பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

 

தங்களைப்போன்றவர்களின்

பல போஸ் போட்டோக்கள்

வேணும் சார்.

சாய்ந்தும் சரிந்தும்

நின்றும் நடந்தும் எடுத்துக்கொண்டவை.

சிரித்தும் சிந்தித்தும் வரைந்தும் விழித்தும்

புகைத்தும் வாசித்தும் எழுதியும் எடுத்துக்கொண்டவை.

இனி பிரியவே முடியாத எதிரிகளையும் நண்பர்களையும்

கட்டி அணைப்பவை.

நெருங்கியும் விலகியும் எடுத்துக்கொண்டவை.

பல போஸ் போட்டோக்கள்

வேணும் சார்

 

 

[ 2 ]

 

இன்று பிறந்த குழந்தையின் முன்னாலோ

கொனார்க்கிலோ

பேலூரிலோ

சிதை நெருப்பின் அருகிலோ

நின்று எடுத்துக்கொண்டவை

“மரணமற்றது எங்குள்ள மனமே” என ஏங்கும்

அகம் கலங்கும்

ஆழம் வளரும் போட்டோக்கள்.

தூரத்து லட்சியம் தெளிவடைந்து

வாரிச்சுருட்டி நுரைத்து ஓடும்

நாடு ஜெயிக்க மழுவேந்தும்

ஊர்வலம் நடத்திச்செல்லும்

கல்யாணத்தில் கைகுலுக்கும்

வெற்றியில் வணங்கும்

வென்ற ஆசைகளில் மலரும்

வீண் பாரங்களில் திணறும்

பலபோஸ் போட்டோக்கள் வேணும் சார்!

 

நம்மைக் காணாதவர்களும்

நாள்தோறும் காண்பவர்களும்

நாமே கூட

காண்பதற்கு.

காலமாறுதல்களில் நாம் என்னவாகிறோம்

என்று அறிவதற்கு.

அவதாரங்கள் வழியாக

எதை படைக்கிறோம் எதை அழிக்கிறோம்

என்று புரிந்துகொள்வதற்கு.

சார், மக்கள் பார்த்துப்பார்த்துத்தான்

கடல்களெல்லாம் இத்தனை பெரிதாயின

நதிகள் இதிகாசங்களாக மாறின.

 

 

[ 3 ]

 

போட்டோ எடுத்து எடுத்து

முகமே தேய்ந்துவிட்டது என்று

அழுகிறார் வைக்கம் முகமது பஷீர்.

ஆனால் ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சார்

அதே செப்பிடி வித்தையால் சிவந்து உதித்தவர்கள்தானே

நம் தலைவர்களெல்லாம்?

அறியா இருளில் இருந்து

அனைவரும் வணங்கும் ஒளிக்கு வந்தவர்கள் அவர்கள்.

அதிக போட்டோ அதிக தேஜஸ்

என்று சாஸ்திரம் சொல்கிறது சார்!

 

ஒரு ஸ்நாப்பிலே நிறுத்திவிடமுடியாது சார்

ஒரு ஜென்மத்தின் சாராம்சத்தை.

ஒரு ஃப்ளாஷில்கூட நனையாதவர்கள்

ஒரு குரூப் போட்டோவில் கூட தலைகாட்டாதவர்கள்

கோடானுகோடிகள்

அவர்கள் உண்மையில் இங்கே இல்லை.

சார், அவர்கள் பிறக்கவே இல்லை.

 

 [ 4 ]

 

காமிராவைப் பார்க்கையில்

எனக்குத்தான் என்னென்ன பயங்கள்.

என்னென்ன சஞ்சலங்கள்.

அதன் நாக்கும் மூக்கும் நோக்கும் ஆகிய

அந்த ஒற்றைக் கண்.

உலகப்பெருக்கின் சூரியவடிவச் சுழி.

அதன் மையத்தின்

கருந்துளை.

அதற்குள் சுழன்று சென்றுமறையும் உலக இயக்கம்.

காமிராவைப் பார்க்கையில் என் கண்கள்

கண்களுக்கு வராமல் மறைந்துவிடுகின்றன.

என் உதடு

உதடென்று ஆகாமல் உதிர்கிறது.

வேறு யார் செவிகளோ பொருத்தப்பட்டதுபோல

என் செவிகள் நமைச்சலெடுக்கின்றன.

ஓர் ஈ வந்து அமர்ந்து

என் மூக்கை சப்பச்செய்கிறது.

ஒன்றையே பார்த்தபடி இருக்கையில்

நான் பலவாக பிரிகிறேன்.

நதியின் ஒருமை தேவையாகும் அந்த தருணத்தில்

நால் மழையின் சிதறல்களாக ஆகிவிடுகிறேன்.

 

[ 4 ]

 

தாங்க்யூ சார்!

இன்னும் சில போட்டோக்கள் வேணும் சார்.

வெயில் வெளியில்

தனித்த நிழல்மரமாக.

இருள்வெளியில் விளக்குத்தூணாக.

ஊட்டியிலோ காஷ்மீரிலோ

புதிய மலர்களுடன்.

 

வெளியுலகுக்கு லெனினாக.

பூஜையறையில் பக்தனாக.

ஊர்வலத்தில் உற்சவமூர்த்தியாக.

கொம்பாக

தும்பிக்கையாக

செவிகளாக

வேணும் சார்

பல போஸ் போட்டோக்கள்

 

 

 

 

 

விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1

கே ஜி சங்கரப்பிள்ளை கவிதைகள் 2

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…