கும் சென்று பிடித்த பொருள்களை வாங்குவர். முதன்முறையாக அந்தக் குழுவில் மதுமிதா செல்லும் வாய்ப்பும்  ஏற்பட்டது.  இவ்வாறு கிண்டலடித்துக்கொண்டு கதைபேசிக்கொண்டு வயிறு வலிக்க சிரித்துக் கொண்டு உரக்க பேசிக்கொண்டு பெண்களுடன் நடப்பது என்பது அவள் கனவு கண்ட ஒன்று. அந்தக் கூச்சலையும் பெண்களின் சிரிப்பின் எதிரொலிகளையும் தன் நினைவிலேயே எப்பொழுதும் வைத்திருந்ததால், வீடுமே அவளுக்கு அமைதியாகவும் குளிரில் விரைத்துப் போனதாகவும் தோன்றவில்லை.

 

மதுமிதா அலுவலர்கள் அறையை அடையும்போது அங்கிருந்து ஜோதியின் குரல்தான் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் என்ன பேசுகிறாள் என்பது புரியவில்லை என்றாலும் தீவிரமாக ஏதோ உரையாடல் நிகழ்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது

 

அந்த உரையாடலில் தானும் கலந்து கொள்ள வேண்டுமே என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக சென்றவளுக்கு அந்த உரையாடலில் தன் பெயர் அடிபடுவது தெரிந்தது. ஒரு ஆர்வத்தில் மதுமிதா அதைக் கேட்கத் துவங்கினாள்

 

’நம்ம ஷில்லாங் சுற்றுப்பயணத்துக்கு எப்படியும் நீ உன் ஃப்ரெண்டையும் கூப்புடுவ இல்லையா?’ என்றாள் ஜாய்ஸ்ரீ

 

’அட சும்மா இருப்பா.. அதெல்லாம் சரிபட்டு வராது.. அவள் ஃப்ரெண்டெல்லாம் ஒண்ணும் இல்ல..” என்றாள் ஜோதி.. “ அவளைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கும் அவ்வளவுதான்…’

 

மதுமிதா அந்த வழியிலேயே நின்றிருந்தாள். அவள் தலைக்குள் கலகலவென ஒரு மணியோசை கேட்கத் துவங்கியது. அதைத் தவிர வேறு அதுவுமே அவளுக்குக் கேட்கவில்லை. சிலர் அவளைக் கடந்து சென்றனர். அவர்கள் இவளைப் பார்த்து சிரித்தனர். ஏதோ கூறினர். ஆனால் அவளுக்கு அவர்கள் கூறிய எதுவுமே கேட்கவில்லை. ஊசி முனையால் குத்தி உள்ளிருந்து வெளியேறுவது போல அவள் நெற்றியிலிருந்து வியர்வை வெளியே வழிந்தோடத் துவங்கியது. அவளால் அலுவலர்கள் அறைக்குள் செல்ல இயலவில்லை. இனி ஒரு கணம் கூட அங்கே நிற்பது கூட இயலாது என்றும் ஆனது.

 

மதுமிதா திரும்பித் தன் பழைய வீட்டினை நோக்கி நடக்கத் துவங்கினாள். இனி இந்தப் பள்ளிக்குள் தான் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை என்றும் அவள் அறிந்திருந்தாள்

 

அந்த முதியவர்கள் அரண்டுபோய் அங்கும் இங்குமாகக் கிடந்து அல்லாடிக் கொண்டிருந்தனர்

 

முதலில் அவர்கள் மதுமிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் நினைத்தனர். உடனே பறந்தோடிப்போய் அவளின் உடல் பலத்திற்கு கெளுத்தி மீன் கறியும் எதிர்ப்பு சக்திக்கு ச்யவணபிராசமும் அளித்தனர். ஆனால் மதுமிதாவின் உடலுக்கு ஒன்றும் இல்லை அவள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாள் என்பது அவர்களுக்கு உரைத்தவுடன் அவர்கள் எரிச்சலும் கோபமும் அடைந்தனர். நாளாக நாளாக மதுமிதா வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்ததால் அவர்கள் அச்சத்திலும் கவலையிலும் உடைந்து அழத் துவங்கினர்

’என்ன நீ இப்படி செய்யுற’ என்றாள் அவள் அம்மா அவளது படுக்கையின் விளிம்பில் அமர்ந்தவாறு.. “மிதா! நீ ஏன் பதில் கூட பேசாம இருக்க?’

அவள்,“ ஒண்ணும் இல்ல..” என்றாள். மதுமிதாவிடம் ஒரே ஒரு பதில்தான் இருந்தது. அவள் அதை மட்டுமே மறுபடி மறுபடி கூறி வந்தாள். ’ஒரு விஷயமும் இல்ல’

சாப்பிடும் நேரங்களில் அந்த முதியவரும் அதைத்தான் கேட்பார்,’நீ இப்படியே பண்ணிகிட்டிருந்தா, நம்மளால எப்படி சமாளிக்க முடியும்?

 

மதுமிதா உணவுமேஜையில் சாப்பிடுவதையும் நிறுத்திக் கொண்டாள். நேரத்துக்கு சாப்பிடுவதும் இல்லை. எப்பொழுதெல்லாம் பசிக்கிறதோ அப்பொழுதெல்லாம் சமயலறைக்குச் சென்று உணவை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து விடுவாள். அங்கே தன் படுக்கையின் கால்மாட்டில் இருந்த உடைந்த மேஜைமேல் வைத்து உண்பாள். அங்கிருந்த தன்னுடைய  பழைய பாட புத்தகங்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டாள். இப்பொழுது சிதைந்து போன காதல் கதைகள்தான் அங்கு குப்பையாக கிடந்தன. ஒரு நாளைக்கு ஒன்று என்கிற அளவில் பெரும் பசி கொண்டவள் போல அவற்றை அவள் விழுங்கித் தள்ளினாள். அவர்களின் தெருவின் உள்ளே சென்றால் அங்கிருந்து பிரிந்து உயர்நீதி மன்றத்துக்கு இட்டுச் செல்லும் சாலையில் இருக்கும் சிறிய வாடகை நூலகத்திற்கு அவள் தினமும் சென்று வரத் துவங்கினாள். அந்தப் புத்தகங்களுக்கு ஒரு நாள் வாடகை ஐந்து ரூபாய் என்றாலும் அவள் அதுகுறித்து கவலைப்படவில்லை. தனது குறைந்து வரும் சேமிப்பிலிருந்து அந்த கசங்கிய நோட்டுக்களை ஒரு தயக்கமும் இல்லாமல் எடுத்துக் கொடுத்து வந்தாள். வீட்டுக்குள் வரும்போது அங்கு முற்றத்தில் வெறித்து பார்த்தபடி அசைவின்றி அமர்ந்திருக்கும் தன் பெற்றோர்களைக் காண்பாள். அப்பொழுது அவளுக்குள் உச்சந்தலையிலிருந்து தாங்க முடியாத கோபம் மண்டியெழுந்து வரும்

 

ஒருநாள் மதியம், மதிய உணவை தன் திறந்த ஜன்னலுக்கு அருகே அமர்ந்து உண்டு கொண்டிருந்தபோது சுவற்றை ஒட்டியிருந்த மாமரங்களை மதுமிதா கண்டாள். நல்ல நெத்தலான காய்களாக காய்த்து இருந்தன. அழுத்தமான அந்த பச்சை மாங்காய்கள் அவளுக்கு எட்டாத உயரத்தில் அந்தக் கிளைகளில் ஊசலாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததுமே அவளுக்கு நாவூறத் துவங்கியது. மாங்காய்கள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. வெயிலில் காய்ந்து மென்மையாக இருக்கும் அந்த பச்சை மாங்காய் தன் வாயில் கரையும் சுவைக்காக அவள் எதையும் செய்வாள்

 

தட்டை அருகில் வைத்துவிட்டுத் தன் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்த வருடம் எப்படி இந்த மாங்காய்களை மறந்தோம் என வியப்பு மேலிட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாது மாவடுக்களை அவள் அடுத்த வீட்டு மரங்களிலிருந்து பறித்து உண்டு வந்தாள். தன் செருப்புக்களைப் போடும்போதுதான் அவளுக்கு ஒன்று நினைவிற்கு வந்தது. சில நாட்களாக பக்கத்து வீட்டில் யாரோ வசிக்கிறார்கள். மாமரங்களும் அவர்கள் வீட்டு தோட்டத்தில்தான் வளர்கின்றன, அவர்கள் வீட்டு மதில் மேல் ஏறித்தான் அதை பறிக்கமுடியும்.  கடந்த இரு வருடங்களாக அங்கு யாரும் இல்லை என்பதால் சுதந்திரமாக அதில் ஏறி பறிப்பதில் அவளுக்கு மனக் குழப்பம் ஏதும் நேர்ந்ததில்லை. ஆனால் இப்போது சற்றுத் தயங்கினாள்

 

’பக்கத்து வீட்டில் யார் இருக்காங்க’ கட்டிலில் தன் முன்கையால் கண்களை மூடியபடி படுத்திருந்த அம்மாவிடம் கேட்டாள்.

 

’ஜோர்ஹட்டிலிருந்து யாரோ ஒரு எஞ்சினியர் வந்து தங்கியிருக்காரு.. அவரோட பொண்டாட்டி குழந்தைங்க எல்லாம் ஊர்லயே இருக்காங்க.. அவங்க அங்கேயேதான் இருப்பாங்களாம்’ சொல்லிவிட்டு அவள் அம்மா திரும்ப படுத்துக் கொண்டாள்

 

வெளியே, மேகம் ஏதுமில்லாத வானில் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மதுமிதா சாலையில் இறங்கி நடந்தாள். அங்கு சற்று நேரம் நின்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள். பக்கத்து வீட்டுக் கதவு தாழிடப் படாமல் இருந்தது.  அவள் தள்ளியதும் திறந்து கொண்டது. அந்த சிமெண்ட் தரையில் நடக்கும்போது அவளுக்கு சற்று அச்சமாகவே இருந்தது. அங்கு அழைப்பு மணியும் ஏதும் இல்லை. என்ன செய்வது எனத் தோன்றாமல் அந்த வீட்டின் முகப்பிலேயே  திகைத்து நின்றிருக்கையில் வீட்டின் கதவு திறந்தது

 

அங்கே ஒருவர் நின்றிருந்தார். அவர் சற்று இளைத்தவராகவும் பார்க்க சாதாரணமாகவும் இருந்தார். அவரைத் தனித்துக் காட்டியது, அவர் அணிந்திருந்த தடித்த கண்ணாடி மட்டும்தான். மதுமிதாவால் அவரது கண்களைப் பார்க்க முடியாத அளவிற்கு அவை தடிமனாக இருந்தன. அவள் ஒரு கணம் விதிர்விதிர்த்துப் போனாள்

 

”உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்றார் அவர். தன் லுங்கியை சரியாக கட்டுவதற்காக அதை ஒருமுறை தளர்த்தி மறுபடியும் இறுக்கிக் கட்டினார். அவரது கால்சட்டை பழுப்பு நிறத்தில் இருந்தது

 

’அது வந்து….’ மதுமிதா தடுமாறினாள். ‘ நான் கொஞ்சம் மாங்காய் பறிக்கலாம்னு வந்தேன்’

 

அவர் மெல்ல சிரித்தார். வெற்றிலை கறையால் அவர் பற்கள் சிவந்திருந்தன

’நீ பக்கத்து வீட்டுப் பெண் தானே?’ என்றார்

’ஆம். ’ என்றாள் சற்று அதிர்ச்ச்யடைந்தவளாய்

 

அவர் அவளை நிதானமாகப் பார்த்தார். ‘ ஆமாம். நான் உன்னைப் பார்த்திருக்கேன்’ என்றார். ‘ வா.. வா..’ அவளை முற்றத்திற்கு அடுத்து இருந்த தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மூங்கில் தட்டில் புளிப்பான அந்த மாங்காய் துண்டுகள் உப்பும் மஞ்சளும் தோய்த்து பரப்பி வைக்கப் பட்டிருந்தது. அந்த மதிய வெய்யிலில் அவை இன்னும் ஈரப்பதத்துடனே இருந்தன

 

பதட்டத்துடன் இருந்தாலுமே அவளுக்கு வாயில் எச்சில் ஊறத்தான் செய்தது

 

’எடுத்துக்கோ’ என்றார் அவர். ‘எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ..’

 

மதுமிதா குனிந்து ஒரு துண்டை எடுத்து வாயில் இட்டுக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். மாங்காயின் கதுப்பு அவள் நாவிற்குள் மென்மையாக சுழன்றது. அது மிருதுவாகவும், புளிப்பாகவும், லேசான உப்புக்கரிசலுடனும் இருந்தது. அந்த உப்புக் கரைசல் அவள் வாய்க்குள் வெள்ளம் போலப் பாய்ந்தது. ஒரு எதிர்பாரா கதகதப்பு அவள் உடல் முழுதும் பரவியது. முத்து முத்தான வியர்வைத் துளிகள் தன் நெற்றியிலும் மேலுதட்டிலும் தோன்றுவதையும் தன் உடல் வழியே அது பொங்கி வருவதையும் மதுமிதா உணர்ந்தாள்

 

அந்த மாங்காய்த் துண்டின் சதைப்பற்றான பகுதியை அவள் கடித்து மெல்கையில், அதன் கடினமாக விதைப்பகுதி பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டதை அவள் உணர்ந்தாள். அதேநேரம், தன் மார்பிலும் ஒரு தொடுகையை உணர்ந்தாள். கண் திறந்து பார்க்கையில் அந்த மனிதர் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் கரங்கள் அவளது மார்பின் மேல் இருந்தன. மாங்காயை நிதானமாக கடித்தபடி கண்களைத் தாழ்த்தி அதைப் பார்த்தாள். நகரவும் இல்லை. அந்தக் கரங்கள் அவளது மார்பகங்களை கவ்விப் பிடித்தன. மதுமிதா அமைதியாக பார்த்தபடியே இருந்தாள்

 

அந்த மனிதர் புன்னகைத்தார். ‘ நீ எப்ப விரும்பினாலும் இங்க திரும்ப வரலாம்’ என்றார். ‘உனக்கு என்ன வேணும்னாலும், நீ கேளு’

 

மதுமிதா அந்த தடிமனான கண்ணாடியை உற்றுப் பார்த்தபடி,’ சரி ‘ என்றாள்

 

திரும்பிச் செல்லும்போது, முகப்பில் இருந்த அந்த சிமெண்ட் தரையில் நடக்கையில், மாமரத்திலிருந்து எழுந்த அந்த மெல்லிய காற்றில் மதுமிதாவிற்கு உடல் சிலிர்த்தது.  அந்தக் காற்று தன்னுடன் அந்த பச்சை மாங்காய்களின் கூரிய மணத்தையும் சுமந்து வந்தது.  அந்த மணத்தை அவள் ஆழ்ந்து உள்ளிழுத்து சுவாசித்தாள். அப்பொழுது தன்னுடைய  முலைக்காம்புகள் கூசியதை அவள் உணர்ந்தாள்

 

தமிழில்  காளிப்பிரசாத்

 

  1. ’மூகா மேகலா’ à அஸ்ஸாமிய பட்டு உடை ( பாவடை தாவணி போல. திருமணமானவர்களும் அணியக்கூடியது )
  2. பிஹு à அஸ்ஸாமியத் திருநாள்
முந்தைய கட்டுரைதருமை ஆதீனம் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16