அம்மையப்பம் – கடிதம்

அம்மையப்பம் [புதிய சிறுகதை]

அன்பின் ஜெ,

நலம்தானே?

”அம்மையப்பம்” மறுபடி படித்தேன். முதல்முறை 2013-ல் தளத்தில் வெளியான போது படித்தபோதே பச்சென்று மனதுக்குள் ஒட்டியிருந்தது. வெண்கடல் தொகுப்பில் எனக்குப் பிடித்த முதல் கதை. இரண்டாவதும் மூன்றாவதும் முறையே வெறும்முள்ளும், கைதிகளும்.

நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் அம்மையப்பத்தை ‘கண்டிப்பாகப் படிக்கவேண்டிய மிக நல்ல கதை’ என்று பரிந்துரைத்தபோது, படித்துவிட்டு “உனக்கு ஏன் இந்தக் கதை பிடித்திருந்தது?” எனக் கேட்டார். எனக்கு நானே மறுபடி கேட்டுக்கொள்வதற்காகவும், அவருக்கு பதில்சொல்ல கோர்த்துக் கொள்வதற்காகவும் மறுபடி படித்தேன்.

தோட்டத்திற்குள் பாய்ந்து, வேலியின் அன்னாசிச் செடிகளைப் பிய்த்து விலக்கி, நந்தவன மரங்களுக்குள் விரைந்து மறையும் ஆசாரி, ஏன் லங்கா தகனத்தின் கடைசிக் காட்சியையும், “வெறும்முள்”-ளில் இறுதியில் பாய்ந்தோடி செஸபான் முட்புதர்களில் சிக்கி திகைத்து அலறி எழுந்து மறுபடி பாய்ந்து சாலைப் புழுதியில் விழுந்து எழுந்து கைகளை விரித்துக்கொண்டு கூவியபடி ஓடும் ஐசக்கையும் சட்டென்று ஞாபகப்படுத்தினார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏன் லங்கா தகனம், வெறும்முள், அம்மையப்பம் போன்ற கதைகள் என் மனதுக்கு மிகவும் அணுக்கமாகிறது? என்னுள்ளின் எந்த ஒன்று இவற்றை தான் -ஆகக் கண்டுகொள்கிறது? என்னுள்ளின் எந்தப் பகுதி இக்கதைகளின் ஆன்மாவைப் போன்ற ஒன்றுக்காய் தொடர்ந்த ஏக்கத்திலிருக்கிறது?. என்னை ஆராய/அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் உதவின ஜெ. என் தேடல்களை ஒத்தவை இக்கதைகள். ஐசக் போல நானும் கண்டு நோக்கி விழுந்தடித்து ஓடும் ஒரு நாள் எனக்கு வாய்க்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அல்லது அம்மையப்பத்தின் பையனுக்குக் கிடைத்த ’புதையல்’ போல் ஒருநாள் எனக்கும் கிடைத்து, நானும் அவன்போல், ‘முட்டையிடுத கோளி கணக்காட்டு’ உட்கார்ந்திருப்பேனோ என்னவோ?

ஏன் எனக்கு எல்லாமே குறியீடாகவே தெரிந்தன?. இட்லிக் குட்டுவத்தின் விம்மிப் பொருமிய பெருமூச்சு, பிரசவிக்கக் காத்திருக்கும் செம்பிப் பசுவின் பெருமூச்சு…ஒருவகையில் என்னின் பெருமூச்சுமல்லவா?. எதைப் பிரசவிக்க நான் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்? இன்னும் எத்தனை காலத்திற்கு? எதைப் பிரசவிக்கப் போகிறேன்? பிரசவிக்கும் தருணம் என்னின் தன்மை என்னவாயிருக்கும்?

’இட்லிக் குட்டுவத்தின் மூடிமேல் இருக்கும் கைப்பிடியைப் பிடித்துத் தூக்கும் அம்மா’ – என்னுள்ளிலும் உறைந்திருப்பதை மூடியிருக்கும் சுவர் அகற்ற, சக்தியின் கை ஒன்றின் அனுக்ரஹம் வேண்டுமோ?

சில நாட்கள் முன்பு, நண்பர்களின் வாட்ஸப் குழு ஒன்றில், ‘ஆண்கள் தின’த்திற்கான வாழ்த்து ஒன்று வர, அதை ஒட்டி விவாதம் எழுந்து, ஆண் பெரிதா, பெண் பெரிதா என்று கூச்சலாகி, இரண்டு பேரும் சமம்தான் என்று குழப்பி, சக்தி-சிவம் என்று சண்டையாகி, ஒருவர் கோபம் கொண்டு வெளியேறுவதில் முடிந்தது. நான், என் அனுபவங்களினால், சக்தியின் பக்கம் வாதிட்டுக்கொண்டிருந்தேன். என் அரைகுறை தேடல்களின் எல்லைகள் புரிந்துதான் வாதிட்டுக்கொண்டிருந்தேன். இன்னொரு நண்பன், ஆண் மூச்சும், பெண் மூச்சும் மாறி மாறித்தானே சுவாசிக்கிறோம்? முழுமையான ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. ஏம்ப்பா சண்டை போட்டுக்கிறீங்க? உச்சிக்குப் போனா ரெண்டும் ஒண்ணாயிடும்தானே?” என்றான். “அதெல்லாம் இருக்கட்டும். இருமை இருக்கற வரைக்கும், சக்தியில்லாத சிவம் ஜடம்தானே? ஜடத்துக்கு எதுக்கு ஒரு ‘ஜடத் தினம்?” என மேலும் விவாதம் தொடர்ந்தது.

”அம்மாவின் கை அழுந்திய பள்ளம் கொண்ட இட்லி” – கிடைப்பது விஷேஷம்தான் இல்லையா? சக்தியின் அனுக்ரஹம் பெற்ற உணவு.

#‘பின்னே? அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா? அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு’#

உணவென்றால் ஐம்புலன்களில் ஏதோ ஒன்றில் உள் நுழைவதுதானே?. சக்தியின் வரம். அதை கடைசிவரை நக்கி ருசிக்காமல் எப்படி கீழே வைப்பது?

ஆசாரியிடத்தில் ”மெல்லிய களப குங்கும மணம். ஆனால் நெற்றியில் திலகமில்லை”. சக்தியால் அனுக்ரஹிப்பட்ட மெய்யல்லவா? வெளிச் சின்னங்கள் தேவையானவைதானா?

எதைச் சொல்லி எதை விடுவது ஜெ…

# ‘டேய் அதெப்பிடிடே உனக்க உள்ளுக்குள்ள இல்லாததாடே வெளிய வருது?’ என்றார் அப்பா.

எல்லாம் உள்ளுக்குள்ள இருக்கப்பட்டதுதான். மனுஷனுக்குள்ள ஏளு பிசாசுண்டுண்ணுல்லா கதை?’ என்றார் ஆசாரி #

# ’அது பெல்ஜியம் கண்ணாடி இல்ல. டூப்பு. பெல்ஜியம்கண்ணாடி உடையாது’ #…சக்தியின் விரல்கள் தொட்டு அசல் எப்போது உடைந்திருக்கிறது?

வெண்டைக்காயை நறுக்குவது போல் வெற்றுச் சிவத்தை நறுக்கிப் போட, சக்திக்கு ஒரு விநாடி போதாதா?. விட்டு வைத்திருப்பது அதன் தயையினால் அல்லாமல் வேறென்ன?

# இவ எனக்ககிட்ட ’எதுக்குவே வாறீரு’ண்ணு கேட்டா. நான் சொன்னேன் ‘எனக்கு வேற கெதியில்ல.நான் கிறுக்கனாக்கும்’ணு. வாரும்ணு கூட்டீட்டுப்போயி வயறு நெறைய கஞ்சி குடுத்தா. ’இனிமே வந்தா வந்து திண்ணையிலே இரியும். கஞ்சி குடிச்சுட்டு போவும்’ணு சொன்னா.’ #

சக்தியில்லாத சிவம் கிறுக்குதானே?. சக்தியைப் பார்த்தலும், அதன் கையால் உண்பதும் அதற்கு எனர்ஜிதானே?. “எளவெடுத்த ஏணிகள்” நடுவே ஏன் சக்திக்கு நன்றி செய்ய, ‘அம்மையப்பம்’ உருவாக்க மனம் ஏங்காது?

# கொச்சேமான், தனித்தனியா இருக்கப்பட்டது மனுஷனுக்க அகங்காரம் மட்டுமாக்கும். மத்த எல்லாமே பின்னிப்பிணைஞ்சுல்லா கெடக்கு…’ #

பின்னிப்பிணைந்திருக்கும் அம்மையப்பம்.

# அவனுக்க வாயில காளி தாம்பூலத்த துப்பிக்குடுத்தா…தாயோளி அந்தால பெரிய கவியா ஆயிட்டான்….’ #

சிவத்தின் ஆணவம், தற்பெருமை எத்தனை மாயை? எச்சில் போடும் ஆட்டத்தைப் பார்த்து அவள் எத்தனை கேலியாய் சிரித்திருப்பாள்?

# தங்கம்மா ‘அம்மிணியே…வந்து இந்த கூத்தப்பாருங்க’ என்றபடி ஓடினாள்.

தங்கம்மா சிரிப்பை அடக்கிக்கொள்வதைக் கண்டேன்.#

ஆம். நான் கூத்துதான் ஆடுகிறேன்; உள்ளிருந்து அவள் சிரிக்கிறாள்.

# ‘ஏமானுக்கு என்ன பிடிக்கும்?’

அம்மையப்பம்’

ஆசாரிக்குப் பிடிச்சது அம்மையப்பனாக்கும்’

அதென்னது?’

ரெண்டும் ஒண்ணுதான்’

திங்க முடியுமா?’

திங்கமுடியாது…ஆனா இனிப்பா இருக்கும்…#

ஆம் ஜெ. அம்மையோடு சேர்ந்த அப்பன் – அம்மையப்பன், சக்தியின் தடம் பதிந்த குழி கொண்ட சிவம், படைத்தலின்/கலையின் உள்ளின் வெளியுரு, அம்மையப்பம்தான்… எத்தனை சுவை!

வெங்கி

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77
அடுத்த கட்டுரைஎதிர்விமர்சனம் -கடிதம்