கவிதையின் இசை -கடிதங்கள்

 

கவிதைகள் பறக்கும்போது…

அன்புள்ள ஜெ

 

கவிதைகளின் ஒலியழகின் தேவை பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு வாசித்தேன். நம் கவிஞர்கள் எவருமே அதைப்பற்றி எதிர்வினையாற்றவில்லை. ஒரு கவிதைரசிகனாக எனக்கு அந்தக்கட்டுரை மிகமுக்கியமானது. நான் மலையாள, கன்னடக் கவிதைகளையும் ரசிப்பவன். எனக்கு தமிழ்க் கவிதைகளின் மேல் சலிப்பு உருவாவதற்கு அத்தனை கவிஞர்களின் மொழிநடையும் ஒன்றாகவே இருப்பது முக்கியமான காரணம்.

 

தமிழில் எழுதும் கவிஞர்களில் சிலருடைய கவிதைகளை வாசித்தால் மட்டுமே அவை எவருடையவை என்று தெரியும்ம் மற்ற அனைவருமே ஒரே மொழியில் ஒரே பாணியில் ஒரே பிரச்சினைகளைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தனிமை, காமம் இரண்டும் மட்டும்தான் தமிழ்க்கவிதையின் பேசுபொருள்.

 

தமிழ்க்கவிதையில் அரிய படைப்புக்கள் அவ்வப்போது வருகின்றன. ஆனால் மிகப்பெரிய தேக்கம் நிலவுகிறது. கவிஞர்கள் தங்கள் எழுதும் முறையை உடைத்து புதிதாக எதையாவது செய்தாலொழிய அந்த மாற்றத்தைச் செய்யமுடியாது. அதற்கு கவிதையின் இசையழகை கொண்டுவருவது ஒரு நல்ல வழியாக இருக்கும்

 

எம்,தேவராஜ்

 

அன்புள்ள ஜெ

 

தமிழ்மொழியின் சொல்லழகை நவீன புதுக்கவிதையில் தேவதேவனுக்குப்பின்னால் எவரிடமும் காணமுடியாது. தேவதேவனிடமே கூட எல்லா கவிதையும் அதெல்லாம் இல்லை. இன்றைய நிலை மிகமிக சோர்வூட்டக்கூடியது. தமிழின் மொழியழகை அறிந்தால் ஒருவர் உடனே தமிழ் நவீனக்கவிதையிலிருந்து விலகிவிடுவார். இந்த நவீனக் கவிதைமொழி மொழியழகு இல்லாதது மட்டுமல்ல இருக்கும் மொழியழகையும் சிதைப்பது. ஆகவே பல கவிதைகள் எரிச்சலூட்டுகின்றன

 

முக்கியமான கட்டுரை. ஆனால் இன்று கவிதையெழுதும் எவரும் அதையெல்லாம் பொருட்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை

 

பாஸ்கர்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74
அடுத்த கட்டுரைஅறமெனப்படுவது – கடிதம்