வன்மேற்கு நிலம் – கடிதங்கள்

வன்மேற்குநிலம்

அன்புள்ள ஜெ

 

வன்மேற்கு நிலம் பற்றி உங்கள் தளத்தில் வெளிவந்த உங்கள் கட்டுரையும் அதைவிட விரிவான சுப்ரமணியனின் கட்டுரையும் வாசித்தேன். உங்களுக்கு வன்மேற்கு கதைகளில் என்ன ஈடுபாடு என்று நான் யோசித்திருக்கிறேன். உங்களுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகமான சிறுவன் உண்டு. உங்களுடைய பல கதைகளில் அந்தச்சிறுவனைக் காணலாம். அந்தச்சிறுவனின் உலகம் அந்த கதைகள் என நினைத்துக்கொள்வேன். அந்த நிலம் மீதான மோகமே அக்கதைகளை வாசிக்கவைக்கிறது என்றும் எழுதியிருக்கிறீர்கள்

 

ஆனால் இப்போது தோன்றியது என்னவென்றால் நீங்கள் ஒரு சமூகம் படிப்படியாக உருவாகிவருவதைத்தான் அந்தக்கதைகளில் காண்கிறீர்கள். அதுதான் உங்களுக்குச் சுவாரசியமூட்டுகிறது. வெண்முரசிலேயே கூட புதியநிலங்களில் சமூகமும் அரசாங்கமும் உருவாகி வருவதன் நிறைய சித்திரங்கள் உள்ளன அவற்றை எல்லாம் நீங்கள் கற்பனைசெய்வதற்கு எவ்வகையிலோ இந்த கதைகளும் உதவுகின்றன என்று நினைக்கிறேன்

 

எம்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

வன்மேற்கு பற்றி நீங்களும் சுப்ரமணியனும் எழுதியிருக்கும் கட்டுரைகள் ஆழமானவை. நிர்வாகவியலில் பெரும்பாலும் வன்மேற்கின் உதாரணங்கள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் குட் பேட் ஆன் அக்லி பெரிய மெட்டஃபர். மூன்றுவமையான அக்ரெஸிவ் நிர்வாகிகள் உண்டு. ஒருவகையினர் ‘குட்’ எனப்படுபவர்கள். இவர்கள் நல்லவர்கள், நெறிகளில் நிற்பவர்கள். இரண்டாம் வகையினர்  ‘பேட்’ எனப்படுபவர்கள். இவர்கள் மிகமிகக் கறாரானவர்கள், சுயநலமிகள், நெறிகளை பொருட்படுத்தாதவர்கள் கொடூரமானவர்கள். மூன்றாம் தரப்பு அக்லி. இவர்கள் கோமாளித்தனமானவர்கள். ஏமாற்றுக்காரர்கள். இவர்களின் விளையாட்டுத்தனம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் கொடியவர்கள். வன்மேற்கு என்பது மனிதனின் அக்ரஸிவ் குணங்கள் வெளிப்படும் ஒரு கற்பனையான நிலம்

 

எம். ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைதன்னுரைத்தல்
அடுத்த கட்டுரைஆன்மீகம், சோதிடம், தியானம்