பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 11
இடைநாழியினூடாக சாரிகர் சத்யபாமையின் பின்னால் நடந்தார். அந்த நாளின் அத்தனை நிகழ்வுகளும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டால் போதும் என்னும் எண்ணம் அவருள் நிறைந்திருந்தது. மானுட உள்ளம் எப்போதுமே பரபரப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. அன்றாடத்தின் மாற்றமின்மையையும் சலிப்பையும் போக்கும் எதுவும் உவகையையே அளிக்கிறது. அது தீங்கானதாக இருப்பினும், கொடியதாயினும். ஆனால் உள்ளத்திற்கு ஒரு கொள்ளளவு உள்ளது. அது நிறைந்ததும் பரபரப்பே சலிப்பூட்டுகிறது. பின்வாங்கி செயலின்மையில் சுருண்டுகொள்ள விழைகிறது அகம்.
தன் உள்ளம் அனைத்து புதுச் செய்திகளையும் அகற்றுவதை அவர் உணர்ந்தார். ஒவ்வொரு சிறிய தகவலையும் தொட்டுத்தொட்டு பேராவலுடன் சேர்த்துக்கொண்டிருந்தது அது. இப்போது மிகக் கொடியது ஒன்று நிகழ்ந்தால், மிக மிக அரியதென ஒன்று நிகழ்ந்தால்கூட உள்ளம் அதை பொருட்படுத்தாது. அதை எளிதில் கடந்துசென்றுவிடவே விழையும். மானுட உள்ளத்தின் இயல்புநிலை என்பது ஓய்வும் செயலின்மையும்தான். பெரும்பாலான விலங்குகள் பசியோ அச்சமோ இல்லாதபோது அமைதியாக செயலற்று அமைந்திருக்கின்றன. வேட்டையில் தப்புதலில் இருக்கும் இன்பம் என்பது சற்றுநேரத்திற்கு மட்டுமே. உடலின் எல்லை மிகக் குறுகியது. அதைவிட குறுகியது உள்ளத்தின் எல்லை.
உத்தரையின் அறைவாயிலில் நின்ற சேடி சத்யபாமையைக் கண்டதும் தலைவணங்கினாள். அவளிடம் சத்யபாமை தன் வருகையை அறிவிக்கும்படி கோரினாள். அவள் சென்றுவந்து தலைவணங்கி கதவைத் திறக்க அவள் உள்ளே சென்றாள். சாரிகர் அவளைத் தொடர்ந்து செல்லும்போது அவளுடைய நிமிர்ந்த தலையைப் பற்றிதான் எண்ணிக்கொண்டார். அவள் பல நாட்களாக இந்த உச்சநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறாள். உண்மையில் அது தொடங்கி நெடுநாட்களாகியிருக்கும். இளைய யாதவர் துவாரகை விட்டு நீங்கியதுமே தொடங்கியதாக இருக்கும். அல்லது தன் வாழ்நாள் முழுக்கவே அவள் இப்படி உச்சங்களிலிருந்து உச்சங்களை நோக்கித்தான் தாவிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு சலிப்பதில்லையா? களைத்து எதையும் அறியாமல் ஆகிவிடுவதில்லையா அவள் உள்ளம்? அச்சலிப்பின்மைதான் அரசுசூழ்பவர்களுக்குரிய முதன்மைத் தகுதியா?
பெருவணிகர்கள், படைத்தலைவர்கள் என உலகியலை ஆளும் ஒருவர் அடையவேண்டிய தகுதியே உலகியலின் உச்சநிலைகளில் சலிக்காமல் இருந்துகொண்டிருப்பதுதானா? ஒருகணமேனும் ஓய்வை விழைபவர், விலக எண்ணுபவர் தன்னை ஒப்படைத்துவிட்டவர். சோர்வும் சலிப்பும் வந்து அவரை எக்கணமும் சூழ்ந்துகொள்ளும். அவர் சொற்களில், முகத்தில் அது வெளிப்படும். அவர்கள் வெல்லப்படுவார்கள், விலக்கப்படுவார்கள். அவள் இன்னமும் அரசி, ஒவ்வொரு துளியிலும் அரசி. அரசியெனப் பிறந்தவர்கள் என தேவயானியை, சத்யவதியை, தமயந்தியை, திரௌபதியை சொல்வார்கள். இவளையும் சொல்லியாகவேண்டும். இவளை நம்ப முடியும். இவள்மேல் அனைத்தையும் சுமத்திவிட்டு இளைப்பாற முடியும். அரசன் தன் குடிகளுக்கு அளிக்கவேண்டியது அந்நம்பிக்கையை மட்டும்தான்.
சத்யபாமையைக் கண்டதும் அஸ்வன் எழுந்து தலைவணங்கினார். சத்யபாமை “அமைச்சர் உங்கள் கோரிக்கை என்ன என்று சொன்னார். மைந்தனின் நிலையையும் இளவரசியின் நிலையையும் அறிவேன். அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு முடிவெடுக்கலாமென்று எண்ணினேன்” என்றாள். அஸ்வன் “அரசி, இளமைந்தர் உயிர்வளர்கிறார். அவர் உண்ணும் பாலின் அளவு மிகுந்துகொண்டே இருக்கிறது. இளவரசியின் உடலில் அனல் அடங்கிக்கொண்டே இருக்கிறது. அது எத்தனை பொழுது நீடிக்கும் என்று சொல்ல முடியாது” என்றார். ”மைந்தனை நான் பார்க்கமுடியுமா?” என்று சத்யபாமை கேட்டாள். “மூன்று வாரம் வரை அவர் உள்ளிருந்து வெளிவர முடியாது” என்றார் அஸ்வன்.
அவள் உத்தரையின் அருகே சென்றாள். உத்தரை அவர் முதலில் கண்ட அதே நிலையில் படுத்திருந்தாள். அவளருகே குனிந்து அமர்ந்து “உத்தரை! உத்தரை!” என்று மெல்லிய குரலில் அழைத்தாள். உத்தரை உடலில் எந்த அசைவும் தென்படவில்லை. மீண்டும் மீண்டும் சத்யபாமை “உத்தரை! உத்தரை!” என்று அழைத்துக்கொண்டிருந்தாள். பின்னர் “உன் மைந்தன் உயிருடன் இருக்கிறான். அவன் அஸ்தினபுரியை ஆள்வான் என்கிறார்கள் நிமித்திகர். அவன் உயிருடன் வளரவேண்டுமென்றால் இப்போது உன்னைவிட்டு நீங்கியாகவேண்டும்” என்றாள்.
உத்தரையின் முகத்தையே சாரிகர் நோக்கிக்கொண்டு நின்றார். அதில் எந்த மாற்றமும் தென்படவில்லை. “நோக்குக, உனக்கு வேறுவழியில்லை! உன் உடல் தேறினால் நீயும் மைந்தன் அருகே செல்லலாம்” என்றாள் சத்யபாமை. “உன் ஒப்புதலுடன் மைந்தனை துவாரகைக்கு அனுப்புகிறேன். நீ ஒப்புதல் அளிக்கவேண்டும்.” அவள் மெல்ல முனகினாள். “என்ன சொல்கிறாய்?” என்றாள் சத்யபாமை. உத்தரை மேலும் முனகினாள். “என்ன சொல்கிறாய்?” என்று சத்யபாமை மீண்டும் கேட்டாள். அவளுடைய முனகல் சொல் போலவே ஒலித்தது. சத்யபாமை சாரிகரிடம் “கேட்டுச்சொல்க!” என்றாள். சாரிகர் அருகே மண்டியிட்டு அவள் உதடுகளின் அருகே செவியை வைத்தார். முனகலோசை மீண்டுமொருமுறை எழுந்தது. வெறும் ஒலியாக கேட்டது அது. மீண்டுமொருமுறை கேட்டதும் அவர் மெய்ப்புகொண்டார். அதன் பின்னரே அச்சொல் என்ன என்று சித்தம் உணர்ந்தது.
அவர் எழுந்து “காண்டீபம்” என்று சொன்னார். “என்ன?” என்றாள். “காண்டீபம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றார் சாரிகர். “ஆம், அதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறாள்” என்று சத்யபாமை சொன்னாள். “மாயையிலிருந்து எவரும் விடுபடுவதில்லை” என்றபின் திரும்பி அஸ்வனிடம் “பீதரே, நீங்கள் மைந்தனை துவாரகைக்கு கொண்டுசெல்லலாம், என் ஒப்புதல் உண்டு. உரிய ஆணையை சற்றுநேரத்தில் பிறப்பிக்கிறேன்” என்றாள். அஸ்வன் தலைவணங்கினார். “இன்று இப்போதே கிளம்புவது நன்று என்பது என் எண்ணம். கடற்கரைக் காற்று என்றால் இச்சிப்பி மேலும் சிலநாள் வாழும்.”
சத்யபாமை “இன்று மாலையாகிவிட்டது” என்றாள். “இப்போதே கிளம்பினால் இரவுக்குள் சென்றுவிடுவோம். பொழுது கடத்துவது நன்றல்ல. மேலும் இந்தச் சிப்பியுடன் பாலையின் எரியும் வெயிலில் செல்வதும் உகந்தது அல்ல” என்றார் அஸ்வன். “எனில் மேலும் இருபது காவலரை படைக்கலங்களுடன் உடன்வரச் சொல்கிறேன்” என்று சத்யபாமை சொன்னாள். அஸ்வன் “இப்பேழையின் அருகே அமர்ந்திருக்கையில் இதற்குள் என் உள்ளத்தின் ஒரு பகுதி வாழ்கிறது. அதனூடாக நான் அறிவதே என்னை நடத்துகிறது. மைந்தர் வளர்துயிலில் இருக்கிறார்” என்றார். சத்யபாமை உத்தரையை நோக்கினாள். “அவருடைய குருதிப்பெருக்கு நின்றுவிட்டது. உரிய மருந்துகளுடன் என் மாணவர்களில் ஒருவர் இங்கே இருப்பார்” என்று அஸ்வன் சொன்னார்.
சத்யபாமை வெளியே கிளம்பும்போது சாரிகரிடம் “வருக!” என அழைத்தாள். அவர் அவளுடன் வெளியே சென்றார். “நீங்களும் உடன் செல்லுங்கள்” என்று சத்யபாமை சொன்னாள். “நான்…” என அவர் தயங்கினார். “என்னை இளவரசியின்பொருட்டே அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். “இங்கே நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அவர்களுடன் செல்வதே நல்லது. மைந்தனின் பொருட்டே அஸ்தினபுரி கவலை கொள்ளும்” என்றாள் சத்யபாமை. “மேலும் துவாரகையில் இப்பீதர்களுக்கு அணுக்கமானவர்கள் எவருமில்லை. அவர்கள் கோருவன அங்கே செய்யப்படவேண்டும். நீங்கள் அங்கே ஆணையிடும் நிலையில் இல்லை என்றாலும் அந்தணராக உங்கள் சொல் எங்கும் மீறப்படாது.”
சாரிகர் “அரசி…” என்று தயங்கியபடி அழைத்தார். “அங்கே மறைந்த பேரரசர் துரியோதனனின் மகள் லக்ஷ்மணை ஆட்சி செய்கிறார் என்றீர்கள். அவர் தன் தந்தையரைக் கொன்று அஸ்தினபுரியை வென்று ஆளும் யுதிஷ்டிரன் மீதும் இளைய யாதவர் மீதும் கடுஞ்சினம் கொண்டிருப்பதாகவும் சொன்னீர்கள்” என்றார். “இக்குழவி பாண்டவர்களின் எஞ்சும் துளி. இது அழிந்தால் பாண்டவர்களின் கொடிவழி அறுந்து போய்விடும்.” சத்யபாமை “நீர் எண்ணுவதென்ன என்று தெரிகிறது. இக்குழவிக்கு கிருஷ்ணையால் தீங்குவரக்கூடும் என்றா?” என்றாள். “அவர் நேரடியாக தீங்கிழைக்க வேண்டியதில்லை. இப்போது உரியவை அனைத்தையும் செய்யாமலிருந்தால், செய்வனவற்றை சற்றே பிந்தினால், நேரடியாக ஈடுபடாமல் தவிர்த்துவிட்டால்கூட இம்மைந்தன் வாழமாட்டான்” என்றார் சாரிகர்.
பெருமூச்சுடன் “உங்கள் ஐயமும் அச்சமும் புரிந்துகொள்ளற்குரியதே” என்று சத்யபாமை சொன்னாள். “அவளுடைய வஞ்சம் இயல்பானது, ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்.” அவள் முகம் ஒளிகொண்டது. புன்னகை இன்றி ஒரு முகத்தில் ஒளியெழுவதை அப்போதுதான் சாரிகர் கண்டார். “ஆனால் இப்புவியில் எந்தக் குழந்தையையும் ஈன்ற அன்னையிடம் என நம்பி ஒப்படைப்பதென்றால் அது கிருஷ்ணையிடமே. முற்றெதிரியின் குழந்தையே ஆயினும். ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்” என்றாள் சத்யபாமை. அவர் மெய்ப்புகொண்டு அறியாமல் கைகூப்பினார். புன்னகையுடன் “செல்க, நன்றே நிகழும்!” என்றாள் சத்யபாமை. சாரிகர் தலைவணங்கினார்.
சாரிகர் தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கைகளைக் கோத்து தலைகுனிந்து எச்சொற்களும் திரளாத உளப்பெருக்கில் ஆழ்ந்திருந்தார். உடல் எடைகொண்டபடியே வந்தது. ஏவலனிடம் கதவை மூடும்படி சொன்னார். வெளிக்காற்று சாளரம் வழியாக உள்ளே சுழித்தது. சாளரக் கதவுகளையும் மூடும்படி அவர் சொன்னார். அவன் அனைத்துக் கதவுகளையும் மூடியபோது அறைக்குள் இருட்டு நிறைந்தது. அவர் மஞ்சத்தில் உடலை நன்கு சுருட்டிக்கொண்டு படுத்தார். கருக்குழவிபோல. அவர் கண்களுக்குள் இருள் நிறைந்தது. உடலுக்குள் பரவி அனைத்தையும் மூடியது. இருள் குளிர்ந்திருந்தது. நனைந்த மரவுரிமெத்தைபோல அனைத்தையும் அழுத்தி மூடியது.
அவர் விழித்துக்கொண்டபோது உள்ளம் சற்றே தெளிந்திருந்தது. எழுந்து அமர்ந்தார். தான் கண்ட கனவை எண்ணிக்கொண்டார். விழிப்பதற்கு முன்னர்தான் அக்கனவை கண்டிருந்தார். ஆனால் அது மிகத் தொலைவில் இருந்தது. அவர் ஒரு படகில் சென்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு பெருநகர் இருந்தது. முகில்களால் ஆனது. வெண்முகில்களே சுவர்களும் கூரைகளும் குவடுகளுமாக அமைந்தது. அதன்மேல் கருடக்கொடி பறந்துகொண்டிருந்தது. அவர் அருகே அமர்ந்திருந்த கரிய முகமும் வெண்பற்களும் கொண்ட மாலுமி “அது கடந்துசெல்கிறது” என்றான்.
அவர் திரும்பி நோக்கியபோது அந்த முகில்நகரம் கரைந்து வானில் மறைந்துகொண்டிருப்பதை கண்டார். பிசிறுகளாக, புகையாக, வான்கீற்றாக மாறி அது முழுமையாக வடிவிழந்தது. அவர் பெருமூச்சுடன் திரும்பி மாலுமியிடம் “அது மீண்டும் பிறந்தெழுமா?” என்றார். “ஆம், ஆனால் எப்போது என்று சொல்லமுடியாது” என்றான். தன் கையில் ஒரு முத்துச்சிப்பி இருப்பதை அவர் கண்டார். அது ஒரு வெற்றிலைப் பேழை. அவர் அதை திறந்தபோது உள்ளே பச்சைநிறத் தளிர்வெற்றிலைகளின் அடுக்கும் பொன்னிறப் பாக்கும் சுண்ணச் சிப்பியும் இருந்தன. அவர் ஒரு வெற்றிலையை எடுத்து நீவினார். அதில் சுட்டுவிரலால் எழுதினார். ஒரு சொல்லை.
அச்சொல் என்ன? அவர் ஒருமுறை தன் அகம் நோக்கி வினவிவிட்டு பெருமூச்சுடன் எழுந்தார். ஏவலனிடம் “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றார். பரபரப்பாக தன் பொருட்களை எடுத்துக்கொண்டார். ஏவலன் அவர் பொதிகளை சேர்த்தமைக்க உதவினான். தன் பொருட்கள் என அங்கே கொண்டு வந்தவை மிகக் குறைவே என உணர்ந்தார். அவர் அங்கே வந்து இரு இரவுகளே கடந்துள்ளன என்பதை அதற்குப் பின்னரே தெளிந்தார். இரு இரவுகளில் நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தார். அதற்குப் பின்னால் பெரும்பாலை. அதற்குப் பின் ஒரு நீள்பாதை. அதற்கும் அப்பால் இருந்தது அஸ்தினபுரி. அவரால் அதை நினைவுகூரக்கூட முடியவில்லை.
அவர் வெளியே வந்தபோது பீதர்கள் ஒருங்கிவிட்டிருந்தார்கள். அவர்களின் தேரில் அந்தப் பெரிய பேழை கொண்டுவந்து ஏற்றப்படுவதை அவர் நோக்கிநின்றார். பீதர்நாட்டு இளைஞர்களில் ஒருவன் அருகே நின்று அப்பேழை உறுதியாக தேரின் தட்டின் நடுவே அமைவதை நோக்கி உறுதிப்படுத்தினான். அரண்மனையின் அறைக்குள் இருந்து அவர்களின் பொருட்களைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவலர்கள் தங்கள் புரவிகளை சேணம் அமைத்து சித்தப்படுத்திக்கொண்டிருந்தனர். அவை கிளம்பும் செய்தியை அறிந்து ஊக்கம் அடைந்து தசைகள் விதிர்க்க எடைமிக்க குளம்புகளை எடுத்துவைத்து நிலையழிந்து சுற்றிவந்தன.
சாரிகர் அரண்மனை ஏவலனிடம் “அரசியின் ஓலை ஒருக்கமாகியிருக்கிறதா என்று நோக்கி வா” என கூறி அனுப்பினார். அவர் உள்ளம் ஓய்ந்து கிடந்தது. உள்ளம் அத்தனை களைப்புறுமா என அவரே வியந்துகொண்டார். மாலை அணுகிக்கொண்டிருந்தது. முற்றத்தில் வெயில் சரிந்து விழுந்திருந்தது. அவர் வெளிச்சத்தை நோக்க முடியாமல் திரும்பிக்கொண்டார். கண்கள் கூசி நீர் வழிந்தது. கிளம்புவது வரை உள்ளே சென்று அரண்மனை அறைக்குள் அமர்ந்திருந்தாலென்ன என்று எண்ணினார்.
ஆனால் அதற்குள் அவருக்கான ஆணையோலையுடன் ஏவலன் திரும்பி வந்தான். அவர் அதை பிரித்து ஒருமுறை சொல்லோட்டி நோக்கிய பின் மீண்டும் குழலில் இட்டார். “நம் வீரர்களும் கிளம்பியாகவேண்டும். அரண்மனையிலிருந்து காவலர் குழு ஒன்று வருவதாகச் சொல்லியிருக்கிறது” என்றார். ஏவலன் “அவர்கள் கோட்டைவாயிலில் அணிவகுத்திருக்கிறார்கள்” என்றான். உள்ளிருந்து தன் மாணவனின் தோளில் கைவைத்தபடி மருந்துப்பேழையுடன் அஸ்வன் வந்தார். சிற்றடி எடுத்துவைத்து அணுகி அவரை நோக்கி புன்னகைத்தபின் தேரிலேறிக்கொண்டார்.
சாரிகர் முன்னால் சென்று “கிளம்புவோம்” என்று கைதூக்கிக் காட்டினார். வீரர்கள் அணிவகுத்தனர். கொடிவீரன் முன்னால் செல்ல அதைத் தொடர்ந்து வீரர்களின் நிரை சென்றது. தேர் அதற்குப் பின்னால் செல்ல சாரிகர் அதற்குப் பின்னால் நின்ற தன் தேரில் ஏறிக்கொண்டார். அந்த நிரை மெல்ல சாலையில் ஏறி சீரான இடைவெளிகளுடன் செல்லத்தொடங்கியது. ஊர் முழுக்க மஞ்சள் வெயில் பரவியிருந்தது. வழியருகுகளில் நின்றிருந்தவர்கள் அவர்களை உற்று நோக்கினர். சிலர் கைசுட்டி ஓரிரு சொற்களில் பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களின் உதடுகளையே கூர்ந்து நோக்கினார். அவர்கள் பேசுவதென்ன என்பதை உய்த்துணர முயன்றார். கோட்டைவாயிலை அடைவதற்குள் அவரால் அவர்களின் சொற்களை உணரமுடிந்தது. அவர்கள் எவருக்கும் அதில் அஸ்தினபுரியின் இளவரசன் செல்வது தெரியவில்லை என்று புரிந்தது.
கோட்டையின் உள்வாயிலில் இருபது பேர் கொண்ட படை காத்துநின்றது. அவர்கள் சாரிகரைக் கண்டதும் வாள் தாழ்த்தி வணங்கினர். நிரையின் முகப்பில் செல்லும்படி சாரிகர் ஆணையிட்டார். அவர்கள் நிரைவகுத்து கொடியுடன் முன்னால் சென்றனர். அவர்கள் கோட்டையைவிட்டு வெளியேறியபோது சாரிகர் திரும்பிப்பார்த்தார். கோட்டைவாயில் பொன் என சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அதன் முகப்பு முற்றத்தின் மென்மணல் மேல் மஞ்சள் ஒளி பரவிக்கிடந்தது. அவர் அதை நோக்கியபடி விழிகளை வெறித்து அமர்ந்திருந்தார். கோட்டை மிதந்து அலைபாய்ந்து அகன்று சென்றது.
சாரிகர் புல்வெளி அலையலையாக பின்னகர்ந்து செல்வதை கண்டார். பசுக்கள் கூட்டங்களாகத் திரண்டு மணியோசையுடன் நிரைகொண்டு கோட்டை நோக்கி செல்லத்தொடங்கின. அவை உள்ளே நுழைவதற்கு ஒரு சிறுவாயில் இருப்பதை அவர் கண்டார். அவை அங்கே கூடித்தேங்கி ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே சென்றன. அங்கே நின்றிருந்த ஆயர்கள் அவற்றைத் தட்டி உள்ளே அனுப்பினர். வெண்ணிறப் பசுக்கள் மஞ்சள் மினுப்பு கொண்டிருந்தன. மாந்தளிர்நிறப் பசுக்கள் அனலென்றே சுடர்ந்தன. கரிய பசுக்களின் வளைவுகளில் மரவுரிச்செம்மை தெரிந்தது.
மென்மணல் அலைகளால் ஆன பாலை வரத்தொடங்கியது. அவர் தொலைவான்கோட்டின் மேல் கதிர்வட்டம் நின்றிருப்பதை கண்டார். அதை அனற்சுழல் ஒன்று சுற்றியிருந்தது. அது மெல்ல சுழன்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. களைத்த பறவைகள் ஒளியைத் துழாவியபடி ஊடாக கடந்து சென்றன. மணற்கதுப்புகளில் காலடிகள் பதிந்திருந்தன. அவற்றின்மேல் காற்று மென்மணலை அள்ளிப்பொழிந்தது. மணல்வளைவுகளின் விளிம்புகளில் அனல்பொறிகள் என சுடரும் மணல் அலையெழுந்தது. காற்றில் மண்வெந்த மணம். எங்கிருந்தோ ஓர் ஓநாயின் மெல்லிய ஊளை கேட்டது. வண்டிகளின் சகடங்களும் புரவிக்குளம்புகளும் மண்ணில் பதிந்துசெல்லும் ஓசை அறியா மொழியாலான ஓர் உரையாடல்போல் ஒலித்தது.
அந்தி இருண்டது. செம்மை விரைவாகவே அகன்று தொடுவான்கோட்டின் வாள்முனைக் கூரொளி மட்டுமே எஞ்சியது. மணல் அலைவளைவுகள் மிளிர்ந்து கிடந்தன. வானத்தில் விண்மீன்கள் பிதுங்கி எழத்தொடங்கின. மெல்லிய சிறகடிப்போசையுடன் புறா ஒன்று வானில் மிதந்து இறங்கி முன்னால் சென்ற துவாரகையின் காவலனை அணுகியது. அவன் அதைப் பிடித்து அதன் காலில் இருந்த ஓலையை எடுத்துப் படித்துவிட்டு புரவியைத் திருப்பி அவரை நோக்கி வந்தான். அருகணைந்து சொல் இன்றி அதை அவரிடம் தந்தான்.
அவர் அதற்குள் அதன் செய்தியை உய்த்தறிந்துவிட்டிருந்தார். அதை சற்று தூக்கி காற்றிலிருந்த கசிவொளியில் படித்தார். சுருக்கமான ஒற்றை வரி அஸ்தினபுரியின் இளவரசி உத்தரையின் சாவை அறிவித்தது. அவர் அதை நெடுநேரம் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் தேர் சென்றுகொண்டே இருந்தது. தேருடன் வந்துகொண்டிருந்த வீரன் “ஆணையில் ஏதேனும் மாறுதல் உண்டா?” என்றான். “இல்லை, செல்க!” என்றபின் “பீதர்களின் வண்டிக்குச் சென்று முதிய பீதரிடம் இச்செய்தியைக் கூறுக!” என்றார். அவன் தலைவணங்கி “ஆணை” என்றபின் புரவியைச் செலுத்தி முன்னால் சென்றான்.
அவன் பீதர்களின் தேரை அணுகி அஸ்வனிடம் செய்தியை அறிவிப்பதை சாரிகர் பார்த்தார். அவர் தலையை வெளியே நீட்டி அச்செய்தியை வெறுமனே கேட்டுக்கொண்டார். பின்னர் ஒரு சொல் உரைத்து தலையை பின்னிழுத்து திரைச்சீலையை மூடிக்கொண்டார். தேர்களின் விரைவு சற்றும் குறையவில்லை. சாரிகர் நெஞ்சுக்குள் ஒரு விம்மலை உணர்ந்தார். மூச்சு திரண்டு சிக்கிக்கொண்டதுபோல. அதை வெளிவிட விழைபவர்போல மூச்சை இழுத்து இழுத்து விட்டார். ஆனால் அது அவ்வண்ணமே இருந்தது. அவர் செருமிக்கொண்டும் முனகிக்கொண்டும் தேர்ப்பீடத்தில் அசைந்து அமர்ந்தார்.
இருள் மெல்ல சூழ்ந்துகொண்டது. வானில் விண்மீன்கள் பிதுங்கி எழுவதுபோலத் தோன்றின. அவர் அவற்றை அண்ணாந்து நோக்கியபடியே சென்றார். எத்தனை கோடி! வானமென்பதே விண்மீன்களை செறிவாக அடுக்கி உருவாக்கப்பட்ட ஒரு வளைகூரைதான் போலும். விண்மீன்களின் ஒளி பெருகிக்கொண்டே வந்தது. நீல வெளிச்சம் பெற்று மணற்குவைகள் தன்னொளி கொண்டன. ஓநாய் ஒன்றின் ஓசை அகலே கேட்டு அடங்கியது.
அவர் எண்ணங்களில் ஆழ்ந்து விழிநோக்கு சித்தத்தை அடையாமலாகி மீண்டும் வானை நோக்கியபோது திடுக்கிட்டார். வானில் ஒரு கோட்டுருவக் கரடி தெரிந்தது. நோக்கை விலக்கி மீண்டும் பார்த்த போதும் அவ்வண்ணமே தெரிந்தது. கரடியா? யவனர் வானில் ஒரு விண்மீன்கூட்டங்களை கரடி என்பார்கள் என கேட்டிருந்தார். அதை பலமுறை முயன்றும் பார்க்கமுடியவில்லை. அவர் நோக்கிக்கொண்டே இருக்க அது சிதைந்து உருவழிந்தது. அது எழுபடிவர் விண்மீன்தொகை என்பார்கள். அவர் விழிகளால் தொட்டுத்தொட்டு ஏழு படிவர்களையும் அடையாளம் கண்டார். கிரதுவும், புலஹரும், புலஸ்தியரும், அத்ரியும், அங்கிரஸும், வசிட்டரும், மரீசியும் ஒருவரை ஒருவர் நோக்கி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தனர். ஊழ்கம் அவர்களை மேலும் மேலும் சுடர்கொள்ளச் செய்தது.
அதில் வசிட்டரை கூர்ந்து நோக்கினார். எழுபடிவரில் அவரை அடையாளம் கண்டுகொண்டால் அருகே அருந்ததியை காணமுடியும். நாணும் குலமகள். வசிட்டரின் அருகே வானில் பாதி புதைந்திருப்பாள். எனினும் தன் ஒளியால் தன்னை வெளிக்காட்டிக்கொண்டும் இருப்பாள். வசிட்டரின் ஒளி பெருகிச் சொட்டிய துளி என. அவர் அருந்ததியை பார்த்தார். விழியிமைத்தாலும் அது மறைந்துவிடும் என எண்ணியதுபோல் நோக்கிக்கொண்டே இருந்தார்.
விழிமயக்கா எனத் தெரியவில்லை. அவர் அருந்ததியின் அருகே அருந்ததியில் பாதி மறைந்ததுபோல் பிறிதொரு மீனை கண்டார். அருந்ததியின் ஒளிநிழல். விழி திருப்பியபோது அவர் வசிட்டர் அருகிலும் இன்னொரு ஒளிநிழலை கண்டார். இணைபிரியாதவர்கள், ஒருவரை ஒருவர் தவம்செய்பவர்கள். ஆனால் அது மெய்யல்ல. அவர்கள் இருவரும் தங்கள் ஒளிர்நிழலையே தவம் செய்கிறார்கள். தாங்களே தங்களுக்கு துணையெனக் கொண்டு வானில் இருக்கிறார்கள்.
ஆனால் அது விழிமாயம் என உடனே தெரிந்தது. ஓர் இமைப்பில் அந்த இரட்டைத்தன்மை அகன்றுவிட்டது. அவர் தளர்ந்து தேர்த்தட்டில் கால்நீட்டிச் சாய்ந்து அமர்ந்துகொண்டார். மீண்டும் விண்மீன்களை ஒற்றைப் பெரும் பரப்பாக பார்க்கலானார். விண்மீன்கள் பின்னோக்கி ஒழுக நாவாய் என அவர் தேர் முன்னால் சென்றது. அருகே அமர்ந்திருந்த அந்தக் கரிய மாலுமி ஏதோ சொன்னான். அவர் அவனுக்கு மறுமொழி உரைத்தார். ஒரு சொல். அச்சொல்லுடன் விழித்துக்கொண்டார். அச்சொல் என்ன? அவர் விண்மீன்களில் அதை தேடுவதுபோல் அமர்ந்திருந்தார்.
தேர் ஒரு கல் மேல் ஏறி அமைந்து உலுக்கிக்கொண்டது. அவர் உடல் அதிர்ந்தமைந்தபோது அவருள் அச்சொல் இருந்தது. அது எப்போதுமே அங்கேதான் இருப்பதுபோல. “தோன்றா விண்மீன்.” ஆனால் அது நான் இப்போது பார்த்தது. இல்லை, அதை முன்னரே எழுதிவிட்டேன். “தோன்றா விண்மீன்களால் ஆனது வானம்.” அது நான் என் காவியத்தின் முதல் வரியாக எண்ணிக்கொண்டது. நூறுமுறை சொல்லிக்கொண்டது. பாலைநிலத்தில் விண்மீன் நோக்கி படுத்திருக்கையில் அதைத்தான் சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்ணிநுண்தாம்பினால் வானில் பிணைக்கப்பட்ட ஒரு சிறு விண்மீன். அது தோன்றவே இல்லை.
அவர் தன் கையை தேருக்குள் துழாவி ஏட்டுப்பெட்டியை எடுத்தார். திறந்து ஓலையை எடுத்து அதன் மேலேயே வைத்து எழுத்தாணியால் எழுதத் தொடங்கினார். விழிநோக்கு மறைந்த இருளில் கை எழுதிக்கொண்டே சென்றது.