அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்

”சார் பெரிய ரைட்டர்!”

”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

இலக்கியம் இலக்கியவாதிகளைப்பற்றி மக்களிடையே நிலவும் கருத்துக்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் அந்த அனுபவம்தான். இலக்கியவாசகன் என்று எங்கேயும் காட்டிக்கொள்ள முடியாது. ஒரே அலுவலகத்தில் எட்டாண்டுகளாக வேலைபார்த்த என் நண்பர் இலக்கியவாசகர் என தற்செயலாக முகநூல் வழியாகத்தான் அறிந்தேன். இருவருமே காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறோம். காரணம் அனுபவங்கள். வீட்டில் மனைவியைப்பொறுத்தவரை வாசிப்பு என்பது வெட்டிவேலை. அலுவலகத்தில் அது கவனக்குறைவு, அலட்சியம் ஆகியவற்றை உண்டாக்குவது. குடிகூட இங்கே பொறுத்துக்கொள்ளப்படும். வாசிப்புக்கு இடமே இல்லை

 

ஆனால் ஒரு கேள்வி. இப்படி தமிழ்ச்சமூகம் இலக்கியத்தை வெறுக்க என்ன காரணம்? இலக்கியவாதிகள் என்று அறியப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் எதற்கும் உதவாதவர்கள். இலக்கியமும் அவர்களுக்கு வருவதில்லை. பொருட்படுத்தும்படி எழுதுபவர்கள் பத்துபேர் என்றால் சும்மா உதார்விட்டு திரியும் வீணாய்ப்போன கும்பல்தான் தொண்ணூறுபேர். மக்களுக்கு வேறுபாடு தெரியுமா என்ன? அவர்கள் இவர்களை வைத்துத்தானே இலக்கியவாதிகளை மதிப்பிடுவார்கள்

 

சரி, இலக்கியவாதிகளையே எடுத்துக்கொள்வோம். முகநூலில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் தங்களைப்பற்றி என்னவகையான சித்திரத்தை உருவாக்குகிறார்கள்? குடிகாரர்கள், பொறுக்கிகள், நாகரீகம் இல்லாதவர்கள் ,பெண்பித்தர்கள் இப்படியெல்லாம்தானே தங்களை காட்டிக்கொள்கிறார்கள்? இது ஒரு அடையாளம் என்றுதானே நினைக்கிறார்கள். அப்படியென்றால் சமூகத்தை சொல்லி என்ன பயன்?

 

எஸ்.மகாதேவன்

 

அன்புள்ள ஜெயமோஹன்,

 

தமிழ் வாசகர்களை(?)ப் பற்றிய தங்கள் வேதனையான கருத்துக்கள் மறுக்க முடியாதவை, ஆனால் sweeping.

 

ஒரு வகையில் அனைத்து அறிவுஜீவிகளையும் இந்த விரக்தி பாதித்தது தானே?  “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று வள்ளலார் ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே அங்கலாய்த்தார்.

 

நிற்க, பலர்  தங்கள் வயதினால் மட்டுமே அல்ல, மேலும் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு தகுதியைக் கற்பித்துக் கொண்டு உபதேசம் செய்பவர்கள் உலகெங்கும் உள்ளனர். நாம் ஹம்ஸம் போல் இருந்தால் நம் உடல் மனநலம் காப்பாற்றப்படும்.

 

நான் அறிந்த வரை தெலுகு, ஹிந்தி, மராதி, வங்காள வாசகர்களை விட தமிழ் வாசகர்கள் கடந்த நூற்றாண்டில் பின்தங்கிவிட்டார்கள். இதன் காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள் ராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் அபவாதம் செய்வதில் வேறு எங்கையும் விட தமிழ்நாட்டில் அமோக வெற்றியைக் கண்டார்கள். ஆரிய வெறுப்பு  இன்று தமிழக அரசியல் சமூக சூழலின் பிரதான அம்சம். இந்த இரண்டு இதிஹாஸங்களும் கலை இலக்கியங்களின் ஊற்றாக பல்வேறு கதை கவிதைகளின் சிருஷ்டிகர்த்தாக்களையும், அவற்றை அனுபவிக்கும் சக்தியையும் சென்ற நூற்றாண்டு வரை தமிழகத்திலும் வளர்த்து வந்தன.

 

இன்றும் தமிழகத்தில் சிறந்த வாசகர்கள் நூற்றிலோ ஆயிரத்திலோ ஒருவர் உண்டு என்பதை ஒப்புகிறீர்கள். வெளி மாநிலங்களில் தமிழ் வாசிப்பில் மிக அதிக  ஆர்வம்  இருக்கிறது என்பது , மூன்று வெளி மாநிலங்களில் 1972 முதல் 1995 நான் கண்கூடாகக் கண்டது.

 

இப்போது நான் வந்திருக்கும் SFO Bay area Milpitas நகரில் உள்ள அழகிய நூலகத்தில் தமிழ், தெலுகு,  கன்னடம் ,மராதி ,குஜராதி வங்காளம் ,ஹிந்தி , உர்து பகுதிகளில் ஏராளமான உயர்தர புத்தகங்கள். தமிழிலேயே ஆயிரக்கணக்கில் இருக்கும். இந்த வாரம் பார்த்த புத்தகங்கள் அடுத்த வாரம் இல்லை. தேவையான புத்தகங்களை முன்பதிவு செய்து பெறுகிறார்கள் . இன்று உங்கள் “ஏழாம் உலகம்” பிரதியை பார்த்தேன்.

 

வெளி மாநிலம் , நாடுகளில் விரிவடையும் தமிழ் வாசகர் தரம் நாளடைவில் தாய்மாநிலத்தையும் தொற்றிக்கொள்ளும் என்று நம்பலாமே.

 

அன்புடன்

 

சா. கிருஷ்ணன்

 

அன்பின் ஜெ,

சாமானியர்களின் நாடியைத் தெரிந்து வைத்திருப்பதில் கரை கண்டவரான கிருஷ்ணன் (நான் கண்ட அவரது சமீபத்திய அவதானம், “அத்தி வரதரைத் தரிசிக்க வந்த கூட்டத்தினரின் எண்ணிக்கையே திராவிட இயக்கத்தின் நடைமுறை தோல்விக்கான அப்பட்டமான சாட்சி”) இப்படியொரு கடிதத்தை எழுதியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே தந்தது.

அவருக்கான உங்களது பதிலில் சொல்லுக்கு சொல், எழுத்துக்கு எழுத்து நான் நிச்சயம் உடன்படுகிறேன். பொதுவெளியில் புழங்கும் எந்தவொரு வாசகனும் வாசிப்பை தலைமறைவுச் செயல்பாடாகவேக் கொண்டிருப்பான். நானெல்லாம் புத்தகத்தின் பின்பக்கம் தெரியுமாறுதான் புத்தகத்தை வைத்துக் கொண்டிருப்பேன். உறவுகளின் (தாய் தந்தை மனைவி உட்பட) ‘இதனால் என்ன பயன்’ என்ற கேள்வியில் துவங்கி, ‘இதெல்லாம் படிக்க எங்களுக்கு எங்க நேரம்’ (சொல்பவர்கள் என்னவோ நேரம் கிடைச்சா அப்படியே வாசிச்சுத் தள்ளிட்டாலும்…), ‘அந்த நேரத்திற்கு உருப்படியா வேறு ஏதாவது செய்தால் நாலு காசு பார்க்கலாம்’, ‘இவ்வளவு படிக்கிறியே? குழம்பிடாதா’ ‘இதெல்லாம் எதுக்குடா’… இதைவிட அபத்தமான கேள்விகளையெல்லாம் எந்தவொரு வாசகனும் எதிர்கொண்டே வந்திருப்பான் (முன்சொன்ன பட்டியலில் பெரிய மனது பண்ணி தந்தையை வேண்டுமானால் எடுத்துவிடலாம்).

ஆனாலும் அவனுக்குத் தெரியும் தனது நுண்ணுர்வில் நூறில் ஒரு பங்குகூட கேட்பவர்களுக்குக் கிடையாதென்பது. உண்மையில் இந்தச் செயல்பாட்டில் (வாசிப்பில்) கர்வத்தைக் காட்டிலும் ஸ்வதர்மமாக இதைச் செய்பவர்கள்தான் மிகுதி. அவனுக்கு என்ன புரிவதில்லையென்றால், நான் உங்களிடம் வந்து ‘ஏன் இவ்வளவு நேரம் டிவி பார்க்கிறீர்கள்’, ‘ஏன் மொபைலை சதாசர்வ காலமும் நோண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள்’, ஏன் உப்புசப்பில்லாத ‘சாப்பிட்டாச்சா, தூங்கியாச்சா, ஆஃபீஸ் போயாச்சா’ போன்ற கேள்விகளைக் கொண்டே அலைபேசியில் பொதுவெளியில் கூட சத்தமாக வம்பளந்து கொண்டிருக்கிறீர்கள்’  என்ற கேள்விகளைக் கேட்காதபோது என்னிடம் வந்து ‘எதற்கு வாசிக்கிறீர்கள்’ என்ற கேள்வியைக் ஏன் கேட்கிறீர்கள் என்பதுதான். மேற்சொன்ன வெட்டி வேலைகளை பெருவாரியான மக்கள் செய்கிறார்கள் என்பதே அதை மற்றவர்கள் சுவாதீனமாக, எந்தவொரு லஜ்ஜையுமில்லாமல் செய்வதற்கு ஒரு லைசென்ஸ் வந்துவிடுகிறது.

மாறாக வாசிப்பு போன்ற நம் உழைப்பைக் கோரும் ஒரு அறிவியக்கச் செயல்பாடு சாதாரணமாகவே குறைந்தபட்ச மக்களிடையேதான் இருக்கமுடியும்.

வெகு எளிதாக மேற்கண்டவற்றில் இருந்து வார்த்தைகளை உருவி இதை ஒரு மேட்டிமைவாதமாக மாற்ற முடியும். சமூக ஊடகங்களில் அப்படித்தான் நடக்கிறது (இந்த பதிவிற்கும் நடக்கும்!)

கேட்பவர்களால் நாலு வரியில் ஒரு வாட்சப் மெசேஜைக்கூட தவறில்லாமல் எழுதமுடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஒரு முக்கியமான வகையினர் (துரதிர்ஷ்டவசமாக மிகச் சிறுபான்மையினர்) உளர் – ஏதேனும் ஒரு வகையில் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆனால் அவ்வளவாக வாசிக்காத வகையினர் – இவர்களுக்கு ஏதோவொரு வகையில் வாசகன் கடன்பட்டேயிருக்கிறான் (கிருஷ்ணன் கவனித்த மக்கள் இந்த வகையினராகவே இருக்க வாய்ப்பிருக்கிறது). இவர்கள் நிச்சயம் மேற்கண்ட அபத்தக் கேள்விகளை கேட்பதில்லை (குறைந்தபட்சம் மனதோடு மட்டுமே வைத்துக்கொள்கின்றனர்)

மீதமிருக்கிற பெரும்பான்மையினரைக் குறித்த தங்கள் அவதானம் நிச்சயம துல்லியமானதே!

அன்புடன்
வெங்கட்ரமணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64
அடுத்த கட்டுரைவேறுவழிப் பயணம்- கடிதங்கள்