விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் 2023 ஆண்டு விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுவதை ஒட்டி சுனில் கிருஷ்ணன் அவருடன் பேசி உருவாக்கிய நீண்ட உரையாடல் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்றபேரில் வெளியாகிறது.
விஷ்ணுபுரம் விருதை ஒட்டி விருதுபெறும் எழுத்தாளர்களைப் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டன. முதலில் ஆசிரியர் குறித்த ஒரு வரலாற்றுநூல் எழுதப்படவேண்டும் என்பதே இலக்காக இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதை விரும்பவில்லை. குறிப்பாக முதலில் விருதுபெற்ற ஆ. மாதவன். ஆகவே அது விமர்சனநூலாக வெளியிடப்பட்டது.
ஆரம்பத்தில் மூன்றுநூல்கள் முழுமையாகவே என்னால் எழுதப்பட்டன. அதற்குள் விமர்சனப்பார்வை கொண்ட நண்பர்களின் கூட்டு ஒன்று உருவாகியது. ஆகவே நூல்கள் விமர்சனத் தொகைநூல்களாக வெளிவந்தன.
நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.
கடைத்தெருவின் கலைஞன் – ஆ.மாதவன் விமர்சனநூல்
ஆ.மாதவனின் சிறுகதைகளின் முழுத்தொகுதியை தமிழினி வெளியிட்டபோது நான் ஒரு விரிவான விமர்சனக் கட்டுரையை அதன் பின்னிணைப்பாக எழுதினேன். அக்கட்டுரையின் விரிவாக்கமே இந்நூல். ஆ.மாதவனின் படைப்புகள் நெடுநாட்களாக முறையாக நூல்வடிவம் பெறாதிருந்தன. கடைத்தெருக் கதைகள் என்னும் தொகுதி அவர் கடையின் மச்சில் நெடுங்காலம் கட்டுக்கட்டாகக் கிடந்தது. தமிழினி வெளியிட்ட அழகான நூல் ஆ.மாதவனை மீண்டும் தமிழ் இலக்கியச்சூழலுக்குக் கொண்டுவந்தது. என் கட்டுரை அதன் ஒரு பகுதியாக அமைந்தது
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்
பூமணியைப்பற்றி நான் ஏழுதிய விரிவான கட்டுரைகளின் தொகுதி இது. இக்கட்டுரைகளில் பூமணி உருவாக்கும் கதைப்புலத்தின் வரலாற்று பின்புலமும் கதைமாந்தரின் சமூகப் பின்னணியும் எல்லாம் விளக்கப்பட்டிருந்தன. பத்தாண்டுகளுக்குப்பின் அசுரன் வெளிவந்தபோது அதையொட்டி இங்குள்ள அறிவுஜீவிகள் எழுதிய கட்டுரைகளை வாசிக்கையில்தான் அவர்களுக்கு இந்த அடிப்படைகளில் எந்த அறிவுமில்லை என்பதைக் காணமுடிந்தது. அவர்கள் இந்நூலை வாசிக்கவில்லை. ஆனால் வாசகர்களுக்கு பூமணியை புரிந்துகொள்ள, அசுரனில் இருந்து அவர் உலகை வேறுபடுத்திக்கொள்ள இக்கட்டுரைகள் உதவின.
ஒளியாலானது தேவதேவன் படைப்புலகம்
1999 ல் தேவதேவனைப்பற்றி ஒரு கருத்தரங்கை நான் தனிப்பட்டமுறையில் நெல்லையில் ஒருங்கிணைத்தேன். அப்போது தேவதேவனைப்பற்றிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. நவீனத்துவத்திற்குப்பின் தமிழ்க்கவிதை -தேவதேவனை முன்வைத்து. அக்கட்டுரைநூலின் மறுவடிவம் இந்த நூல்
‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி
தேவதச்சனைப்பற்றி வெவ்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். இக்கட்டுரைகளினூடாக அவரை பல்வேறு கோணங்களில் அணுகமுடியும்
தாமிராபரணம் வண்ண தாசன் விமர்சன நூல்
தமிழில் மிக அதிகமாக எழுதப்பட்டது வண்ணதாசனைப்பற்றித்தான். ஆகவே புதிதாக என்ன சொல்லமுடியும் என்பது ஒரு வினா. இந்நூலில் பாதிப்பங்கு அடுத்த தலைமுறைப்படைப்பாளிகள் அவரைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது அடங்கியிருக்கிறது. முற்றிலும் வேறுபட்ட பார்வைகள் பதிவாகியிருக்கின்றன
ராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்
ராஜ்கௌதமன் பண்பாட்டு ஆய்வாளர். படைப்பாளிகளைப் பற்றிபேச இலக்கியவாதிகள் முன்வருவார்கள். இலக்கியத்திறனாய்வுக்குக்கூட வாசகர்களும் விமர்சகர்களும் அமையலாம். பண்பாட்டு ஆய்வுக்கு எவர் முன்வருவார்கள் என்றஎண்ணம் இருந்தது. வழக்கமான பண்பாட்டு ஆய்வாளர்களை தவிர்த்துவிட்டு இலக்கியவாசகர்களின் பண்பாடு சார்ந்த பார்வையையே இந்நூலில் தொகுத்திருக்கிறோம்
2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்பட்ட விமர்சன நூல் இது. பலதளங்களில் அபியின் கவிதைகளை அடுத்த தலைமுறை வாசகர்கள் எதிர்கொண்டதன் பதிவுகள் இவை
சுரேஷ்குமார இந்திரஜித் படைப்புக்களைப் பற்றி ’சுரேஷ்குமார இந்திரஜித் வளரும் வாசிப்பு’ என்னும் நூல் 2020ல் வெளியிடப்பட்டது. இளம்படைப்பாளிகள் உட்பட பலர் சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி எழுதிய வாசிப்புகளின் தொகை இது.
விக்ரமாதித்யன் -நாடோடியின் கால்த்தடம்
விக்ரமாதித்யனின் படைப்புகளைப் பற்றி வெவ்வேறு இளம்படைப்பாளிகள் எழுதிய விமர்சனக்குறிப்புகளின் தொகுப்பாகிய இந்நூல் அவரை பல்வேறு கோணங்களில் ஆராய்வது. விக்ரமாதித்யனின் கதைகளுக்குள் நுழைவதற்கான மிகச்சிறந்த வாசலாக அமைவது.