வெயில் கவிதைகள்
அன்பு ஜெயமோகன்,
வெய்யிலின் கவிதைகள் குறித்த உங்களில் பேச்சில் ஒருபகுதி, சமகால உலகின் கடுஞ்சித்திரம் ஒன்றை ஈவிரக்கமின்றி முன்வைத்தது. ”நமக்கு நம்முடைய பிரச்சினைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்சினைகள் மட்டுமே பெரிதாகத் தோன்றுகின்றன” எனும் வாக்கியத்தில் புலப்பட்டிருந்த அக்கடுஞ்சித்திரத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை; அதேநேரம், மறுக்கவும் இயலவில்லை.
நேற்று ஒரு முதியவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக்கொண்டிருந்தார். அருகில் நான் இருந்தேன். நினைத்திருந்தால் அவரை அரசு மருத்துவமனைக்கே கொண்டு விட்டிருக்க முடியும். யோசிக்கவும் செய்தேன். ஆனால், வழியை மட்டுமே பலநிமிடங்கள் அவரிடம் விளக்கிச் சொன்னேன். நீங்கள் பகிர்ந்து கொண்ட கடுஞ்சித்திரத்தை மனம் நினைவுக்குக் கொண்டு வந்தது.
சில நண்பர்களிடம் என் தனிப்பட்ட துயரங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் அவற்றைக் காது கொடுத்து கூட கேட்பதாக இல்லை. நான் குமுறும்போது வெறுமனே அமர்ந்திருக்கின்றனர். பலநாட்கள், பலமாதங்களுக்குப் பின்பே என்னால் அதை உணர முடிந்தது. அவர்களின் பிரச்சினைகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் நான் இயல்பாகச் சென்றிருக்கிறேன். அறவுணர்ச்சி குன்றிவிட்டுப் போகட்டும். நட்புணர்ச்சிக்கான குறைந்தபட்ச மறுவினை கூடச் சாத்தியப்படாதா? சமீபத்தில் மகாசிவன் இயக்கிய தோழர் வெங்கடேசன் படம் பார்த்தேன். அதில் கையறுநிலையில் இருக்கும்போது காண வராத நண்பனிடம் கதைநாயகன் கெஞ்சுவான்.”ஓய்.. எனக்கு உதவி செய்ய வேண்டாம்.. சும்மா வந்துட்டாவது போ.. ஆறுதலா இருக்கும்” என்று கதைநாயகன் சொல்வதைக் கடுஞ்சித்திரத்தின் மீதான ஆற்றாமையாகவே பார்க்கிறேன்.
”பிறரின் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது” எனும் வரிகளில் கடுஞ்சித்திரத்தின் கோரைப்பற்கள் விழிகளை வெளிறச் செய்தன. மரணத்தறுவாயில் கரங்கள் நடுங்க, புதிர்நிறைந்திருந்த என் அப்பாவின் அகத்துயரத்தைக் கிஞ்சித்தும் எனக்கு நகர்த்தி இருக்கவில்லை, நான். இத்தனைக்கும் அவர் சிறுவயதில் இருந்து என்னை எவ்விதத்திலும் துன்புறுத்தியது இல்லை; கடுஞ்சொல் பேசியதில்லை. கல்வி முதற்கொண்டு என் விஷயங்களில் அவர் தலையிட்டதே இல்லை. அம்மா என்னை ஏதாவது பேசினால் கூட “யார் வாழ்க்கையையும் நாம் தீர்மானித்து விட முடியாது” என்று சொல்லி விடுவார். என் குருதிச்சொந்தமான அவரின் இறுதிக்கணத்தில் கண்களில் நீர் வடிந்தாலும்… அவரின் நோய்க்காலங்களில் அவரின் துயரத்தை என் துயரமாகப் பாவிக்கத் திராணியற்றவனாக இருந்து விட்டதைக் கடுஞ்சித்திரம் அப்பட்டமாக்கி இருக்கிறது.
பருந்தால் துரத்தப்படும் புறா சிபியை நோக்கி வருகிறது. சிபி அதைக் காப்பாற்ற பருந்திடம் தன் தசையைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால், பருந்தின் நிபந்தனையளவு அதைக் கொடுக்க முடிவதில்லை. பருந்து சிபியிடம் பிரபஞ்ச அறத்தை விளக்குகிறது. மானுடமையச் சமூகத்தில் இருந்து பிரபஞ்சத்தை நிறுவ நினைத்த சிபி விழித்துக் கொள்கிறார். இங்கு சிபியிடம் முந்தி நின்றது மானுட அகங்காரம் என்றாலும் அதன் அடிப்படை இணக்கமானதாக இருந்தது அல்லது திகிலூட்டக் கூடியதாய் இல்லை. ”ஒரு பிரச்சினை நமக்குத் தெரிய வேண்டுமென்றால் அது நம்மை நேரடியாக்ப் பாதிக்கக் கூடிய பிரச்சினையாக இருக்க வேண்டும்” எனும் கடுஞ்சித்திரத்தில் புலப்படும் மானுட அகங்காரம் அகம்நடுஙக் வைக்கிறது.
துவக்க காலத்தில் விலங்குகளுடன் போரிட்டு நம்மைத் தற்காத்துக் கொண்டோம். பின், சிறு குழுக்களாக நமக்குள் போரிட்டுக் கொண்டோம். குலங்களாக அடையாளப்படுத்திக் கொண்டு நாம் செய்த போர்கள், அரசுருவாக்கத்தில் இன்னும் கூர்மையாகின. திரும்பிய திசை எல்லாம் குருதியின் தீற்றல்; உலுக்கும் கூக்குரல்கள். கதறக்கதற குழந்தைகளின் சாவுகள். பங்கப்படுத்தப்பட்ட பெண்களின் கதறல்கள். அரசதிகாரத்தைக் கைப்பற்ற ஈவிரக்கமற்ற சூதுகள். கடுஞ்சித்திரத்தின் வேர் மெல்ல மெல்லத்தான் கால்கொண்டிருக்க வேண்டும்.
நவீன காலத்தில் மனிதர்களுக்கிடையேயான போர் மனிதனுக்குள்ளான சஞ்சலமாக உருவெடுத்திருக்கிறது. போரின் கயமைகள் அகத்தில் குவிந்து தனிமனிதனை அல்லாட வைக்கின்றன. அறவுணர்ச்சிக்கும், யதார்த்தத்துக்கும் இடைநின்று கலங்கி அழுகிறான். அழுகையை நவீனமனம் அங்கீகரித்து ஒப்புக்கொள்ளுமா என்ன? சுயசஞ்சலத்தை நாசூக்காய் சுயபகடியாய்க் கடக்க முயல்கிறான். கடுஞ்சித்திரத்தின் மென்புன்னகை வெளிச்சத்தில், தனிமனிதனின் அழுகை தன்னை மறைத்துக் கொள்கிறது.
கந்தபுராணத்தின் மூலகர்த்தா சூரபன்மன். காஷ்யப முனிவர்க்கும், மாயைக்கும் மகனாகப் பிறந்தவன். அவனின் சகோதரர்கள் இருவர். தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன். மூவரையும் அழைத்து அறத்தைப் போதிப்பார் காஷ்யபர். “உலகில் அறத்தை விடச் சிறந்தது இல்லை. ஆக, எச்சூழலிலும் அறத்துக்கு முரணாக நடந்து கொள்ளாதீர்!” என்பதே காஷ்யபரின் அறிவுரை. மாயையோ அதிகாரச்சுகத்தை அவர்களுக்கு போதிப்பாள். யாராலும் வெல்ல முடியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்று, அனைத்து லோகங்களையும் ஆட்சி செய்வதே பிறப்பின் ப்யன் என்பதாக மாயை பாடம் எடுப்பாள். எப்போதுமே மாயையே நம்மை மயக்குவது. அவ்வகையில், தன் தாயின் யோசனைப்படி சிவனிடம் வரம்பெறும் சூரபன்மனும் அவன் தம்பிகளும் அகங்காரமாய்ச் செயல்படுவர்; அனைத்து லோகங்களையும் அதகளப்படுத்துவர். இறுதியில், முருகப்பெருமானின் வேல்பட்டு அகங்காரம் கிழிந்து அவனின் சேவலும், மயிலுமாக உருமாறுவான்.
முருகப்பெருமானுக்கு வேல் தந்தவள் சக்தி. அதனால்தான் அவ்வேலுக்கு சக்திவேல் என்று பெயர். மாயையும், சக்தியும் பெண்களே. மாயை மயக்கத்தை அளிக்க, சக்தி தெளிவை அளிக்கிறாள். மாயையும், சக்தியும் உடற்தோற்றங்கள் அல்ல; மனக்குறிகள். ஒரு உடலில் உறையும் இருவகை மனக்குறிகள். இரண்டுமே ஒரு உடலில் இருந்தே தீரும். எதனோடு அதிகம் உறவு கொள்கிறோம் என்பதே நம்மைத் தீர்மானிப்பது.
சூரபன்மன் இருவரால் ஆனவன். சூரன் மற்றும் பதுமன். அவ்விருவரே சேவலும், மயிலுமாகிறார்கள். இரண்டுமே முருகனின் வாகனங்கள். ஞானவடிவான அவன் அறத்தின் குறியீடு. அகங்காரத்தை உணர்ந்த்துமே அறத்தின் வாகன்ங்களாகி விடுகிறான் சூரன். கடுஞ்சித்திரம் மாயையின் மயக்கமாகவே படுகிறது. சக்தியின் வேலுக்கு முன் கடுஞ்சித்திரம் கலங்காமல் தப்பிவிட முடியாது. என் முன்னோடிகளின் வழி சக்தியின் வேலை தெளிவாகவே அறிந்திருக்கிறேன். சக்தியின் வேல் முன்பு மாயை நிச்சயம் இருப்பாள்; புலன் அடங்கி இருப்பாள்.
சிறுவயதில் இருந்து அறத்தை வலியுறுத்திய முன்னோடிகளே எனக்கு வாய்த்தனர். அதற்காக அறத்தையே முழுக்க கடைபிடித்தவனல்ல நான். அறம்பிறழ்ந்த தருணங்களும் என் வாழ்வில் நிறைய இருக்கின்றன. மனிதர்களை கருப்பாக அல்லது வெள்ளையாக மட்டுமே மதிப்பிடும் பேராபத்தைத் தெளிந்தே இருக்கிறேன். எனினும், அதிகப்படியான கருமையை என்னால் ஏற்க முடிந்ததில்லை. அதற்கு, என்னைப் பாதித்த முன்னோடிகளே காரணம். இங்கு, அவர்களின் பாதங்களில் பாசாங்கற்று விழுகிறேன்.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.