வேனிற்கால ஞாயிற்றுக்கிழமை
சம்சாரிகளெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள்
ஆளோய்ந்த விடுதியில்
யாரையோ எதிர்பார்த்திருக்கிறேன்
யாரேனும் வரக்கூடுமா?
மண்கூஜாவில் ஒரு துளை
வராண்டா மூலையில்
நீண்ட ஒட்டகக் கழுத்துடன்
சரிந்து கிடக்கிறது
தாகத்துடன் வியர்வையுடன் களைப்புடன்
யாரேனும் வரக்கூடுமா?
கிளிஜோசியக்காரன் நேற்று வந்துபோனான்
கண்காதுமூக்கு நிபுணரின் வீடு கேட்டுவந்த
கிராமத்தானும் போய்விட்டான்
இந்த வீதியில் நேற்று
விதிக்கு மனிதப்பலி தந்த
தீர்க்கதரிசிகளும் மீட்பர்களும் வந்து சென்றனர்
சோலைமரங்களும் பாதைக்கிணறுகளும் தந்து
வாழ்வைப் பறித்துக்கொண்ட சக்கரவர்த்திகள் வந்துசென்றனர்
யுவான்சுவாங்கும் வாஸ்கோடகாமாவும்
வந்துசென்றனர்
இடைக்கடிகாரத்தில் பழைய காலத்துடன்
காந்தி
வந்து சென்றார்.
இந்த மண்கூஜாவின்
கடைசிச்சொட்டும் வடிந்து ஒழிய
புரட்சிவாயாடிகள் பிளீனம் விளையாடி
வந்துசென்றனர்
வரக்கூடும் என்று ஏற்கனவே தெரிந்த
குட்டிக்கதாபாத்திரங்களெல்லாம் வந்தாயிற்று
ஆனால்
நம் ரயிலில் இருந்து
டல்ஹௌசி இப்போதும் பச்சைக்கொடி காட்டுகிறார்
நம் பசியை நோக்கி
அமெரிக்கக் கோதுமை பல்லிளிக்கிறது
இனியேனும் யாராவது வரக்கூடுமா/.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தாகத்துடன் வருகின்றனர்
வந்தவர்கள் மீள்வதில்லை
மணமாகவோ முகமாகவோ
ஒவ்வொரு வடிவில்
இங்கேயே நீடிக்கிறார்கள்.
கொடிகள் ஊர்வலங்கள் கூச்சல்கள்
மக்கள்நல அமைச்சர்கள்
என்னும் வேடங்களில்
பழைய மன்னர்கள் தொடர்கிறார்கள்
தலைக்கு அணைவைத்த கை
பாம்பாக மாறி
கொத்தவருவதுபோல
உளறல்களும் விம்மல்களும் சிதற
நம் தூக்கம் சிதைகிறது
இனி யாரேனும் வரக்கூடுமா?
முற்றத்து வேப்பமரத்தில் காகங்களின் மாநாடு
எதிர்காலம் தங்களைப்போலவே இருண்டது என
அவை நம்புகின்றன
எந்தக்காகவும் விருந்து வருவதை அறிவிக்கவில்லை
எத்திசையிலும் வரவேற்பொலி எழவில்லை
எனினும்
யாரோ வரப்போகிறார்கள் என்று துள்ளிக்குதிக்கிறேன்
ஏரியோரம் பூக்கள் வாடும்
இந்த நடுமதியவேளையில் எவர் வரப்போகிறார்கள்?
எனதருமை நண்பனா?
எதிர்கால மனைவியா?
யார் வரக்கூடும்? யார் வரக்கூடும்?
பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுடன்
துறைமுகத்தில் ஒரு புதிய கப்பலா?
வானில் ஒரு புதிய விண்மீனா?
விடுதலைப்படையா?
யார் வரவிருக்கிறார்கள் இந்த நடுப்பொழுதில்?
யார்? யார்?
அதோ பானர்ஜி சாலை வழியாக
ஓர் ஆட்டுமந்தை செல்கிறது
இன்று ஞாயிற்றுக்கிழமை
மாதாகோயில் கலைந்திருக்கலாம்
காலைக்காட்சி முடிந்திருக்கலாம்
அந்த ஆட்டுமந்தை செல்கிறது
அவையெல்லாம் நொண்டுகின்றன
கசாப்புக்கடைக்காரனின் வாள்முனை என
இந்த கோடைகாலச் சாலை மின்னுகிறது
பாவம், கௌதமன் இப்போது வராமலிருக்கட்டும்
வந்துவிட்டான் என்றால் என்னதான் செய்வான்?
வெறும் பத்துவிரல்களின் கருணையால்
இவற்றில் எந்த முடத்தை அவன் மீட்பான்?