‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 21

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 4

சாரிகர் சுரேசரின் அறைக்கு வெளியே காத்து நின்றார். அவர் உள்ளே அவரைச் சூழ்ந்திருந்த ஒற்றர்களிடம் ஆணைகளை பிறப்பித்துவிட்டு தலைநிமிர்ந்து அவரை நோக்கினார். மேலும் ஆணைகளை பிறப்பித்துவிட்டு தன் முன் குவிந்திருந்த ஓலைகளை மொத்தமாக அள்ளி அப்பால் தள்ளிவிட்டு அவரிடம் “வருக!” என்றார். சாரிகர் உள்ளே சென்று அவரை வணங்கினார். “ஆணை வந்தது” என்று சுரேசர் சொன்னார். “நீ இன்றே கிளம்பலாம். இங்கிருந்து அவந்திவரை விரைவுத்தேர். அங்கிருந்து பாலையைக் கடக்கும் வண்டிகள். பதினெட்டு நாட்கள் இயல்பான விரைவில். குறையவும் கூடும்.”

“நான் அரசரிடம் பேசிக்கொண்டிருந்தேன்” என்று சாரிகர் சொன்னார். “நான் அங்கு செய்யவேண்டியதென்ன என்று அவர் சொன்னார். ஆனால் அதில் ஓர் அமைச்சர் செய்யவேண்டிய எதுவுமில்லை. எளிய ஒற்றர்களே செய்யக்கூடுவன அவை.” “அவ்வாறு எண்ணாது ஒன்றைச் செய்பவர் அல்ல யுதிஷ்டிரன்” என்றார் சுரேசர். “அவருக்கான கணிப்புகள் பல உள்ளன. அதை அவருடைய சொற்களில் இருந்து உணரமுடியும்.” சாரிகர் “என்னால் உணரக்கூடவில்லை” என்றார்.

சுரேசர் ஒருகணம் புன்னகையுடன் அமைந்து பின் “அறுதியாக என்ன சொன்னார்?” என்றார். “கிளம்பிச்சென்று நோக்கி செய்தி அனுப்பும்படி” என்றார் சாரிகர். “அதற்குப் பின்? குறிப்பிடும்படி அல்லாமல் எனத் தோன்றும்படி?” என்றார் சுரேசர். சாரிகர் எண்ணிநோக்கி முகம் மலர்ந்து “நூல் யாக்கும்படி சொன்னார். எல்லா அந்தணர்களுக்கும் அவ்விழைவு இருக்கும் என்றார்” என்றார். பின்னர் வாய்விட்டு நகைத்து “நான் அஸ்வமேதம் பற்றி உருவாக்கிய கதைகளைப் பற்றி சொல்லி என்னை ஒரு காவிய ஆசிரியன் என்றார்” என்றார்.

“அவர் சொன்னது அதைத்தான்” என்றார் சுரேசர். “எதை?” என்று சாரிகர் ஐயத்துடன் கேட்டார். “நீ துவாரகைக்குச் செல்வது காவியம் எழுதத்தான்” என்றார் சுரேசர். “எதைப் பற்றி?” என்று மீண்டும் சாரிகர் கேட்டார். “அவர் அதைப் பற்றித்தான் உன்னிடம் பேசியிருப்பார். அக்காவியத்தின் உள்ளடக்கம் என்ன, அது எதை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று. அதன் நோக்கமென்ன என்றுகூட சொல்லியிருப்பார்.” சாரிகர் கைகள் நடுங்க விரல்களை கோத்துக்கொண்டார். அவர் முகம் சிவந்து கண்களில் நீர் கோத்தது. “என்ன?” என்றார் சுரேசர். “ஒன்றுமில்லை” என்று சாரிகர் சொன்னார்.

“நீ என்ன எண்ணுகிறாய் என்று புரிகிறது” என்றார் சுரேசர். “நீ அக்காவியத்தை எழுதாமல் அப்படியே அகலலாம். வேறு ஏதேனும் நாட்டைத் தேடிச்செல்லலாம். இங்கிருந்து வெளியேறுவதை அதற்கான வாய்ப்பாகக் கொள்ளலாம்.” சாரிகர் நடுங்கும் உதடுகளைக் கடித்தபடி அமர்ந்திருந்தார். “அவர் தனக்கான அரசியல் தேவையை சொல்கிறார். நீ காவியம் எழுதினால் அது இங்கே அரங்கேற்றப்பட்டு நாவுகளில், நினைவுகளில், வரலாற்றில் நிலைநிறுத்தப்படும் என்கிறார்” என்று சுரேசர் சொன்னார்.

சாரிகர் சீற்றம் மிக்க ஒலியுடன் எழுந்துகொண்டார். “ஏன்?” என்று சுரேசர் இளிவரல் நகைப்புடன் கேட்டார். “நான் சொல்லை வணிகம் செய்பவன் அல்ல” என்று அவர் கூவினார். “நான் பொய்யன் அல்ல… நான் நூல் கற்றது அறிவை அடிமையாக விற்பதற்கு அல்ல.” சுரேசர் “ஒன்றையே மும்முறை சொல்கிறாய், கவிஞன் ஆகிவிட்டாய்” என்றார். “அவர் சொன்னது அவருடைய தேவையை. அது அரசராக அவருடைய கடமை. அதை நீ ஏற்கலாம், அல்லது அஸ்தினபுரியை துறக்கலாம். உன்னை எவரும் தொடர்ந்து வரப்போவதில்லை” என்றார் சுரேசர்.

“நான் மெய்யை எழுதினால்?” என்று உடைந்த குரலில் சாரிகர் கூவினார். “மெய்யை முன்வைத்தால் என்ன செய்வார்கள்?” என்று மேலும் உரக்க கூச்சலிட்டார். “ஒன்றும் செய்யமாட்டார்கள். உன்னுடைய காவியம் வழக்கொழியும்படி இன்னொன்றை எழுதச்செய்து பரப்புவார்கள். உன்னுடைய காவியத்தை எவரும் நினைவில் நிறுத்தாமல் செய்வார்கள். அவ்வண்ணம் அழிந்துபோன பல்லாயிரம் நூல்கள் இங்குண்டு” என்றார் சுரேசர். “நானறிந்தவரை நூல்கள் வரலாற்றில் தங்குவது அவற்றின் தகுதியால் அல்ல, அவற்றின் தேவையால்தான்.”

சாரிகர் “என் நூலும் அழியட்டும். நான் மறக்கப்படட்டும். ஆனால் நான் உண்மையைத்தான் எழுதுவேன். அதை எழுதும்பொருட்டே துவாரகைக்கு செல்கிறேன். அதை குறுங்காவியமென யாத்து இங்கே வைக்கிறேன். உண்மைக்கு நிலைகொள்ளும் ஆற்றல் உண்டு எனில் அது வாழட்டும்” என்றார். சுரேசர் “நீ உன்னை மதிப்பிட்டுக்கொள்ள விழைகிறாய்” என்றார். “இல்லை, என்னை பிறர் மதிப்பிட்டிருப்பதை மறுக்கிறேன். என்னை பொய்யன் என்று மதிப்பிட்டிருக்கிறார். தன்னலம் நோக்கி சொல்லாளுபவன் என என்னிடமே சொல்கிறார்” என்று சாரிகர் சொன்னார். குரல் தழைய “என் பிழை… நான் விளையாட்டுக்கு என் கற்பனையை விரித்தேன். அது இப்படியாகுமென எண்ணவில்லை” என்றார்.

சுரேசர் “நான் இதில் ஒன்றும் சொல்ல விழையவில்லை. இது உனக்கு ஊழ் அளிக்கும் ஒரு வாய்ப்பு. இதில் நீ எவ்வண்ணம் வெளிப்படுகிறாய் என்பதே உன்னை வகுக்கவிருக்கிறது. உன்னிடமிருந்து எது வருகிறது என என்னால் இப்போது கூற இயலாது. உன்னாலும்கூட இயலாது. செல்க, உனது உள்ளம் செலுத்தும் திசையை தேர்க!” என்றார். சாரிகர் தலையை பற்றிக்கொண்டார். அவர் உடல் மெல்ல தளர்ந்தது. அவர் அகத்தில் எச்சொல்லும் நிற்கவில்லை. உடைந்து அழுதுவிடுவோம் என்று தோன்றியது. அழாமலிருக்கும் வழியென்பது நிலத்தை வெறுமனே கூர்ந்து நோக்கி அமர்ந்திருப்பதுதான் என எண்ணினார்.

“நீ கிளம்புவதற்குரிய அனைத்தையும் ஒருக்க ஆணையிட்டிருக்கிறேன். நீ உன் அறைக்கு செல்லலாம். அங்கே தனிமையில் இருந்து இந்த உளக்கொந்தளிப்பு அடங்கும்வரை காத்து எண்ணம் ஓட்டலாம். கிளம்பிய பின்னரும்கூட உனக்கு பொழுதுள்ளது. துவாரகை வரை செல்லும் காலம் நீ தனிமையில்தான் இருப்பாய்” என்றார். “ஆனால் எதுவாயினும் நீ செய்வன அனைத்துக்கும் முழுப் பொறுப்பை எடுத்துக்கொள். பிறரையோ ஊழையோ தெய்வங்களையோ குற்றம்சாட்டாதிரு.”

சாரிகர் தலைவணங்கி எழுந்துகொண்டார். “உனக்கான ஓலையை எழுத சுதமனிடம் ஆணையிட்டிருக்கிறேன், பெற்றுக்கொள்” என்றார் சுரேசர். சாரிகர் அவரை சில கணங்கள் நோக்கிவிட்டு “அமைச்சரே, இதற்கு என் பெயரை நீங்கள் சொல்லவில்லை அல்லவா?” என்றார். சுரேசர் வாய்விட்டு நகைத்து “கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். ஆனால் அவரே மதிப்பிடும் திறன்கொண்டவர். அவருடைய சொற்களின் தெரிவிலும் இணைப்பிலும் இருந்த நுட்பத்தை நீயே உணர்ந்திருப்பாய்” என்றார். சாரிகர் மீண்டும் தலைவணங்கி வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்று சற்று தயங்கியபின் சுதமனின் அறை நோக்கி சென்றார். அவர் அங்கே ஏடுகளை அடுக்கிக்கொண்டிருந்தார். சாரிகரைக் கண்டதும் புன்னகைத்து “இன்றே கிளம்புகிறீர் போலும்” என்றார். “ஆம்” என்று சாரிகர் சொன்னார். களைப்புடன் அவர் முன் பீடத்தில் அமர்ந்தார். “என்ன சோர்வு?” என்றார் சுதமன். “ஒன்றுமில்லை” என்றார் சாரிகர். “நீண்ட பயணம், ஆயினும் நன்று. துவாரகை அரிய பெருநகர். அதை சென்றுபார்க்க வாய்ப்பு கிடைக்கிறது எனில் சிறப்பு” என்றார் சுதமன். “நான் செல்வதை விரும்புகிறேன். ஆனால் பிறருடைய ஆட்டங்களில் காயாக அமைவதை வெறுக்கிறேன்” என்றார் சாரிகர். “எவராயினும் பிறருடைய களங்களில் காயாக மாறியே ஆகவேண்டும்… நம்மை நம்மைவிடப் பெரியவர்கள் வைத்து ஆடுவதை தவிர்க்கவே முடியாது” என்றார் சுதமன்.

“நான் ஆடுகிறேன்… இக்களத்தில் நான் அனைவரையும் வைத்து ஆடுகிறேன்” என்று சாரிகர் கூவினார். சுதமன் சுற்றிலும் நோக்கிவிட்டு “மெல்ல” என்றார். “என்ன ஆயிற்று?” என்று தணிந்த குரலில் கேட்டார். “ஒரு பொய்வரலாற்றை உருவாக்கும்படி ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றார் சாரிகர் . முகம் மலர்ந்து “வரலாற்றை உருவாக்கும்படியா? நன்றல்லவா அது? எவ்வளவு பெரிய பொறுப்பு!” என்றார் சுதமன். “பொய் சொல்வதா?” என்று சாரிகர் கூவினார். “பொய்யா மெய்யா என எவருக்குத் தெரியும்? நாமறிந்த வரலாறுகளை நாம் சரிபார்க்கவா இயலும்? பயனுள்ளவை நீடிக்கின்றன” என்றார் சுதமன்.

“எவருக்குப் பயனுள்ளவை?” என்று கூவினார் சாரிகர். “மெல்ல…” என்று சொன்னார் சுதமன். “ஏன் கூச்சலிடுகிறீர்? இங்கே எவரும் உரக்கப் பேசுவதில்லை” என்று சொல்லி “பயனுள்ளவை என்றால் அனைவருக்கும்தான். ஆள்பவர்களுக்கும் செல்வம்கொண்டவர்களுக்கும் பயனுள்ளவை மட்டுமே நிலைநிறுத்தப்படுகின்றன என்று சொல்வோம். அது மெய்யல்ல. ஆளப்படுபவர்களுக்கும் செல்வந்தர்களுக்கு பணிசெய்பவர்களுக்கும் அதில் நன்மை இல்லை என்றால் அது ஏற்கப்படாது. அவர்கள் இருவரும் ஒரு களத்தின் இரு பக்கங்களிலும் இருந்து ஆடுகிறார்கள். அவர்களுக்குப் பொதுவான ஒன்று திரண்டு வந்து நிற்கும். அதுவே ஏற்கப்படும்” என்றார்.

சாரிகர் “நான் என் உளமறிந்த உண்மையை சொல்கிறேன். எந்தத் தயக்கமும் இன்றி. எதன் முன்னும் அச்சமும் கூச்சமும் இன்றி. இங்குள்ள மானுடர் எளியோர். இன்றிருந்து நாளை மறைவோர். மெய்மை அவர்களினூடாக செல்லும் காலப்பெருக்கு. அதை முன்வைக்கிறேன். அதன்பொருட்டே கிளம்பிச் செல்கிறேன்” என்றார். சுதமன் “நீர் எதன் பொருட்டு அனுப்பப்படுகிறீர் என ஓரளவு என்னால் உய்த்தறிய இயல்கிறது. அது தனிமானுடர் சிலரைப் பற்றியது. மெய்மை அவர்களை கொல்லும் நஞ்சாகலாம்” என்றார். “ஆம், சில தருணங்களில் மெய் அவ்வாறு விண்ணிலிருந்து பெய்யும் அனல்மழையாக இருக்கக்கூடும். ஆனால் நான் அறிந்ததை சொல்வேன். அதுவே என் கடன். இத்தருணம் எனக்காக அமைக்கப்பட்டதே அதன் பொருட்டுத்தான் என உணர்கிறேன்.”

“நன்று, நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றார் சுதமன். அவர் நீட்டிய ஓலையைப் பெற்று விரித்துப் படித்து மீண்டும் மூங்கில்குழாய்க்குள் போட்டு மூடி கையிலெடுத்துக்கொண்டு சாரிகர் தலைவணங்கி வெளியே சென்றார். அங்கே வந்ததே அவ்வறிவிப்பை இன்னொரு முறை சொல்லிக்கொள்ளத்தான் என்று தோன்றியது. சுரேசரிடம் சொல்லும்போது அதை பிறரிடம் சொன்னார், இப்போது தன்னிடமே. அவர் ஆம் ஆம் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சென்றார். சொல்லச்சொல்ல உள்ளம் உறுதியடைந்தது.

 

சாரிகர் அன்று மாலையே கிளம்பிச்செல்ல முடிவெடுத்தார். வழக்கமாக புலரியில்தான் நெடுந்தொலைவுப் பயணங்களை தொடங்குவார்கள். ஆனால் அவரால் அங்கிருந்து கிளம்பும் முடிவை எடுத்தபின் அங்கேயே நீடிக்க முடியவில்லை. தன் அறையில் அமர்ந்தும் எழுந்து உலவியும் படுத்தும் புரண்டு எழுந்தும் அலைகொண்ட பின் கிளம்பும் முடிவை எடுத்து ஏவலனிடம் சொன்னார். அவர் ஆடையணிந்து தன் பேழையுடன் முற்றத்திற்கு வந்தபோது எட்டு புரவிவீரர்கள் தேருடன் ஒருங்கி நின்றிருந்தனர். அவர் ஏறி அமர்ந்துகொண்டார். “செல்க!” என ஆணையிட்டதும் தேர் உலுக்கிக்கொண்டு கிளம்ப அவர் அகம் திடுக்கிட்டது. அவர் அந்நகரிலிருந்து காம்பு இற்று உதிர்வதுபோலத் தோன்றியது.

தேர் கோட்டைமுகப்பைக் கடந்து வெளியே சென்றபோது அவர் திரும்பி அஸ்தினபுரியை நோக்கிக்கொண்டிருந்தார். அக்கனவு நினைவுக்கு வந்தது. அதில் தெரிந்தது போலவே அஸ்தினபுரி கருமைகொண்டு பழைமையாகத் தெரிந்தது. ஒளிப்பந்தங்கள் அலையடிக்க அகன்று அகன்று மறைந்தது. அவர் துவாரகையை கண்முன் கொண்டுவர முயன்றார். அதை அவர் நூல்களில் படித்தும் கதைகளில் கேட்டும் அறிந்திருந்தாலும் எண்ணத்தில் தொகுக்க முடியவில்லை. அவர் கண்களை மூடிக்கொண்டு அன்று நிகழ்ந்தவற்றை தன்னுள் ஓடவிட்டார். எந்த உளச்சித்திரமும் அகத்தில் எழவில்லை. ஆனால் தன்னை அவ்வாறு கூர்ந்து நோக்க நோக்க அகம் அமைதியடைந்தது. அதுவரை உடலை பதறச் செய்திருந்த அலைகள் அமைந்தன. அவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கினார்.

காலையில் விழித்துக்கொண்டபோது உள்ளம் தெளிந்திருந்தது. முந்தையநாளின் உளக்கொந்தளிப்புகள் எல்லாம் எங்கோ என அகன்றிருந்தன. அந்த உளக்கொந்தளிப்புகளை எண்ணுந்தோறும் வேடிக்கையாகவும் இருந்தது. எதன்பொருட்டு அந்த உணர்வுகள்? அவரிடம் ஓர் அரசர் என்ன கேட்கமுடியுமோ அதுவே கேட்கப்பட்டது. அவ்வரசரின் ஊழியர் அவர். அவருக்கு ஆணையிட அவருக்கு உரிமை உண்டு. தலைப்பாகை அணிந்து அரசிடம் ஊழியம் செய்ய வரும் அந்தணன் தன் அந்தண்மையில் ஒருபகுதியை இழந்துவிடுகிறான். வேதமன்றி எதற்கும் பணியாதவன், தன் சொல்லுக்கன்றி எதையும் ஆற்றாதவனே அந்தணன். எந்நிலையிலும் பின்னகர்ந்து தன் கடனை மேற்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது. பாரதவர்ஷத்தில் எவரும் அதை தடுக்கப்போவதில்லை.

அதை எவ்வகையிலும் எதிர்மறை எண்ணத்துடன் செய்யவேண்டியதில்லை. இது ஒரு வாய்ப்பு. இது வரலாற்றின் ஒரு துளியை மொழியில் பொறிக்கும் வாய்ப்பு. அதை காய்தல், உவத்தல் இன்றி செய்யலாம். எவருக்கும் அறைகூவலாக அல்ல. ஒரு பார்வையாளனாக. அவர் உள்ளம் தெளிந்துகொண்டே இருந்தது. அதன்பின் அவர் சூழ ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்க்கலானார். மண்சாலைக்கு இருபுறமும் குறுங்காடு செறிந்திருந்தது. நூற்றுக்கணக்கான கொடிகள் தளிர்ச்சுருட்களை நீட்டி நின்றிருந்தன. மேலே கிளைகள் செல்லும் வண்டிகளின் விளிம்புகளால் சதுரமாக வெட்டப்பட்டிருந்தன.

சாலையோரத்தில் பாறைகளிலோ அல்லது நடப்பட்ட கற்பலகைகளிலோ அங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் ஊர்களின் பெயரும் அங்குள்ள மக்களின் குலச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் அக்குலச்சின்னங்கள் ஏன் என்று எண்ணினார். மீண்டும் மீண்டும் நோக்கியபோது அவை அவர்களின் தொழில்களைக் காட்டுவன என்று தெரிந்தது. ஆயர்களுக்கு கன்றுகளின் கொம்புவளைவு வடிவங்கள். உழவர்களுக்கு மேழி. எண்ணைச்செக்கு, இரும்புலை என ஒவ்வொரு வடிவமும் அங்கே என்ன விற்கப்படும் எவை வாங்கப்படும் என்பதை காட்டின. சாலையில் வந்துகொண்டிருந்த வண்டிகளில் இருந்த வணிகர்கள் அவற்றைக்கொண்டே அத்திசை நோக்கி திரும்பினர். அவர்கள் தங்கள் குழல்களை முழக்கி வருகையை ஊர்களுக்கு அறிவித்தனர். எல்லா வணிகவண்டிகளுடனும் வில்லும் வேலுமேந்திய காவலர் சென்றனர்.

சில இடங்களில் சாலையோரங்களிலேயே ஊர்கள் இருந்தன. ஊர்முகப்பில் மரத்தாலான பெரிய நுழைவாயிலும் அதற்குமேல் கோபுரமும் இருந்தன. மேலே உயரமான கம்பத்தில் அவ்வூரின் கொடி பறந்தது. ஊர்க்கோபுரங்களில் எச்சரிக்கை முரசுகளுடனும் அறிவிப்புக் கொம்புகளுடனும் எந்நேரமும் காவலர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அணுகும் வண்டிகளுக்கு தொலைவிலேயே கொம்பூதி ஆணையிட்டனர். எல்லா ஊர்களிலும் புரவிக்காவலர் இருப்பதை அவர் கண்டார். ஊர்களுக்கு வெளியே காடுகளின் தொடக்கத்திலேயே உறுத்த விழிகளும் ஓங்கிய படைக்கலங்களுமாக காவல்தெய்வங்கள் நின்றிருந்தன.

நோக்கி நோக்கி அவர் அனைத்தையும் மறந்துவிட்டார். எங்கிருந்து கிளம்பினோம் எங்கே செல்கிறோம் என்பதை அவர் நினைக்கவேயில்லை. அந்தி சாய்வதற்கு முன்னரே சாலையோரத்து விடுதியொன்றில் அவர்கள் தங்கினர். அவருக்கு ஒரு தனி அறை அளிக்கப்பட்டது. அந்தணர் ஒருவர் அவருக்கான உணவை சமைத்து அளித்தார். நீண்ட பயணத்தின் அலுப்புக்குப் பின் சூடான உணவு இனிதாக இருந்தது. அவர் படுத்ததுமே துயின்று மறுநாள் புலரியில் விழித்தபோது உடல் புதிதாகப் பிறந்தெழுந்ததுபோல் இருந்தது. விழிகள் தெளிந்திருந்தன. அந்தக் காலைவேளையைப்போல இனிய ஒன்றை முன்பு அறிந்திருந்ததே இல்லை என்று தோன்றியது.

நீராடச் சென்றபோது பயணிகள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே காடுகளுக்குள் செல்வதை அவர் கண்டார். அவர்கள் நிழலுருக்களாகத் தெரிந்தனர். சிலர் மெல்ல சிரித்தனர். நீர் குளிர்ந்து இருளுக்குள் ஒளியுடன் ஓடியது. நீராடி எழுந்தபோது ஏனோ இரு கைகளையும் விரித்து ஆர்ப்பரிக்கவேண்டும் என்று தோன்றியது. அவர் திரும்பி வந்தபோது சிரித்துக்கொண்டிருந்தார். நாவில் ஏதோ மெட்டு ஓட சரிவான மண்ணில் துள்ளி பாய்ந்தேறினார். நின்று நோக்கிவிட்டு பாய்ந்து கீழிறங்கி மீண்டும் துள்ளி ஏறினார். அவரைக் கடந்துசென்ற முதிய வணிகர் ஒருவர் நோக்கி புன்னகைத்துவிட்டுச் சென்றார். அவருடைய நோக்கு தன் மேல் பட்டதும் சாரிகர் கூச்சத்துடன் நின்றார். அவருடைய இனிய புன்னகை ஊக்கம் அளிக்க கையை வீசி ஓடி தாழ்வான கிளை ஒன்றைப் பற்றி தொங்கி ஊசலாடி இறங்கினார். தலைக்குமேல் மலர்கள் கொட்டின. கீழே உதிர்ந்த மலர்களில் கால் வைக்காமல் அப்பால் சென்றார். அவர் தலைமேல் மஞ்சள்நிறமான சிறிய மலர்கள் உதிர்ந்திருந்தன. அது என்ன மரம் என அவருக்குத் தெரியவில்லை.

அவர் அந்த மலரை கையிலெடுத்தபடி நடந்தார். அந்த மலரின் பெயர் என்ன என்று எவரிடமேனும் கேட்கவேண்டும். ஆனால் அந்தக் காட்டிலுள்ள எந்த மரத்தின் பெயரும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. எந்தச் செடியையும் அடையாளம் காணக்கூடவில்லை. மேலே ஓசையிட்டுக்கொண்டிருந்த பறவைகளில் எதன் குரலையும் பிரித்தறிய முடியவில்லை. சூழ்ந்திருக்கும் இந்த வாழ்க்கையில் நான் அறிந்திருப்பதுதான் என்ன? நான் இதுகாறும் அமர்ந்து கற்றவற்றைக்கொண்டு இக்காட்டில் ஒரு சிறுபகுதியைக்கூட என்னால் அறியமுடியாது என்றால் அந்நூல்களின் பயன் என்ன?

அவர் ஓர் அலை என வந்தறைந்த அஸ்தினபுரியின் நினைவால் அசைவற்று நின்றார். மிகமிக அப்பால், மிகமிக மங்கலான நினைவாக அப்பெருநகரை நினைவுகூர்ந்தார். கிளம்பி ஒருநாள்கூட ஆகவில்லை. அதற்குள் அதை மறந்துவிட்டிருக்கிறேன். இருபதாண்டுகாலம் நான் பயின்றதெல்லாம் அந்நகரைச் சென்றடைய, அங்கே சிறப்புகொள்ள தேவையானவை மட்டுமே. அங்கு நின்று நோக்கியபோது அந்நகர் மிகச் சிறிய ஒரு கோப்பை என்று தோன்றியது. ஆமையின் ஓடுபோல. ஆமை தன்னால் உதறமுடியாத இல்லத்தைச் சுமந்து அலைவது. விடமுடியாவிடில் அது வீடே அல்ல சிறை. சிறைக்குள்ளேயே பிறப்பது, வாழ்நாளெல்லாம் தன்னுடன் சிறையை கொண்டுசெல்வது.

“ஆமைகள், ஆமைகள்” என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வாறு ஒரு சொல் தன்னுள் ஓடிக்கொண்டிருந்ததை உணர்ந்ததும் திகைத்து பின்னர் புன்னகையுடன் “ஆமை ஆமை” என்று சொல்லிக்கொண்டார். என்ன பொருள் அதற்கு? நாகம் வளரமுடியும், தன் தோலை உரித்து அகற்றமுடியும். ஆமையால் இயலாது. உதறமுடியாத எதுவும் பெருஞ்சுமையே. புலரியிலேயே விடுதி முற்றிலும் உயிர்கொண்டுவிட்டிருந்தது. முதலொளி எழுகையில் பெரும்பாலானவர்கள் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருப்பார்கள். வெயிலுக்கு முன் செல்லும் தொலைவே நாளின் பயணத்தில் பெரும்பகுதி. உண்மையில் அதுவே இனியதும்கூட. அந்தியின் இருளை அஞ்சுபவர்கள் காலையிருளில் மகிழ்ந்தனர். இக்கருமை எழும் ஒளியின் வண்ணம்.

விடுதியின் அந்தண ஏவலன் கோட்டப்பட்ட பனம்பாளையில் சூடான கஞ்சியை கொண்டுவந்து வைத்தான். இன்கிழங்கும் கனிகளும் போடப்பட்ட கஞ்சி மூக்கை நிறைத்து நாவூறச் செய்தது. அவர் கோட்டிய இலையால் அதை அள்ளி குடித்தார். உண்டு முடித்து கைகழுவிக்கொண்டிருந்தபோது அந்தண ஏவலன் அருகே வந்து நின்றான். அவர் ஒரு செம்புநாணயத்தை அவனுக்கு பரிசாக அளித்து “இனிய உணவு” என்றார். அந்தணன் புன்னகைத்து “பயணிக்கு எல்லா உணவும் இனிதே என்று சொல்லப்படுவதுண்டு” என்றான்.

“மெய்” என்று அவர் முகம் மலர்ந்து சொன்னார். “நேற்று உச்சிப்பொழுதில் நான் உலர்ந்த அப்பத்தை நீரில் தோய்த்து உண்டேன். அதுவும் சுவையுடன் இருந்தது.” அந்தண ஏவலன் “அது பயணத்தின் சுவை” என்றான். அவர் வாய்விட்டு நகைத்து “உண்மையில் பயணத்தைத் தொடங்கியதுமே நான் உருமாறத் தொடங்கிவிட்டேன். ஒவ்வொரு இடத்திலும் என் உடலை விட்டு வெளியேறி பிறிதொருவனாக மேலே செல்கிறேன். என் கண்களும் காதுகளும் புதியனவாகிவிடுகின்றன. உள்ளச்சொற்கள்கூட முற்றிலும் மாறிவிடுகின்றன” என்றார்.

“தேங்கும் மூச்சை இழுக்காதொழிக என்று ஒரு பழமொழி எங்களூரில் உண்டு” என்று அந்தண ஏவலன் சொன்னான். “ஓர் ஊரிலேயே வாழ்பவன் தான் விட்ட மூச்சை திரும்ப இழுப்பவன்.” சாரிகர் “நீர் பயணத்தில் இருக்கிறீரா?” என்றார். “ஆம், நான் மாளவத்திலிருந்து கிளம்பிச் செல்கிறேன்” என்றான். “செல்லும் வழியில் இவ்வண்ணம் விடுதிகளில் சிலநாட்கள் தங்குவேன். இங்கே அந்தண அடுமனையாளர்களுக்கு எப்போதுமே பணி உண்டு. பொருள் சற்று சேர்ந்ததும் கிளம்பிவிடுவேன்.”

சாரிகர் “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். “எங்குமில்லை. நான் விழைவது புதிய மூச்சு மட்டுமே” என்று அவன் சொன்னான். சாரிகர் ஒருகணம் மெய்ப்புகொண்டார். “புதிய மூச்சு!” என்றார். அந்தண ஏவலன் புன்னகைத்தான். அவர் புதிய மூச்சு புதிய மூச்சு என்று தனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தண ஏவலன் தலைவணங்கி அப்பால் சென்று “என்றும் புதிய மூச்சு, ஒருபோதும் விட்ட மூச்சை திரும்ப இழுப்பதில்லை” என்றபின் விடுதிக்குள் சென்றான்.

தேரிலேறிக்கொண்டபோது சாரிகர் இனிய கனவொன்றிலிருந்து முழுக்க விழித்தெழாதவர் போலிருந்தார். தேர் மிதந்ததுபோல மண்சாலையில் சென்றது. இருபுறமும் மலர்க்காடுகள் வந்துகொண்டிருந்தன. அவற்றின்மேல் காலையொளி எழுந்தது. சிறுபூச்சிகள் பொற்துகள்கள் என ஒளிவிட்டபடி மலர்ச்செண்டுகளில் இருந்து எழுந்து சுழன்றன. மலர்கள் உருகிச் சொட்டும் பொன் என உதிர்ந்தன. குளிர்காற்றில் இலைகள் பளபளத்து அசைந்தன. மென்னொளி நீர் என ஆகி அவற்றின் பரப்புகளில் வழிந்தது.

சிறு கீரி ஒன்று மென்மையான முடிப்பிசிறுகளுடன் வாலைத் தூக்கியபடி சாலைக்குக் குறுக்கே ஓடியபோது அவர் உள்ளம் அந்தப் பூமயிர் பரப்பின் மென்மையை மிகமிக நுண்மையாக உணர்ந்து சிலிர்த்தது. கூசுவதுபோல விதிர்த்து உடல் மெய்ப்பு கொண்டது. பற்கள் கிட்டித்தன. கைவிரல்கள் சுருட்டி உள்ளங்கையில் அழுந்தப் பதிந்தன. உடல் இனிமையில் திளைக்கும் நாவென மாறியிருந்தது. இனிய ஒளி, இனிய காடு, இனிய காற்று. இத்தருணத்தின் இனிமை. இது என் புதிய மூச்சு.

செம்மண்புழுதி படிந்த சாலையில் காலடிகள் பதிந்து கிடந்தன. அக்காலடிகளை தன் மேல் ஏற்றி மீண்டும் அவர் உடல் மெய்ப்புகொண்டது. ஓர் வலிப்பு எழுந்து அமைந்தது. நினைவிழந்தவர்போல விழிகள் திறந்து வெளிக்காட்சியை வெறித்திருக்க, கண்ணீர் வழிய அவர் தேர்த்தட்டில் படுத்திருந்தார். வண்டியின் சகடங்களின் ஒலியில் அவர் உடல் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைதேசபக்தர்- ஜானவி பரூவா.
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…