சீரியல் கில்லர்கள் -கடிதம்

யக்ஷி உறையும் இடம்

ஆஸ்திரேலிய யக்ஷி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் வாசகர் எழுதிய ஆஸ்திரேலிய யக்ஷி படித்த உடனே ஞாபகம் வந்தது, மனோஜ் நைட் சியாமளன் த சிக்ஸ்த் சென்ஸ். அதிலும் இம்மாதிரி ஒரு அம்மா தன் இரண்டு பெண்களையும் சிறிது சிறிதாக விஷம் வைத்துக் கொல்லப் பார்ப்பார். இது நாள் வரை எனக்கு தெரியவில்லை, அது எதற்கு என்று. இப்பொழுதுதான் அந்த மனநிலை பிறழ்வு ( manchusse n syndrome ) தொடர்பு படுத்த முடிகிறது.

மீனாக்ஷி

***

அன்புள்ள ஜெ

பெரும்பாலான ‘சீரியல் கில்லர்’ செய்திகளை வாசிக்கையில் சாமானியர்கள் பதற்றம் கொள்கிறார்கள். ஆனால் அச்செய்திகளை கூர்ந்து கவனிக்கவும் செய்கிறார்கள் சீரியல் கில்லர்கள் சாமானியர்களுக்கு இருக்கும் ஓர் எல்லையைக் கடந்து சென்றுவிட்டவர்கள். ஆகவே ஒருவகையான அசாதாரணர்கள். அதாவது தலைகீழ் ஹீரோக்கள்.

ஒரு சீரியல் கில்லர் ஏதாவது உயர்ந்த லட்சியத்தை, சும்மா ஒரு பேச்சுக்காகவேனும், சொல்லிக்கொண்டு அந்த தொடர்கொலைகளைச் செய்திருந்தால் மக்கள் அவர்களை நாயகர்களாக கொண்டாடியிருப்பார்கள். ஸ்டாலின் ஹிட்லர் போல்பாட் மாவோ எல்லாருக்குமே அப்படி சீரியல் கில்லர்களின் முகம்தான் இருக்கிறது. அவர்கள் மனம் பிறழ்ந்தவர்கள். விடுதலைப்புலி பிரபாகரனையும் ஆப்ரிக்காவின் இடி அமீன் போன்றவர்களையும் அப்படித்தான் சொல்லவேண்டும்.

ஒருகொலை செய்வார்கள். பலகொலைகள் செய்ய அது தொடக்கம். அதன்பிறகு தனியாகக் காரணம் தேவையில்லை. கொலைக்காகவே கொலை. அதில் ஒரு மனநிறைவு. கொல்லும்போது ஒரு தன்னம்பிக்கையும் பாதுகாப்புணர்வும் ஏற்படுகிறது அவர்களுக்கு கொல்வது வழியாக தங்களை ஒரு வலிமையான மனிதர்களாக எண்ணிக் கொள்கிறார்கள். அகமதுஷா அப்தாலி, தைமூர், ஜெங்கிஸ்கான் என்று இந்தவகையான மாபெரும் சீரியல் கில்லர்கள்தான் வரலாற்றை ஆட்சி செய்கிறார்கள்.

உடனே அரசியல் முடிவுகளின் வழியாக மக்களை அழிவுக்குத் தள்ளியவர்களை இங்கே கொண்டுவர வேண்டியதில்லை. அவர்களெல்லாம் வேறுவகை. இது ஆளுமைச் சிக்கலால் கொலையை கொண்டாடியவர்கள் மட்டுமே. வரலாற்றை உருவாக்கியவர்களே சீரியல் கில்லர்கள்தான் என்றுகூட சொல்லலாம்

எஸ்.ஜெகன்னாதன்

***

 

முந்தைய கட்டுரைபுத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்
அடுத்த கட்டுரைமூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்