மெய்மையின் பதியில் -கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ

 

மெய்மையின் பதியில் வாசித்தேன். ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு. இன்றைக்கு ஐயா அவர்களைப்பற்றி வாசிக்கக் கிடைப்பவை எல்லாமே அந்த நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்டவை. அவை புராணம் கலந்த பக்திமிகுந்த பதிவுகள். அதற்கு வெளியே கிடைப்பவை இடதுசாரிகள் அவரை ஒரு சாதியத்தலைவர், சமூகப்போராளி என்ற அளவில் மட்டுமே சுருக்கி எழுதிய குறிப்புகள்.

 

இன்றைய வாசகனுக்கு ஐயா அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள், அன்றைய வரலாற்றுச்சூழல் பற்றிய தரவுகளின் அடிப்படையிலால சித்திரம், அவருடைய ஆன்மிகம் தத்துவம் மெய்யியல் ஆகியவற்றைப் பற்றிய மதிப்பீடு ஆகியவை தேவை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு நல்ல நூல் இன்று இல்லை. அதைத்தான் இன்று எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல நூல் தமிழின் அறிவியக்கத்தில் ஐயாவை நிலைநிறுத்திவிடும். இன்று குமரிமாவட்ட நாடார்களில் ஒருசாராருக்கு மட்டுமே தெரிந்தவராகவே ஐயா அவர்கள் இருக்கிறார்/ அந்நிலை மாறியாகவேண்டும்

 

செல்வக்குமார் ராஜாராம்

 

அன்புள்ள ஜெ

 

அய்யா வைகுண்டர் அவர்களைப்பற்றிய குறிப்பை வாசித்தேன். அவரைப்பற்றிய விரிவான நூல் ஒன்றும் தமிழில் இல்லை என்று தெரிந்தது. ஐயா அவர்களை பிற ஆன்மிகத்தலைவர்களுடன் ஒப்பிட்டு எழுதப்படும் ஆழமான நூல்கள் இன்று தேவை என நினைக்கிறேன்.

 

எழுதப்படாதவை இல்லாதவையே என்று சொல்லப்படுவதுண்டு

 

மா. குமரேசன்

 

 

அண்ணன்…

 

 

மெய்மையின் பதியில்… வாசித்தேன். மன நிறைவுடன் உங்களுக்கு எழுதுகிறேன். நான் மீண்டும் மீண்டும் சென்ற ஓரிடமென்றால் அது சாமித்தோப்பு தான். எளிமை ததும்புமிடம் அது. பால பிரஜாபதி அடிகளாருடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.  உறவாடும் வாய்ப்பு நல்கும் ஒரு பெரியவர் அவர். கிறிஸ்தவர்களோடு நெருங்கிய நல்லுறவு அவருக்கு உண்டு. பல்சமய உரையாடலில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. குமரி மாவட்ட கிறிஸ்துவ (கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த) கூடுகைகளில் அழைக்கப்படும் இந்து சமய தலைவராகவே அவர் இன்று இருக்கிறார். எனக்கு தெரிந்து பல கிறிஸ்தவ போதகர்களின் இல்ல திருமணங்களுக்கு சிறப்புறையாற்ற அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

 

 

அன்றிருந்த கிறிஸ்தவ மிஷனெறிகளுக்கு அவரின் பங்களிப்பு பிடிபடவில்லை. ஒருவேளை இன்றிருக்கும் ஓரிணக்கம் மற்றும் புரிதல் அன்று இயல்வதாக இருந்திருந்தால், நமது மண் மெய்யியலிலும் வாழ்வியலிலும் இன்னும் வளமுடன் இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

 

அன்புடன்
காட்சன் சாமுவேல்

 

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைஅந்தி எழுகை