திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு

நண்பர் ஷாகுல் ஹமீதின் கடைத் திறப்புவிழா திருவனந்தபுரத்தில் டிசம்பர் ஆறாம்தேதி நடைபெற்றது. கப்பல்காரனாக இருபதாண்டுகளுக்குமேல் வாழ்ந்தவர் ஷாகுல். காடாறுமாத வாழ்க்கையை கடந்து கரையிலேயே நீடிக்க முடிவெடுத்து அவருடைய நெடுநாள் நண்பரின் பங்குத்துணையுடன் தொடங்கியிருக்கும் இயற்கை உணவுப்பொருள் – செக்கு எண்ணைக் கடை. [Jeevasurabhi Naturo Products,Tc No 15/746 Edapazhanji , Vazhuthacaud, Trivandrum, [email protected] ]

 

கடையை திறந்துவைக்க ஒரு விஐபி தேவை என்று சொன்னார். எனக்கு முதலில் தோன்றிய முகம் மதுபால். மலையாள சினிமாவில் நான் அறிந்த ஆளுமைகளில் மதுபால், திரைக்கதையாசிரியர் ஜான்பால் இருவரும் தூயர்கள் என்று எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. எந்த விதமான எதிர்மறைப்பண்பும் இல்லாதவர்கள். இயல்பான அன்புமட்டுமே கொண்டவர்கள். அதனாலேயே அனைவருக்கும் பிரியமானவர்கள். ஒரு புது முயற்சியை தொடங்கிவைக்க அவரே உகந்தவர்.

 

மதுபாலிடம் பேசினேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டார். நான் நாகர்கோயிலில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் செல்வதற்குள் அவர் கடைக்கு வந்துவிட்டார். நண்பர் திருச்சி விஜயகிருஷ்ணன் நாகர்கோயில் வந்திருந்தார். திருவனந்தபுரம் திரைவிழா அன்று தொடங்கவிருந்தது. நம் நண்பர்கள் ஒரு திரளாக திரை விழாவுக்கு வந்திருந்தனர். என் காரில் விஜயகிருஷ்ணன் திருவனந்தபுரம் வந்தார்

நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலை என்பது ஒரு முடிவடையாத பணி. பழங்காலத்துப் பேராலயங்கள் போல. நான் கல்லூரியில் படிக்கும் காலம் முதலே அதை விரிவாக்க, பாலம்கட்ட பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தப் பணிகளால் உருவாகும் கடுமையான போக்குவரத்து நெரிசல். நான் காரில் ஏறியதுமே தூங்கிவிடுவேன். ஆகவே பதற்றம் ஏதும் இல்லை. கரமனை கடந்ததும்தான் விழித்துக்கொண்டேன்

 

ஹாகுலின் கடையில் விஷ்ணுபுரம் நண்பர்கள் கூட்டமாக நிறைந்திருந்தனர். கெத்தேல் சிக்கன் சாப்பிட்டு கூடவே திரைவிழாவை பார்க்க வந்திருக்கும் ஈரோடு விஜயராகவன், திருச்சி செல்வராணி, பாரதி நூல்நிலையம் இளங்கோ, சேலம் பிரசாத், கோவை நரேன் என எல்லா நண்பர்களையும் பார்க்கமுடிந்தது.

 

ஷாகுலின் பங்குதாரரான பேரா.ராதாகிருஷ்ணன் அவர்களின் உறவினர் ஒளிப்பதிவாளர் அழகப்பன். அவர்தான் ஒழிமுறி படத்தின் ஒளிப்பதிவு. மூவரும் சந்தித்தது ஒழிமுறி விருதுவிழாக்களுக்குப் பின் இப்போதுதான். அழகப்பன் அதன்பின் ஒருபட்டம் போலே என்ற படத்தை இயக்கினார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். மதுபால்  ‘கிராஸ்ரோடு’ ‘குப்ரசித்தனாய பையன்’ என்னும் படங்களை இயக்கினார். பல படங்களில் நடித்தார்.

மதுபாலையும் அழகப்பனையும் அவ்வப்போது சந்திப்பதுண்டு. மூவரும் ஒன்றாகச் சேர்ந்தது ஒரு தற்செயல்தான். அத்தருணம் உள்ளத்தை கொப்பளிக்கச் செய்தது. சினிமாக்களில் பணியாற்றியவர்கள்   கூடுவதென்பது ஓர் உணர்வுபூர்வமான நிகழ்வு. எந்த சினிமா என்றாலும் அது அடிப்படையில் ஒரு படைப்புச்செயல்பாடு. அது ஒருபோதும் வெறும் வேலை அல்ல. நம்பிக்கையுடன் ,படைப்பூக்கத்துடன், செயல்வெறியுடன் ஒன்றுகூடுகிறோம். சேர்ந்து ஆறுமாதம் முதல் ஓராண்டு வரை பணிபுரிகிறோம். அந்த நாட்களில் மிகமிக அணுக்கமாக ஆகிறோம். அணுக்கமாக ஆகாமல் ஒரு சினிமாவை உருவாக்க முடியாது.

 

சினிமா விவாதம் என்பதே ஒரு ஹனிமூன் போலத்தான். பேசிப்பேசி அதில் பணியாற்றும் முதன்மைப்பங்களிப்பாளர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது அது. ஆகவே பெரும்பாலான சினிமாவிவாதங்களில் சிரிப்பும் சில்லறை வம்பும்தான் கூடுதலாக இருக்கும். சாப்பாடு, பயணம் என அந்த ஒருங்கிணைவு கொண்டாடப்படும். அந்த கொண்டாட்டத்துடன் இணைந்து சில நிலப்பகுதிகள் , சில இடங்கள் இருக்கும். அந்த இடங்களிலிருந்து அந்தச் சினிமாவைப் பிரிக்க முடியாது. நான்கடவுள் படத்துடன் காசி மட்டுமல்ல, சென்னையின் அம்பிகா எம்பையர், கிரீன்பார்க் விடுதிகளும் இணைந்துள்ளன.

சினிமாப்படப்பிடிப்பு தொடங்கும்போது குழுவினர் உளம்கலந்து ஒன்றாகிவிட்டிருப்பார்கள். ஒருவர் சொல்வதை இன்னொருவர் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் அளவுக்கு. உள்ளே சின்னப் பூசல்களும் ,மோதல்களும், அவை கடந்து உருவாகும் தழுவல்களும் நடந்துகொண்டே இருக்கும்.படப்பிடிப்பு முடிந்து பின்படப்பிடிப்புப் பணிகளும் நிறைவடைந்து படம் வெளியாகும் வரை கொந்தளிப்பும் பதற்றமும் நிறைந்த உறவு.

 

படம் வெற்றியாயினும் தோல்வியாயினும் அதன்பின் அந்தக்காலகட்டம் அப்படியே முடிவடைகிறது. ஒரு கனவுபோல அகன்றுவிடுகிறது. மீண்டும் இன்னொரு படத்திற்காக இணையலாம். ஆனால் அது இன்னொரு நிகழ்வு, இன்னொரு கனவு. திருவிழாக்கள் தோறும் செல்லும் நாடோடிவணிகர்கள் போல. ஒரே விழா மைதானத்தில் வந்துசேர்ந்து தங்கி கொண்டாடி கூடாரங்களை கழற்றிவிட்டு அகன்றுசெல்கிறோம். இன்னொரு மைதானத்தில் சந்திக்கிறோம்.

அதிலும் சில படங்கள் நினைவில் வளர்பவை. ஒழிமுறி கேரள நினைவில் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு படம். இன்றுவரை கேரளத்தின் சிறந்த திரைப்படங்களின் எந்தப்பட்டியலிலும் அதன் பெயர் இடம்பெறாதிருந்ததில்லை. நூறுமுறைக்குமேல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அடுத்த தலைமுறையினரும் பார்த்துவிட்ட படம். மதுபால் அதற்காக ஏழு விருதுகள் பெற்றார். நான் ஒரு விருது.

 

அது ஒரு இனிய கடந்தகாலமாக ஆகிவிட்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பு நடந்த இடங்கள், லாலின் மாறாத நகைச்சுவை என நினைவுகள் பெருகுகின்றன. ஸ்வேதா மேனன், மல்லிகா போன்றவர்களை அதற்குப்பின் சந்தித்ததே இல்லை. ஒழிமுறி நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். அதைப்பற்றி ஏராளமாக இன்று எழுதப்பட்டுவிட்டது. முனைவர் பட்ட ஆய்வேடு கூட ஒன்று வெளிவந்துள்ளது.

 

சில புகைப்படங்கள், சில இடங்கள் நினைவுகளைக் குமுறி எழச்செய்கின்றன. சினிமாவில் சில ஆண்டுகள் பணியாற்றுவதென்பது கடந்தகால ஏக்கங்களை மலைமலையாக சேமிப்பது. நான் இருபத்தைந்து ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்தவன். அப்பணி சார்ந்து சற்றும் கடந்தகால ஏக்கம் இல்லை, இனிய நண்பர்கள் பலர் உண்டு என்றாலும். ஏனென்றால் அந்தப் பணி, பணியிடம் ஒருவகை ஒவ்வாமையுடனேயே நினைவில் நீடிக்கிறது.

மதுபால் தன் முகநூல் பக்கத்தில் நாங்கள் மூவரும் சந்தித்ததைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தார். “என்னை விட்டுவிட்டீர்களே” என்று லால், இப்போது ஒழிமுறி லால் என்றே பலசமயம் குறிப்பிடப்படுகிறார், எழுதியிருந்தார். “எப்படி மறக்க முடியும்?” என்று மதுபால் பதில் சொன்னார்.

ஷாகுலிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று திரும்பும்போது நிறைவான இனிய நாள் என்னும் எண்ணம் எஞ்சியிருந்தது. வாழ்வில் சில தருணங்கள் இயல்பாக மலர்ந்துவிடுகின்றன

 

 

முந்தைய கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10