அறமெனப்படுவது – கடிதம்

அறமெனப்படுவது யாதெனின்…

அறமெனப்படுவது…. கடிதம்

அறமெனப்படுவது – கடிதங்கள்

 

பெருமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் அறமெனப்படுவது யாதெனின் உரையின் பதிவைப்   படித்ததிலிருந்து தொடர்ந்த சிந்தனையோட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதனால் உங்களுக்கு எழுதுகிறேன்.

முதலில் உங்கள் உரைகளின் வரைவு வடிவங்கள் மேல் எழும் வியப்பு. இது நீங்கள் குவைத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றிய உரையின் பதிவு. அந்த உரையினை நான் கேட்டதில்லை. நீங்கள் அண்மையில் வாஷிங்க்டன் தமிழ் சங்கத்தின் சொற்பொழிவில் நிகழ்த்திய உரை youtube இல்  பார்த்தபோது இதே கருத்தை சொல்லியிருந்தீர்கள். அதை கேட்டுவிட்டு கடந்து சென்றுவிட்டேன் ஆனாலும் உங்கள் எழுத்து வடிவில் பேச்சில் இல்லாத  ஏதோ மாயம் இருக்கிறது. உங்கள் உரையை எழுத்து வடிவில் வாசிக்கும்போது அதன் வீச்சு அதிகமாக தோன்றுகிறது.

நான் உங்களை முதலில் வாசிக்கத்தொடங்கியதே உங்களின்வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ் பல்கலையில் நீங்கள் ஆற்றிய உரையின் வரைவு பத்திவைப் படித்ததிலிருந்துதான். 6 ஆண்டுகளுக்கு முன் வேறு ஏதோ தேடும்போது தற்செயலாக காணக்கிடைத்த உங்கள் தளத்தின் பதிவு. அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஒவ்வொருநாளும் உங்கள் தளத்தை வாசித்துவருகிறேன். உங்கள் புனைவுகளையும் தேடிப்பிடித்து. நான் எப்போதும் எண்ணிக்கொள்வதுஉங்கள் புனைவுகளிப்படித்தால்  எழும் சிந்தனை தாகத்திற்கு மிகவும் இணையானது உங்கள் மேடை உரைகளை எழுத்துவடிவில் வாசிப்பது. உங்கள் எழுத்து வடிவ உரைகளின் மீது எப்போதுமே ஒரு தீராக் காதல்.

அறம் என்ற ஒற்றைச் சொல்லில் தொடங்கி பல படிநிலைகளில் அதன் வளர்ச்சியக்கட்டும் நேர்த்தியான உரை. உங்கள் உரைகளை கண்ணொளிகளில் பார்பதைவிடவும் வரிவடிவில் படிக்கும்போது அது உள்ளத்துடன் நேரடியாக நுழைந்துவிடுகிறது.  இந்த உரையில் என்னைத் தூண்டிவிட்டது நீங்கள் தொடாமல் விட்ட பகுதிகள்.

அறம் என்ற சொல் தமிழ்ச்சூழலில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து வந்த பாதை குறித்து சொல்லி மேலான மானுட அறத்தை நோக்கிய வளர்ச்சிப்பாதையாக கொண்டு சென்று முடித்திருந்தீர்கள். ஒரு உரையாக அது தன்னளவில் நிறைவானதுதான். ஆனால் உங்கள் குருவின் சீடனாக அது உங்களை திருப்த்ப்படுத்திவிட்டதா என தெரியவில்லை. உங்கள் மானசீக சீடநான எனக்கு இல்லை. பாதிக்காட்டுக்குள் கொண்டுசென்றுவிட்டு இனி நீ உன் வழியைத்தேடிக்கொள் என்று விட்டுவிடீர்கள் என்று தோன்றியது. கண்ணன் அபிமன்யுவை விட்டதுபோல.

காரணம் அறம் என்ற சொல்நிலைத்த முடிவு“, “மாறாததுஎன்ற பொருளில் நீங்கள் தொடங்கிவைத்து. இந்த பொருளில் தொடங்கிய வேர்ச்சொல் மெல்ல மெல்ல இன்று பொருள் படும் இடத்துக்கு வந்துவிட்டது. வடமொழியில் தர்மம் என்ற சொல்லுக்கு இணையாக. இது தன்னறம் (ஸ்வதர்மம்) தொடங்கி மானுட அறம் (மனுதர்மம்) வரை, அதையும் தாண்டி மேலான பிரபஞ்ச அறம் (பௌத்தத்தின் தம்மம் ) வரை. அறம் தமிழின் தர்மமாகவே ஒலிக்கிறது. ஏன் வருணாசிரம தர்மங்கள் கூடஇல்லறம் துறவறம் என அறங்களே. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற வரிசை கூட, அறம், பொருள், இன்பம், வீடு என்று வழங்கப்படுவதால் அறம் தர்மம் என்ற பொருளையே அடைகிறது.

இப்போது மறுபடியும் வேர்ச்சொல்லுக்கு வந்து பார்த்தல்  தொடங்கிய இடத்தியைவிட்டு மிகவும் தள்ளி வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. இறுதியானது, நிலைத்தது என்ற பொருள் படும் இன்னொரு சொல் எனக்குத்தோன்றுகிறது. வடமொழியில்சத்யம்“, இன்றைய தமிழில் மிக அருகில் பொருள்படும் சொல் உண்மை. அறம் அதன் வேர்ச்சொல்லை வைத்துப்பார்த்தால்சத்யம்என்ற கருதுகோளுக்கே கொஞ்சம் அணுக்கமாக தெரிகிறது.

அடிப்படையிலேயே அறம் என்னும் சொல் சத்தியம் என்னும் கருதுகோளிலிருந்து  வெளிவந்து தர்மம் என்னும் கருதுகோளுக்கு சென்று சேர்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. இந்த பொருள் புரட்சி ஆராயப்படவேண்டியது என்று தோன்றுகிறது.

என் புரிதலிலிருந்து மேலே  எழுதுகிறேன். பிழையாகவும் இருக்கலாம்.

சத்தியம் என்பது நிலையானது, என்றும் மாறாதது அல்லது மாற்றவே முடியாதது. வேதாந்த  மரபில் இது ப்ரம்மத்தையே  குறிக்கும் என்று எண்ணுகிறேன். சாங்க்யத்தில் மூல ப்ரக்ருதி?, பௌத்தத்தின் ஆதார உண்மை, சமணத்தில் பிரபஞ்சம். எது மாறாததோ, நிலைத்ததோ அதுவே சத்யம். நிலம் தமிழ்ச்சொல் என்ற சொல் சமண வேர்கொண்டதாக இருக்கலாம் என எண்ணுகிறேன். நிலையான உலகம் எனும் கருதுகோள். (சிவம்?)

இப்போது தர்மத்துக்கு வருவோம் இது தொடர்ந்து இயக்க நிலையில் இருப்பது அல்லது இயங்க வைக்கும் விதி . செய்யப்படுவது, செயல்படுவது, இயக்குவது, இயங்குவது, வளர்வது, வளர்ப்பது, பிரபஞ்சத்தை வாழ்விப்பது. சுருக்கமாக இயக்க விசை. நிலைத்ததல்ல. வேதத்தில்ருதம்“, பௌத்தத்தின் மஹாதர்மம், சமணத்தில் மேலோர் காட்டிய நெறி. பிரபஞ்சத்தை இயங்கவைக்கும் இயற்கையின் ஒழுக்கவிதிகள். இன்றய அறிவியலில் இயர்ப்பியல்  தேடிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தின் இயக்கவிதி தர்மம். (சக்தி?)

இப்போது இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

வேதகாலத்தில் தர்மம் என்ற கருத்துக்கொள் பெரிதாக உருவாகவில்லை என்றே எண்ணமுடிகிறது. தர்மம்தாங்கிப்பிடித்தல், நிலை நிறுத்தும் விசை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. தருமம் பெரிதாக வளர்த்து எடுக்கப்பட்டது உபநிடத காலங்களில் என எண்ணுகிறேன். இணையாக வளரத்தொடங்கிய ஆஜீவகமும், சமணமும் பின்னர் பௌத்தமும் தர்மம் என்பதை தங்களுக்கே உரிய வகையில் வளர்த்து எடுத்தன என எண்ணுகிறேன். இந்துமந்தமும், சமணமும், பௌத்தமும் ஒன்றோடு ஒன்று பல ஆடண்டுகளாக உரையாடி வளர்த்து எடுத்த இந்திய கருதுகோள்.

சத்தியம் என்னும் கருத்துக்கோளுக்கு வேர் வேதத்திலேயே தொடங்கிவிடுகிறது. நிலையானது, என்றும் இருப்பது, மாறாதது அதனால் நிலைத்த உண்மை. இதுவும் மும்மதங்களாலும் எடுத்தாளப்பட்டு வளர்ச்சிபெற்று உண்மை, பின்னர் வாயமை, நேர்வழி நடத்தல் என்று மறுவதுதொடங்கிவிட்டது.  “சத்யமேவ ஜெயதேஎன்ற உபநிடத வாக்கியம்வாய்மையே வெல்லும்என்று மொழி பெயர்க்கப்பட்டதை விடஉண்மையே வெல்லும்என்று கொண்டால் மூலத்திற்கு மிக அணுக்கமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். எப்போதும்உள்ளதுஉண்மை. உண்மை பேசப்படும்போதே அது வாயமை. உங்கள் விளக்கப்படி அறம் என்ற சொல் அதன் வேரில் உண்மை என்ற பொருளிலேயே தோன்றியிருக்கவேண்டும்.

வடமொழியில் தர்மமும், சத்தியமும் இரண்டு தனியான கருதுகோள்களாவே நிலைக்கின்றன. ஆனாலும் தொடர்பு படுத்தப்படும் உள்ளன. தமிழில் ஏனோ அறம் தர்மமாகவே மாறிவிட்டது.

நான் வாசித்தவரையில் உபநிஷத காலத்திலிருந்தே சத்தியமும், தர்மமும் (ருதமும் கூட ) ஒன்றோடொன்று ஒப்புநோக்குதல் தொடங்கிவிட்டது என தோன்றுகிறது. தர்மம் என்பது இயற்கையின் இயக்க விதி, எல்லா பொருளுக்கும் உள்ள உண்மைத்தன்மை, பின்னர் அந்த இயக்க விதிகளுக்கு முரணாக நடக்காமல் விதிகளோடு ஒத்து வாழ்தல். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் முன்னேறி நன்னெறி நடத்தல்.  தர்மப்படி நடத்தல் உண்மைக்கு அணுக்கமானது என்பதால், தர்மம் சத்தியத்தின் வாயில் எனப்பட்டது. “தர்மம் கடைபிடிப்பவன் உண்மையே பேசவேண்டும் என்பதால் இரண்டும் ஒன்றே“,  “சத்தியம் உரை, தர்ம வழி நடஎன்பதுபோன்ற பலங்களில் சத்தியத்தை தர்மத்தோடு இணைக்கின்றன உபநிடதங்கள் . மேலே சொன்னசத்யமேவ ஜெயதேஎன்ற முண்டக உபனிடுத வாக்கியம் கூட அடுத்த சொல்லிலேயேசத்யமேவ ஜெயதே நன்ருதம்என்றுருதத்தை மறுத்தல் சத்தியத்திற்கு முரணானது என்று உரைக்கிறது. ருதம் என்பது தர்மம் என்னும் கருத்துக்கொளுக்கு முந்தைய வேதச்சொல் என்று பார்த்தோம். ஆக தர்மவழி நடத்தலே சாந்தியத்திற்கான வழி என்று மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. உண்மையில் சத்தியம் நிலைக்க தர்மம் தேவையில்லை, தன்னளவிலேயே சத்தியம் என்பது நிலையானதே. தர்மம் மனிதனை சத்தியத்திற்கு இட்டுச்செல்கிறது. இங்கு சத்தியம் என்பது பிரம்மமாக இருக்கனலாம், பௌத்தம் தேடும் இறுதி உண்மையாக இருக்கலாம். சாதாரண இயங்குதளத்தில் நிலைத்த வெற்றியாகவும் இருக்கலாம். ராமனை ஒரு கால் தர்மமாகவும், ஒரு கால் சத்யமாகவும் கொண்டவன் என்று சில உபன்யாசங்களில் சொல்லி கேட்றிருகிறேன். எங்கெல்லாம் தர்மமா, சாத்தியமா என்ற சோதனை வருகிறதோ, அங்கு தர்மமே முக்கியம் என இயங்கியவன் ராமன் அதனாலேயே அவன் அறத்தின் மூர்த்தி (தர்மத்தின் மூர்த்தி)

சமணம் தர்மத்தை நல்வழி நடத்தல், இயற்கைக்குப் புறம்பானதை செயாதிருத்தல் அதையும் தாண்டி பிறருக்கு தீங்கிழைக்காமை , பிறருக்கு உதவுதல்  என்ற தளத்தில் கொஞ்சம் அழுத்தமாகவே நிலவிவிட்டது என எண்ணுகிறேன். இன்று நாம் கொள்ளும் நன்னெறி (moral), நற்செயல் (“righteousness “), நியாயம் (“right judgement “), நீதியின் பால் நடத்தல் (Justice), கொடையளித்தல் (“philanthropy”), தொண்டாற்றுதல் (“Service”), அளித்தல்  அல்லது  பிச்சை இடுதல் (“Offering”), தீங்கிழைக்காமை (“non voilence”), பெரியோர் வழி நடத்தல் (“abide”) என்ற எல்லா விதமான அர்த்தங்களும் சமணம் நிறுவிய கொள்கைகள் என்றே எண்ணுகிறேன். சமணத்தின் ஊழ் வினை கோட்பாடு இதற்கு உதவியிருக்கலாம். தமிழ்ச் சூழலில் அறம் என்ற சொல் சமானத்தாலேயே இன்றைய பொருளைக்கொண்டது என்றால் அது மிகையில்லை. தமிழ் சமணர்களே  “அறம்என்பதை தமிழில் மீண்டும் மீண்டும் தர்மம் என்ற பொருளிலேயே பயன்படுத்தி அதை சத்தியம் என்ற பொருளிலிருந்து நகரத்தினர் என எண்ணுகிறேன். சத்தியம் என்பதைக்குறிக்க உண்மை அல்லது வாய்மை என்ற சொற்கள் எடுத்திக்கொள்ளப்பட்டன. அதனால் அறம் தர்மம் மட்டுமே ஆகிவிட்டது.

ஆனால் தமிழ் சமணரகள் ஏன்அறம்என்ற சொல்லைதர்மத்தைகுறிக்க தேர்ந்தெடுத்தனனர், அல்லது அது அவர்களின் தேர்வுதானா என்பது விவாதத்திற்குரியது. வேறு சொற்கள் தமிழில் இல்லையா அல்லது இருந்து மறைந்து போனதா என்பது இன்னும் ஆரைப்படவேண்டியது என எண்ணுகிறேன். ஏனென்றால் சொல் இல்லையென்றால் அந்த கருதுகோளும் இருந்திருக்கவில்லை  இல்லை என்றாகிவிடும். என்வரையில் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சமணத்திற்கு பின்னல் தமிழ் நிலத்தில் செல்வாக்கு செலுத்திய சைவமும், வைணவமும் சமணத்தின் தர்மக்கொள்கையை மெலும் வளர்த்தெடுத்தன என தோன்றுகிறது. பக்தி, சரணாகதி, கைகாரிய்ம் போன்ற கருத்துக்கொள்களே அறத்தின் மீது ஏற்றப்பட்டன.  கோயில் கட்டுவதும், பூஜைகளை செய்வதும் அரங்களாகின.

இப்போது உங்கள் உரையில் தொட்டுச்சென்ற பிற பகுதிகள் பற்றி. தமிழ்ச்சூழலில் அறம் என்ற கருதுகோளின் வளர்ச்சி.

தன்னறம், குல அறம், குடி அறம், சமூக அறம், மானுடம் முழுமைக்கான அறம் என்று பரிணமித்தது என்ற கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன், இந்திய மதங்களுக்கே உரித்தான பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் சுட்டிய அறம்மானுடரையம் தாண்டி எல்லா உயிரையும் நேசிக்கும் பேரரம்.

மேற்குலகின் சிந்தனையில் அறம் என்ற கருதுகோள் இல்லை . ஆனால் அவர்களுக்கு கிறித்தவத்தின் கருணை அதை கொடுத்தது என்று எண்ணத்தோன்றுகிறது. இலியடின் காலத்தில் காணப்படும்  போரில் கொன்றவனின் சடலத்தையும் விட்டுவைக்காத போர் வெறி பைபிளின் வருகைக்குப்பின்னால் பெரிதும் மாறியது. உலகை வெல்லும் வேட்கையோடு, உலகை நெறிப்படுத்தும், கல்வியை மருத்துவத்தை மேம்படுத்தும் விழைவை மேற்குலகின் உள்ளத்தில் ஊட்டியது.கருணையும், சேவையும் கிறித்தவத்தின் அறம்.

ஒட்டுமொத்தமாக மானுட பண்பாடு அறத்தில் முன்னேறிக்கொண்டே செல்கிறது போர்ச்சமூகங்கள் தேசங்களாக திரண்டதும், தேசங்கள் குடியரசாக மாறியதும், மக்கள் நாலாம் நாடும் சோஷலிச சிந்தனைகள் பிறந்ததும், தனிமனித உரிமைக்கு இன்றிருக்கும்  முக்கியத்துவமும்  இன்று புவியை பாதுகாக்கும் சூழியல் கொள்கைகள் அடுத்த கட்டம்.

ஆனால் எப்போதும் மனித மனம் அறவுணர்வுக்கு இயல்பில் எதிரானதாகவே இருக்கிறது என்று தோன்றுகிறது. போர்வெறியும், வேட்கையும், காமமும்  அறங்களுக்கு எதிரானவையே. அது மலமோ, சாத்தானோ இயல்பான விழைவுகளைப் போராடி தோற்கடிக்கவேண்டியனவே. அப்படிப்பார்த்தால் அறமே, அறவுணர்வே (தர்மமே ) மானுட  இயற்கைக்கு எதிராக மனித மனத்தின் போராட்டமோ என்றும் தோன்றுகிறது.

இப்படிப்பார்த்தால் தர்மம் (ஸ்வபாவம் என்ற பொருளில் ) ஒரு தன்னியல்பு , இயற்கை விதி என்ற பௌத்த, வேதாந்த கோட்பாடுகளுக்கு 180 டிகிரீ  எதிரான பொருளில் அறம் ஒலிக்கிறது.  தமிழ்ச்சூழலில் சமணம் அளவுக்கு பௌத்தமும், வேதாந்தமும் செல்வாக்கு செலுத்தவில்லை என்பதற்கான ஒரு அடையாளமாக இதை எடுத்துக்கொள்ளலாமா என்று தெரியவில்லை.

இன்னும் சிந்தனைகள் தோரார்கின்றன. இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்மீண்டும் எண்ணிப்பார்க்கிறேன் – “அறமெனப்படுவது யாதென்னின்…”.

இப்போதைக்கு தோன்றியவரை கடிதத்தில் கொட்டிட்டேன். தவறாக இருந்தால்  என்னை மெதுவாக கொட்டி விட்டுடுவீர்கள் என் எண்ணுகிறேன்.

பணிவுடன்,
கணேஷ்

முந்தைய கட்டுரைகவிதையின் இசை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாரதி நினைவுக்குறிப்புகள்