குறளின் மதம் – கடிதங்கள்

 

சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்

அன்புள்ள ஜெ..

 

குறள் அதன் ‘பக்தர்களால்’ இன்று ஒரு நவீன மதநூலாக ஆக்கப்படுகிறது.

 

என்ற உங்கள்,வரி யோசிக்க வைத்தது

 

குறளை மத நூலாக்க முயல்பவர்கள் அதன் பக்தர்கள் அல்லர்கள்.  உண்மையில் குறள் அவர்களுக்கு பிடிக்கவில்லை.   குறள் ஒரு பிற்போக்கான நூல்தான்.  ஆனால் கீதை போன்ற அப்பட்டமான பிற்போக்கான நூலை விட ஓரளவு மட்டுமே பிற்போக்குத்தன்மை கொண்ட குறள் தேவலாம் என போனால் போகிறது என்ற அளவில்தான் குறளை ஏற்கிறார்கள்.  அப்படியுமேகூட அதை தமது முதன்மை நூலாக யாராலும் ஏற்க முடியவில்லை. கள்ளுண்ணாமை , புலால் மறுத்தல் போன்றவை நம் ஆட்களுக்கு சரிப்படாது. எங்களால் குறளை ஏற்க முடியாது.  ஆனால் கீதை என்ற குப்பையை ஏற்பதற்கு பதில் குறள் என்ற குப்பையை ஏற்றுத் தொலையுங்கள் என்பதுதான் இந்த பக்தர்களின் கோரிக்கை.

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ

 

குறள் பற்றிய நீண்ட கட்டுரை வாசித்தேன். குறளாசிரியரின் மதம் என்னவாக இருக்கும் என எவரும் இன்று அறுதியிட்டு உரைக்க முடியாது. அவ்வாறு எவர் உரைத்தாலும் அவர் தன் அறிவின் எல்லையையே முன்வைக்கிறார். ஊகிப்பதற்கே வாய்ப்பு. அவ்வூகத்தை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். அந்த ஊகத்துக்கான காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஏற்கத்தக்க நிலைபாடு. எவ்வளவு எல்லைவரை செல்லமுடியுமோ அவ்வளவு எல்லைவரைச் செல்லும் நிதானம் உங்களிடமிருக்கிறது

 

குறள் இன்றைய சூழலில் சமணநூல் என்று கொள்ளவே வாய்ப்பு. ஆனால் அது சமண மதநூல் அல்ல. சமணரால் பொதுவான அறநூலாக எழுதப்பட்டது. அக்காலக் கல்வியின் ஒரு பகுதியாக பயிலப்பட்டது என்றுதான் கொள்ளமுடியும்

 

இரா.இராசகோபால்

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு பற்றி
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-6