வன்மேற்கு – கடிதங்கள்

வன்மேற்குநிலம்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் வரும் கட்டுரைகளில் பிறர் எழுதும் கட்டுரைகள் அவ்வப்போது மிகச்சிறப்பாக அமைவதுண்டு. நீங்கள் எழுதும் கட்டுரைகளைவிட ஒரு படிமேலாகவே. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒன்று சமீபத்தில் வெளியான வன்மேற்கு பற்றிய கட்டுரை.

கௌபாய்களின் உலகம் எப்படி உருவாகிவந்தது எவரெவர் அவற்றில் நல்ல எழுத்தாளர்கள் அவர்களின் தனித்தன்மை என்ன அந்த உலகின் நுட்பங்கள் என்ன என்று மிகவிரிவாகச் சொன்ன அத்தகைய கட்டுரை தமிழிலேயே முதலாவதாக எழுதப்படுகிறது என நினைக்கிறேன்

கௌபாய்களின் உலகிலுள்ள வன்முறை என்பது அரசு இல்லாமல் இருப்பதன் விளைவாக உருவாவது என்றுதான் நான் நினைத்திருந்தேன். அது ஓர் அரசு உருவாகி வருவதன் சித்திரம் என்று இப்போது தெரிந்தது. ஓர் அரசை வன்முறை உருவாக்கிக் கொண்டுவருவது தான் கௌபாய் உலகம். அதாவது வன்முறை வழியாக வன்முறை இல்லாமல் ஆகிறது. மிக நுட்பமான பல கருத்துக்களுக்கு இடமளிக்கும் கட்டுரை

ஆர்.ஸ்ரீனிவாஸன்

***

அன்புள்ள ஜெ

கௌபாய் உலகம் பற்றி சுப்ரமணியம் அவர்களின் கட்டுரை மிக ஆழமானது. ஏராளமான சுவாரசியமான செய்திகள். அதில் மிக முக்கியமானது கௌபாய் உலகம் பற்றி எழுதியவர்களில் பலர் அந்த நிலத்தில் வாழ்ந்தவர்களே அல்ல, அவர்கள் செவிவழிச்செய்தி வழியாகவே அந்த உலகை உருவாக்கினார்கள் என்பது

ஒருவேளை கௌபாய் உலகத்தின் உள்ள சுவாரசியத்திற்கும் நுட்பங்களுக்கும் இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அங்கே வாழ்ந்திருந்தால் அந்த ரொமாண்டிஸிஸம் உருவாகியிருக்காது. அந்த ரொமான்ஸிசிஸம் தான் வன்மேற்கை அழகாக நுட்பமானதாக ஆக்குகிறது

கௌபாய் படங்களிலேயே கூட இத்தாலியில் எடுக்கப்பட்ட ஸ்பெகெட்டி வெஸ்டர்ன் படங்களிலுள்ள நகைச்சுவையும் அழகும் அமெரிக்கர்கள் எடுத்த படங்களில் இல்லை என்று நினைக்கிறேன். இன்றைக்கும் கூட செர்ஜியோ லியோன் படங்கள்தான் அபாரமாக இருக்கின்றன

மகேந்திரன்

***

முந்தைய கட்டுரைசெயல்யோகத்தின் சுவடுகள்
அடுத்த கட்டுரைகாந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்