‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 8

சத்யபாமையின் அறைவாயிலில் நின்றிருக்கையில்தான் சாரிகர் அவர் அங்கே எதற்காக வந்தார் என்பதை நினைவுகூர்ந்தார். அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை தன்னுள் உருவாக்கிக்கொள்ள முயன்றார். அதற்குள் கதவு திறந்து அவரை ஏவற்பெண்டு உள்ளே அழைத்தாள். அவர் உள்ளே நுழைந்து அந்தச் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த சத்யபாமையை வணங்கினார்.

அவர் அவளைப் பற்றிய பாடல்களையே கேட்டிருந்தார். அவருடைய எண்ணங்களுக்கு மாறாக அவள் முதுமையடைந்து களைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தெரிந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தமான கீறல்கள் போலிருந்தன. உதடுகள் சுருங்கி உள்ளே மடிந்திருந்தன. அவரை அமரும்படி கைகாட்டினாள். அவர் அமர்ந்ததும் எந்த முகமனும் இல்லாமல் “தங்கள் தூது எதன்பொருட்டு என்று நான் அறியலாமா?” என்றாள்.

சாரிகர் ஒரு கணம் திகைத்து பின் “நான் விராட இளவரசியின் நலம் குறித்து அறிவதற்காக வந்தேன்” என்றார். “அச்செய்திகள் வாரம் ஒருமுறை என பறவைத்தூதாக அஸ்தினபுரிக்கு அனுப்பப்படுகின்றன” என்று சத்யபாமை சொன்னாள். “ஆம், ஆனால் அது அரசருக்கு போதவில்லை. நேரில் பார்த்து செய்தியனுப்பும்படி சொன்னார். ஒருவேளை நேரில் பார்க்க ஒருவராவது வரவேண்டும் என விழைந்திருக்கலாம். அந்தணன் வந்து பார்ப்பது ஓர் அரசமுறை என்றும் சொல்லப்படுவதுண்டு” என்றார். “நீங்கள் அவளை நேரில் பார்க்கவேண்டும் அல்லவா?” என்று அவள் கேட்டாள். “ஆம், நேரில் பார்க்கவே வந்தேன்” என்றார்.

“பெண்கள் கருவுற்றிருக்கையில் அயலார் பார்க்கலாகாதென்பது நெறி” என்றாள் சத்யபாமை. “விழிகளில் உள்ளவற்றை மகவு தாளமுடியாது என்பார்கள்.” சாரிகர் “ஆம், ஆனால் அனைத்திலிருந்தும் அந்தணர்களுக்கு விலக்கு உண்டு” என்றார். சத்யபாமை “அந்த நெறி துவாரகையில் இல்லை. யாதவர் அந்தணர்கள் இல்லாமலேயே தங்கள் ஊர்களில் வாழ்பவர்கள்” என்றாள். “ஆம், ஆனால் வேதம் இன்றி நாடுகளில்லை. அந்தணர் வேதத்தின் மக்கள்” என்று அவர் சொன்னார். அவள் அவரை புரிந்துகொள்ள முயல்பவள்போல கூர்ந்து நோக்கினாள். பின்னர் எழுந்துகொண்டு “நீங்கள் அவளை பார்க்கலாம், வருக!” என்றாள்.

“எனக்கு விரைவில்லை. நான் தாங்கள் வகுத்த முறைமைப்படி பார்க்கிறேன்” என்று அவர் சொல்ல “இங்கே அவ்வண்ணம் முறைமை என ஏதுமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அவளை பார்க்கலாம்” என்றாள். “வருக!” என அவள் நடக்க அவர் பின்னால் சென்றபடி “அரசியே வரவேண்டும் என்பதில்லை. நான் தனியாகவே…” என்றார். “இங்கே நான் அவளை பார்க்கத்தான் தங்கியிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அவள் கணவனின் அன்னை இங்கிருக்கிறாள். அவளும் நோயுற்றிருக்கிறாள்.”

சாரிகர் “இளவரசி நோயுற்றிருக்கிறாரா?” என்றார். “ஆம், கருவுறுதலே ஒரு நோய்தான். கணவனை இழத்தல் இன்னொரு நோய். இரு நோய்களும் ஒன்றையொன்று பெருக்குபவை” என்றாள். அவளுடன் நடந்தபடி அவர் அவளிடமிருக்கும் அந்தக் கசப்பைப் பற்றி எண்ணிக்கொண்டார். அது உத்தரை மீதான கசப்பு அல்ல என்றும் தோன்றியது. அவள் சலிப்புடன் பெருமூச்சுவிட்டு “இவ்வறைதான்…” என்றாள். அவளை அணுகிய ஏவற்பெண்டிடம் “இளவரசியைக் காண அஸ்தினபுரியிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள். அவள் உள்ளே சென்று மீண்டு தலைவணங்க “நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றாள்.

அவர் அவளும் வருவதற்காக காத்து நின்றார். அவள் “நீங்கள் சென்று அவளை பார்க்கலாம். சற்று பொறுத்து நான் வருகிறேன். அவள் உங்களிடம் தனியாக ஏதேனும் சொல்வதற்குக்கூட விழையலாம்” என்றாள். அவள் விலகிச்செல்ல அவளை நோக்கியபடி சாரிகர் நின்றார். ஏவற்பெண்டு மெல்லிய ஒலியெழுப்ப அவர் விழிப்புகொண்டு அறைக்குள் சென்றார்.

அந்த அறையும் மிகச் சிறியது. அதன் ஓரத்தில் ஒரு நெய்யகல்கொத்து தளர்வான சுடர்களுடன் எரிந்தது. அந்த ஒளியில் செந்நிறமாக அந்த அறைச்சுவர்கள் அலைகொண்டன. சாளரத்தோரம் அமைந்த மஞ்சத்தில் உத்தரை படுத்திருந்தாள். அவர் சில கணங்கள் வாயிலருகே நின்றார். பின்னர் அருகணைந்து தலைவணங்கினார். அவள் அவரை நோக்கியபடி அசையாத விழிகளுடன் கிடந்தாள். அவள் ஐந்தாறு அகவை மட்டுமேயான சிறுமி போலிருந்தாள். உடல் மிக மெலிந்து குறுகியிருந்தது. நீள்முகம் கன்னங்கள் ஒடுங்கி, உதடுகள் இறுகி கூர்கொண்டிருந்தது. மெழுகுபோன்று வெளிறிய தோல் மேல் விளக்கொளி எண்ணைப்பூச்சென மின்னியது. அவளுடைய மூக்கு எலும்புப்புடைப்பென எழுந்திருந்தது.

அவள் விழிகளிலிருந்த வெறிப்பு அவரை நிலைகுலையச் செய்தது. பித்தர்களிடம், பெருநோயாளிகளிடம் தெரியும் நிலைவிழி அது. அது ஒருகணம் இளிவரல் என, மறுகணம் அச்சம் என மயக்கூட்டியது. அவர் “விராடநாட்டு இளவரசிக்கு வணக்கம். நான் அஸ்தினபுரியிலிருந்து அரசர் யுதிஷ்டிரனின் செய்தியுடன் வந்திருக்கிறேன். அந்தணனாகிய சாரிகன். தங்களை சந்திக்கும் பேறு எனக்கு வாய்த்தமைக்கு தெய்வங்களை வணங்குகிறேன்” என்றார். உத்தரை அவரை அவ்வண்ணமே நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவர் அதன் பின்னரே அவள் வயிற்றைப்பற்றி உணர்ந்தார். மெய்யாகவே அவள் கருவுற்றிருக்கிறாளா? அவள் வயிறு பெருத்திருக்கவில்லை. அவர் அவள் கையை பார்த்தார். வெண்ணிறமாக ஒரு பொதிபோல அது அவள் விலாவருகே கிடந்தது. புறங்கை வீங்கி உப்பியிருந்தது. விரல்கள் எல்லாமே வீங்கி உருண்டு விடைத்து நின்றன. விரல்களை மடிக்கவே அவளால் இயலாது என்று தெரிந்தது. அவர் அவளிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திரும்பி வாயிலை பார்த்தார். எவரோ தனக்கு உதவிக்கு வருவார்கள் என்பதுபோல.

அவள் கருவிழிகள் அசைவில்லாதிருந்தன. அவள் உயிரிழந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவருக்கு வந்தது. அக்கணமே அச்சம் எழுந்து உடலை மெய்ப்புகொள்ளச் செய்தது. அவளை தொட்டுப் பார்க்கலாமா? எவரையாவது அழைக்கலாமா? ஆனால் அவள் கழுத்தில் மெல்லிய மூச்சசைவும் துடிப்பும் இருந்தது. அவள் இமைகள் ஒருமுறை துடித்து அமைந்தன. அவர் “இளவரசி, தங்களுக்கு இங்கே ஏதேனும் தேவை என்றால் என்னிடம் சொல்லலாம்” என்றார்.

அவள் அச்சொற்களை கேட்டதுபோல தெரியவில்லை. “அல்லது அஸ்தினபுரிக்கு ஏதேனும் செய்தி அளிக்கவேண்டும் என்றாலும் ஆகலாம்” என்றார். அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டு “அல்லது எவரிடம் எச்செய்தியை கொண்டுசெல்ல வேண்டுமென்றாலும் நீங்கள் என்னிடம் அளிக்கலாம். இளைய பாண்டவர்களிடம், இளைய யாதவரிடம். அல்லது விராடநாட்டில் எவரிடமேனும்” என்றார். அவள் அவரிடம் ஏதோ சொல்லவிழைவதுபோல உதடுகளை அசைத்தாள். அவர் குனிந்து அவள் உதடுகள் அருகே செவிகளை கொண்டுசென்றார். அவள் மிக மெல்ல ஏதோ முனகினாள். அது சொல்லாகத் திரளவில்லை.

அவர் கொப்பளிப்பு போன்ற ஓர் ஓசையை கேட்டார். கூரிய ஒரு கெடுமணம். குருதிமணமா அது? அன்றி சீழ்வாடையா? அவள் மீண்டும் உதடுகளை அசைத்தாள். அவள் உடலே மெல்ல துடித்தது. அவளைப் போர்த்தியிருந்த மெல்லிய போர்வை விலக அவளுடைய வலக்கால் தெரிந்தது. அது செந்நிறமாக பெரிய கிழங்குபோல வீங்கியிருந்தது. விரல்கள் முளைக்குருத்துகள்போல் புடைத்து நின்றன. அவர் பெருமூச்சுடன் திரும்பியபோது அவள் மெல்ல “வில்” என்றாள். அவர் திரும்பினார். அவள் “வில்…” என்று மீண்டும் சொன்னாள்.

“ஆம்” என்று அவர் சொன்னார். “காண்டீபம்” என்றாள். அவர் ஏனென்றறியாமல் மெய்ப்புகொண்டார். “சொல்லுங்கள்” என்றார். அவள் ஒருமுறை நீள்மூச்செறிந்தாள். உடல் உலைந்து அமைந்தது. ஆழ்ந்த முனகலோசை எழுந்தது. விழிகள் மூடிக்கொண்டன. அவர் திரும்புவதற்குள் அறைக்குள் இரு மருத்துவச்சிகள் வந்தனர். அவரை நோக்கி செல்லும்படி கைகாட்டினர். அவர் தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். மெல்ல நடந்து வெளியே வந்தார்.

வெளியே சத்யபாமை நின்றிருந்தாள். அவரிடம் “அவள் எவரிடமும் ஏதும் பேசுவதில்லை. இங்கு வந்தபின் ஒரு சொல்கூட உரைக்கவில்லை. உங்களிடம் பேசுவாள் என்று எண்ணினேன்” என்றாள். அவர் “அவர் பேசினார்” என்றார். “சொல்க!” என்றாள் சத்யபாமை. “காண்டீபம் என்றார்.” அவள் “ஆம், அச்சொல்லை அடிக்கடி துயிலிலும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்” என்றாள். அவர் “அந்த ஒற்றைச் சொல்லுக்கு அப்பால் ஏதும் கூறவில்லை” என்றார்.

அவள் வருக என்று கைகாட்டியபடி நடந்தாள். அவர் உடன் சென்றார். அவள் நடந்தபடி “இங்கே ஏன் இவளை கொண்டுவரும்படி அரசர் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே இவள் வந்ததே கடுமையான பயணம். இத்தனை தொலைவுக்கு வந்தால் இவள் உள்ளம் நிலைமாறக்கூடும் என எண்ணியிருக்கலாம். ஆனால் இவள் இயல்பு அது அல்ல” என்றாள். இடைநாழியில் அவளுடைய காலடியோசை உரக்க ஒலித்தது. அழுத்தமாக காலெடுத்து வைத்து நடப்பவர்கள் உள்ளாழம் கொண்டவர்கள் என அவர் எண்ணிக்கொண்டார்.

“இங்கே நிலைமைகள் ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கின்றன. துவாரகை இப்போது சாம்பனின் ஆட்சியில் இருக்கிறது. நான் நகரிலிருந்து முற்றாக அகன்றுவிட்டேன். மெய்யுரைப்பதென்றால் நான் அகற்றப்பட்டிருக்கிறேன். ருக்மிணி அங்கே இருக்கிறாள். ஆனால் அவளுக்கும் அங்கே சொல் இல்லை. சாம்பனின் துணைவி கிருஷ்ணையால் ஆளப்படுகிறது அரண்மனை. அஸ்தினபுரியின் இளவரசியாக இங்கே அவள் வந்தபோது திருமகள் என எண்ணினேன்.”

அவள் பெருமூச்சுவிட்டு “அவள் உள்ளம் இப்படி மாறும் என எவர் அறிவார்? அவள் தெய்வமென துவாரகையின் அரசரை வழிபட்டவள். இங்கே வந்த பின்னர் மெல்ல மாறத்தொடங்கினாள். கணவனின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மனைவியர் அடைவதிலிருக்கும் விந்தையை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அவ்வுடலுக்குள் அவர்கள் முற்றாக மாறி பிறிதொருவராக ஆகிவிடுகிறார்கள். அவனிடமிருந்து பெற்றவற்றை பன்மடங்கு பெருக்கி அவனுக்கே திருப்பி அளிக்கிறார்கள். பெண்ணின் வஞ்சமும் காழ்ப்பும் பொறாமையும் ஆணைவிட பலமடங்கு ஆற்றல் கொண்டது” என்றாள்.

“இன்று அவள் துவாரகையின் அரசரை வெறுக்கிறாள். தன் தந்தையையும் சிறிய தந்தையரையும் உடன்பிறந்தார் ஆயிரத்தவரையும் கொன்றழித்தவர் அவர் என எண்ணுகிறாள். அவ்வெறுப்பை ஒவ்வொருநாளுமென நொதிக்கவிட்டு மிகைப்படுத்திக்கொள்கிறாள். இனி துவாரகைக்குள் அரசரை நுழையவிடலாகாது என்று அவள் தன் கணவனுக்கு சொல்லிச்சொல்லி உருவேற்றியிருக்கிறாள்” என்றாள் சத்யபாமை.

சாரிகர் “ஒருவேளை அரசர் இங்கே மீண்டு வரக்கூடும்” என்றார். “இல்லை. அவர் இனி இங்கே வரமாட்டார்” என்று சத்யபாமை சொன்னாள். “தன் மைந்தருடன் போரிட அவர் விழையமாட்டார். தன் குடிகள் தன்னை வெறுத்துவிட்டதை அவர் நன்கறிவார். யாதவக்குடியினரின் அழிவுக்கும் அவரே வழியமைத்தார் என அவர்கள் நினைக்கிறார்கள். அஸ்தினபுரியின் மேல் இங்குள்ள யாதவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புக்கு அளவேயில்லை. இந்நிலையில் அஸ்தினபுரியின் எஞ்சும் ஒரே கருக்குழவி இங்கே ஏன் வளரவேண்டும் என எண்ணினார்? எண்ணுந்தோறும் குழப்பமே மிகுகிறது. ஆனால் இதுவரை அவர் செய்த எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

“அரசியின் வயிற்றுக் குழவி எந்நிலையில் உள்ளது?” என்று சாரிகர் கேட்டார். “மருத்துவச்சியர் மாறிமாறி கூறுகிறார்கள். கரு உயிருடன் உள்ளது என்கிறார்கள். அதன் நெஞ்சத்துடிப்பை அறியமுடிகிறது. ஆனால் அசைவிழந்திருக்கிறது. போதிய வளர்ச்சியும் அதற்கில்லை. அவள் வயிறேகூட ஒரு குழவி வாழும் அறைபோல் இல்லை. அவள் உடல் நாளும் நைந்துகொண்டிருக்கிறது. இக்கருவை வளர்த்து உலகுக்கு அளிக்கும் ஆற்றல் அதற்கு உண்டா என்றே தெரியவில்லை. அக்கரு அவளை பிளந்து கொன்று வெளிவரக்கூடும் என்று தோன்றுகிறது… மருத்துவச்சியர் சென்ற வாரம் வரைகூட சற்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் ஊக்கமூட்டும்படி பேசவில்லை.”

அவர்கள் மீண்டும் சத்யபாமையின் அறையை சென்றடைந்தார்கள். “நான் செய்யக்கூடுவதென்ன என்றே எனக்கு தெரியவில்லை. இக்குழவி பிறந்த பின் நான் என்ன செய்யவேண்டும்? மீண்டும் துவாரகைக்கு செல்லவேண்டுமா? அன்றி இங்கேயே இருக்கவேண்டுமா? இக்குழவி எத்தனை நாள் துவாரகையில் வளரவேண்டும்? கிருஷ்ணையின் வெறுப்பின் முன் இக்குழவியை வளர்க்க முடியுமா என்ன?” சத்யபாமையின் முகம் சற்று கோணலாகியது. அது அவளை அழகில்லாதவள் எனக் காட்டியது.

“அவள் இக்குழவியை கொல்லக்கூட வாய்ப்புள்ளது. அவள் குலத்தை துளியிலாது அழித்தவர்களின் இறுதிக் குருதித்துளி அவள் கையெட்டும் தொலைவில் இருக்கையில் அவள் எப்படி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்?” அவ்வெண்ணத்தால் அவள் நிலையழிந்து எழுந்தாள். “மெய்யாகவே ஒன்றும் புரியவில்லை. எதற்காக இந்த ஆடலை ஆடுகிறார் அரசர்?” என்றாள். “அவர் தங்கை இங்கே இருக்கிறாள். அவள் தன் மருமகளை வெறுக்கிறாள். அவள் கைகளாலேயே இளவரசி கொல்லப்படக்கூடும் என்றுகூட அஞ்சுகிறேன்.”

சாரிகர் “அவருடைய ஆடலை என்னாலும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் அதை தொகுத்துக்கொள்ள முடியும் என எண்ணுகிறேன்” என்றார். “எவ்வண்ணம்?” என்று சத்யபாமை கேட்டாள். “உங்கள் ஒவ்வொருவர் முன்னாலும் ஒரு வினா என அக்குழவி பிறந்து வரவேண்டும் என எண்ணுகிறார் போலும்.” சத்யபாமை தலையை இல்லை என்பதுபோல் அசைத்தாள். பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டாள். “நன்று. இங்கிருங்கள். மைந்தன் பிறக்கக்கூடும் என்பது நிமித்திகர் கூற்று. அரசனாவான் என்று கணிக்கிறார்கள். அவன் மண்நிகழ்வது வரை அனைத்தையும் அஸ்தினபுரிக்கு தெரிவித்துக்கொண்டிருங்கள். உங்கள் சொற்கள் வழியாகத் தெரிந்துகொள்வதை அஸ்தினபுரி விழைகிறது எனத் தெரிகிறது” என்றாள்.

சாரிகர் தலைவணங்கி எழுந்துகொண்டார். அவர் விடைமுகமன் உரைத்தபோது அவள் அதை கேட்டதாகத் தெரியவில்லை. மீண்டும் தன் எண்ணங்களுக்குள் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.

 

சாரிகர் விழித்துக்கொண்டபோது எங்கிருக்கிறோம் என்று அறியவில்லை. மண்ணுக்குள் ஆழப் புதைந்திருக்கிறோம் என்னும் முதல் உணர்வு ஏற்பட திடுக்கிட்டு எழுந்துகொண்டார். அதன் பின்னரே அறைக்குள் மஞ்சத்தில் இருப்பதை உணர்ந்தார். எழுந்து நின்று கைகளை விரித்தார். அறை அவரை மூச்சுத்திணறச் செய்தது. கதவைத் திறந்து இடைநாழியினூடாகச் சென்று படிகளில் இறங்கி முற்றத்திற்குச் சென்று நின்றார். விண்ணில் ஒளியெழுந்துவிட்டிருந்தது. சுவர்கள் திகழத்தொடங்கின. முற்றப்பரப்பின்மேல் இரவெல்லாம் பொழிந்த பூழி காற்றில் மெல்ல அலைபாய்ந்து சுழித்துக்கொண்டிருந்தது. அவர் அதை நோக்கியபடி நின்றார். அந்த முற்றம் வெம்மைகொண்டு நீராவி எழுவதுபோலத் தோன்றியது.

ஒளி விரிந்து முற்றம் கண்கூசும்படி சுடரத்தொடங்குவது வரை அங்கேயே நின்றிருந்தார். விழிகளுக்கு அத்தனை ஒளி வேண்டியிருந்தது. உடலுக்கு எட்டுபுறமும் தொடுவான் தேவைப்பட்டது. ஏவலன் வந்து பணிந்து நிற்பதைக் கண்ட பின்னரே மீண்டு திரும்பி நோக்கினார். “இளைய அரசி தங்களை பார்க்க விழைகிறார்” என்றான். “எப்போது பொழுது குறிக்கப்பட்டுள்ளது?” என்றார். “இரு நாழிகைக்குப் பின்” என்றான் ஏவலன். “ஆகுக!” என்ற பின் அவர் திரும்பி அரண்மனைக்குள் சென்றார். உள்ளே நுழைந்தபோது சுவர்கள் அணுகிவந்து கவ்விக்கொண்டன. விழிகளுக்குள் இருள் பெய்து நிறைந்தது.

அவர் நீராடி உணவுண்டு காத்திருந்தபோது அரசியின் அழைப்பு வந்தது. அவர் இடைநாழிகளினூடாக சென்றுகொண்டிருந்தபோது என்ன பேசுவது என மீண்டும் தொகுத்துக்கொள்ள முயன்றார். ஒரு சொல்லும் எழவில்லை. அவர் உள்ளம் ஓய்ந்து கிடந்தது. இனி எப்போதும் என்னால் அறைகளுக்குள் வாழமுடியாது. இனி சுவர் நடுவே எனக்கு சித்தமே தோன்றாது. அவர் தன் காலடியோசையை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் பதைப்பு கொண்டது. என்னைத் தொடர்வது எவர்? என் காலடியோசையாக என் பின் ஒலிப்பது எவர்?

அவர் வருகை அறிவிக்கப்பட்டு உள்ளே செல்லும்படி பணிக்கப்பட்டார். உள்ளே சென்றதும் அறைக்குள் அமர்ந்திருந்த சுபத்ரை எழுந்து அவரை நோக்கி வந்து அவர் வணங்கி முகமன் உரைப்பதற்குள்ளாகவே “உம்மை அனுப்பியது யார்?” என்றாள். அவள் திரண்ட தோள்களும் உயரமான நிமிர்ந்த உடலுமாக பலராமரின் பெண் உருவமென்று தோன்றினாள். அவள் குரலும் அழுத்தமான கார்வை கொண்டிருந்தது. அவர் அவளுடைய உருவாலும் குரலாலும் சொல்திகைத்து நின்றார். “சொல்க, எவரால் அனுப்பப்பட்டவர் நீர்?” என்று அவள் கைசுட்டிக் கேட்டாள்.

“அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரனின் தூதன் நான்” என்று அவர் சொன்னார். “அதை நானும் அறிவேன்” என்று அவள் சொன்னாள். “நீர் அரசத்தூதர் என்று அறிந்தே உம்மை சந்திக்கிறேன். இங்கே உம்மை அனுப்பியது யார்? மெய்யாகவே எவருடைய தூதர் நீர்?” அவர் “அரசி, எவருடைய தூதன் என்று அறிவிக்கப் பணிக்கப்பட்டேனோ அதையே என் நா உரைக்கும். எவரும் அந்தணனுக்கு ஆணையிடும் இடத்தில் இல்லை” என்றார். அவள் முகம் சீற்றத்தில் சிவந்தது. “நீர் அந்தணர் அல்ல. நீர் பாங்கர். பெண்தூது செல்லும் சூதர்!” என்று அவள் கூவினாள். மூச்சிரைக்க கண்களில் நீர் பொடிய “நீர் எவருடைய தூதுடன் வந்தீர் என எனக்குத் தெரியும். எவருக்குச் செய்தி அனுப்புகிறீர் என்றும் அறிவேன்” என்றாள்.

“நன்று, நிறையவே அறிந்திருக்கிறீர்கள்” என்று சாரிகர் சொன்னார். “நான் வேறேதும் பேசவேண்டுமா? அன்றி உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று தெரிந்துகொண்டால் போதுமா?” அவள் மெல்ல அடங்கி திரும்பிச்சென்று தன் பீடத்தில் அமர்ந்தாள். அவள் தன் கைகளைக் கோத்து விரல்களை நெரித்துக்கொண்டிருப்பதை, உதடுகளை இறுக்கி பல்லைக் கடிக்கையில் அவள் கழுத்தின் தசைகள் இறுகி நெளிவதை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் மூச்செறிந்து மீண்டு “அவளிடம் என்ன பேசினீர்?” என்றாள்.

“நான் பேசவில்லை. என் பேச்சைக் கேட்கும் நிலையில் அவர் இல்லை” என்று அவர் சொன்னார். “அவள் என்ன பேசினாள்?” என்று சுபத்திரை மீண்டும் கேட்டாள். அவர் “ஒரு சொல்” என்றார். ”காண்டீபம், அவ்வளவுதானே?” அவர் ஆம் என தலையசைத்தார். “அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அதை மட்டுமே சொல்வாள். அதை சொல்லிக்கொண்டே உயிர்விடுவாள்” என்றாள் சுபத்திரை. “கீழ்மகள்… கீழ்மகள்” என்று தன் தொடையில் கையால் அறைந்தாள். அவர் அவளை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “இதை அஸ்தினபுரிக்கு சொல்லப்போகிறீர் அல்லவா? இவ்வண்ணம் என அவருக்கு செய்தியனுப்பவிருக்கிறீர், அவ்வளவுதானே?”

சாரிகர் ஒன்றும் சொல்லவில்லை. “நீர் எதற்காக இங்கே வந்தீர் என எனக்கு மெய்யாகவே புரியவில்லை. இவள் இங்கே இவ்வண்ணம் இருப்பது அங்கே அனைவருக்கும் தெரியும். இது ஏன் உங்கள் நினைவில் பதியவேண்டும் என எதிர்பார்க்கிறார்?” அவள் தலையை அசைத்து “இவளை இத்தனை தொலைவுக்கு அனுப்பியது என் மூத்தவரின் திட்டம். அவரிடமிருந்து முடிந்தவரை அப்பால். அவர் நினைத்தாலும் எளிதில் வந்து சந்திக்கமுடியாதபடி அப்பால்…” என்றாள். “அவளைப் பற்றிய செய்திகளை அனுப்பும்போது நானும் அதை கருத்தில் கொண்டேன். மிக சுருக்கமான வழக்கமான சொற்களையே அனுப்பும்படி சொன்னேன். அச்செய்திகள் அவருக்கும் சென்றுசேரும் என நான் அறிவேன்.”

அவர் அவளுடைய கொந்தளிப்பை நோக்கிக்கொண்டிருந்தார். “அவள் இங்கே வெறுக்கப்படுகிறாள். அனைவராலும். ஆம், என்னாலும்தான். அத்தனை பேரின் வெறுப்பும் சேர்ந்து அவளை நோயுறச் செய்திருக்கிறது. அவள் செத்துக்கொண்டிருக்கிறாள். அதை அவளைப் பார்க்கும்போதெல்லாம் தெளிவாக உணர்கிறேன். ஆனால் அவளைப்போல இன்று எனக்கு ஒவ்வாமையை அளிக்கும் பிறிதொன்று இல்லை. அவளை எண்ணும்போதே என் உடல் உலுக்கிக்கொள்கிறது. அவள் கொண்டுள்ள இந்தக் கரு… இதுதான் அஸ்தினபுரியின் அரசனாக அமரப்போகிறது என்றால்… அதுவும் என் மைந்தனின் பெயரால்.” அவள் எழுந்துகொண்டு “இங்கே நிகழ்வன எவற்றையும் நீர் அவருக்கு எழுதவேண்டியதில்லை” என்றாள்.

அவர் பேசாமல் நின்றார். அவள் உரக்க “அவர் இச்செய்திக்காகவே காத்திருப்பார். இவள் காண்டீபம் என்று சொல்லிக்கொண்டே நைந்து உயிர்விடுவதை எதிர்பார்த்திருப்பார். அவரை எனக்குத் தெரியும். அவருள் புளித்து நஞ்சாகி கெடுநாற்றமெடுக்கும் அந்த ஆணவம் நிறைவடையும். அந்த ஆணவத்தை கழிவிரக்கமாக, கண்ணீராக வெளிப்படுத்துவார். அதை அவ்வண்ணம் கொண்டாடுவார். அதற்கு வாய்ப்பே அளிக்கக்கூடாது. இது என் ஆணை! இவளைப் பற்றி நாங்கள் அனுப்பும் சொல்லன்றி எதுவும் அங்கே செல்லவேண்டியதில்லை” என்றாள். எழுந்து நின்று கைநீட்டி ”இது என் ஆணை!” என்றாள்.

சாரிகர் “அரசி, நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நான் அந்தணன். எனக்கு வேதமன்றி எதுவும் தலைக்குமேல் இல்லை. அந்தணனாகிய அமைச்சனிடம் அவனுடைய அரசர்கூட வேண்டுகோளை மட்டுமே முன்வைக்க முடியும், ஆணையிட முடியாது” என்றார். அவள் சிவந்த கண்களால் அவரை இமைக்காமல் பார்த்தாள். “அக்குழவி இங்கே பிறக்குமென்றால் அது கொல்லப்படும். அதை வாழவிடமாட்டாள் துரியோதனனின் மகள். அதை அவள் தன் வஞ்சத்திற்கு இரையாக்குவாள். அதை சொல்லுங்கள் உங்கள் அரசரிடமும் தம்பியரிடமும்” என்றாள். “இதுவும் ஆணையே” என்றார் சாரிகர்.

அவள் பெருமூச்சுடன் மீண்டும் பீடத்தில் அமர்ந்தாள். ஒரு கணத்தில் அனைத்து நிமிர்வும் அகல உடைந்து விம்மலோசையுடன் அழுதபடி கைகளில் முகம்பதித்துக்கொண்டாள். “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று கூவினாள். அவர் அவளுடைய அழுகையை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். அவள் மெல்ல தேறி மேலாடையால் முகத்தை அழுந்தத் துடைத்தாள். “என் மைந்தன், அவனைப்பற்றி மட்டுமே நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவனுக்கு இப்புவியில் எவருமில்லை. நான்கூட இல்லை. அவனை விடுவிக்க என்னால் இயலவில்லை. அவனுடைய ஊழ் அவனை கவ்விக்கொண்டது.”

“என்ன எண்ணுகிறான் என் மைந்தன்? எங்கிருக்கிறான்? இங்கே நிகழ்வனவற்றை அவன் அறிவானா? அவனால் ஏற்கமுடிகிறதா? அவனை எண்ணுக! உங்களிடம் நான் ஆணையிடவில்லை, வேண்டுகிறேன். மன்றாடுகிறேன். கைநீட்டி இரக்கிறேன் என்றே கொள்க! அவனுக்காக இரங்குக! அந்தணரே, அறத்தில் நின்றிருப்பவர் நீங்கள். இத்தருணத்தில் அமைச்சர் செய்யவேண்டியதை செய்யற்க! அந்தணராக நிலைகொள்க! என் மைந்தன் இதை ஏற்பானா? அவனுக்காக உளம்கூருங்கள். இது அவன் பேரில் நிகழலாகாது. அவனுக்குமேல் இச்சுமை ஏற்றப்படலாகாது.”

“உங்கள் சொல்லுக்காகவே நீங்கள் இங்கே அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நீங்கள் சொல்லுங்கள், அந்தக் குழவி…” அவள் உரக்க கைநீட்டி “அறம் என ஒன்று உள்ளது. மானுடருடன் நாம் கொண்டுள்ள உறவு அது. நீத்தாருக்கு நாம் அளிக்கும் கடன் அது” என்றாள். அவர் “ஆம்” என்றார். “அவள் யார் என்றே எனக்குத் தெரியாது. அவள் உள்ளத்தை நான் அறிந்ததே இல்லை. என் முன் நைந்துகிடக்கும் உடல் மட்டும்தான் அவள். எனக்கு அவள் ஒரு பொருட்டே அல்ல. நான் எண்ணிக்கொண்டிருப்பது என் மைந்தனைப் பற்றி மட்டுமே. அவன் இங்கே எஞ்சாமல் சென்றான்… அவன் பெயர் இங்கே திகழவேண்டும். வீரனாக மட்டும். அவன் இங்கே எஞ்சவிட்டுச் சென்றது கசப்பையும் வஞ்சத்தையும் என்றால் அது களையப்படவேண்டும்.”

சாரிகர் “என்னால் எதையும் எண்ண முடியவில்லை, அரசி” என்றார். “ஆனால் என் ஆழத்திலிருந்து ஆணை எழும் என எண்ணுகிறேன். அதன்படியே நடப்பேன். ஒருபோதும் என்னுள் திகழும் வேதத்தின் ஆணைக்கு முரணாக எதையும் செய்யமாட்டேன். அதை மட்டும் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்.” எழுந்து தலைவணங்கி பின்னடைந்து அவர் அறையைவிட்டு வெளியே சென்றார்.

முந்தைய கட்டுரை’நான் நினைச்சதையே எழுதிட்டீங்க!’
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்