கரவுப்பாதைகள்

Waiting, 1860 by Thomas-Francis Dicksee

அடிக்கடிக் கவனிக்கும் கவிஞர்களின் கவிதைகள் இவை. ஆனாலும்கூட எவரேனும் சுட்டிக்காட்டாமல் ஒரு கவிதையை நானே கவனிப்பதில்லை என்னும் அளவுக்கு கவிதைகளின் வெளியீட்டு வெளி சிதறிப்பரந்துவிட்டிருக்கிறது. முழுநேரவேலையாக கவிதை வாசிக்கும் நண்பர்கள், இது ஒரு நோய்க்கூறா என்றுகூட எனக்கு ஐயமுண்டு, இருப்பதனால் நல்ல கவிதைகளை அதிகமும் தவறவிடுவதில்லை என நினைக்கிறேன்

ஆகவே இக்கவிதைகளை நான் சுட்டிக்காட்டுகிறேன். இச்சூழலில் இப்படிச் சுட்டிக்காட்டுவதன் வழியாகவே கவிதைமேல் கவனம் படியமுடியும். வெறுமே சுட்டிக்காட்டுவதுதான் உகந்தது. ஆனால் இக்கவிதைகளின் தெரிவில் கொண்ட அளவுகோல் என்ன இவற்றை வாசிக்கையில் பெற்றது என்ன என்று ஒரு சிறு வரைவு தேவை என்று தோன்றுகிறது. ஏனென்றால் முற்றிலும் வெவ்வேறான கவிதைகளாக இவை உள்ளன

இவற்றை விளக்கி வாசிப்புக்குள் செல்பவர்களுக்கு தடையாக ஆக விரும்பவில்லை. ஒரு கவிதையுடன் இணைந்துகொள்ளும் நம்முடைய சொந்தச் சித்திரங்கள் எப்போதுமே முக்கியமானவை.அவையே நம்மை அக்கவிதைகளை அந்தரங்கமாகப் பொருளேற்றம்செய்ய உதவுகின்றன. அந்த அகச்சித்திரங்களிலிருந்து இக்கவிதைகளுக்கு ஒரு தனி வழியை நாம் அமைத்துக்கொள்கிறோம். நான் கொண்ட அகச்சித்திரங்கள் இவை. இக்கவிதைகளை நான் எவ்வண்னம் வாசிக்க தொடங்குகிறேன் என அவை காட்டக்கூடும்.

 

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதை ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து சிலவற்றைப் பெற்றுக்கொண்டு முற்றிலும் புதியவகையில் முடையும் பாணியை கொண்டிருக்கிறது. சிறுவயதில் சைதன்யா எங்கள் வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் மலையை அவளுடைய சொந்த மலை என்பாள். “பாப்புவோட மலை!” என்று பிரேமையுடன் சொல்லிக்கொள்வாள். டி.பி.ராஜீவன் ஒருமுறை சொன்னார் “சொந்தமாக யானை இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். மலை வைத்திருப்பவர்களை இப்போதுதான் பார்க்கிறேன்”

ஒருமுறை வெளியே செல்கையில் மலையை பாறைக்காக உடைத்துக்கொண்டிருப்பதை சைதன்யா பார்த்தாள். கடும்சினத்துடன் “எதுக்கு பாப்புவோட மலையை அவங்க உடைக்கிறாங்க?” என்றார். “பென்சிலை சீவுறது மாதிரி சீவி ஷார்ப் பண்றாங்க பாப்பா” என்றேன். அது சரி என்று அவள் ஒப்புக்கொண்டாள்.

சிறுவயதில் சூழ இருப்பவற்றை “வைத்திருப்பது’ என்று சொல்லும் வழக்கம் பாப்பாவிடம் உண்டு. “அங்க ஒரு மலை வச்சிருக்கும் அதுக்கு பக்கத்திலே ஒரு ரோடு வச்சிருக்கும்’ என விவரிப்பாள். வீட்டுக்குள் பொருட்களை அம்மா வைத்திருப்பதுபோல வெளியே வைத்திருக்கும் ஒர் அம்மா இருக்கத்தானே செய்வாள்.

இக்கவிதையில் இருக்கும் அந்த இனிய முதிராநோக்கு அழகியது ஒவ்வொன்றையும் நம்மைச் சுற்றி வைத்திருக்கும் ஒரு பெருங்கருணையை அறிவது. நாம் அறியாதவரை அவை நம்முடையவை அல்ல.

 

மூன்று தெப்பக்குளங்கள்
எனக்கு சொந்தம்
இரண்டு கடல்கள்
எனக்கு
உண்டு
மலைகள் நான்கைந்து

அம்மா என்னிடம் விட்டுச் சென்ற
பௌர்ணமி
ஒன்றுண்டு என்னிடம்

இதையெல்லாம் யாரிடமேனும்
விட்டுச் செல்வதற்காக
வைத்திருக்கிறேன்

உங்களுக்கு என்ன உண்டு ?

தெளிவாக
எனக்குச் சொல்லுங்கள்

விட்டுச் செல்வதற்காக
என்ன வைத்திருக்கிறீர்கள் ?

லக்ஷ்மி மணிவண்ணன்

***

போகன் சங்கரின் பூனைக்கவிதைகளில் ஒன்று. சுந்தர ராமசாமி ‘அந்த மியாவ்’ என்று பூனையைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருப்பார். பூனையின் சாவுக்குச் சென்று அஞ்சலி உரையாக “இந்தப்பூனையின் மியாவ் மற்ற பூனைகளின் மியாவ்களிலிருந்து வேறுபட்டது’ என்று ஆரம்பிப்பதைப்பற்றியது.

சீனர்கள் பேசுவதைக் கேட்டபோது ஹுவா என்ற ஒற்றைச் சொல்லையே வெவ்வேறுவகையாகச் சொல்கிறார்கள் என்று தோன்றியதுண்டு. பூனையின் மொழி மியாவ் என்ற சொல்லின் ஒலிமாறுபாடுகளால் ஆனது. நாமறியாத எல்லா மொழிகளும் ஒற்றைச்சொல் என்றே தோன்றுகின்றன

மியாவிலிருந்து மொழியை விரித்து மீண்டும் விசிறிபோல சுருக்கிக்கொள்கிறது பூனை. இதன் நேரடியான பகடி இதை கவிதையாக்குகிறது

தனியாக இருக்கும் பூனை
பூனை போலவே இல்லை.
தனியாக இருக்கும் பூனையின் மியாவ்
மியாவ் போலவே இல்லை.

நான் கவனித்தேன்.
தனியாக இருந்த பூனை
சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு
வாயை அகலமாகத் திறந்து பாடத் துவங்கியது.
‘’ஓ மானே மானே மானே
உன்னைத்தானே ?’’

பூனை நடுவில் நிறுத்திவிட்டு
‘’நாக்கு தடிச்சிடுச்சா?’’என்று தன்னையே கேட்டுக்கொண்டது.
ஒயிலாக நடந்துபோய்
கண்ணாடியில் நாக்கை நீட்டிப் பரிசோதித்தது.
‘’நாக்கு ஒழுங்காதான் இருக்கு.
பயிற்சி பத்தலை ‘’என்றது.
பிறகு ஒருமுறை கழுத்தைத் திருப்பித் திருப்பித் தன் அழகைப் பார்த்தது.
‘’மீசை!எனது ஸ்டிராங்க் பாய்ண்ட்.’’என்றது.
‘’கொஞ்சம் மாறுகண் இருக்கா?’’

சற்று நேரம் அப்படியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்த பூனை
நடந்து நடந்து போய்
மெத்தையில் ஏறி மல்லாக்கப் படுத்துக்கொண்டது.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
கூரையை வெறித்தது.
திடீரென்று ‘’stars are there!’’என்றது.
கொஞ்ச நேரம் மவுனம்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது தோழர்களே.

அந்த நேரத்தில் பார்த்து தனித்ததொரு பூனை
பரிணாமத்தில் மேலேறி வருவதை விரும்பாத
யாரோ ஒரு பொறாமைக் கடவுள்
அறைக்குள் ஒரு எலியை விட்டுவிட்டான்.

போகன் சங்கர்

***

லௌகீகமான கவிதை என ஒன்று உண்டு. கவிதைக்குரிய ‘அழகான’ கூற்றுக்கள் ஏதுமில்லாமல் அஞ்சறைப்பெட்டிபோலவே அமையும் கவிதை. அதன் கறாரான உலகியல்தன்மையாலேயே அது கவிதையாகிறது. இளங்கோ கிருஷ்ணனின் கவிதை அத்தகையது

நான் அறிந்த படைப்பாளி ஒருவர் ஒரு டப்பி வைத்திருப்பார். பல சிறு அறைகள். அவற்றில் பலவகை மாத்திரைகள். ஒரு இசைக்கலைஞன் வாத்தியத்தை பிரிப்பதுபோல அதை பதமாக திறந்து ஒன்றொன்றாக எடுத்து விழுங்குவார். எல்லாமே ஓமியோபதி. ஆகவே ஒரே உள்ளடக்கம்தான் – சீனி. அதனால் பெரிய பிரச்சினை ஏதுமில்லை .தன் உடலை நுணுக்கமாக கையாள்கிறோம் என்னும் நம்பிக்கையை அது அவருக்கு அளிக்கிறது

வெவ்வேறு மாத்திரைகள் வழியாக நாம் நம் உடம்பை மீட்டிக்கொள்கிறோம். மீட்டப்படாத ஒன்றை தொடும்வரை

நான்கு
நீரிழிவு மாத்திரைகளால் ஆனது
அவனின் ஒரு நாள்
ஆரஞ்சு வண்ண மாத்திரையைப்
பிரிக்கும்போது சூரியன் சடவு முறிக்கும்
மஞ்சளைப் பார்த்ததும்
உச்சிக்குப் போய்விடும்
சிவப்பில் கொஞ்சம்
ஆசுவாசம் போல் ஒன்றிருக்கும்
கருநீல வண்ண மாத்திரையை
ஒரு நாள் பிரிக்கும்போது
கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது
இப்படித்தான்
இருண்டது ஒரு மரணம்

இளங்கோ கிருஷ்ணன்

***

இசையின் கவிதைகளிலுள்ள மெல்லிய சிரிப்பு இல்லாத கவிதை இது. சங்கசித்திரங்களில் ஒரு சித்தரிப்பு வரும். படகில் செல்லும்போது காயலின் ஓரத்தில் தென்னைமரத்தில் சாய்ந்தபடி ஏதோ கனவுகண்டு உறைந்து நின்றிருக்கும் ஒரு பெண்ணை பார்த்தபடியே சென்ற அனுபவம். அவள் ஓர் ஓவியம்போல் இருந்தாள். அவள் வாழ்வின் மகத்தான ஒரு தருணம் அது என அவளே அறிந்திருக்கவில்லை. அதை இன்னொருவன் உணர்ந்துவிட்டான் என்பதையும் அவள் அறியவில்லை. குறுந்தொகைப் பாடல் ஒன்றுடன் அச்சித்திரம் பின்னர் இணைந்துகொண்டது

இளமையில் அம்மாவுடன் சென்று கண்ட ஒரு படம் ‘கள்ளிச்செல்லம்மா’ . 1969ல் வெளிவந்த அந்தப்படத்தில் சின்னப்பையனாக இருந்த பி.ஜெயச்சந்திரன் பாடிய ஒருபாடல்.

கரிமுகில் காட்டிலே

ரஜனி தன் வீட்டிலே

கனகாம்பரங்கள் வாடி

கடத்துவள்ளம் யாத்ரயாய்

கரையில் நீ மாத்ரமாய்

கரையில் ஒரு பெண்ணை கைவிட்டுவிட்டுச் செல்லும் தோணி. அதை விண்ணில் முகில்காட்டிலுருந்து விலகிச்செல்லும் பிறை எனும் தோணியுடன் ஒப்பிடும் வரி. அந்தப்பாடலின் காட்சிகளும் நினைவில் நீடிக்கின்றன. ராஜா ரவிவர்மாவின் காத்திருக்கும் தமயந்தியின் ஓவியம். வெவ்வேறு அருங்காட்சியகங்களில் கண்ட காத்திருக்கும் பெண்களின் ஓவியங்கள். இவை அனைத்தும் கலந்து வந்து அறையும் ஓர் அலை.

இன்பியல் ஓவியம் வரைந்த கதை

நதிக்கரை மரத்தடியில்
முக்காடிட்டுத் தலை கவிழ்ந்த கோலத்தில்
அமர்ந்திருக்கும் இள நங்கையொருத்தியின்
சித்திரம் இது

ஆண்டுகள் பலவாய் எனதறையிருக்கும்
சித்திரத்தை நேற்றுதான் கவனித்தேன்

அவ்வளவு துயரம்
அவ்வளவு பிரிவு
அவ்வளவு காத்திருப்பு

அவ்வப்போது இவ்வறையில்
செவிப்படும் மெல்லிய விசும்பொலி
இதிலிருந்துதான் கிளம்பியிருக்க வேண்டும்

என்னவாகிலும் செய்து இவ்வோவியத்தின்
துர்விதியைத் திருத்தியாக வேண்டும்

பெண்ணே தலைநிமிர்ந்து பாரேன்
இப்போது படகொன்று
வந்துகொண்டிருக்கிறது

இசை

***

தமயந்தி ராஜாரவிவர்மா

 

கரிமுகில் காட்டிலே

ரஜனிதன் வீட்டிலே

கனகாம்பரங்கள் வாடி

கடத்துவள்ளம் யாத்ரயாயி யாத்ரயாயி

கரையில் நீ மாத்ரமாயி

 

இனியெந்நு காணும் நம்மள்?

திரமால மெல்லே சொல்லி

சக்ரவாளமாகே நின்றே

கல்கதம் முழங்ஙீடுந்நு

 

கரையுந்ந ராக்கிளியெ

திரிஞ்ஞொந்நு நோக்கிடாதே

மதுமாச சந்திரலேக

மடங்ஙுந்நு பள்ளித்தேரில்

[தமிழில்]

கருமுகில் காட்டில்

இரவின் வீட்டில்

கனகாம்பரங்கள் வாடின

துறையில் தோணி கிளம்புகிறது

கரையில் நீ மட்டும் எஞ்சுகிறாய்

 

இனி என்று நாம் பார்ப்போம்

அலைகள் மெல்ல கேட்கின்றன

தொடுவானம் வரை உன்

விம்மல் முழங்குகிறது

 

அழுதுகொண்டிருக்கும் இரவுக்கிளியை

திரும்பியும் பார்க்காமல்

மார்கழிமாத நிலவு

திரும்பிச் செல்கிறது தன் தேரில்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14