ஒரு பருக்கை அரிசி எப்படி எவ்வளவு பேரின் உழைப்பால் நம் தட்டிற்கு வருகிறதோ அதுபோல்தான் ஒவ்வொரு நூலிழையும் துணியாக உருமாறி அத்தனை பேரின் கைகள் தொட்டு நம்மிடம் வந்துசேர்கிறது.ஒரு பொருள் உருவாவதன் பின்னணி தெரிய வரும்போது அந்த பொருளின் மதிப்பும் அந்த பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சூழலும் தூக்கி எரியாத மனநிலையும் உருவாகும்.
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சோற்று பருக்கை போல் இந்த நூற்பும் என்னிடம் வந்து சேர்ந்தது. பல நெருக்கடிகள் தாண்டி மிகுந்த நம்பிக்கையுடனும் நிறைவுடனும் இதில் நான்கு ஆண்டுகளாக குடும்பத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பெரும் செல்வம் குவித்த அம்பானியிடம், நாம் யாரும் நமது வாழ்வை ஒப்படைக்க தயாராக இல்லை. மாறாக காந்தியிடமோ, வள்ளலாரிடமோ, கபீரிடமோ, ரமணரிடமோ, இலட்சுமண அய்யரிடமோ எந்த ஒரு நிபந்தனையில்லாமல் நம் வாழ்வை அவர்களிடம் ஒப்படைக்க அவர்களின் சொல்படியும் வாழ்வை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளோம். அவர்களைத்தான் வணங்கவும் செய்கிறோம். காரணம் வாழ்வு எளிமையில்தான் காத்துக் கிடக்கிறது என்பதே.
கை நெசவிற்காக தேடி அலைந்த போது அதன் நுணுக்கங்களை அவ்வளவு இரகசியமாக தெரியப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள் என்பதை உணரநேர்ந்தது, அதனாலேயே அதன் ஜீவன் குறைந்து கொண்டே செல்கிறது என்பதையும் பார்க்க முடிந்தது. அந்த பயணத்தில் குக்கூ நிலத்தில் அடிக்கடி கேட்ட நம்மாழ்வாரின் சொல், பாதுகாப்பான இரகசியம் என்ற ஒன்றில்லை. முடிந்த வரையில் இரகசியத்தை எந்த அளவிற்கு அதிக பேரிடம் சொல்கிறோமோ அந்தளவிற்கு அதன் இரகசியம் உடையாமல் இருக்கும்.
அந்த சொல்லை ஏந்திக்கொண்டு, நெசவின் சின்ன சின்ன நுணுக்கங்களையும் குறைந்தது துணியின் ஒட்டு மொத்த சுற்சியையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் சிறு முயற்சியே தொழிற் கூடத்துடன் இணைந்த இந்த நெசவுப்பள்ளி.
1010 நெசவாளர்களின் காலனிக்கு முன்பே, முழுக்க முழுக்க கைத்தறி நெசவாளர்களுக்காகவே தியாகத்தின் குறியீடாக இருக்கும் “கைத்தறி தந்தை” திரு.M.P. நாச்சிமுத்து அவர்களின் கனவாக ஆறுபது ஆண்டுக்கு முன் உருவானதுதான் நாச்சிமுத்து நகர்.இதற்கும் 1010 நெசவாளர் காலனி உள்ள இடத்திற்கும் இரவு பகல் வித்தியாசம் உள்ளது. வீடுகள் முழுவதையும் கருங் கற்களாலேயே நெசவாளர்களின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து அவர்களின் தேவைக்காகவும் நெசவின் வேலைக்காகவும் அவரால் உருவாக்கிய, நெசவின் சுவாசத்தை இறுதி தலைமுறையாக இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் இடம்தான் இந்த நாச்சிமுத்து நகர்.
தொடர்ச்சியான மூன்று ஆண்டுகால தேடலில் இங்கு கிடைத்த தொழிற்கூடமும் நெசவுப்பள்ளியும், காந்தியத்தை ஏற்றுக்கொண்டு தொண்ணூறு வயதைதாண்டியும் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவால் நற்துவக்கம் துவங்கப்படுகிறது.
நூற்பின் இந்த முயற்சிக்காக ஊடு பாவாக உழைத்த அத்தனை தோழர்களையும் சொந்தங்களையும் நன்றியோடு நினைத்துக் கொண்டு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
இத்தனை சாத்தியங்களும், நெசவாளர்களையும் அவர்களின் கலையையும் மனதார உணர்ந்து இன்று வரையும் இனியும் நூற்பில் தொடர்ச்சியாக கைத்தறி துணிகளை வாங்கும் சொந்தங்களை அடிப்படையாக வைத்தே நகரந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் வாழ்வின் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறறோம்.
குக்கூ/ நூற்பு
https://www.facebook.com/nurpuhandloomschool/
சிவகுருநாதன்.சி