விஷ்ணுபுரம் – கடிதம்

என் அன்பிற்கினிய ஜெ,

புத்தகம் என் போதைப் பொருள். பள்ளி காலங்களில் motivation புத்தகம், விவேகானந்தர், பாரதி, ஓசோ, சுகி சிவம், தென்கச்சி கோ.சா கதைகள், தியானம், பைபிள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றில் ஆரம்பித்து…. கல்லூரியில் பெரும்பாலும் சுயசரிதையில் தேடல் தொடர்ந்தது. குறிப்பாக பகத்சிங், போஸ், பெரியார், பிடல், சே, செங்கிஸ்கான், திராவிட இயக்க வரலாறு… இத்யாதி இத்யைகள் என் தொடர்ந்தேன்… வரலாற்றின் வாயிலில், சுயசரிதைகள் வழி பல தலைவர்களின் வாழ்கை நிகழ்வுகளில், நான் கட்டமைத்த கனாக்களின் வழி சென்று நெகிழ்ச்சித் தருணங்களை அனுபவித்திருக்கிறேன். புனைவுகளின் மேல் நம்பிக்கை அற்ற இளம்பருவமது. தமிழ்ப்பற்று டையவர், வாசிப்பாளர் என்றாலே கண்டிப்பாக வாசித்திருக்க வேண்டிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வாசித்திராதவள்.

நீண்ட கால இடைவெளி…. படிப்பின் நிமித்தமாக… போதைகளை மறந்து ஓர் துறவறம். இந்த சிவில் சர்வீஸ் தேர்வு என்னை ஓர் புத்த பிட்சுவாக ஆக்கிவிட்டிருந்த தருணம்… 5 வருடங்கள். என் சித்தாந்தங்கள் மாறி விட்டன. முன்பு காந்தியை வெறுத்தவள் இன்று அவரை நினைத்தாலே கண்ணீர் பொங்குகின்றன.. யாரேனும் பெரியாரை பற்றி பேசினால் வாரி சுருட்டிக் கொண்டு சண்டைக்கு செல்பவள், இன்று சிறு புன்னகை தவிர வேறொன்றும் சொல்வதில்லை. எல்லோருக்கும் நம் சித்தாந்தங்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன. நேற்றைய ‘நான்’ ஐ நானே காண முடியாத போது, நிலையில்லா சித்தாந்தங்களை நான் ஏன் பிதற்றிக் கொண்டிருக்க வேண்டும். இப்படி மத்தியமார்கா நிலைக்கு வந்து விட்டேன். எதையும் தன்னுள் ஈர்க்கும் விஷ்ணுபுரதன்தைப் போல்…..

நண்பர் பாலாவின்  WhatsApp statusல் “தனிமை” பற்றி ஓர் அற்புத புனைவு கண்டேன்.

உடனே அதைப்பற்றி விசாரித்தபோது தான் விஷ்ணுபுரம் என் எண்ணத்தின் வாயிலை அடைந்தது. பின் அதை வாசிக்க ஆரம்பித்தேன்.

“ஸ்ரீபாதம்” முடித்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

“கொஸ்தூபம்” ஆரம்பிக்க வேண்டும். முடியவில்லை.

இன்னும் ஸ்ரீ பாதத்தினின்றே மீளவில்லை.. என் மனவறையில் கட்டமைத்த விஷ்ணுபுரத்தின் ஒவ்வோர் இடமாக மீண்டும் மீண்டும் சென்று சரி செய்கிறேன். திருவடியை, பிங்கலனை, லலிதாங்கியை, இன்னும் பலரை சரியான இடத்தில் பொருத்தியிருக்கிறேனா என்று மீண்டும் மீண்டும் மீட்டுருவாக்குகிறேன். திருப்தியில்லை. கௌஸ்தூபம் கோபமடைவதை உணர்கிறேன். ஆனால் ஸ்ரீ பாதம் என்னை ஏளனம் செய்கிறது. போதாக்குறைக்கு சில இடங்களில் உணர்வு மேலோங்குதலில் உந்தப்பட்டு நாய் போல் அங்கேயே படுத்துக் கிடக்கிறேன். பிரிதொரு நாளிலும் இதே நிகழ்கிறது. புதியதொரு அனுபவம் என்னுள்.. இத்துனை நாள் என்னை ஏன் சந்திக்காதிருந்தாய் என்று கடிகிறேன். வாழ்க்கையின் அழுத்தங்களில் உந்தப்பட்டு, பற்பல கேள்விகளின் பாற்பட்டு விக்கித் தவித்திருக்கும் போது கிடைத்த இளைப்பாற்றி விஷ்ணுபுரம்.

விஷ்ணுபுரம் தொடங்கிய பொழுது அப்படி ஓர் இடம் இருப்பதாக நினைத்து Google maps ல் தேடினேன். நண்பரிடம் சொன்னபோது சிரித்தார். கற்பனை என்றபோது ஏமாற்றமிருந்தும், நானே கட்டமைக்க முற்படலானேன். நீங்கள் செதுக்கியது போல விஷ்ணுபுரத்தைக் காண எவ்வளவு நாள் எடுக்குமென தெரியவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன். அதன் தத்துவார்த்தங்களில் மூழ்கி சிலாகிக்கிறேன்.

விஷ்ணுபுரத்தைத் தாண்டி உங்களை பின் தொடர ஆரம்பித்தேன். உங்களின் பேச்சுக்கள் YouTube ல் கேட்கிறேன். சில பேச்சுக்கள் தியானித்து கேட்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒன்றாக குறுந்தொகை விளக்கவுரை அமைந்துள்ளது. அதில் குறிப்பாக “பூ இடைப்படினும் யாண்டு பலவாக” -இதன் விளக்கவுரை அமைந்தது…

அடடே!!! என்று ஓடிப் போய் பிற குறுந்தொகை கவிஞர்களை சந்தித்தேன்.

இன்று விஷ்ணுபுரம் தாண்டி என் எண்ணங்கள் முழுதும் நிறைந்து கிடக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல உங்கள் கதவை மிகத் தாழ்மையாக, ஆவலோடு தட்டிக் கொண்டிருக்கிறேன். தழுவல் நிகழும் தருனத்திற்காக காத்துக் கிடக்கிறேன்.

இத்துனை இனிய அனுபவத்திற்காய் நன்றி… அற்புதமான ஆன்மா நீங்கள்.

இனி உங்களின் வழி தான் புனைவுக் கதைகள் உலகம் பார்க்கப் போகிறேன். நண்பர் சொன்னார் விஷ்ணுபுரத்திற்குப் பின், நீங்கள் படிக்க வேண்டுமென்று வைத்திருந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் தேவையற்றுப் போகலாம். உங்கள் பயணம் வெண்முரசை நோக்கிய தாய் இருக்கட்டும் என்றார். எது எப்படியோ.. உங்களிடம் பகிர்ந்து பிறகு இன்று மன பாரம் நீங்கியது.. இனி நிம்மதியாக விஷ்ணுபுரம் செல்வேன். என்று முடிக்கிறேனோ அன்று விஷ்ணுபுரம் அனுபவங்களை கண்டிப்பாக எழுத முற்படுவேன்.

என்றும் அன்புடன்,

ரம்யா.

அன்புள்ள ரம்யா

நன்றி.

விஷ்ணுபுரத்திற்குள் எப்போதாவது நான் திரும்பிச்செல்வதுண்டு. என்னையே பலவாறாகப் பிரித்து அதில் வைத்திருக்கிறேன். பதைப்பும் அகங்காரமுமாக அலைந்த நாட்கள் அதிலுள்ளன. அதிலிருந்து நெடுந்தொலைவு வந்துவிட்டேன் என சில சமயம் உணர்வேன். சிலசமயம் வெளியே வரவே இல்லை என்றும் தோன்றும்.

படித்துவிட்டு எழுதுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரலின் பாதிப்பு
அடுத்த கட்டுரைவாழ்வறிக்கை – ஒரு கடிதம்