பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 10
சாரிகர் தன் அறையின் மஞ்சத்தில் நினைவு மீண்டார். அவரருகே ஏவலன் நின்றிருந்தான். “துயில்கொள்க… பீதர்நாட்டு ஓய்வுமருந்து தரப்பட்டிருக்கிறது” என்றான். அவர் உள்ளத்தில் எந்நினைவும் இருக்கவில்லை. அவர் வெறுமனே ஏவலனை நோக்கிக்கொண்டிருந்தார். கையூன்றி எழமுயன்றபோது ஓர் உலுக்கலாக அனைத்தும் விழிகளுக்குள் தோன்ற விக்கலோசையுடன் மஞ்சத்தில் விழுந்தார். ஏவலன் நீர்க்குவளையை எடுத்து நீட்ட அதை வாங்கி உடல்முழுக்க சிந்தும்படி அருந்தினார். நீர் உள்ளே சென்று வெம்மையை அணைத்தது. கண்களை மூடி குருதித்தெறிப்புகள் சுழல்வதை பார்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் எழுந்தபோது உடல் ஒருமை கொண்டிருந்தது. “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், அமைச்சரே” என்று ஏவலன் மீண்டும் சொன்னான். “இல்லை” என்று அவர் எழுந்து பீடத்தருகே சென்றார். அதிலமர்ந்துகொண்டு “நெடும்பொழுதாகிவிட்டதா?” என்றார். “ஆறு நாழிகைப் பொழுது” என்றான். “என்ன ஆயிற்று? இளவரசியும் மைந்தனும் எவ்வண்ணம் இருக்கிறார்கள்?” என்றார். “இதுவரை அவர்கள் நலமே” என்றான் ஏவலன். அவர் தன் தலையை கைகளில் தாங்கிக்கொண்டு அமர்ந்தார். மூச்சிளைப்புடன் உடலை குறுக்கிக்கொண்டார்.
கைசுட்டி “ஏடு…” என்றார். ஏவலன் பேழையிலிருந்து ஏடும் எழுத்தாணியும் எடுத்து அளித்தான். நிகழ்வனவற்றை உடனே எழுதிவிடவேண்டும் என அவர் முன்னரே முடிவெடுத்திருந்தார். தொடங்கவேண்டிய வரியைக்கூட நெஞ்சுக்குள் யாத்திருந்தார். ஆனால் அந்த வரிகூட நினைவிலெழவில்லை. எழுத்தாணி ஓலையில் சுழித்துக்கொண்டே இருந்தது. ஒரு சொல் கூட இல்லாமல் உள்ளம் அவ்வாறு ஒழிந்துகிடந்ததே இல்லை. எப்போதெல்லாம் ஓலையும் எழுத்தாணியும் கிடைக்கின்றனவோ அப்போதெல்லாம் எழுதிக் குவித்தவர் அவர். அந்த முதற்சொல் என்ன? அது எவ்வெழுத்தில் தொடங்குவது? அவர் முட்டுந்தோறும் உள்ளம் மேலும் ஒழிந்தது.
எழுத்தாணியை ஓலை மேலேயே வைத்துவிட்டு அவர் எழுந்துகொண்டார். “என் சால்வை” என்றார். ஏவலன் சால்வையை எடுத்து அளிக்க அதை போர்த்திக்கொண்டு நடந்தார். அவருடைய அறையில் இருந்து இடைநாழிகள் வழியாக மைய அரண்மனைக்குள் செல்ல வழி இருந்தது. அதன் இணைப்பாக உத்தரையின் அறை அமைந்திருந்தது. நடக்க நடக்க நெடுந்தொலைவு என்று தோன்றியது. உடல் ஓய்ந்து கால்கள் நீரில் துழாவுவனபோல அசைந்தன. உள்ளம் சலிப்புற்று நோக்கும் காட்சிகளெல்லாம் அழகையும் பொருளையும் இழந்தன. உதடுகள் உலர்ந்திருக்க தொண்டை நீர் நீர் என தவித்தது.
இடைநாழியிலேயே அவர் பீதர்நாட்டு இளைஞனை கண்டார். அவன் புன்னகைத்து உடல் வளைத்து வணங்கினான். “குழவி எப்படி இருக்கிறது?”என்று அவர் கேட்டார். அவனுக்கு சொல் புரியவில்லை. மீண்டும் கேட்டதும் அவன் புன்னகைத்து தலைவணங்கி “உயிருடன்” என்று சொன்னான். அவனால் மொழி கடந்து பேசமுடியவில்லை என்று உணர்ந்து சாரிகர் “நான் அறைக்குள் செல்லலாமா?” என்றார். அவன் “ஆம்” என்றான்.
உத்தரையின் அறையின் வாயிலில் ஏவற்பெண்டு மட்டும் இருந்தாள். “என்ன ஆயிற்று? அரசியர் எங்கே?” என்றார். “இங்குதான் இருந்தார்கள். சற்றுமுன்னர்தான் இருவரும் தங்கள் அறைக்குச் சென்றார்கள்” என்றாள் ஏவற்பெண்டு. “நான் உள்ளே செல்லலாமா? சென்று நோக்கிவந்து சொல்” என்றார். அவள் உள்ளே சென்றுவந்து செல்லலாம் என்று தலைவணங்கினாள். சாரிகர் தயங்கி பின்னர் கதவை அசைத்து ஒலியெழுப்பினார். “வருக!” என்று அஸ்வனின் குரல் கேட்டது. அவர் உள்ளே சென்றார். அவர் மேலும் தயங்கியபடி நின்று பின் உளம்திரட்டி உள்ளே சென்றார்.
அவர் முதலில் பார்த்தது அந்த சிப்பிப் பேழையைத்தான். அது அங்குதான் இருந்தது. அதன்பின் மஞ்சத்தில் உத்தரையை பார்த்தார். அவள் வெண்ணிறமான போர்வை போர்த்தப்பட்டு மஞ்சத்தில் கண்மூடிக் கிடந்தாள். முகம் உயிரில்லாத பொருள்போல தெரிந்தது. இமைகள் வீங்கி இரு சிப்பிகள்போல மூடியிருந்தன. இமைமயிர்கள் முழுக்க உதிர்ந்துவிட்டவை போலிருந்தன. உதடு இறுகி ஒரு சிவந்த சுருக்குமுடிச்சுபோல தெரிந்தது. உடல் முற்றாகவே போர்வையால் மூடப்பட்டிருந்தது. அவளுடைய மஞ்சத்திற்கு அடியில் நெருப்போடு வைக்கப்பட்டிருந்தது. அதில் கரியிலெழுந்த அனல் சீறிக்கொண்டிருந்தது.
அவர் அஸ்வனை வணங்கினார். அவர் கண்களைச் சுருக்கிப் புன்னகைத்து “அவர்களுக்கு வெம்மை தேவையாகிறது” என்றார். ”உடலில் இருந்து குருதி வெளியேறிவிட்டது. குருதிதான் உடலுக்கு வெம்மையை அளிக்கிறது.” அவர் பீடத்தில் அமர்ந்து “வாழ்வார்களா?” என்றார். “வெம்மையை உடல் ஏற்றுக்கொண்டால் வாழ்வார்கள்” என்றார் அஸ்வன். அவர் பெருமூச்சுவிட்டு திரும்பி சிப்பியை பார்த்தார். “இது முத்துச்சிப்பியா? இத்தனை பெரிதாக உள்ளது?” என்றார்.
“இது முத்துச்சிப்பி அல்ல. இது பீதர்நாட்டில் உள்ள ஒருவகை கடற்சிப்பி. முத்துச்சிப்பியின் வகைப்பட்டதே. ஆனால் இயற்கையானது அல்ல. நெடுநாட்களுக்கு முன் எங்கள் நாட்டு மருத்துவர்களால் கடல்நீரிலிருந்து கொண்டுவரப்பட்டு உப்புகலந்த ஆற்றுநீரில் வளர்க்கப்பட்டது. கடலில் இது சற்று குளிர்நீரில் வாழ்வது. ஆற்றில் வெயில்படியும் வெய்யநீரில் வாழும்படி தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. சிப்பியின் அகத்தசை குளிர்ந்தது. இதன் அகத்தசை மானுட உடலளவுக்கே வெம்மையானது. பலநூறு தலைமுறைகள் தவமென முயன்று இதன் உயிரியல்பை மாற்றியமைத்து இவ்வாறு உருவாக்கியிருக்கிறார்கள்.”
“மிகப் பெரியது” என்றார் சாரிகர். “ஆம், இதன் முதல்வடிவுடன் ஒப்பிட மும்மடங்கு பெரியது” என்று அஸ்வன் சொன்னார். அவர் அதை நோக்கிக்கொண்டு “ஒரு கருவறைபோல” என்றார். “ஆம், கருவறையேதான். அக்குழவியின் உடலில் தோல் உருவாகியிருக்கவில்லை. அதை கையால் தொட்டாலே தசை வழன்று வந்துவிடும். தோல் வளர இன்னும் மூன்று வாரமேனும் ஆகும். அதுவரை அது இக்கருவறைக்குள் வாழ்ந்தாகவேண்டும்.” அவர் அந்தச் சிப்பியை பார்த்தார். “அது தன்னுள் வந்திருக்கும் உயிரை அறியும். மென்தசைகளால் சூழ்ந்துகொண்டு உயிர்வெம்மையை அளிக்கும். உணவை நாம் அளிக்கவேண்டும். மைந்தன் வெளிவந்து வாழவேண்டுமென்றால் ஆறு வாரமேனும் ஆகும்.”
“இச்சிப்பி அதுவரை உயிர்வாழுமா?” என்று அவர் கேட்டார். “சிப்பி நீரிலுள்ள மாசுக்களை உண்பது. ஆகவே அது உணவுண்ணுமென்றால் குழவியின் உடலை மாசுக்கள் தொடும். ஆகவே அதற்கு ஆறு வாரமும் உணவு அளிக்கப்படாது” என்று அஸ்வன் சொன்னார். “உணவின்றி அத்தனை நாள் அது உயிர்வாழும். பொதுவாகவே சிப்பிகள் ஒருமாதம் வரை உணவின்றி நீரின்றி வாழ்வன. இது மேலும் திறன்கொண்டது.” அவர் அதை மீண்டும் நோக்கி “கைகளும் கால்களும் தலையும் நெஞ்சும் இல்லாத அன்னை. கருவறை மட்டுமேயானவள்” என்றார். “ஆம், ஆனால் அன்னை. அக்கனிவு அதற்குள் எங்கோ தெய்வ ஆணையென அமைந்துள்ளது” என்றார் சாரிகர்.
சாரிகர் அதை நோக்கியபடி அமர்ந்திருந்தார். உள்ளம் அதுவரை இருந்த எல்லா சோர்வையும் இழந்து ஊக்கம் கொண்டது. ஆனால் அது எழுச்சியாக அமையாது பரவிப் பரவி அமைதியாக மாறியது. ஊழ்கம் கூடுவதுபோல. அச்சிப்பிக்குள் சென்று தானும் ஒடுங்கிவிடவேண்டும் என்பதுபோல. அவ்வறையே ஒரு பெருஞ்சிப்பியாக மாறி தன் கதுப்பால் அவரை மென்மையாக மூடிக்கொண்டதுபோல. குருதிமணம், குருதி வெம்மை, குருதியின் மென்மை. குருதி அவரிடம் கூறியது, அமைக, அமைக, அமைக! அவர் விழிகள் சொக்கிச் சரிந்தன.
தன் தலை அசைய உடல் ஒருபக்கம் தள்ளப்பட்டபோது அவர் விழித்துக்கொண்டார். வாயிலிருந்து நீர் சொட்டியிருந்தது. அதை துடைத்தபடி அஸ்வனை பார்த்தார். சுருங்கிய விழிகள் நடுவே வெண்ணிற மணி அமைந்த இரு நூல் முடிச்சுகள்போல தெரிய அவர் முகம் தளர அசைவில்லாது அமர்ந்திருந்தார். துயிலாமல் அவ்வண்ணம் அமைய பீதர்களால் மட்டுமே இயலும் என அவர் எண்ணிக்கொண்டார். பெருமூச்சுடன் அசைந்தமர்ந்து அந்தச் சிப்பியை நோக்கினார். அக்கருக்குழவி அதற்குள் மீண்டும் தன் ஆழ்துயிலுக்குச் சென்றுவிட்டிருக்கும். நடுவே வந்து உலகைக் கண்டு மீண்டதையே அறியாமல் ஆகிவிட்டிருக்கும். அன்னையின் கருவில் இருக்கையில் அது கண்ட கனவுகள் என்ன? இப்போது அது ஆழியின் அலைகளை, அடித்தளத்து இருளின் செறிவை, நீரெடையின் அழுத்தத்தை, உயிர்ப்பெருக்கை, ஒளிக்கலங்கலை கனவு காண்கிறதா?
அவ்வாறு ஒன்று நிகழக்கூடும் என்பதையே அவரால் நம்ப இயலவில்லை. மெய்யாகவே நிகழ்கிறது, கண்ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. “இது எவராலும் நம்ப முடியாதது” என்றார். அஸ்வன் புன்னகைத்தார். “தேவர்களை, கந்தர்வர்களை நம்பலாம். இதை நம்ப முடியவில்லை” என்றார் சாரிகர். அஸ்வன் பற்கள் தெரிய சிரித்தார். “அக்குழவி எப்படி மூச்சுவிடுகிறது?” என்றார். “குழவியின் உடல் கருவறைக்குள் இருக்கையில் மூச்சுவிடுவதும் உண்பதும் இல்லை. வெளியே வந்ததும்தான் அவை தொடங்குகின்றன. இச்சிப்பித்தசைக்குள் இருக்கையில் உடல் தன்னை கருவறைக்குள் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளும். குறைவான மூச்சு அதற்கு போதும். சிப்பிக்குள் அதற்கான காற்றோட்டம் உண்டு. சிப்பியின் சவ்வுகளால் வடிகட்டப்பட்ட தூய காற்று” என்றார் அஸ்வன்.
“உணவை மட்டும் துளித்துளியாக அளித்தபடியே இருக்கவேண்டும். தூய முலைப்பால். அதுவன்றி எதையும் அவ்வுடல் ஏற்காது. அதை சிப்பியின் சிறு திறப்பினூடாக அமைந்த திரியின் வழியாக அளித்துக்கொண்டிருக்கிறோம்” என அவர் சுட்டிக்காட்டினார். சிப்பிப்பொருத்தினூடாக உள்ளே சென்ற சிறுகுழாய் ஒன்றை அவர் கூர்ந்து பார்த்தார். “இது பீதர்நாட்டு கொடி. பஞ்சுத்திரிபோல பாலை உள்ளே கொண்டுசெல்லும். அதன் மறுமுனை மைந்தனின் வாயில் உள்ளது. வெளியே இந்தச் சிறு சிமிழில் முலைப்பாலை கறந்து ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.” அவர் “அருந்துகிறானா?” என்றார். “ஆம், உள்ளே செல்கிறது. அதுவே நம்பிக்கையூட்டுகிறது” என்றார் அஸ்வன்.
“இத்தகைய மருத்துவமுறையை கேள்விப்பட்டதே இல்லை” என்று அவர் சொன்னார். அவர் “உங்கள் நாட்டு மருந்துமுறை முழுக்கமுழுக்க தாவரங்களைச் சார்ந்தது. எங்கள் மருத்துவமுறை விலங்குகளைச் சார்ந்தது. ஊனும் குருதியும் கொம்பும் குளம்பும் என அனைத்தும் எங்கள் மருந்துகளே” என்றார். “இங்கே இன்று மட்டுமே குழவியை வைத்திருக்க இயலும். துவாரகைக்குக் கொண்டுசெல்வதே உகந்தது என்று தோன்றுகிறது. குழவி வளரத் தொடங்கினால் மேலும் மேலும் முலைப்பால் தேவைப்படும். அதற்குரிய பெண்டிர் அங்குதான் இருப்பார்கள். அத்துடன் இச்சிப்பி உப்புநீராவி கொண்ட காற்றிலேயே நீடுவாழும். இங்கே காற்று வறண்டிருக்கிறது.”
“ஆனால் மைந்தனின் அன்னை இங்குதான் இருக்கிறார்” என்று சாரிகர் சொன்னார். “ஆம், மைந்தனை அன்னையிடமிருந்து பிரித்தேயாகவேண்டும். அன்னையின் முலையில் ஒரு துளி அமுதுகூட இல்லை. அவர் மைந்தனைப் பெற்றதை அவர் உள்ளம் அறியவில்லை, ஆகவே உடலும் உணரவில்லை” என்றார் அஸ்வன். “இச்சிப்பிக்குள் இருந்து மைந்தன் வெளியே வரும்போது தொடர்ந்து முலைப்பால் அளிக்கப்படவேண்டும். முலைப்பாலில் நீராட்டியே ஒருமாத காலம் வைத்திருக்கவேண்டும். பெருநகர் ஒன்றில்தான் அதற்கான வாய்ப்புள்ளது.”
சாரிகர் “உங்களால் இயன்றதை செய்யுங்கள்” என்றார். “அரசியின் ஆணை அனைத்திற்கும் இருக்கும் என்று எண்ணுகிறேன்.” அஸ்வன் “இருப்பினும் முறையான ஆணை தேவை. நீங்கள் அரசியரிடம் பேசி அவ்வொப்புதலை வாங்கி அளிக்க முடிந்தால் நன்று” என்றார். “ஆம், அது என் கடமை” என்று சாரிகர் சொன்னார். எழுந்துகொண்டு உத்தரையை பார்த்தார். “இங்கே இளவரசரை வைத்திருப்பதும் நன்றல்லதான். இங்கே சாவு நிறைந்திருக்கிறது” என்றார். அஸ்வன் நிமிர்ந்து அவரை நோக்கினார். “இளவரசி வாழமாட்டார். ஐயமே வேண்டியதில்லை, அவர் முடிவெடுத்துவிட்டார்” என்றார் சாரிகர்.
சாரிகர் வெளியே வந்தபோது அங்கே சுபத்திரை அவரைக் காத்து நின்றிருந்தாள். அவரை நோக்கி ஓடிவந்து “என்ன சொல்கிறார்? இளவரசி எப்படி இருக்கிறாள்?” என்றாள். “இப்போது நலமாகவே இருக்கிறார்கள் இருவருமே” என்று அவர் சொன்னார். அவள் விழிகள் அசைவிழந்து அவரை நோக்கின. “மைந்தர் உயிரூறிக்கொண்டிருக்கிறார். தாய் உயிர்வற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இருவரும் உயிருடன் இருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். அவள் அவரை நோக்கி மேலும் அணுகி “மைந்தன் உயிருடன் வேண்டும். அதைவிட அவள் உயிருடன் எழவேண்டும்” என்றாள்.
அவள் விழிகள் சிவந்திருந்தன. “அவள் குடியில் மறுமணம் ஏற்கப்பட்டதுதான். புகழ்பெற்ற பேரரசி தமயந்தி அவள் குடியில் பிறந்தவள், அறிந்திருப்பீர். அவள் இதிலிருந்து எழுந்தால் விராடநாட்டுக்கு செல்லமுடியும். அங்கே இன்னொருவரை மணந்து அரசு அமர முடியும். விராடரின் குடியில் எஞ்சியிருப்பவள் அவளே” என்று மூச்சொலியுடன் சொன்னாள். “அவள் இங்கே கவர்ந்துவரப்பட்டவள். நம் குடியால் ஏமாற்றப்பட்டவள். இங்கே அவள் அடைந்தது ஒன்றுமில்லை. அவள் நொந்து ஒரு சொல் உரைத்தால் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மட்டுமல்ல துவாரகையும் எரியும்.”
சாரிகர் அவள் உணர்வுகளை வியப்புடன் பார்த்தார். என்ன சொல்வதென்று அறியாமல் பொதுவாக “அவர் மீள்வது அவரின் எண்ணத்திலேயே” என்றார். “என்னை உள்ளே அனுப்பச்சொல்லுங்கள். நான் அவளிடம் பேசுகிறேன். அவள் இன்னமும் இளையவள். அவளுக்குச் சொல்லப்பட்டவை அனைத்தும் ஆண்கள் பேதையரை ஏமாற்றும்பொருட்டு உரைக்கும் பொய்கள். அவள் அவற்றை நம்பியிருக்கிறாள் என்றால் பேதையென்றே பொருள். பெண்கள் ஆண்களின் முடியுரிமைக்கு குருதிபெற்று முளைக்கச்செய்யும் நிலங்கள் மட்டுமல்ல. அவர்களே முடிசூடி அமர்ந்து நாடாள முடியும். உளம்விழைந்த வாழ்க்கையை அவர்கள் கொள்ளமுடியும்…”
அவர் அவளை வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றார். அவள் உடலில் இருந்து அனலெழுவதுபோல் இருந்தது. “அவள் தமயந்தியை எண்ணட்டும். அவளுடைய மூதன்னை அவளே. எந்த ஆணையும் எண்ணவேண்டியதில்லை. ஆணை எண்ணும் பெண் சிறுமையையும் துயரையும் அன்றி எதையும் பெறப்போவதில்லை. அது காதலாயினும் கணவனாயினும் மைந்தனாயினும் தமையனாயினும் தந்தையாயினும் வேறுபாடில்லை. அவளிடம் நான் சொல்கிறேன், அவள் எழுந்தாகவேண்டும் என்று சொல்கிறேன்.”
“அவரிடம் இப்போது எவரும் பேசமுடியாது, அரசி” என்று சாரிகர் சொன்னார். “அதை நீங்கள் பேச வாய்ப்பிருக்கையில் பேசியிருக்கவேண்டும். இப்போது இச்சொற்களை உரைப்பதனால் என்ன பயன்? அவர்களை இவ்வரண்மனையின் பெண்கள் அனைவரும் வெறுக்கிறீர்கள் என்றீர்கள். இந்தக் குலமே வெறுக்கிறது என்றீர்கள்.” அவள் “இல்லை என அவளுக்கும் தெரியும்… நாங்கள் ஒருவரை ஒருவர் கசந்தது ஏன் என்று இருவருக்குமே நன்கு தெரியும்… இக்கீழ்மையில் இனியும் நெளிவதில் பொருளில்லை என்று தோன்றிவிட்டது. அதை அவளும் எங்கோ உணர்ந்திருப்பாள். அவளிடம் சொன்னால் புரியும்… அவள் செவிகள் திறந்தேதான் இருக்கும். செவிவாயிலில் ஆத்மா வந்து நின்றிருக்கும். என்னை உள்ளே விடும்படி சென்று சொல்லுங்கள். நான் அவளிடம் பேசவேண்டும்” என்றாள்.
“நீங்களே அதை கோரலாம்” என்று சாரிகர் சொன்னார். “நான் வேறொரு பணியின்பொருட்டு அனுப்பப்பட்டுள்ளேன். மைந்தனை உடனே துவாரகைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்கிறார்கள். அதற்கு அரசியின் ஒப்புதல் வேண்டும்.” அவள் உரக்க “இங்கிருந்து கொண்டுசெல்வதா? நான் ஒப்ப மாட்டேன். இங்கிருந்து மைந்தனை கொண்டுசெல்லக்கூடாது” என்றாள். “அதை அவர்களே முடிவுசெய்யவேண்டும்” என்றார் சாரிகர். “அவள் இங்கே நோயுற்றிருக்கிறாள். அன்னையிடமிருந்து மைந்தனைப் பிரிப்பது பெரும்பழி. அவள் நினைவு மீண்டு மைந்தனைக் கேட்டால் யார் என்ன சொல்லமுடியும்?”
அவர் தலைவணங்கி அவளிடமிருந்து விலகி நடந்தார். அவள் அவர் பின்னால் வந்தபடி “நில்லுங்கள், என் ஆணை இது! நில்லுங்கள்! அவளை விட்டு மைந்தனை கொண்டுசெல்ல முடியாது. அதற்கு எவ்வகையிலும் நான் ஒப்ப முடியாது” என்றாள். அவர் நின்று “அரசி, உங்கள் சொற்கள் ஒரு நிலையில் இல்லை. உங்கள் உள்ளமும் நிலையழிந்திருக்கிறது” என்றார். அவள் தளர்ந்து “ஆம், எதையும் சொன்ன பின்னரே நான் உணர்கிறேன். நான் என் நிலையில் இல்லை. அஸ்தினபுரியில் மைந்தனுக்கு நீர்க்கடன் கழித்து மீண்டபோதே நான் பிச்சியாகிவிட்டேன்” என்றாள்.
அவர் உளமிரங்கினார். “அரசி, உங்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுங்கள். இன்றைய நிலையை கையாளும் ஆற்றல் உங்கள் உள்ளத்திற்கு இல்லை. செல்க!” என்றார். அவள் ”இல்லை, என்னால் எங்கும் நிலைக்க முடியவில்லை. இச்சிறுமி இங்கே இவ்வண்ணம் கிடக்கையில் என்னால் அமைய முடியாது…” என்றாள். “நான் சொல்வதை கேளுங்கள். அவளிடமிருந்து மைந்தனைப் பிரிப்பது அவளை கொன்றுவிடும்.” சாரிகர் “அவர் மைந்தன் பிறந்ததையே உணரவில்லை என்று அஸ்வன் சொல்கிறார்” என்றார். “அவர்கள் அதை அறியமாட்டார்கள். அவள் உடலோ உள்ளமோ அறிந்திருக்காது. அவள் ஆத்மா அறியும்…”
சாரிகர் “நீங்களும் உடன் வருக! நான் அரசியிடம் நிகழ்வனவற்றை சொல்கிறேன். அவர் முடிவெடுக்கட்டும். உங்கள் எண்ணங்களையும் அரசியிடம் நீங்கள் சொல்லலாம்” என்றார். அவள் “நான் சொல்கிறேன். அவளால் உணரமுடியும். அக்குழவி அவள் மைந்தன். அவள் அதை பிரியமாட்டாள். அவளை கொல்வதுதான் அது” என்றபடி அவருடன் வந்தாள். அவர் தலைகுனிந்து நடந்தார். அவள் நின்று “நான் திரும்பி அங்கே செல்கிறேன். அவளருகே நான் இருக்கவேண்டும். அவள் அப்படி தனிமையில் கிடக்கலாகாது” என்றாள். சாரிகர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார். அவள் “இல்லை, நான் அரசியை சந்திக்கவேண்டும்” என்றபடி உடன் வந்தாள். பின்னர் மீண்டும் நின்று “என் சொற்களை அவள் செவிகொள்ள மாட்டாள். நான் வருவதில் பொருளில்லை” என்றாள்.
சாரிகர் சத்யபாமையின் அறைவாயிலை அடைந்து தன் வருகையை அறிவிக்கும்படி கோரினார். சேடி சென்று மீண்டு உள்ளே செல்லும்படி தலைவணங்கினாள். அவர் உள்ளே சென்று அங்கே தரையில் எழுத்துப்பீடத்தின் மேல் அமர்ந்திருந்த சத்யபாமையை வணங்கி முகமனுரைத்து அஸ்வனின் கோரிக்கையை சொன்னார். “அஸ்வனின் கோரிக்கை இது. அவர் சொல்வது முறை என எனக்குப் படுகிறது. அங்கேதான் மைந்தனை உயிருடன் வைத்திருக்க முடியும். அந்தச் சிப்பி இங்கே உயிர்வாழாது…” என்றார். கையிலிருந்த எழுத்தாணியால் பீடத்தை நெருடியபடி “ஆம், ஆனால் உத்தரை…” என்றாள் சத்யபாமை.
“அதை நாம் முடிவெடுக்கவேண்டும். அவர் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. இருவரில் ஒருவரை தக்கவைத்துக் கொள்வதுதான் செய்யக்கூடுவது” என்று சாரிகர் சொன்னார். ”அந்த முடிவை அரசி என நீங்கள்தான் எடுக்கவேண்டும். வேறு எவரும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. மேலும் உங்கள் சொல்லே துவாரகையை கட்டுப்படுத்தும்.” சத்யபாமை “நான் துவாரகையின் அரசி. இவள் அஸ்தினபுரியின் இளவரசி. என் முடிவால் அரசியல் சிக்கல்கள் எழக்கூடும்” என்றாள். “மேலும் அரசி என இப்போது நான் முடிவெடுக்கலாம். ஆனால் பெண் என என் உள்ளம் அதை ஏற்கவேண்டும்” என்றாள்.
“எனில் இளவரசி உயிர்துறக்கும்வரை இங்கே காத்திருக்கவேண்டும்” என்றார் சாரிகர். “அதன் விளைவாக மைந்தன் உயிர்துறப்பான் என்றால் அப்பொறுப்பையும் நீங்கள் எடுத்தாகவேண்டும்.” சத்யபாமை அவரை நோக்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவள் விரல்கள் எழுத்தாணியை சுழற்றிக்கொண்டிருந்தன. “மைந்தன் பிழைக்க வாய்ப்புண்டு என்பதே இப்போதுவரை பீதர்மருத்துவர் சொல்வது. அவன் அஸ்தினபுரியின் இறுதித்துளிக் குருதி.”
சத்யபாமை “இப்போது ஒன்று புரிகிறது, அரசர் ஏன் இம்மகவு இங்கு பிறக்கவேண்டும் என முடிவெடுத்தார் என” என்றாள். “அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ எனில் எவரும் இத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன நிகழ்ந்தாலும் அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பழி எழும். அவ்வச்சத்தாலேயே ஒவ்வொருவரும் தங்களை காத்துக்கொள்ள முயல்வார்கள். முடிவெடுக்க மாட்டார்கள்.” சாரிகர் “உங்கள் முடிவெடுக்கும் திறனை நம்பியிருக்கிறார் இளைய யாதவர்” என்றார்.
கதவு வெடித்துத் திறந்து சுபத்திரை உள்ளே வந்தாள். “அது அவள் குழவி. அவளே அறுதிச்சொல் கூறவேண்டியவள். எந்த முடிவென்றாலும் அவள் ஒப்புக்கொண்டாகவேண்டும்” என்றாள். “அவளிடம் கேளுங்கள். அவள் தன் மகவை பிரிய ஒப்புகிறாளா என்று கேளுங்கள். அவள் ஒப்பமாட்டாள். ஒருபோதும் தன் மைந்தனிடமிருந்து அகலமாட்டாள்.” சத்யபாமை “நீங்கள் உங்கள் அறைக்கு மீளுங்கள்… நீங்கள் தெளிவான உள்ளத்துடன் இல்லை” என்றாள். “விண்புகுந்த என் மைந்தனின் குரலை நான் கேட்கிறேன். அவன் கூறுவதையே நான் சொல்கிறேன். அவன் நீங்கள் செய்யவிருப்பதை ஒப்பவில்லை” என்று சுபத்திரை சொன்னாள்.
சேடி பின்னால் வந்து நின்றாள். சத்யபாமை அவளிடம் “அரசியை அவர் அறைக்கு கொண்டுசெல்க! அவர் ஓய்வெடுக்கட்டும்” என்றாள். “உங்கள் முடிவைக் கூறுக… அதை அறியாமல் நான் எங்கும் செல்லப்போவதில்லை” என்று சுபத்திரை சொன்னாள். “நீங்கள் கூறியபடியே செய்கிறேன். அவளிடம் கேட்கிறேன். அவள் சொல்வதையே செய்கிறேன்” என்றாள் சத்யபாமை. “சென்று ஓய்வெடுங்கள்… பல நாட்களாக துயில்நீத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உள்ளம் குலைந்துவிட்டிருக்கிறது. சற்றேனும் துயின்றால் மீண்டுவிடுவீர்கள்.” சுபத்திரை பொருளில்லாமல் உறும “வருக!” என்று சேடி அவள் தோளை தொட்டாள். அவள் அவ்வழைப்புக்கு இணங்கி திரும்பிச் சென்றாள்.
சாரிகர் “எங்கிருக்கிறேன், என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றே புரியவில்லை” என்றார். “வருக, சுபத்திரை சொன்னது உண்மை! அங்கு சென்று அவளிடம் ஒரு சொல் கேட்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அவளிடம் கேட்போம்” என்றாள் சத்யபாமை. சாரிகர் “ஆனால் அவர் எதையும் உணரும் நிலையில் இல்லை” என்றார். சத்யபாமை “ஆமாம், ஆனால் என்னால் அவளுக்கு உணர்த்திவிட முடியும் என்று படுகிறது” என்றாள். “வருக!” என்றபடி எழுந்துகொண்டாள்.