பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 7
நினைத்திருந்ததைவிட துவாரகைக்கு தொலைவில் முன்னதாகவே அஸ்வபதம் அமைந்திருந்தது. அதை அணுகுவதுவரை பாலை முடிந்து புல்வெளி தொடங்குவதை சாரிகர் உணர்ந்திருக்கவில்லை. பாலை தொடங்கியதைப் போலவே முடிவுற்றதையும் அறியமுடியவில்லை. அவர் விழிகளும் செவிகளும் உள்ளமும் சூழ்ந்திருந்தவற்றிலிருந்து உருவாக்கிக்கொண்ட பாலைநிலத்திலேயே அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். பாலையிலேயே பிறந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்போல. அதன் ஒவ்வொரு மண்பருவையும் நன்கறிந்தவர்போல. அந்நிலத்தின் பாறைகளில், செடிகளில், உயிர்களில் ஒன்று என.
காற்றின் இடைவிடாத ஓலம், மணல்மழை, கண்கூசும் பகலொளி, இரவின் மிளிர்வொளி, மண்வெந்த மணம், அரிக்கப்பட்டுநின்ற பாறைகள், குற்றிலை மரங்கள், முட்புதர்கள். பாலை என்பது ஒற்றைநிலம் அல்ல என அவர் அதற்குள் நுழைந்த பின்னரே புரிந்துகொண்டார். அதில் சோலைகள் இருந்தன. உப்பு பொரிந்த சிறு ஏரிகளும் இருந்தன. ஆகவே புல்வெளியையும் பாலையெனவே பார்த்துக்கொண்டிருந்தார். பாலையில் நுழைந்த பின்னர் அவர் நோக்கின் கோணம் மாறிவிட்டிருந்தது. அது நெடுந்தொலைவுகளை மட்டுமே சுழன்று வளைத்தெடுத்து சூழலை உருவாக்கியது. அண்மைக்காட்சிகளை அறியவில்லை.
புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் அவர்களை நோக்கி ஓலமிட்டபடி கூட்டமாக அணுகிவந்தன. அவற்றைக் கண்டதும் முதல்முறையாக அவர் ஒரு துணுக்குறலை அடைந்தார். பசு ஒன்றைக் கண்டு நெடுநாட்கள் ஆகிவிட்டன என்று உணர்ந்தார். வண்டியிலிருந்து தலைநீட்டி சாரிகர் “எந்த இடம்?” என்றார். “நெருங்கிவிட்டோம். துவாரகை இன்னும் நான்கு காதம் தொலைவில்தான்” என்றான் காவலன். “அங்கே காவலர் எவருமில்லையா என்ன?” என்று சாரிகர் கேட்டார். அத்தனை அணுகிய பின்னரும்கூட எவரும் அவர்களிடம் எவரென உசாவவில்லை. காவலன் மறுமொழி சொல்லாமல் கண்மேல் கைவைத்து நோக்கி “அங்கே முறையான காவல் ஏதும் இல்லையென்றே தோன்றுகிறது” என்றான்.
அவர்கள் மேலும் அணுகியபோது அஸ்வபதத்தின் சிறிய கோட்டை கண்ணில் பட்டது. பாறைகளை வெட்டி அடுக்கி உருவாக்கப்பட்ட உயரமில்லாத கோட்டையின்மேல் மரத்தாலான காவல்மாடங்கள் இருந்தன. அவர்கள் அணுகுவதைக்கண்டு அதன்மேல் ஒரு கொடி எழுந்து அசைந்தது. காவலன் தன் கையிலிருந்த கொடியை அசைத்து மறுமொழி அளித்தான். அங்கிருந்து ஒரு புரவி கிளம்பி அணுகி வந்தது. அது அணுகுவதை நோக்கியபடி அவர்கள் சென்றனர். புரவியிலிருந்து இறங்கிய யாதவக் காவலர்தலைவன் “இங்கே எவரும் வருவதாக எங்களுக்கு செய்தி வரவில்லை” என்றான். சாரிகர் “முறையான தூது முன்னரே அளிக்கப்பட்டுவிட்டதே?” என்றார். அவன் குழம்பி “உண்மையில் துவாரகையிலிருந்து எந்தச் செய்தியும் வருவதில்லை” என்றான். “எங்கள் தூது அஸ்தினபுரியில் இருந்து. இவர் எங்கள் அமைச்சர்” என்றான் அவருடைய காவலர்தலைவன்.
யாதவக் காவலர்தலைவன் குழம்பினான். பின் அவனே எண்ணி முடிவெடுத்து “எதுவாயினும் வருக!” என்று சொல்லி அவர்களை அழைத்துச்சென்றான். அவனுடைய நடையிலேயே அவன் யாதவன் என்று தெரிவதை சாரிகர் மெல்லிய புன்னகையுடன் பார்த்தார். அவர்கள் பொறுமையானவர்கள், காத்திருக்கும் கலை கற்றவர்கள். ஆனால் முறைமைகளில், சுற்றிவளைக்கும் மரபுச்சொற்றொடர்களில் சலிப்புறுபவர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் படைக்கலப்பயிற்சிக்கும் அரசுப்பயிற்சிக்கும் அப்பாலிருந்து மிக எளிதாக வெளியே வருபவர்கள். அவர்களை எளிய சொற்கள் வழியாக எளிதில் அணுகிவிடமுடியும்.
“தங்கள் பெயர் என்ன?” என்று அவர் கேட்டார். “சங்கன்” என்று அவன் சொன்னான். அவ்வினாவிலேயே முகம் மலர்ந்துவிட்டான். “நீங்கள் விருஷ்ணிகுலத்தவர் அல்லவா?” என்று சாரிகர் கேட்டார். “ஆம், நான் இளைய யாதவர் பிறந்த அதே ஊரை சேர்ந்தவன். மதுவனத்தில் அவருடன் என் தந்தை விளையாடியிருக்கிறார்” என்று அவன் சொன்னான். “ஆம், நான் அவ்வாறே எண்ணினேன். அவருடைய உடலசைவின் சாயல் உங்களிடம் உள்ளது” என்றார் சாரிகர். “நீங்கள் அவரை பார்த்திருக்கிறீர்களா?” என்றான் சங்கன் “நான் அவருக்கு அணுக்கமானவன்” என்றார் சாரிகர். “அவர் ஆணைப்படியே வந்திருக்கிறேன்.”
சங்கன் அதை முழுமையாக நம்பியதை முகம் காட்டியது. “அவர் இங்கே வருவது எப்போது?” என்று அவன் கேட்டான். “இங்கே விருஷ்ணிகள் ஒவ்வொருவரும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்போது பிற யாதவ குலத்தவர் ஒன்றாகச் சேர்ந்துவிட்டனர். விருஷ்ணிகள் ஒவ்வொரு நாளும் சிறுமைகொள்கிறோம். போஜர்களும் அந்தகர்களும் எங்களை துரத்திவிட்டு துவாரகையை கைப்பற்றிக்கொள்ளக்கூடும் என்று சொல்கிறார்கள். அவர் மட்டுமே எங்களை காக்கமுடியும்.” சாரிகர் “அவர் வருவார். ஷத்ரியகுடியை முற்றழித்து வென்றவரால் இயலாதது ஏதுமில்லை” என்றார். அவன் சிரித்து “ஆம், அதைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்றான். “அது குறித்த செய்தியுடன்தான் வந்துள்ளீர்களா?”
சாரிகர் “அதை சொல்லமுடியுமா?” என்றார். சங்கன் நாணி “ஆம், அதை கேட்கக்கூடாது. ஆனால் நான் முழுமையாக அப்படி தற்கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை” என்றான். “அது எவருக்கும் இயல்வதல்ல, மேலும் நாம் அயலாருமல்ல” என்று சொன்னார். சங்கன் நகைத்து “ஆம், அதை தங்களை பார்த்தபோதே எண்ணினேன்” என்றான். “இளைய யாதவர் சென்றபின் இந்நகரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்நகரை செலுத்திய விசை அவரே என்பதை அவர் சென்ற மறுநாளே அனைவரும் உணரத்தொடங்கினர். உண்மையில் அவர்மேல் இத்தனை காழ்ப்பையும் கசப்பையும் இவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்க அதுவே அடிப்படை.”
கோட்டையின்மேல் மணல் சரிவாக ஏறியிருந்தது. அதன் இடுக்குகளில் முட்செடிகள் படர்ந்திருந்தன. “இங்கே குடிநீர் ஊற்றுக்கள் உள்ளனவா?” என்று கேட்டார். “ஆம், இங்கே வற்றாத எட்டு ஊற்றுக்கள் உள்ளன. அவற்றால்தான் இவ்வூர் உருவாகியது. முன்பு இது குதிரைகளை மேய்த்துக்கட்டும் இடமாக இருந்தது” என்றான் காவலர்தலைவன். “இங்குதான் விராடநாட்டு இளவரசி இருக்கிறார் என்று கூறப்பட்டது” என்று சாரிகர் சொன்னார். “ஆம், யாதவ அரசியர் இருவருமே இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் சங்கன்.
சாரிகர் திகைத்து “யாதவ அரசியர் என்றால்? சத்யபாமையும் சுபத்ரையுமா?” என்றார். “ஆம், அவர்கள்தான் இளவரசியை பார்த்துக்கொள்கிறார்கள். யாதவ அரசி சத்யபாமை முன்பிருந்தே இங்கிருக்கிறார். சுபத்ரைதேவி நீர்க்கடன் முடிக்க அஸ்தினபுரிக்குச் சென்று மீண்டார்.” சாரிகர் “ஏன் துவாரகைக்கு இளவரசியை கொண்டுசெல்லவில்லை?” என்று கேட்டார். சங்கன் “அறியேன்” என்றான். “நீர் அறிவீர்” என்றார் சாரிகர். “நான் மெய்யாகவே அறியேன். ஆனால் இங்கே இளவரசி இருப்பது ஓர் அரசமந்தணமாகவே இருக்கிறது. அங்கே துவாரகையில் இருந்தால் மந்தணத்திற்கு வாய்ப்பில்லை என்னும் எண்ணம் இருந்திருக்கலாம்” என்று சங்கன் சொன்னான்.
கோட்டைவாலுக்கு சங்கன் ஓடிச்சென்று அவர்களை அறிமுகம் செய்ய அவர்கள் எதுவும் கேட்காமல் வண்டியை உள்ளே அனுப்பினார்கள். உள்ளே ஓரளவு காவல் இருப்பதை சாரிகர் கண்டார். ஆனால் எந்த எதிர்ப்பையும் எதிர்பார்க்காமல் நீணாள் பணியாற்றும் காவலர்களுக்குரிய சலிப்பும் ஆர்வமின்மையும் அவர்களிடமிருந்தது. ஊரின் தெருக்கள் வெண்மணலால் ஆனவை. நடுவே வண்டிகள் செல்லும் பொருட்டு பலகை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பலகைகள் மேல் சகடங்கள் ஓடியபோது ஒலியே எழவில்லை. அதன் பின்னரே அவர் அவை செந்நிறக் கற்பலகைகள் என்பதை கண்டார். மரம் போலவே வரிவீச்சும் சுழிப்புகளும் அலைகளும் கொண்டவை.
அஸ்வபதத்தின் இல்லங்கள் அனைத்துமே அந்த வகையான செந்நிறக் கற்களை அடுக்கி சுவர் எழுப்பி மேலே மரக்கூரை இடப்பட்டவை. மரக்கூரைகளின் மேல் மணல் படிந்து வரிகளாக அமைந்திருந்தது. கூரைவிளிம்புகளில் இருந்து பூழி சிற்றலைகளாக விழுந்தது. பல இல்லங்கள் மூன்றடுக்கு மாளிகைகள் என்பதைக் கண்டு அவர் வியந்தார். அந்தச் சிறிய ஊரில் அத்தனை மாளிகைகள் அமைந்திருக்குமென தோன்றவில்லை. பல மாளிகைகளுக்கு முன்னால் பல்லக்குகளும் தேர்களும் நின்றிருந்தன. பல இல்லங்களிலிருந்து யாழிசையும் முழவொலியும் கேட்டன. சாலைகளில் புரவிகள் வால்சுழல சென்றன.
அவ்வூரில் அயலவர் வருவது குறைவு என்று தெரிந்தது. அங்கே வணிகமோ சந்தையோ இருப்பது போலவும் தெரியவில்லை. ஆகவே சாலைகளில் குறைவாகவே நடமாட்டம் இருந்தது. பெரிய வண்ணத் தலைப்பாகையும் மெய்ப்பையும் அணிந்த மக்கள் தெருக்களின் ஓரமாக சுருங்கிய கண்களால் நோக்கியபடி ஓய்வாக அமர்ந்திருந்தனர். பலர் வாய்மணம் மென்றுகொண்டிருந்தனர். ஒரு சூதர்குழு கைகளில் இசைக்கலங்களுடன் பேசி நகைத்தபடி சென்றது. ஏதோ ஆலயத்திற்குரிய நெய்க்கலங்களுடன் நால்வர் பேசிக்கொண்டே சென்றனர். தலைவழியே சேலைகளை சுற்றிக்கொண்ட பெண்டிர் கூட்டம்கூட்டமாக ஆலயங்களுக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
“அந்திக்கு இன்னும் பொழுதிருக்கிறது. இவர்கள் ஏன் ஆலயத்திற்கு செல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். “இங்கே வேறு செயல்கள் ஏதுமில்லை. இது இன்று துவாரகையிலிருந்து பாலை வேட்டைக்கு வருபவர்கள் தங்குவதற்கான ஊர். இங்கே பாலையில் முயல்கள் நிறையவே உண்டு. புரவிகளில் சென்று ஈட்டிகளை எறிந்து முயல்களைப் பிடிப்பதும் பிடித்த முயல்களை ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைப்பற்றுவதும் இங்குள்ள விளையாட்டு. இங்குள்ள பெரும்பாலான மாளிகைகள் கணிகையருக்குரியவை. அவர்களின் வாழ்க்கையே ஆலயங்களைச் சார்ந்ததுதான்” என்றான் சங்கன்.
“இங்கே அங்காடிகள் ஏதுமில்லையா?” என்று சாரிகர் கேட்டார். “இங்கே எந்தப் பொருளும் விளைவிக்கப்படுவதில்லை. கைவினைஞரோ ஆயரோ இங்கில்லை. வேட்டைக்கு உதவும் காவலரும் ஏவலரும் சூதரும் நிமித்திகரும் பலவகையான விளையாட்டுக்காரர்களும் மட்டுமே இங்குள்ளனர். இது அரண்மனைக்கு வெளியே ஒரு தங்குமிடம் மட்டுமே. இங்கே ஊருக்குரிய எதுவும் இல்லை என்பார்கள். இங்குள்ள குடிகள் அனைவருமே வெளியே இருந்து வந்து தங்கியிருப்பவர்கள். ஆகவே இங்கே விற்றுவாங்கும் அங்காடிகள் இல்லை. துவாரகையிலிருந்து வண்டிகளில் பொருட்கள் இங்கே வரும்” என்று சங்கன் சொன்னான். “இங்கே கொற்றவைக்கும் பாலைநிலத்து தெய்வங்களான ஆறு காற்றுகளின் அன்னையர்களுக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு ஆலயங்களில் எல்லா நாளும் ஏதேனும் விழாக்களோ கொண்டாட்டங்களோ இருக்கும்.”
ஊரின் நடுவே மரத்தாலான ஏழு அடுக்கு மாளிகை அமைந்திருந்தது. அது ஒரு பெரிய மரக்கலம்போல தோன்றியது. துவாரகையின் கருடக் கொடியும் விருஷ்ணிகளின் கன்றுக் கொடியும் அதன்மேல் பறந்தன. “இளைய யாதவர் இங்கிருந்தபோது அவ்வப்போது வந்து தங்குவார். அயல்வணிகர்கள் வந்து தங்கி வேட்டையாடி திரும்புவார்கள். அன்றெல்லாம் இம்மாளிகையில் எப்போதும் எவரேனும் தங்கியிருப்பார்கள். நாற்பது ஏவலர்களும் அறுபது சேடியரும் நூற்றைம்பது காவலர்களும் கொண்ட அரண்மனை… இப்போது வேட்டைக்கு வருபவர்கள் எவருமில்லை” என்று சங்கன் சொன்னான். “ஆனால் அரசி இங்கிருப்பதனால் துவாரகையிலிருந்து பொருள் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே செயலேதும் இன்றி இவ்வூர் ஓய்வுகொள்கிறது.”
அரண்மனைக்காவலர்கள் அவர்களை தொலைவிலேயே நிறுத்திவிட்டனர். அவருடைய அனைத்துச் செய்திகளையும் தெரிந்துகொண்ட பின் அவரிடமிருந்து ஓலையை பெற்றுக்கொண்டு உள்ளே சென்றார்கள். சாரிகர் மாடங்கள் ஒன்றன் மேல் ஒன்று தூக்கி அடுக்கப்பட்டது போன்ற அந்த மாளிகையைப் பார்த்துக்கொண்டு நின்றார். அதன் கூரை சரிந்திறங்கி விளிம்பில் மலரிதழ்போல வளைந்து மேலேறி தெரிந்தது. ஏழு இதழடுக்குகள் கொண்ட ஒரு பெரிய மலரைக் கவிழ்த்ததுபோல. கூரையின் முனைகளில் பீதர்நாட்டு சிம்மநாகம் வாய் திறந்திருந்தது. “இது பீதர்களால் அவர்களின் மாளிகைகளைப்போல அமைக்கப்பட்டது. இந்த மரம்கூட அவர்களால் கப்பல்களில் கொண்டுவரப்பட்டதுதான்” என்று சங்கன் சொன்னான்.
வெயில் இறங்கத்தொடங்கியிருந்தது. மேற்கு நோக்கி அமைந்திருந்த மாளிகைமேல் சாய்கதிரொளி பட்டு அதன் மரப்பரப்புகள் பொன்போல் சுடர்ந்தன. மாளிகையின் அனைத்துச் சாளரங்களும் முற்றம் நோக்கி சற்றே குனிந்தவைபோல் திறந்திருந்தன. மர அழிகளாலான காலதர்களினூடாக அரண்மனைக்குள் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டுவிட்டதை காணமுடிந்தது. மையமாளிகைக்கு இரு பக்கமும் சிறகுகள்போல ஒற்றைமாடம் கொண்ட கட்டடங்கள் நீண்டிருந்தன. வலப்பக்கம் அமைச்சும் பிறவும் எனவும் இடப்பக்கம் ஏவலர்களுக்குரியது என்றும் தெரிந்தது. ஏவலர் பகுதியில் மக்கள் புழங்கும் அசைவுகள் தெரிந்தன. அமைச்சுநிலைகள் ஒழிந்து கிடப்பதுபோலத் தோன்றியது.
வெயில் செம்மை மிளிர்வு கொண்டதும் மாளிகைமுகப்பில் நின்றிருந்த மாந்தளிர் நிறமான புரவிகளும் அனல்போல் ஆயின. மாளிகையின் ஏழாவது அடுக்கின் நடுவே சிறிய கூம்புக்கூரைக்கு அடியில் தொங்கிய பெரிய பீதர்நாட்டு மணி ஓங்கார ஒலியெழுப்பி பொழுந்து மாறுவதை அறிவித்தது. தொடர்ந்து ஊரின் வெவ்வேறு ஆலயங்களிலிருந்து மணியோசைகள் எழுந்தன. ஊரே ஒரு மாபெரும் யாழ் என ஒலித்து கார்வையுடன் அடங்கியது. தொலைவில் சங்கொலி எழுந்தது. மேலும் மேலும் சங்கொலிகள் எழுந்தன. முகில்துளியே அற்ற வானுக்குக் கீழே அந்தச் சங்கோசை ஓர் ஏக்கம் என எழுந்து கரைந்தமைந்தது.
புறாக்கள் மாளிகையின் மாடத்து இடுக்குகளிலிருந்து சிறகடித்துச் சுழன்று முற்றம் நோக்கி இறங்கின. அரண்மனையின் முகப்பு முற்றத்திலும் செந்நிறமான கற்பலகைகள் பரப்பப்பட்டிருந்தன. முற்றத்தில் நின்றிருந்த இரண்டு தேர்களில் குருதிநிறமான பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தன. பொன்னிறம் பூசப்பட்ட பிரம்புகளால் ஆன இரு பல்லக்குகள் வெண்ணிறப் பட்டுத் திரைச்சீலைகளுடன் நின்றன. ஒவ்வொன்றின் மேலும் மாலை வெளிச்சம் வழிந்தது. பித்தளைக் குமிழிகள் சுடர்கொண்டன. வெள்ளிச் செதுக்குகள் பொன்னாயின. செந்நிறக் கற்பரப்பின்மேல் உப்புத்தூள் பரப்பப்பட்டதுபோல மினுக்கம் விரவி விரிந்தது. மிக அரிதான ஓர் ஓவியக்காட்சி என அத்தருணத்தை அது மாற்றியது.
சாரிகர் அந்த மாலையொளியின் பொன்னிறத்துக்கு நிகராக அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. பாலையில் மாலை என்பது நெடும்பொழுது நீளக்கூடிய ஒன்று. பல படிகளாக, பல வண்ணங்களாக, பலவகையான ஒலிகளாக அது ஒன்றிலிருந்து ஒன்றுக்கு சென்றுகொண்டே இருக்கும். அந்தி எழுந்த பின்னரும் இருள் அமைய நெடும்பொழுதாகும். இருள் திசைகளின் எல்லைகளுக்கு அப்பால் தயங்கிக்கொண்டிருக்கும். கதிர் மறைந்த பின்னரும் தொடுவானம் ஒளிர்ந்துகொண்டிருக்கும். அதன் வட்டம் அணைந்த பின்னரும் வானிலும் மண்ணிலும் அறியா ஒளியொன்று எஞ்சியிருக்கும். விண்மீன்கள் எழுந்த பின்னரே இரவு அமைந்துவிட்டதை உணரமுடியும்.
ஆனால் பாலையில் மாலை வெளிச்சம் வெறுமையென விரிந்த நிலத்தின்மேல் வானிலிருந்து பொழிந்து பரவிக்கொண்டிருக்கும். அசைவிலாது மஞ்சள்திரையென நின்றிருக்கும். ஒன்றுமே நிகழாததுபோல, பல்லாண்டுகளாக அந்தக் காட்சி அப்படியே நீடிப்பதுபோல உளமயக்கு உருவாக்கும். பாலை நிலத்தின் மாலைச்செம்மை அதைப் போன்ற மாளிகைமேல், முற்றத்தின்மேல் விழும்போது முற்றிலும் பிறிதொன்றாகத் தோன்றியது. அது கணந்தோறும் மாறிக்கொண்டிருந்தது. எவரோ நோக்கி நோக்கி ஒளியை உருமாற்றி அங்கே ஓர் ஓவியக் காட்சியை எழுப்புவதுபோல. நிழல்கள் உருமாறின. வண்ணம் இருண்டு வந்தது. எண்ணியிராக் கணம் ஒரு பரப்பு மேலும் ஒளிகொண்டு கண்களை நிறைத்தது.
மஞ்சள் ஒளியில் அனைத்து இடங்களுமே கனவுச்சாயல் கொள்கின்றன. அனைத்துப் பொருட்களும் ஊழ்கத்திலாழ்கின்றன. அந்தத் தருணத்தின் இனிமையில் அவர் உள்ளம் திளைத்துக்கொண்டிருந்தது. எதற்காகவும் இல்லாத இனிமை. அவர் எண்ணிவந்த அனைத்தையும் மறந்துவிட்டிருந்தார். அடுத்த கணத்தை அவர் எதிர்பார்க்கவுமில்லை. அக்கணத்திலேயே இருந்துகொண்டிருப்பதன் இனிமை அது. நீண்ட பயணங்களில் மட்டுமே அது அமைகிறது. ஒவ்வொன்றாக அகன்று அகன்று வெறுமைகொள்ள அந்தந்த தருணங்கள் மட்டுமே சூழ நின்றிருக்கையில் எழும் இனிமை.
அவர் பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். மயங்கொளியில் உடை சுடர அரண்மனைக் காவலர்தலைவன் உள்ளிருந்து வெளியே நடந்து வந்து அவர்களை அணுகி அவருடைய காவலர்தலைவனிடம் பேசினான். அவர்கள் இருவரும் அவரை அணுகி ஏதோ சொன்னார்கள். அவர் சற்றுநேரம் கழித்தே அவர்கள் சொல்வதென்ன என்று புரிந்துகொண்டார். அவர் சத்யபாமையை இரண்டு நாழிகைக்குப் பின் சந்திக்கலாம் என்றும் அதுவரை நீராடி ஓய்வெடுக்க அரண்மனையின் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் காவலர்தலைவன் சொன்னான். அவர் அக்கணம்தான் நெடும்பயணத்தின் களைப்பை உணர்ந்து உடல் தளர்ந்தார்.
சாரிகருக்கு அளிக்கப்பட்ட அறை பீதர்நாட்டு முறைமைப்படி கடினமான மரத்தால் கட்டப்பட்டது. கல்லென்றே தோன்றும் தூண்களும் சுவர்களும் அவரை ஆழ்ந்த அமைதி கொள்ளச்செய்தன. அவருக்கு நீராடுவதற்கு ஒருக்கங்கள் செய்திருந்தார்கள். நீராட்டறை மிகச் சிறிதாக இருந்தது. செந்நிறமான மரத்தாலானது. குனிந்து, ஏறத்தாழ அமர்வதுபோல் உடல் வளைத்தே உள்ளே செல்ல வேண்டியிருந்தது. சுவர்களில் மரப்பலகையின் வெவ்வேறு அலைகள். மரத்தில் குடையப்பட்ட படகு போன்ற சிறிய குளியல்தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டிருந்தது. மரவுரிகளுடன் நீராட்டறை ஏவலன் நின்றிருந்தான்.
அவர் அவந்தியை விட்டுக் கிளம்பியபின் முதல்முறையாக நீராடினார். நீர் நுரைக்குமிழிகளுடன் கொப்பளித்துக்கொண்டிருந்தது. நீர்த்தொட்டிக்குள் இறங்கி அமர்ந்தபோது உடலெங்கும் பல்லாயிரம் நுண்ணிய வெடிப்புகளும் புண்களும் தீப்பட்டவைபோல் எரியத் தொடங்கின. இளவெம்மைகொண்ட நீரில் புற்தைலம் கலந்திருந்தார்கள். நீர் அவரை மென்மையான தசைக்கதுப்பு என அணைத்துக்கொண்டது. சற்று நேரத்திலேயே அவர் உடற்தசைகள் தளர்ந்தன. கருக்குழவிபோல் அவர் நீருக்குள்ளேயே உடல்சுருட்டி துயிலத் தொடங்கினார்.
அவர் விழித்துக்கொண்டு எழுந்து உடலைத் தேய்க்க மரவுரியை எடுக்க கைநீட்டினார். நீராட்டுஏவலன் தடுத்து “பாலைப் பயணத்திற்குப் பின் மூன்றாம்நாள் மட்டுமே உடலை தேய்த்துக்கொள்ளவேண்டும். இப்போது கைபட்டால்கூட தோல் கழன்றுவிடும்” என்றான். புன்னகையுடன் “பிறந்த குழந்தையின் உடல்போலிருக்கும் தோல் என்பார்கள்” என்று சொல்லி நீரில் மேலும் ஒரு தைலத்தை ஊற்றினான். பின்னர் ஓர் எண்ணைப்புட்டியை எடுத்து அதை நீரில் கலந்தான். எண்ணை இளவெம்மையில் கலந்து அவர் தோல்மேல் படிந்தது. அவர் உடலுடன் உரசிய கைகளும் தொடைகளும் வழுக்கின.
அவர் நீரில் ஊறிய தன் விரல்கள் தளிர்களின் விளிம்புகள்போல சுருங்கி நெளிந்திருப்பதை கண்டார். “உங்கள் உடலில் அழுக்கு ஏதும் இருக்காது. குழலிலும் விரலிடுக்குகளிலும் செவிகளிலும் எஞ்சியிருக்கும் மென்பூழியை நீரை விசையுடன் வீசி அகற்றிவிடமுடியும். பாலைநிலம் மிகமிகத் தூய்மையானது. அங்குள்ள மணலே நீர்போல அழுக்கு அகற்றும் தன்மைகொண்டதுதான்” என்றான் நீராட்டுஏவலன். அவர் தன் உடல்மேல் எண்ணை ஒரு மெல்லிய தோல்போல படிந்துவிட்டதாக உணர்ந்தார். ”எழுக!” என்றான் ஏவலன்.
அவர் எழுந்து நின்றபோது ஏவலன் ஒரு துருத்தியால் அவர் மேல் நீரை விசையுடன் அறைந்தான். நீரின் அறைகள் அவரை அதிரச்செய்தன. அதன்பின் “துடைக்கலாகாது. நீர் வழிந்து உலரட்டும். அவ்வண்ணமே நிலைகொள்க!” என்றான். அவர் கண்களை மூடி நின்றார். அவர் உடலில் இருந்து நீர் வழிந்திறங்கியது. காற்றில் உடல் உலர்ந்தது. குளிர் பரவி உடல் உலுக்கிக்கொண்டது. தலைமயிரிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அதுவும் உலரத்தொடங்கியதும் ஏவலன் ஆடைகளை எடுத்து அளித்தான். “அணிந்துகொள்ளுங்கள்” என்றான். அவர் ஆடைகளை அணிந்துகொண்டு நீராட்டறையைவிட்டு வெளியே வந்தார்.
குனிந்து அறையைவிட்டு வெளியே வந்தபோது தலைகீழாக விழுவதுபோல் உணர்ந்தார். தலையை உதறி குழல்கற்றைகளை பின்னால் சரித்துக்கொண்டார். நீள்மூச்செறிந்து சுற்றும் நோக்கியபோது கண்கள் மிகத் தெளிந்து தன் நோக்கு பலமடங்கு கூர்கொண்டிருப்பதை, உடல் புதியதென எழுந்திருப்பதை உணர்ந்தார். காலெடுத்து வைத்தபோது பாகுஜன் என்னும் சொல் அவர் உள்ளத்தில் எழுந்தது. பாகுஜன் என தன் நா சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்து அவர் நின்றார். பாகுஜன் என்றால் என்ன? பாகுஜன். எவருடைய பெயர் அது? எங்கே கேட்ட பெயர்?
அவரால் நினைவுகூர இயலவில்லை. தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்தார். அருகே பீடத்தின் மேல் ஓலைப்பெட்டி இருந்தது. மேலே எழுத்தாணி. அவர் அதைத் திறந்து ஓர் ஓலை நறுக்கை எடுத்தார். பாகுஜன் என்று எழுதுவதுபோல எழுத்தாணியை ஓலையைத் தொடாமல் சுழற்றினார். பின் அதில் பாகுஜன் என்று எழுதினார். பாகுஜன், எவருடைய பெயர்? என் பெயர். ஆம், என் பெயர். அவர் பெரும் உள்ளக் கிளர்ச்சியுடன் அப்பெயரை எழுதிக்கொண்டே இருந்தார்.
ஏவலன் வாயிலில் வந்து நின்று வணங்கினான். அவர் நிமிர்ந்து நோக்க “அரசியை நீங்கள் சந்திக்கும் பொழுது” என்று அவன் சொன்னான். “முறைப்படி தங்கள் ஓலையை முன்னரே அரசியிடம் அளிக்கவேண்டும்.” அவர் அவனை நிலைத்த நோக்குடன் சில கணங்கள் பார்த்தார். பின்னர் ஓலையில் “வியாசமரபினனும் கவிஞனுமான பாகுஜன். முன்வாழ்வில் அஸ்தினபுரியின் சிற்றமைச்சனாகிய சாரிகன். இத்தருணத்தில் அரசியின் சொல்கேட்க வந்தவன். வணங்குகிறேன்” என்று செய்யுளில் எழுதினார். தனக்கு அஸ்தினபுரியில் அளிக்கப்பட்ட அறிமுக ஓலையுடன் அந்த ஓலையையும் சேர்த்து குழாயிலிட்டு மூடி அவனிடம் அளித்தார். தன் சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு எழுந்தார்.